←அத்தியாயம் 16: சுந்தர சோழரின் பிரமை

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திசுழற்காற்று: மாண்டவர் மீள்வதுண்டோ?

அத்தியாயம் 18: துரோகத்தில் எது கொடியது?→

 

 

 

 

 


359பொன்னியின் செல்வன் — சுழற்காற்று: மாண்டவர் மீள்வதுண்டோ?கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

சுழற்காற்று - அத்தியாயம் 17[தொகு]
மாண்டவர் மீள்வதுண்டோ?


இதுவரைக்கும் சுந்தர சோழர் வேறு யாரோ ஒரு மூன்றாம் மனிதனைப் பற்றிச் சொல்வது போலச் சொல்லிக் கொண்டுவந்தார். இப்போது தம்முடைய வாழ்க்கையில் நடந்த வரலாறாகவே சொல்லத் தொடங்கினார்:- 
"என் அருமை மகளே! சாதாரணமாக ஒரு தகப்பன் தன் மகளிடம் சொல்லக் கூடாத விஷயத்தை இன்று நான் உனக்குச் சொல்கிறேன். இதுவரை யாரிடமும் மனதைத் திறந்து சொல்லாத செய்தியை உன்னிடம் சொல்கிறேன். இந்த உலகத்திலேயே என் நண்பன் அநிருத்தன் ஒருவனுக்குதான் இது தெரியும்; அவனுக்கும் முழுவதும் தெரியாது. இப்போது என் மனத்தில் நடக்கும் போராட்டம் அவனுக்குத் தெரியாது. ஆனால் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன். நம்முடைய குடும்பத்தில் யாராவது ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். உன் தாயாரிடம் சொல்ல முடியாது. உன்னிடந்தான் சொல்ல வேண்டுமென்று சில காலமாகவே எண்ணியிருந்தேன். அதற்குச் சந்தர்ப்பம் இன்றைக்கு வந்தது. நீ என் நிலையைக் கண்டு சிரிக்கமாட்டாய்; என் மனத்திலுள்ள புண்ணை ஆற்றுவதற்கு முயல்வாய்; என்னுடைய விருப்பம் நிறைவேறவும் உதவி செய்வாய்! - இந்த நம்பிக்கையுடன் உன்னிடம் சொல்கிறேன்... 
"அந்தத் தீவிலிருந்து மரக்கலத்தில் ஏறிப் புறப்பட்டேன் கோடிக்கரை சேர்ந்தேன். என் பாட்டனார் பராந்தக சக்கரவர்த்தி இந்தத் தஞ்சை அரண்மனையில் அப்போது தங்கியிருக்கிறார் என்று அறிந்து நேராக இங்கே வந்தேன். 
"நான் தஞ்சை வந்து சேர்ந்தபோது பராந்தக சக்கரவர்த்தி மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். அவர் உள்ளம் நொந்து போயிருந்தது. நாற்பது ஆண்டு காலத்தில் அவர் நிர்மாணித்த மகாராஜ்யம் சின்னா பின்னம் அடைந்து கொண்டிருந்தது. அவருக்குப் பிறகு பட்டத்தை அடைய வேண்டியவரான இராஜாதித்தர் தக்கோலப் போரில் மாண்டார். அதே போர்க்களத்தில் படுகாயம் அடைந்த என் தந்தை அரிஞ்சயர் பிழைப்பாரோ, மாட்டாரோ என்ற நிலையில் இருந்தார். கன்னர தேவனுடைய படைகள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி முன்னேறிக் கொண்டு வந்தன. தெற்கே பாண்டியர்கள் தலையெடுத்து வந்தார்கள். இலங்கையில் சோழ சைன்யம் தோல்வியுற்றுத் திரும்பி விட்டது. பல போர்க்களங்களிலும் சோழ நாட்டு வீராதி வீரர் பலர் உயிர் துறந்து விட்டார்கள். இந்தச் செய்திகள் எல்லாம் ஒருமிக்க வந்து முதிய பிராயத்துப் பராந்தக சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் புண்படுத்தித் துயரக் கடலில் ஆழ்த்தியிருந்தன. இந்த நிலையில் என்னைக் கண்டதும் அவருடைய முகம் மலர்ச்சி அடைந்தது. என் பாட்டனாருக்கு நான் குழந்தையாயிருந்த நாளிலிருந்து என் பேரில் மிக்க பிரியம். என்னை எங்கேயும் அனுப்பாமல் அரண்மனையில் தம்முடனேயே வெகுகாலம் வைத்திருந்தார். பிடிவாதம் பிடித்து அவரிடம் விடை பெற்றுக் கொண்டு நான் ஈழ நாட்டுக்குப் போனேன். அங்கிருந்து திரும்பி வந்தவர்களிலே நான் இல்லை என்று அறிந்ததும் என் பாட்டனாரின் மனம் உடைந்து போயிருந்தது. நான் இறந்து விட்டதாகவும் தெரியவில்லையாதலால் என்னைத் தேடிவரக் கூட்டங் கூட்டமாக ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார். 
