←அத்தியாயம் 44: "எல்லாம் அவள் வேலை!"
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திபுது வெள்ளம்: குற்றம் செய்த ஒற்றன்
அத்தியாயம் 46: மக்களின் முணுமுணுப்பு→
247பொன்னியின் செல்வன் — புது வெள்ளம்: குற்றம் செய்த ஒற்றன்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
புது வெள்ளம் - அத்தியாயம் 45[தொகு]
குற்றம் செய்த ஒற்றன்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் பெருவளத்தான் என்னும் சோழ மன்னன் காவேரி நதிக்கு இருபுறமும் கரை எடுத்தான். வெகு காலம் அந்தக் கரைகள் நல்ல நிலைமையில் இருந்து காவேரி ஆற்றைக் கட்டுக்குள் வைத்திருந்தன. பின்னர், சோழ குலத்தின் வலி குறைந்தது. பாண்டியர்களும் பல்லவர்களும் களப்பாளரும் வாணரும் தலையெடுத்தார்கள். இந்தக் காலத்தில் காவலன் இல்லாத காவேரி நதி அடிக்கடி கட்டு மீறிக் கரையை உடைத்துக் கொண்டது. இவ்விதம் பெரிய அளவில் கரை உடைந்த சில சந்தர்ப்பங்களில் நதியின் போக்கே மேலும் கீழுமாக மாறுவதுண்டு. பழங்காவேரி புதுக் காவேரியாகும்; அடியோடு நதியின் கதி மாறிப் போய்விட்டால், பழைய நதிப்படுகை சில சமயம் நன்செய் நிலமாக மாறும்; வேறு சில சமயங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் ஓடைகளாகிக் கடல் போல் அலைமோதிக் கொண்டிருக்கும்.
பழையாறு நகரின் சோழ மாளிகைகளையொட்டித் தென்புறத்தில் அத்தகைய ஓடை ஒன்று இருந்தது.
காவேரியின் கதி மாறியதால் ஏற்பட்ட இந்த ஓடையைச் சோழ மன்னர்கள் வேண்டுமென்றே ஆழமாக்கி, விசாலப்படுத்தி, எப்போதும் தண்ணீர் ததும்பி நிற்கும்படிச் செய்திருந்தார்கள். அரண்மனைக்கும், முக்கியமாக அந்தப்புரங்களுக்கும் இந்த விசாலமான நீர் ஓடை ஒரு நல்ல பாதுகாப்பாக இருந்தது. அந்த வழியில் யாரும் எளிதில் வந்து விட முடியாது. அரண்மனையோடு நெருங்கிய தொடர்புள்ளவர்கள்தான் படகில் ஏறி வரலாம்.
அரண்மனை அந்தப்புரங்களின் அழகிய உத்தியான வனங்கள் இந்த நீரோடையை ஒட்டி அமைந்திருந்தன. அரண்மனை மாதர்கள் நிர்ப்பயமாக அந்த உத்தியான வனங்களில் எந்த நேரமும் உலாவுவார்கள். கூடிக் குலாவுவார்கள்; மயில்களாகி ஆடுவார்கள்; குயில்களாகிப் பாடுவார்கள். சில சமயம் ஓடையில் இறங்கி நீராடுவார்கள். ஓடையில் ஓடம் ஓட்டியும் விளையாடுவார்கள்.
சோழர் குலத்தில் ஓர் அரசர் காலமாகி இன்னொருவர் பட்டத்துக்கு வரும்போது புதிய அரண்மனை கட்டிக் கொள்வதுண்டு. பழைய அரண்மனையில் காலமான மன்னரின் ராணிகளும் மற்றப் பிள்ளைகளும் வசிப்பார்கள்.
பழையாறு அரண்மனைகளில் செம்பியன் மாதேவியின் அரண்மனைக்கு அடுத்தபடியாகக் குந்தவைப் பிராட்டியின் மாளிகை அழகிலும் கம்பீரத்திலும் சிறந்து விளங்கியது. அது சுந்தர சோழர் வசித்த அரண்மனை அல்லவா? அவர் தஞ்சை சென்ற பிறகு, குந்தவை அந்த அரண்மனையின் எஜமானியாக விளங்கினாள்.
அம்மாளிகையின் பின்புறத்து உத்தியானவனம் மிகச் சோபிதமாக விளங்கியது. அதில் வானளாவிய ஆலமரங்களும் இருந்தன; சின்னஞ்சிறு பூஞ்செடிகளும் இருந்தன. வளைந்து வெளிந்து மரங்களைத் தழுவிக் கொண்டிருந்த பூங்கொடிகளும், பூங்கொடிகளாலான கொடி வீடுகளும் இருந்தன.
