←அத்தியாயம் 1: ஆடித்திருநாள்
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திபுது வெள்ளம்: ஆழ்வார்க்கடியான் நம்பி
அத்தியாயம் 3: விண்ணகரக் கோயில்→
204பொன்னியின் செல்வன் — புது வெள்ளம்: ஆழ்வார்க்கடியான் நம்பிகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
புது வெள்ளம் - அத்தியாயம் 2[தொகு]
ஆழ்வார்க்கடியான் நம்பி
ஏரிக் கரையிலிருந்து கீழிறங்கித் தென்திசை சென்ற பாதையில் குதிரையைச் செலுத்தியபோது வந்தியத்தேவனுடைய உள்ளம் ஏரி அலைகளின் மீது நடனமாடிய படகைப் போல் ஆனந்தக் கூத்தாடியது. உள்ளத்தின் உள்ளே மறைந்து கிடந்த குதூகலம் பொங்கித் ததும்பியது. வாழ்க்கையில் வேறு யாரும் காணாத அதிசய அனுபவங்களைத் தான் அடையும் காலம் நெருங்கி விட்டதென்று அவனுடைய உள்ளுணர்ச்சி சொல்லியது. சோழ நாட்டை அணுகும்போதே இவ்வளவு ஆனந்தக் கோலாகலமாயிருக்கிறதே? கொள்ளிடத்தைத் தாண்டி விட்ட பின்னர் அச்சோழ நாட்டின் நீர்வளமும் நிலவளமும் எப்படியிருக்கும்? அந்நாட்டில் வாழும் மக்களும் மங்கையரும் எப்படியிருப்பார்கள்? எத்தனை நதிகள்? எத்தனை குளங்கள்? எத்தனை தௌிநீர் ஓடைகள்? கவிகளிலும் காவியங்களிலும் பாடப்பெற்ற பொன்னி நதியின் காட்சி எப்படியிருக்கும்? அதன் கரைகளிலே பூத்துக் குலுங்கும் புன்னை மரங்களும் கொன்னை மரங்களும் கடம்ப மரங்களும் எத்தகைய மனோகரமான காட்சியாயிருக்கும்? நீரோடைகளில் குவளைகளும் குமுதங்களும் கண்காட்டி அழைப்பதும் செந்தாமரைகள் முகமலர்ந்து வரவேற்பதும் எத்தகைய இனிய காட்சியாயிருக்கும்? காவேரியின் இரு கரைகளிலும் சிவபக்திச் செல்வர்களான சோழப் பரம்பரையினர் எடுப்பித்துள்ள அற்புத வேலைப்பாடமைந்த ஆலயங்கள் எவ்வளவு அழகாயிருக்கும்?
ஆகா! பழையாறை நகர்! சோழ மன்னர்களின் தலைநகர்! பூம்புகாரையும் உறையூரையும் சிறிய குக்கிராமங்களாகச் செய்துவிட்ட பழையாறை! அந்நகரிலுள்ள மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் படை வீடுகளும் கடைவீதிகளும் சிவாலயக் கற்றளிகளும் திருமாலுக்குரிய விண்ணகரங்களும் எப்படியிருக்கும்? அந்த ஆலயங்களில் இசை வல்லவர்கள் இனிய குரலில் தேவாரப் பாடல்களையும் திருவாய்மொழிப் பாசுரங்களையும் பாடக்கேட்டோர் பரவசமடைவார்கள் என்று வந்தியத்தேவன் கேள்வியுற்றிருந்தான். அவற்றையெல்லாம் கேட்கும் பேறு தனக்கு விரைவில் கிடைக்கப் போகிறது இது மட்டுந்தானா? சில நாளைக்கு முன்பு வரையில் தான் கனவிலும் கருதாத சில பேறுகளும் கிட்டப்போகின்றன. வீரத்தில் வேலனையும் அழகில் மன்மதனையும் நிகர்த்த பராந்தக சுந்தர சோழ மகாராஜாவை நேருக்கு நேர் காணப்போகிறான். அவ்வளவுதானா? அவருடைய செல்வப் புதல்வி, ஒப்புயர்வில்லாத நாரீமணி, குந்தவைப் பிராட்டியையும் காணப் போகிறான்.