"கடைசியில் ஒரு கூட்டம் என்னைக் கண்டுபிடித்தது. நான் தஞ்சை வந்து சேர்ந்ததும், புண்பட்ட அவர் மனத்துக்குச் சிறிது சாந்தி ஏற்பட்டது. அவருடைய அந்தியகாலத்தில் வீழ்ச்சியடைந்து வந்த சோழ சாம்ராஜ்யம் மறுபடியும் என்னால் மேன்மையடையும் என்பதாக எப்படியோ அவர் மனத்தில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையைச் சோதிடர்கள் வளரச் செய்திருந்தார்கள். அதற்குத் தகுந்தாற்போல், அவருக்குப் புதல்வர்கள் நாலு பேர் இருந்தும், அவருடைய அந்திய காலத்தில் பேரன் நான் ஒருவனே இருந்தேன். சக்கரவர்த்தி இறக்கும் தறுவாயில் என்னை அருகில் அழைத்து உச்சி முகர்ந்து கண்ணீர் பெருக்கினார். 'அப்பனே! எனக்குப் பிறகு உன் பெரியப்பன் கண்டராதித்தன் சிம்மாசனம் ஏறுவான். அவனுக்குப் பிறகு இந்தச் சோழ ராஜ்யம் உன்னை அடையும். உன்னுடைய காலத்திலேதான் மறுபடி இந்தச் சோழ குலம் மேன்மையடையப் போகிறது' என்று பலமுறை அவர் கூறினார். 
"சோழ நாட்டின் மேன்மையை நிலை நாட்டுவதே என் வாழ்க்கையின் இலட்சியமாயிருக்க வேண்டுமென்று சொல்லி, அவ்வாறு என்னிடம் வாக்குறுதியும் பெற்றுக்கொண்டார்... 
"என் பாட்டனார் என்னிடம் எவ்வளவு பிரியம் வைத்திருந்தாரோ, அவ்வளவு நான் அவரிடம் பக்தி வைத்திருந்தேன். ஆதலின் அவருடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு நடப்பதென்று உறுதி கொண்டேன். ஆனாலும் என் உள்ளத்தில் அமைதி இல்லை. கடல் சூழ்ந்த தீவில் கரடிக்கு இரையாகாமல் என்னைக் காப்பாற்றிய கரையர் குலமகளின் கதி என்ன? சோழ நாட்டுச் சிம்மாசனத்தில் கீழ்க்குலத்தில் பிறந்த ஊமைப் பெண் ஒருத்தி ராணியாக வீற்றிருக்க முடியுமா? அரண்மனை வாழ்வு அவளுக்குத்தான் சரிப்பட்டு வருமா? நாட்டார் நகரத்தார் என்னைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்களா?... இந்த எண்ணங்கள் அடிக்கடி தோன்றி என் மனத்தைச் சஞ்சலப்படுத்தின. இது மட்டுமன்று, என் பெரிய தகப்பனார் கண்டராதித்தர் சில காலத்திற்கு முன்புதான் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டிருந்தார். அவரை மணந்த பாக்கியசாலி மழவரையர் குலமகள் என்பதை நீ அறிவாய். முதல் மனைவிக்குக் குழந்தை இல்லையென்றால், இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பிறவாது என்பது என்ன நிச்சயம். பெரியப்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்தால், இராஜ்யம் எனக்கு எப்படி வரும்? இதைப் பற்றி ராஜ்யத்தில் சிலர் அப்போதே பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. ஆனால் அத்தகைய சந்தேகம் யாருக்கும் உண்டாகக்கூடாது என்று மகாத்மாவாகிய என் பெரிய தகப்பனார் விரும்பினார் போலும். பராந்தக சக்கரவர்த்தி காலமான பிறகு கண்டராதித்தருக்கு இராஜ்ய பட்டாபிஷேகம் நடந்தது. அதே சமயத்தில் எனக்கும் யுவராஜ்ய பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று என் பெரியப்பா - புதிய சக்கரவர்த்தி - ஏற்பாடு செய்துவிட்டார்... 