குந்தவையும் அவளுடைய தோழிமார்களும் மாலை நேரங்களைப் பெரும்பாலும் அந்த உத்தியானவனத்திலேயே கழிப்பது வழக்கம்.
சில சமயம் எல்லாரும் சேர்ந்து ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டு கதைகள் பேசிக் கொட்டமடிப்பார்கள்.
இன்னும் சில சமயம் இரண்டு பேராகவும், மூன்று பேராகவும் பிரிந்து சென்று அந்தரங்கம் பேசுவார்கள்.
சில நாளாகக் குந்தவையும் வானதியும் தனியே பிரிந்து சென்று பேசுவது வழக்கமாய்ப் போயிருந்தது.
அன்றைக்கு ஒரு பெரிய ஆலமரக் கிளையில் கட்டித் தொங்கவிட்டிருந்த கொடி ஊஞ்சலில் குந்தவையும் வானதியும் அமர்ந்து ஆடிக் கொண்டும் பேசிக் கொண்டுமிருந்தார்கள்.
பறவைகளின் கலகலத் தொனியுடன் போட்டியிட்டுக் கொண்டு பெண்மணிகளின் குதுகலச் சிரிப்பொலியும் அவ்வப்போது அந்த உத்தியான வனத்தில் கேட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் குந்தவையும் வானதியும் மட்டும் சிரிக்கவில்லை. மற்றவர்களின் சிரிப்பு அவர்களுக்கு அவ்வளவாய்ப் பிடிக்கவும் இல்லை. பேச்சுத்தான் அவர்கள் அதிகமாகப் பேசினார்களோ என்றால் அதுவும் அவ்வளவாக இல்லை.
கொடி வீடு ஒன்றிலிருந்து ஒரு பெண் கீதம் ஒன்று பாடினாள். அது கண்ணன் பிறந்த நாள் அல்லவா? அவள் பாடியதும் கண்ணனைப் பற்றிய பாடல்தான்.
வெண்ணிலாவில் வேணுகானம் கேட்கிறது. அது கண்ணனிடம் காதல் கொண்ட ஒரு பெண்ணை வேதனை செய்கிறது. அவள் தன் வேதனையை வாய் திறந்து வெளியிடுகிறாள். மரக்கிளையிலிருந்து ஒரு கிளி அவளுக்கு ஆறுதல் சொல்லுகிறது.
பெண்:
வேதனை செய்திடும் வெண்ணிலவில் - இங்கு
வீணன் எவன் குழல் ஊதுகின்றான்?
நாதன் இலா இந்தப் பேதை தன்னை
நலிந்திடுதல் என்ன புண்ணியமோ?
கிளி:
வானமும் வையமும் இன்புறவே - ஐயன்
வாய்மடுத்தூதும் குழலிசைதான்
மானே உந்தனை வருத்திடுமோ - இந்த
மானிலம் காணாப் புதுமை அம்மா!
பெண்:
பூவையே! உந்தனைப் போற்றிடுவேன் - நல்ல
புன்னைமலர் கொய்து சூட்டிடுவேன் - எந்தன்
ஆவி குலைந்திடும் வேளையிலே - ஒரு
ஆறுதல் கூற நீ வந்தனையோ?
கிளி:
கட்டழகி! உந்தன் காதலினால் - எங்கள்
கண்ணன் படுந்துயர் சொல்ல வந்தேன் - உன்னை
விட்டுப் பிரிந்த நாள் முதலாய் - நல்ல
வெண்ணெயும் வேம்பாய்க் கசந்த தென்பான்!
பாடலின் பின் பகுதியைக் கவனமாகக் கேட்டு வந்த குந்தவை, பாடல் முடிந்ததும், "நல்ல கண்ணன் இந்தச் செந்தமிழ் நாட்டுக்குத் தெய்வமாக வந்து வாய்த்தான்! வெண்ணெய் உண்டு வேய்ங்குழல் ஊதிப் பெண்களுடன் காலங் கழித்துக் கொண்டிருந்தால் மற்ற காரியங்களெல்லாம் என்ன ஆவது?" என்றாள்.
மறுமொழி சொல்லாமலிருந்த வானதியைப் பார்த்து, "என்னடி மௌனம் சாதிக்கிறாய்? நீயும் கண்ணன் குழலில் மயங்கிவிட்டாயா, என்ன?" என்று கேட்டாள்.
"அக்கா! என்ன கேட்டீர்கள்?" என்றாள் வானதி.
"என்ன கேட்டேனா? உன் கவனம் எங்கே சென்றிருந்தது?"