ஆனால் வழியில் தடை எதுவும் நேராமல் இருக்க வேண்டும். எந்தத் தடை நேர்ந்தால்தான் என்ன? கையிலே வேல் இருக்கிறது. இடையில் தொங்கிய உறையிலே வாள் இருக்கிறது; மார்பிலே கவசம் இருக்கிறது; நெஞ்சிலே உரமிருக்கிறது. ஆனால் மகாதண்ட நாயகர், இளவரசர் ஆதித்தர், ஒரு பெரிய முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்; ஒப்புவித்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு முன்பு யாரிடமும் சண்டை பிடிக்கக் கூடாதென்று. அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதுதான் மிகவும் கடினமாயிருந்தது. ஏதோ இவ்வளவு தூரமும் பிரயாணம் செய்தபோது நிறைவேற்றியாகி விட்டது. இன்னும் இரண்டு நாளையப் பிரயாணம்தானே மிச்சமிருக்கிறது? அதுவரை பொறுமையுடன் இருந்தே தீர வேண்டும்.
ஆதவன் மறைவதற்குள் கடம்பூரை அடைய வேண்டும் என்ற கருத்துடன் சென்று கொண்டிருந்த வந்தியத்தேவன் சிறிது நேரத்துக்கெல்லாம் வீர நாராயணபுர விண்ணகரக் கோயிலை நெருங்கினான்.
அன்று ஆடித் திருமஞ்சனத் திருவிழாவும் சேர்ந்திருந்தபடியால் கோயிலைச் சுற்றியுள்ள மரத் தோப்புகளில் பெரும் ஜனக்கூட்டம் சேர்ந்திருந்தது.
பலாச் சுளைகளும் வாழைப் பழங்களும் கரும்புக் கழிகளும் பலவகைத் தின்பண்டங்களும் விற்பவர்கள் ஆங்காங்கே கடை வைத்திருந்தார்கள். பெண்கள் தலையில் சூடிக் கொள்ளும் மலர்களையும், தேவ பூஜைக்குரிய தாமரை மொட்டுக்கள் முதலியவற்றையும் சிலர் விற்றுக் கொண்டிருந்தார்கள். தேங்காய், இளநீர், அகில், சந்தனம், வெற்றிலை, வெல்லம், அவல், பொரி முதலியவற்றைச் சிலர் குப்பல் குப்பலாகப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே வேடிக்கை விநோதங்கள் நடந்து கொண்டிருந்தன.ஜோசியர்கள், ரேகை சாஸ்திரத்தில் வல்லவர்கள், குறி சொல்லுகிறவர்கள், விஷக்கடிக்கு மந்திரிப்பவர்கள், இவர்களுக்கும் அங்கே குறையில்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சென்ற வந்தியத்தேவன் ஓரிடத்தில் ஒரு பெருங்கூட்டம் நின்று கொண்டிருப்பதையும் அந்தக் கூட்டத்துக்குள்ளேயிருந்து யாரோ சிலர் உரத்த குரலில் வாக்குவாதம் செய்யும் சத்தம் வருவதையும் கவனித்தான். என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொள்ள அவனுக்கு ஆவல் பீறிக் கொண்டு எழுந்தது. அந்த ஆவலை அடக்கிக் கொள்ள அவனால் முடியவில்லை. கூட்டத்துக்கு வெளியில் சாலை ஓரமாகக் குதிரையை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான். குதிரையை அங்கேயே நிற்கும்படி தட்டிக் கொடுத்துச் சமிக்ஞையால் சொல்லிவிட்டுக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு உள்ளே போனான்.