"என் பிரிய மகளே! இன்றைக்கு உன் தம்பி அருள் மொழியின் பேரில் இந்நாட்டு மக்கள் எப்படிப் பிரியமாயிருக்கிறார்களோ, அப்படி அந்த நாளில் என்பேரில் அபிமானமாயிருந்தார்கள். அரண்மனைக்குள்ளே பட்டாபிஷேகம் நடந்து கொண்டிருந்தபோது வெளியிலே ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். புதிதாக முடிசூடிய சக்கரவர்த்தியும், யுவராஜாவும் சேர்ந்தாற்போல் ஜனங்களுக்குக் காட்சி தரவேண்டும் என்று அனைவரும் விரும்பினார்கள். அவ்விதமே பெரியப்பாவும், நானும் இந்த அரண்மனை மேன்மாடத்தின் முன்றிலுக்கு வந்து நின்றோம். கீழே ஒரே ஜன சமுத்திரமாக இருந்தது. அவ்வளவு பேருடைய முகங்களும் மலர்ந்து விளங்கின. எங்களைக் கண்டதும் அவ்வளவு பேரும் குதூகலமடைந்து ஆரவாரித்தார்கள். நாம் இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டது பற்றி இவ்வளவு ஆயிரமாயிரம் மக்கள் குதூகலம் அடைந்திருக்கிறார்களே, அப்படியிருக்க, எங்கேயோ ஒரு கண் காணாத் தீவில் காட்டின் மத்தியில் வாழும் ஊமைப் பெண்ணை பற்றி நாம் கவலைப் படுவது என்ன நியாயம்? இவ்வளவு பேருடைய மகிழ்ச்சி முக்கியமானதா? ஒரே ஒரு ஊமைப் பெண்ணின் வாழ்க்கை முக்கியமானதா?... 
"இவ்வாறு எண்ணிக்கொண்டே எங்களை அண்ணாந்து பார்த்தபடி நின்ற மலர்ந்த முகங்களை ஒவ்வொன்றாகக் கவனித்து கொண்டு வந்தேன். அந்த ஜனங்களிலே ஆண்களும் பெண்களும், முதியவர்களும் இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் நின்றார்கள். எல்லோரும் ஒரே களிப்புடன் காணப்பட்டார்கள். ஆனால் திடீரென்று ஒரு முகம், ஒரு பெண்ணின் முகம், சோகம் ததும்பிய முகம், கண்ணீர் நிறைந்த கண்களினால் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்த முகம், தெரிந்தது. அத்தனைக் கூட்டத்துக்கு நடுவில், எப்படி அந்த ஒரு முகம், என் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்ததென்பதை நான் அறியேன். பிறகு அங்கிருந்து என் கண்களும் நகரவில்லை; கவனமும் பெயரவில்லை. அந்த முகம் வரவரப் பெரிதாகி வந்தது; என் அருகே வருவது போலிருந்தது. கடைசியில், அந்தப் பெரிய ஜனத்திரள் முழுவதும் மறைந்து, என் அருகில் நின்றவர்கள் எல்லாரும் மறைந்து, ஆசார வாசல் மறைந்து, தஞ்சை நகரின் கோட்டை கொத்தளம் மறைந்து, வானும் மண்ணும் மறைந்து, அந்த ஒரு முகம் மட்டும் தேவி பரமேசுவரியின் விசுவரூபத்தைப் போல் என் கண் முன்னால் தோன்றியது. என் தலை சுழன்றது; கால்கள் பலமிழந்தன; நினைவு தவறியது... 