"எங்கும் போகவில்லையே? உங்களிடந்தான் இருந்தது."
"அடி கள்ளி! ஏனடி பொய் சொல்லுகிறாய்? உண்மையில் உன் மனம் இவ்விடத்தில் இல்லவே இல்லை! எங்கே இருக்கிறது என்று நான் சொல்லட்டுமா?"
"தெரிந்தால் சொல்லுங்களேன்!"
"நன்றாகத் தெரியும். ஈழநாட்டுப் போர்க்களத்துக்குப் போயிருக்கிறது. அங்கே என் தம்பி, ஒரு கபடற்ற பிள்ளை இருக்கிறானே, அவனை இன்னும் என்ன பொடி போட்டு மயக்கலாம் என்று உன் மனம் யோசித்துக் கொண்டிருக்கிறது!"
"நீங்கள் கூறியதில் ஒரு பாதி உண்மை தான், அக்கா! என் மனம் ஈழ நாட்டுக்குத்தான் அடிக்கடி போய் விடுகிறது. ஆனால் அவரைப் பொடி போட்டு மயக்குவதைப் பற்றி யோசிக்கவில்லை. அவர் போர்க்களத்தில் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாரோ, அவருடைய திருமேனியில் எத்தனை காயம் பட்டிருக்கிறதோ, அவர் எங்கே படுத்துக் கொள்கிறாரோ, என்ன உணவு சாப்பிடுகிறாரோ - என்றெல்லாம் எண்ணமிடுகிறது. அவர் அப்படியெல்லாம் அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, இங்கே நான் சுகமாக உண்டு உடுத்துப் பஞ்சணை மெத்தையில் படுத்துத் தூங்குவதை நினைக்கும் போது வேதனையாயிருக்கிறது. எனக்கு மட்டும் இறகுகள் இருந்தால், இந்த நிமிஷமே இலங்கைக்குப் பறந்து போய் விடுவேன்...!"
"பறந்து போய் என்ன செய்வாய்? அவனுக்கு மேலும் உபத்திரவந்தானே செய்வாய்?"
"ஒரு நாளும் இல்லை. அர்ச்சுனனுக்குச் சுபத்திரையும் கிருஷ்ணனுக்குச் சத்தியபாமாவும் ரதம் ஓட்டியது போல் நானும் ஓட்டுவேன். அவர் பேரில் எய்யும் அம்புகளை என் மார்பில் நான் தாங்கிக் கொள்வேன்......"
"நீ தாங்கிக் கொண்டால் அதை அவன் பார்த்துக் கொண்டிருப்பானா?"
"அது அவருக்கு இஷ்டமில்லாவிட்டால் பாசறையில் காத்திருப்பேன். போர்க்களத்திலிருந்து அவர் திரும்பி வந்ததும் காயங்களுக்கு மருந்து போட்டுக் கட்டுவேன். மலர்ப் படுக்கை விரித்து வைத்திருப்பேன். அறுசுவை உண்டி சமைத்து வைத்திருந்து அளிப்பேன். உடல் வலியை மறப்பதற்கு வீணை மீட்டிப் பாட்டுப் பாடித் தூங்கப் பண்ணுவேன்..."
"இதெல்லாம் நடவாத காரியங்கள், வானதி! சோழ குலத்து வீரர்கள் போர்க்களங்களுக்குப் பெண்களை அழைத்துப் போவதில்லை......"
"ஏன் அக்கா, அப்படி?"
"அவர்களுக்குப் புண்களைப் பற்றிப் பயமில்லை; அதைக் காட்டிலும் பெண்களைப் பற்றித்தான் அதிக பயம்!"
"அது ஏன்? பெண்கள் அவர்களை என்ன செய்து விடுவார்கள்?"
"அவர்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள்; ஆனால் உன்னைப் போன்ற பெண்கள் போர்க்களத்துக்குப் போனால் எதிரிப் படை வீரர்கள் உங்களுடைய அழகைக் கண்டு மயங்கி வந்து சரணாகதி அடைந்து விட்டால் என்ன செய்கிறது? அப்போது நம் சோழ நாட்டு வீரர்கள் தங்களுடைய வீரத்தைக் காட்ட முடியாதல்லவா? பெண்களைக் கொண்டு வெற்றியடைந்தார்கள் என்ற புகழைச் சோழ குலத்தார் விரும்புவதில்லை."
"அப்படிக் கூட உண்டா? எதிரி வீரர்கள் அவ்வளவு மூடர்களாயிருந்து விடுவார்களா? பெண்களின் அழகைக் கண்டு மயங்கி விடுவதற்கு?"