அங்கே விவாதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மூன்றே பேர்தான் என்பதைப் பார்க்க அவனுக்கு வியப்பு ஏற்பட்டது. ஆனால் விவாதத்தில் ஈடுபட்டவர்கள் மூன்றே பேர்தான் என்றாலும், கூட்டத்திலிருந்தவர்கள் பலர் அவ்வப்போது அவரவர்களுக்கு உகந்த வாதக்காரரின் கட்சியை ஆதரித்துக் கோஷங்களைக் கிளப்பினார்கள். அதனாலேதான் அவ்வளவு சத்தம் எழுந்தது என்பதை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். பிறகு என்ன விவாதம் நடைபெறுகிறது என்பதைக் கவனித்தான்.
வாதமிட்ட மூவரில் ஒருவர் உடம்பெல்லாம் ஊர்த்வபுண்டரமாகச் சந்தனம் அணிந்து தலையில் முன் குடுமி வைத்திருந்த வைஷ்ணவ பக்த சிகாமணி. கையில் அவர் ஒரு குறுந்தடியும் வைத்திருந்தார். கட்டையாயும் குட்டையாயும் வைரம் பாய்ந்த திருமேனியுடன் விளங்கினார். இன்னொருவர் தமது மேனியெல்லாம் பட்டை பட்டையாய்த் திருநீறு அணிந்திருந்த சிவபக்தர். மூன்றாவது மனிதர் காவி வஸ்திரம் தரித்துத் தலையையும் முண்டனம் செய்து கொண்டிருந்தார். அவர் வைஷ்ணவரும் அல்ல, சைவரும் அல்ல, இரண்டையும் கடந்தவரான அத்வைத வேதாந்தி என்று தெரியவந்தது.
சைவர் சொன்னார்: "ஓ, ஆழ்வார்க்கடியான் நம்பியே! இதற்கு விடை சொல்லும்! சிவபெருமானுடைய முடியைக் காண்பதற்குப் பிரம்மாவும், அடியைக் காண்பதற்குத் திருமாலும் முயன்றார்களா, இல்லையா? முடியும் அடியும் காணாமல் இருவரும் வந்து சிவபெருமானுடைய பாதங்களில் சரணாகதி அடைந்தார்களா, இல்லையா? அப்படியிருக்கச் சிவபெருமானைக் காட்டிலும் உங்கள் திருமால் எப்படிப் பெரிய தெய்வம் ஆவார்?"
இதைக் கேட்ட ஆழ்வார்க்கடியான்நம்பி தன் கைத் தடியை ஆட்டிக் கொண்டு, " சரிதான் காணும்! வீர சைவ பாததூளி பட்டரே! நிறுத்தும் உம் பேச்சை! இலங்கை அரசனாகிய தசகண்ட ராவணனுக்கு உம்முடைய சிவன் வரங்கள் கொடுத்தாரே? அந்த வரங்கள் எல்லாம் எங்கள் திருமாலின் அவதாரமாகிய இராமபிரானின் கோதண்டத்தின் முன்னால் தவிடுபொடியாகப் போகவில்லையா? அப்படியிருக்க, எங்கள் திருமாலைக் காட்டிலும் உங்கள் சிவன் எப்படிப் பெரிய தெய்வமாவார்?" என்று கேட்டான்.
இந்தச் சமயத்தில் காவி வஸ்திரம் அணிந்த அத்வைத சந்நியாசி தலையிட்டுக் கூறியதாவது: "நீங்கள் இருவரும் எதற்காக வீணில் வாதம் இடுகிறீர்கள்? சிவன் பெரிய தெய்வமா, விஷ்ணு பெரிய தெய்வமா என்று எத்தனை நேரம் நீங்கள் வாதித்தாலும் விவகாரம் தீராது. இந்தக் கேள்விக்குப் பதில் வேதாந்தம் சொல்கிறது. நீங்கள் கீழான பக்தி மார்க்கத்தில் இருக்கிற வரையில்தான் சிவன் - விஷ்ணு என்று சண்டையிடுவீர்கள். பக்திக்கு மேலே ஞானமார்க்கம் இருக்கிறது. ஞானத்துக்கு மேலே ஞாஸம் என்று ஒன்று இருக்கிறது. அந்த நிலையை அடைந்து விட்டால் சிவனும் இல்லை, விஷ்ணுவும் இல்லை. சர்வம் பிரம்மமயம் ஜகத். ஸரீ சங்கர பகவத் பாதாச்சாரியார் பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்...."