"அப்படியே நான் மயங்கி விழுந்து விட்டதாகவும் பக்கத்திலிருந்தவர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டதாகவும் பிற்பாடு அறிந்தேன். பட்டாபிஷேக வைபவச் சடங்குகளில் நான் அதிகம் களைத்துப்போய் விட்டதாக மற்றவர்கள் நினைத்தார்கள். ஜனங்களுக்குக் காட்சி அளித்தது போதும் என்று என்னை அரண்மனைக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். பிறகு எனக்கு நல்ல நினைவு வந்ததும் என் நண்பன் அநிருத்தனைத் தனியாக அழைத்து, நான் கண்ட காட்சியைக் கூறினேன். அந்த ஊமைப் பெண்ணின் அடையாளம் கூறி எப்படியாவது அவளைக் கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும் என்று கட்டளையிட்டேன். தஞ்சை நகரின் மூலை முடுக்கெல்லாம் தேடியும் அத்தகைய ஊமைப் பெண் யாரும் இல்லையென்று அநிருத்தன் வந்து சொன்னான். என்னுடைய உள்ளத்தின் பிரமையாக இருக்குமென்றும் கூறினான். நான் அவனைக் கோபித்துக்கொண்டு "இந்த உதவி கூடச் செய்யாவிட்டால் அப்புறம் நீ என்ன சிநேகிதன்?" என்றேன். தஞ்சைக் கோட்டைக்கு வெளியே கடற்கரையை நோக்கிச் செல்லும் பாதைகளில் ஆள் அனுப்பித் தேடும்படி சொன்னேன். அப்படியே பல வழிகளிலும் ஆட்கள் சென்றார்கள். கடற்கரை வரையில் போய்த் தேடினார்கள். கோடிக்கரைக்குப் போனவர்கள் அங்கேயுள்ள கலங்கரை விளக்கக் காவலன் வீட்டில் ஓர் ஊமைப் பெண் இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். அவள் பித்துப் பிடித்தவள் போலத் தோன்றினாளாம். எவ்வளவோ ஜாடைமாடைகளினால் அவளுக்கு விஷயத்தை தெரிவிக்க முயன்றது பயன்படவில்லையாம். அவர்களுடன் தஞ்சைக்கு வருவதற்கு அடியோடு மறுத்து விட்டாளாம். இந்தச் செய்தியை அவர்கள் கொண்டுவந்தவுடன், இன்னது செய்வதென்று தெரியாமல் மனங் கலங்கினேன். இரண்டு நாள் அந்தக் கலக்கத்திலேயே இருந்தேன். ஆனமட்டும் அவளை மறந்துவிடப் பார்த்தும் இயலவில்லை. இரவும் பகலும் அதே நினைவாயிருந்தது. இரவில் ஒருகணங்கூடத் தூங்கவும் முடியவில்லை. பிறகு அநிருத்தனையும் அழைத்துக் கொண்டு கோடிக்கரைக்குப் புறப்பட்டேன். குதிரைகளை எவ்வளவு வேகமாகச் செலுத்தலாமோ அவ்வளவு வேகமாகச் செலுத்திக் கொண்டு போனேன். போகும்போது என் மனக்கலக்கம் இன்னும் அதிகமாயிற்று. அந்த ஊமைப் பெண்ணை அங்கே கண்டுபிடித்தால், அப்புறம் அவளை என்ன செய்வது என்று எண்ணியபோது மனம் குழம்பியது. தஞ்சைக்கோ பழையாறைக்கோ அழைத்துப் போய் 'இவள் என் ராணி!' என்று சொல்லுவதா? அவ்வாறு நினைத்தபோது என் உள்ளமும் உடலும் குன்றிப்போய் விட்டன. 