"ஏன் மாட்டார்கள்? அடியே, வானதி! குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் நாம் ஒரு வாலிப வீரனைப் பார்த்தோமே, ஞாபகம் இருக்கிறதா?"
"இருக்கிறது; அதற்கு என்ன?"
"நம்மையெல்லாம் கண்டதும் அவன் எப்படிப் போதை கொண்டவன் போல் மயங்கி நின்றான் என்பது ஞாபகம் இருக்கிறதா?"
"அதுவும் ஞாபகம் இருக்கிறது ஆனால் நம்மையெல்லாம் பார்த்து விட்டு என்று தாங்கள் சொல்லுவதுதான் தவறு. அவன் தங்களைப் பார்த்து விட்டுத்தான் அப்படி மயங்கி நின்றான். பக்கத்தில் நின்றவர்களை அவன் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை, அக்கா!"
"வானதி! நல்ல பொய் சொல்கிறாய்! பரிகாசம் செய்கிறாயா என்ன?"
"இல்லவே இல்லை! நான் ஒன்று கேட்கிறேன்; அதற்கு உண்மையாக விடை சொல்கிறீர்களா?"
"கேட்டுப் பாரேன்!"
"அந்த வாலிப வீரனுடைய ஞாபகம் உங்களுக்கு இப்போது ஏன் வந்தது?"
"நல்ல வாயாடியாகப் போய்விட்டாய் நீ! அவனுடைய ஞாபகம் வந்ததில் என்ன தவறு?"
"தவறு என்று யார் சொன்னது? நான் சொல்லவில்லையே? அது மிகவும் இயற்கைதான்! எனக்குக் கூட, அந்த வாலிபனுடைய கதி அப்புறம் என்னவாயிற்றோ என்று கவலைதான்."
"உனக்கு ஏன் அதைப் பற்றிக் கவலை உண்டாக வேண்டும்?"
"ஏன் கவலைப்படக் கூடாது? ஒருவரை நாம் பார்த்திருந்தால், அவரைப் பற்றிய ஞாபகம் நமக்கு அடிக்கடி வந்தால், அவர் என்ன ஆனார் என்று தெரிந்து கொள்ள விரும்புவது இயற்கை அல்லவா!"
"நல்ல இயற்கை! அப்படியெல்லாம் மனம் சிதறுவதற்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது. மனத்தைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்....... அதோ கேளடி, வானதி அது என்ன பறைச் சத்தம்? அந்தக் குரல் என்ன சொல்லுகிறது? சற்றுக் கவனமாகக் கேள், பார்க்கலாம்!"
ஆம்; தூரத்தில் எங்கேயோ வீதியில் பறை கொட்டும் சப்தமும், நடு நடுவே மனிதக் குரல் கூச்சலிடும் சப்தமும் கேட்டது.காது கொடுத்துக் கவனமாகக் கேட்டபோது, மனிதக் குரல் கூறியது இது என்று தெரிந்தது.
"சத்துரு நாட்டிலிருந்து வந்த ஒற்றன் ஒருவன் தஞ்சாவூர்க் கோட்டையில் பொய் முத்திரையைக் காட்டிப் புகுந்து உளவு அறிந்து கொண்டு ஓடி விட்டான். இரண்டு பேரை மரண காயப்படுத்தி விட்டுத் தப்பிப் போய்விட்டான். வாலிபப் பிராயத்தினன். வாட்டசாட்டமான தேகம் உடையவன். இந்திரஜித்தைப் போன்ற மாய தந்திரக்காரன். பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன். அவனுக்கு அடைக்கலம் கொடுப்போருக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அவனைப் பிடித்துக் கொடுப்போருக்கு ஆயிரம் பொன் பரிசு அளிக்கப்படும். தஞ்சைக் கோட்டைத் தளபதி பழுவேட்டரையர் காலாந்தககண்டரின் கண்டிப்பான கட்டளை!"
இவ்விதம் மனிதக் குரல் கூறி முடித்ததும் பறை, 'தம், தம், தடதடதம்' என்று முழங்கியது. குந்தவை தேவியின் திருமேனி ஏனோ நடுங்கியது.
அச்சமயம் தாதி ஒருத்தி வந்து, "தேவி! ஆழ்வார்க்கடியார் என்னும் வீர வைஷ்ணவர் தங்களைப் பார்க்க வந்திருக்கிறார். ஏதோ அவசர காரியமாம்!" என்றாள்.
"இதோ வந்துவிட்டேன்!" என்று சொல்லிவிட்டுக் குந்தவை, கொடி ஊஞ்சலிலிருந்து இறங்கிச் சென்றாள்.