இச்சமயம் ஆழ்வார்க்கடியான் நம்பி குறுக்கிட்டு, "சரிதான் காணும், நிறுத்தும்! உம்முடைய சங்கராச்சாரியார் அவ்வளவு உபநிஷதங்களுக்கும் பகவத்கீதைக்கும் பிரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் எழுதி விட்டுக் கடைசியில் என்ன சொன்னார் தெரியுமா?
'பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் மூடமதே!'
என்று மூன்று வாட்டி சொன்னார். உம்மைப் போன்ற மௌடீகர்களைப் பார்த்துத்தான் 'மூடமதே!' என்று சங்கராச்சாரியார் சொன்னார்!" எனக் கூறியதும், அந்தக் கூட்டத்தில் 'ஆஹா' காரமும், பரிகாசச் சிரிப்பும் கரகோஷமும் கலந்து எழுந்தன.
ஆனால் சந்நியாசி சும்மா இருக்கவில்லை. "அடே! முன்குடுமி நம்பி! நான் 'மூடமதி' என்று நீ சொன்னது சரிதான் ஏனென்றால், உன் கையில் வெறுந்தடியை வைத்துக் கொண்டிருக்கும் நீ வெறுந்தடியன் ஆகிறாய். உன்னைப் போன்ற வெறுந்தடியனோடு பேச வந்தது என்னுடைய மூடமதியினால்தானே?" என்றார்.
"ஓய் சுவாமிகளே! என் கையில் வைத்திருப்பது வெறுந்தடியல்ல. வேண்டிய சமயத்தில் உம்முடைய மொட்டை மண்டையை உடைக்கும் சக்தி உடையதுங் காணும்!" என்று கூறிக் கொண்டே ஆழ்வார்க்கடியான் கையிலிருந்த குறுந்தடியை ஓங்கினான். அதைப் பார்த்த அவன் கட்சியார் 'ஓஹோ!' என்று ஆர்ப்பரித்தனர்.
அப்போது அத்வைத சுவாமிகள், "அப்பனே! நிறுத்திக் கொள்! தடி உன்னுடைய கையிலேயே இருக்கட்டும். அப்படியே நீ உன் கைத்தடியால் என்னை அடித்தாலும் அதற்காக நான் கோபங்கொள்ள மாட்டேன். உன்னுடன் சண்டைக்கு வரவும் மாட்டேன். அடிப்பதும் பிரம்மம்; அடிபடுவதும் பிரம்மம். என்னை நீ அடித்தால் உன்னையே அடித்துக் கொள்கிறவனாவாய்!" என்றார்.
ஆழ்வார்க்கடியான் நம்பி, "இதோ எல்லோரும் பாருங்கள்! பிரம்மத்தைப் பரப்பிரம்மம் திருச்சாத்துச் சாத்தப் போகிறது. என்னை நானே தடி கொண்டு தாக்கப் போகிறேன்!" என்று தடியைச் சுழற்றிக் கொண்டு சுவாமிகளை நெருங்கினான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வல்லவரையனுக்கு ஒரு கணம் அந்த முன் குடுமி நம்பியின் கைத்தடியை வழிமறித்துப் பிடுங்கிக் கொண்டு அவனை அந்தத் தடியினால் நாலு திருச்சாத்துச் சாத்தலாமா என்று தோன்றியது.
ஆனால் திடீரென்று சுவாமியாரைக் காணோம்! கூட்டத்தில் புகுந்து அவர் மறைந்து விட்டார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவ கோஷ்டியார் மேலும் ஆர்ப்பரித்தார்கள்.