"என் செல்வக் குமாரி! அந்த நாளில் நான் மேனி அழகில் நிகரற்றவன் என்று வேண்டாத பிரபலம் ஒன்று எனக்கு ஏற்பட்டிருந்தது. அதை ஒரு புகழாகவே நான் நினைக்கவில்லை. ஆயினும் மற்றவர்கள் அதைப்பற்றி ஓயாது பேசினார்கள். என் பாட்டனாரின் பெயராகிய 'பராந்தகன்' என்னும் பெயரை எனக்கு வைத்திருந்தும், அது அடியோடு மறையும்படி செய்து 'சுந்தர சோழன்' என்ற பெயரைப் பிரபலப்படுத்தி விட்டார்கள். அப்படி அனைவராலும் புகழப்பட்ட நான், நாகரிகம் இன்னதென்று தெரியாத ஓர் ஊமைப் பெண்ணை எப்படி அரண்மனைக்கு அழைத்துப் போவேன்? இல்லையென்றால் அவளை என்ன செய்வது - இப்படிப் பலவாறு எண்ணிக் குழம்பிய மனத்துடன் கோடிக்கரை சேர்ந்தேன். அந்த மகராஜி எனக்குக் கஷ்டம் எதுவும் இல்லாமல் செய்து விட்டாள். அங்கே நான் அறிந்த செய்தி என்னை அப்படியே ஸ்தம்பித்துப் போகும்படி செய்துவிட்டது. நாங்கள் அனுப்பிய ஆள்கள் திரும்பிச் சென்ற மறுநாள் அந்தப் பெண் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறினாளாம். அன்று அமாவாசை; காற்று பலமாக அடித்தது. கடல் பொங்கிக் கொந்தளித்து வந்து கலங்கரை விளக்கைச் சூழ்ந்து கொண்டது. அந்தப் பெண் சிறிது நேரம் கொந்தளித்த அலை கடலைப் பார்த்துக்கொண்டே நின்றாளாம். அப்படி அவள் அடிக்கடி நிற்பது வழக்கமாததால் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லையாம்! திடீரென்று 'வீல்' என ஒரு சத்தம் அலைகடலின் முழக்கத்தையும் மீறிக்கொண்டு கேட்டதாம். பிறகு அவளைக் காணோம்! பெண் உருவம் ஒன்று விளக்கின் ஊச்சியிலிருந்து கடலில் தலைகீழாக விழுந்ததை இரண்டொருவர் பார்த்தார்களாம். படகுகளைக் கொண்டு வந்து ஆனமட்டும் தேடிப்பார்த்தும் பயன்படவில்லை. கொந்தளித்துப் பொங்கிய கடல் அந்தப் பெண்ணை விழுங்கிவிட்டது என்றே தீர்மானிக்க வேண்டியிருந்ததாம். 
"இந்தச் செய்தியைக் கேட்டதும் என் நெஞ்சில் ஈட்டியினால் குத்துவது போன்ற வலியும், வேதனையும் உண்டாயின. ஆனால் சற்று நேரத்துக்கெல்லாம் ஒருவித அமைதியும் உண்டாயிற்று. அவளை என்ன செய்வது என்ற கேள்வி இனி இல்லை. அதைப் பற்றி யோசித்து மனத்தைக் குழப்பிக்கொள்ள வேண்டியதுமில்லை!... 
"துன்பமும், அமைதியும் கலந்த இந்த விசித்திர வேதனையுடன் தஞ்சைக்குத் திரும்பினேன். இராஜ்ய காரியங்களில் மனத்தைச் செலுத்தினேன். போர்க்களங்களுக்குச் சென்றேன். உன் தாயை மணந்து கொண்டேன். வீரப் புதல்வர்களைப் பெற்றேன். உன்னை என் மகளாக அடையும் பாக்கியத்தையும் பெற்றேன்... 
"ஆனாலும், மகளே! செத்துப்போன அந்தப் பாவியை என்னால் அடியோடு மறக்க முடியவில்லை. சிற்சில சமயம் என் கனவிலே அந்தப் பயங்கரகாட்சி, - நான் கண்ணால் பாராத அந்தக் காட்சி, - தோன்றி என்னை வருத்திக் கொண்டிருந்தது. கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து ஒரு பெண் உருவம் தலைகீழாகப் பாய்ந்து அலை கடலில் விழும் காட்சி என் கனவிலும் கற்பனையிலும் தோன்றிக் கொண்டிருந்தது. கனவில் அந்தப் பயங்கரக் காட்சியைக் காணும் போதெல்லாம் நான் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருப்பேன். பக்கத்தில் படுத்திருப்பவர்கள் 'என்ன? என்ன?' என்று கேட்பார்கள். உன் தாயார் எத்தனையோ தடவை கேட்டதுண்டு. ஆனால் நான் உண்மையைக் கூறியதில்லை. 'ஒன்றுமில்லை' என்று சில சமயம் சொல்வேன். அல்லது போர்க்கள பயங்கரங்களைக் கற்பனை செய்து கூறுவேன். நாளடைவில் காலதேவனின் கருணையினால் அந்தப் பயங்கரக் காட்சி என் மனத்தை விட்டு அகன்றது; அவளும் என் நினைவிலிருந்து அகன்றாள்; அகன்று விட்டதாகத் தான் சமீப காலம் வரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உயிரோடிருப்பவர்களைக் காட்டிலும் செத்துப் போனவர்கள் அதிகக் கொடுமைக்காரர்கள் என்று தோன்றுகிறது. மகளே! ஊமைச்சியின் ஆவி என்னைவிட்டுவிடவில்லை. சில காலமாக அது மீண்டும் தோன்றி என்னை வதைக்க ஆரம்பித்திருக்கிறது! என் மகளே! மாண்டவர்கள் மீண்டு வருவார்கள் என்று நீ நம்புகிறாயா...?" 
இவ்விதம் சொல்லிவிட்டுச் சுந்தரசோழர் தம் பார்வையை எங்கேயோ தூரத்தில் செலுத்தி வெறித்துப் பார்த்தார். அவர் பார்த்த திக்கில் ஒன்றுமே இல்லைதான்! ஆயினும் அவருடைய உடம்பு நடுங்குவதைக் குந்தவை கண்டாள். எல்லையற்ற இரக்கம் அவர் பேரில் அவளுக்கு உண்டாயிற்று. கண்களில் நீர் ததும்பியது. தந்தையின் மார்பில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். அதனால் அவருடைய நடுக்கமும் குறைந்ததாகத் தோன்றியது. பிறகு தந்தையை நிமிர்ந்து நோக்கி, "அப்பா! இந்தப் பயங்கரமான வேதனையைப் பல வருஷகாலம் தாங்கள் மனத்திலேயே வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். அதனாலேதான் தங்கள் உடம்பும் சீர்குலைந்து விட்டது. இப்போது என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா? இனிமேல் தங்கள் உடம்பு சரியாகப் போய்விடும்" என்றாள். 
சுந்தரசோழர் அதைக் கேட்டுச் சிரித்த சிரிப்பின் ஒலியில் வேதனையுடன் கூட அவநம்பிக்கையும் கலந்திருந்ததது. 
"குந்தவை! நீ நம்பவில்லை. மாண்டவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நீ நம்பவில்லை. ஆனாலும் அதோ அந்தத் தூணுக்குப் பக்கத்தில்; குத்து விளக்கின் பின்னால், அந்தப் பாவியின் ஆவி நேற்று நள்ளிரவில் நின்றது. என் கண்ணாலேயே பார்த்தேன். அதை எப்படி நம்பாமலிருக்க முடியும்? நான் கண்டது வெறும் பிரமை என்றால், உன் தோழியைப் பற்றி என்ன சொல்வாய்? அவள் எதையோ பார்த்துக் கேட்டதனால் தானே நினைவு தப்பி விழுந்தாள்! அவளை அழைத்து வா, குந்தவை! நானே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்!" என்று சுந்தர சோழர் பரபரப்புடன் கூறினார். 