ஆழ்வார்க்கடியான் வீரசைவருடைய பக்கமாகத் திரும்பி, "ஓய் பாத தூளி பட்டரே! நீர் என்ன சொல்லுகிறீர்? மேலும் வாதம் செய்ய விரும்புகிறீரா? அல்லது சுவாமியாரைப் போல் நீரும் ஓட்டம் எடுக்கிறீரா?" என்றான்.
"நானா? ஒருநாளும் நான் அந்த வாய் வேதாந்தியைப் போல் ஓட்டம் எடுக்க மாட்டேன். என்னையும் உம்முடைய கண்ணன் என்று நினைத்தீரோ? கோபியர் வீட்டில் வெண்ணெய் திருடி உண்டு மத்தால் அடிபட்டவன்தானே உம்முடைய கண்ணன்!..." என்று பாததூளிபட்டர் சொல்வதற்குள், ஆழ்வார்க்கடியான் குறுக்கிட்டான். "ஏன் காணும்? உம்முடைய பரமசிவன் பிட்டுக்கு மண் சுமந்து முதுகில் அடிபட்டதை மறந்து விட்டீரோ?" என்று கேட்டுக் கொண்டு கைத்தடியை வீசிக் கொண்டு வீர சைவர் அருகில் நெருங்கினான்.
ஆழ்வார்க்கடியான் நல்ல குண்டாதி குண்டன். வீரசைவராகிய பாததூளிபட்டரோ சற்று மெலிந்த மனிதர்.
மேற்கூறிய இருவரையும் விவாதத்தில் உற்சாகப்படுத்தி வந்தவர்கள் தாங்களும் கைகலக்க ஆயத்தமாகி ஆரவாரம் செய்தார்கள்.
இந்த மூடச் சண்டையைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வல்லவரையன் மனதில் உண்டாயிற்று.
அவன் நின்ற இடத்திலிருந்து சற்றும் முன்னால் வந்து, "எதற்காக ஐயா நீங்கள் சண்டை போடுகிறீர்கள்? வேறு வேலை ஒன்றும் உங்களுக்கு இல்லையா? சண்டைக்குத் தினவு எடுத்தால் ஈழநாட்டுக்குப் போவதுதானே? அங்கே பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறதே?" என்றான்.
நம்பி சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்து, "இவன் யாரடா நியாயம் சொல்ல வந்தவன்!" என்றான்.
கூட்டத்திலே இருந்தவர்களில் சிலருக்கு, வந்தியத்தேவனுடைய வீரத் தோற்றமும் அவனுடைய அழகிய முகவிலாசமும் பிடித்திருந்தன.
"தம்பி! நீ சொல்லு! இந்தச் சண்டைக்காரர்களுக்கு நியாயத்தை எடுத்துச் சொல்லு! உனக்குப் பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம்!" என்று அவர்கள் சொன்னார்கள்.
"எனக்குத் தெரிந்த நியாயத்தைச் சொல்கிறேன். சிவபெருமானும் நாராயணமூர்த்தியும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. அவர்கள் சிநேகமாகவும் சுமுகமாகவும் இருந்து வருகிறார்கள். அப்படியிருக்க, இந்த நம்பியும் பட்டரும் எதற்காகச் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்?" என்று வல்லவரையன் கூறியதைக் கேட்டு, அக்கூட்டத்தில் பலரும் நகைத்தார்கள்.
அப்போது வீரசைவபட்டர், "இந்தப் பிள்ளை அறிவாளியாகவே தோன்றுகிறான். ஆனால் வேடிக்கைப் பேச்சினால் மட்டும் விவாதம் தீர்ந்துவிடுமா? சிவபெருமான் திருமாலை விடப் பெரிய தெய்வமா, இல்லையா என்ற கேள்விக்கு இவன் விடை சொல்லட்டும்!" என்றார்.
"சிவனும் பெரிய தெய்வந்தான்; திருமாலும் பெரிய தெய்வந்தான் இருவரும் சமமான தெய்வங்கள். யாரை வேண்டுமானாலும் தொழுது கொள்ளுங்கள் சண்டை எதற்கு?" என்றான் வல்லவரையன்.
"அது எப்படிச் சொல்லலாம்? சிவனும் விஷ்ணுவும் சமமான தெய்வங்கள் என்று சொல்லுவதற்கு ஆதாரம் என்ன?" என்று ஆழ்வார்க்கடியான் அதட்டிக் கேட்டான்.
"ஆதாரமா? இதோ சொல்கிறேன்! நேற்று மாலை வைகுண்டத்துக்குப் போயிருந்தேன். அதே சமயத்தில் பரமசிவனும் அங்கே வந்திருந்தார். இருவரும் சம ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள்.அவர்களுடைய உயரம் ஒன்றாகவே இருந்தது. ஆயினும் ஐயத்துக்கு இடமின்றி என் கையினால் முழம் போட்டு இருவர் உயரத்தையும் அளந்து பார்த்தேன்..."
"அட பிள்ளாய்! பரிகாசமா செய்கிறாய்?" என்று ஆழ்வார்க்கடியான் கர்ஜனை செய்தான்.
கூட்டத்தினர், "சொல்லு, தம்பி! சொல்லு!" என்று ஆர்ப்பரித்தார்கள்.
"அளந்து பார்த்ததில் இருவரும் சமமான உயரமே இருந்தார்கள். அதோடு விடாமல் சிவனையும் திருமாலையும் நேரிலேயே கேட்டு விட்டேன். அவர்கள் என்ன சொன்னார்கள், தெரியுமா? 'அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயிலே மண்ணு' என்று சொன்னார்கள். அவ்விதம் சொல்லி, தங்களைப் பற்றிச் சண்டை போடுகிறவர்களின் வாயிலே போடுவதற்கு இந்தப் பிடி மண்ணையும் கொடுத்தார்கள்!" என்று கூறிய வல்லவரையன், மூடியிருந்த தனது வலக்கையைத் திறந்து காட்டினான். அதற்குள்ளே ஒரு பிடி மண் இருந்தது அதை வீசி உதறினான்.
கூட்டத்திலிருந்தவர்களில் பலர் அப்போது பெரும் உற்சாகங்கொண்டு தலைக்குத் தலை தரையிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து, நம்பியின் தலையிலும் பட்டர் தலையிலும் வீசி எறிய ஆரம்பித்தார்கள். இந்தத் தூராக்ரகச் செயலைச் சிலர் தடுக்க முயன்றார்கள்.
"அடே! தூர்த்தர்களா? நாஸ்திகர்களா?" என்று சொல்லிக் கொண்டு ஆழ்வார்க்கடியான் தன் கைத் தடியைச் சுழற்றிக் கொண்டு கூட்டத்திற்குள் பிரவேசித்தான்.
ஒரு பெரிய கலவரமும் அடிதடி சண்டையும் அப்போது அங்கே நிகழும் போலிருந்தன. நல்லவேளையாக, அந்தச் சமயத்தில் சற்றுத் தூரத்தில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது.
"சூராதி சூரர், வீரப்பிரதாபர், மாறபாண்டியன் படையை வீறுகொண்டு தாக்கி வேரோடு அறுத்த வெற்றி வேல் உடையார், இருபத்து நாலு போர்களில் சண்டையிட்டு அறுபத்து நான்கு விழுப்புண்களைப் பெற்ற திருமேனியர், சோழ நாட்டுத் தனாதிகாரி, தானிய பண்டார நாயகர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் விஜயம் செய்கிறார்! பராக்! பராக்! வழி விடுங்கள்!" என்று இடிமுழக்கக் குரலில் கட்டியம் கூறுதல் கேட்டது.
இவ்வாறு கட்டியம் கூறியவர்கள் முதலில் வந்தார்கள். பிறகு முரசு அடிப்பவர்கள் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் பனைமரக் கொடி தாங்குவோர் வந்தார்கள். பின்னர், கையில் வேல் பிடித்த வீரர்கள் சிலர் கம்பீரமாக நடந்து வந்தார்கள். இவர்களுக்குப் பின்னால் வந்த அலங்கரித்த யானையின் மீது ஆஜானுபாகுவான கரிய திருமேனியர் ஒருவர் வீற்றிருந்தார். மத்தகஜத்தின் மேல் அந்த வீரர் வீற்றிருந்த காட்சி, ஒரு மாமலைச் சிகரத்தின் மீது கரியகொண்டல் ஒன்று தங்கியது போல் இருந்தது.
கூட்டத்தில் இருந்தவர்கள் அத்தனை பேரும் சாலையின் இருபுறத்திலும் வந்து நின்றது போல் வல்லவரையனும் வந்து நின்று பார்த்தான். யானை மீது இருந்தவர் தான் பழுவேட்டரையர் என்பதை ஊகித்துக் கொண்டான்.
யானைக்குப் பின்னால் பட்டுத் திரையினால் மூடப்பட்ட சிவிகை ஒன்று வந்தது. அதற்குள் இருப்பது யாரோ என்று வல்லவரையன் சிந்திப்பதற்குள்ளே, செக்கச் சிவந்த நிறத்துடன் வளையல்களும் கங்கணங்களும் அணிந்த ஒரு கரம் சிவிகைக்குள்ளேயிருந்து வெளிப்பட்டுப் பல்லக்கின் பட்டுத் திரையைச் சிறிது விலகியது. மேகத்தினால் மூடப்பட்டிருந்த பூரண சந்திரன் மேகத் திரை விலகியதும் பளீரென்று ஒளி வீசுவது போல் சிவிகைக்குள்ளே காந்திமயமான ஒரு பெண்ணின் முகம் தெரிந்தது.
பெண் குலத்தின் அழகைக் கண்டு களிக்கும் கண்கள் வல்லவரையனுக்கு உண்டு என்றாலும், அந்தப் பெண்ணின் முகம் பிரகாசமான பூரண சந்திரனையொத்த பொன் முகமாயிருந்தாலும் எக்காரணத்தினாலோ வல்லவரையனுக்கு அம்முகத்தைப் பார்த்ததும் உள்ளத்தில் மகிழ்ச்சி தோன்றவில்லை. இனந்தெரியாத பயமும் அருவருப்பும் ஏற்பட்டன.
அதே நேரத்தில் அந்தப் பெண்ணின் கண்கள் வல்லவரையனுக்கு அருகில் உற்று நோக்கின. மறுகணம் ஒரு பீதிகரமான பெண் குரலில் 'கிறீச்' என்ற கூச்சல் கேட்டது உடனே சிவிகையின் பட்டுத் திரை முன்போல் மூடிக் கொண்டது.
வல்லவரையன் தன் அக்கம் பக்கத்தில் நோக்கினான். தனக்கு அருகில் எதையோ யாரையோ பார்த்துவிட்டுத்தான் அந்த மாது 'கிறீச்'சிட்டு விட்டுச் சிவிகைத் திரையை மூடிக் கொண்டாள் என்று அவன் உள்ளுணர்ச்சி சொல்லிற்று. எனவே, சுற்றுமுற்றும் பார்த்தான். ஆழ்வார்க்கடியான் தனக்குச் சற்றுப் பின்னால் ஒரு புளிய மரத்தில் சாய்ந்து கொண்டு நிற்பதைக் கண்டான். அந்த வீர வைஷ்ணவ நம்பியினுடைய முகம் சொல்ல முடியாத விகாரத்தை அடைந்து கோர வடிவமாக மாறியிருப்பதையும் பார்த்தான். வல்லவரையனுடைய உள்ளத்தில் காரணம் விளங்காத திகைப்பும் அருவருப்பும் ஏற்பட்டன.