"அப்பா! வானதி ஒரு பயங்கொள்ளிப் பெண்! கொடும்பாளூர் வீரவேளிர் குலத்தில் இவள் எப்படிப் பிறந்தாளோ, தெரியவில்லை. இருட்டில் தூணைப் பார்த்தாலும், அவள் அலறியடித்துக்கொண்டு மயக்கமாய் விழுவாள். அவளைக் கேட்பதில் யாதொரு பயனும் இல்லை. அவள் ஏதும் பார்த்திருக்கவும் மாட்டாள்; கேட்டிருக்கவும் மாட்டாள்." 
"அப்படியா சொல்கிறாய்? அவள் போனால் போகட்டும். நான் சொல்ல வேண்டியது மிச்சத்தையும் கேள்! மாண்டவர்கள் மீண்டு வருவார்கள் என்பதில் எனக்கும் வெகுகாலம் நம்பிக்கை இல்லாமல் தானிருந்தது. அப்படிப்பட்ட தோற்றம் என்னுடைய வீண் மனப் பிரமை என்றே நானும் எண்ணியிருந்தேன். காவேரி நதியில் நாம் எல்லாருமாக ஓடத்தில் போய்க்கொண்டிருந்தபோது குழந்தை அருள்மொழிவர்மன் திடீரென்று காணாமற்போனது உனக்கு நினைவிருக்கிறதல்லவா? நாம் எல்லாரும் திகைத்தும் தவித்தும் நிற்கையில் ஒரு பெண்ணரசி பொன்னி நதி வெள்ளத்திலிருந்து குழந்தையை எடுத்துக் தூக்கிக் கொடுத்தாள். குழந்தையை மற்றவர்கள் வாங்கிக் கொண்டதும் அவள் மறைந்துவிட்டாள். இதைப் பற்றி நாம் எவ்வளவோ தடவை பேசியிருக்கிறோம். நீ மறந்திருக்க முடியாது. நீங்கள் எல்லாரும் காவேரியம்மன்தான் குழந்தையைக் காப்பாற்றியதாக முடிவு கட்டினீர்கள். ஆனால் என் கண்ணுக்கு என்ன தோன்றியது தெரியுமா? அந்த வலைஞர் குலமகள் - ஊமைச்சி தான் - குழந்தையை எடுத்துக் கொடுத்ததாகத் தோன்றியது. அன்றைய தினமும் நான் நினைவிழந்து விட்டேன் என்பது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? குழந்தைக்கு நேர்ந்த அபாயத்தை முன்னிட்டு நான் நினைவிழந்தேன் என்று எல்லாரும் எண்ணினார்கள். ஆனால் உண்மை அதுவன்று. இத்தனை நாள் கழித்து உனக்குச் சொல்கிறேன். குழந்தையை எடுத்துக் கொடுத்த பெண்ணுருவம் அவளுடைய ஆவி உருவம் என்று எனக்குத் தோன்றியபடியால்தான் அப்படி மூர்ச்சையடைந்தேன்... 
"மகளே! உன் தமையனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிய தினம் நினைவிருக்கிறதா? அன்று பட்டாபிஷேகம் நடந்த பிறகு ஆதித்த கரிகாலன் அந்தப்புரத்துக்குத் தாய்மார்களிடம் ஆசி பெறுவதற்காக வந்தான் அல்லவா? அவனுக்குப் பின்னால் நான் வந்தேன். அதே ஊமைச்சியின் ஆவி அங்கே பெண்களின் மத்தியில் நின்று கரிகாலனைக் கொடூரமாக உற்றுப் பார்த்ததைக் கண்டேன். மீண்டும் ஒரு தடவை பிரக்ஞை இழந்தேன். பிறகு யோசித்தபோது அந்தச் சம்பவத்தைக் குறித்து எனக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அப்படி அவள் கரிகாலனைக் கொடூரமாகப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று ஐயுற்றேன். அதுவும் என் சித்தப்பிரமையின் தோற்றமாயிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், மகளே! இந்தத் தடவை தஞ்சைக்கு வந்த பிறகு அந்தச் சந்தேகமெல்லாம் தீர்ந்து விட்டது. ஒரு காலத்தில், அவள் உயிரோடிருந்த காலத்தில், அவள் முகத்தைப் பார்த்து அவள் மனத்திலுள்ளதைத் தெரிந்து கொள்வேன்; அவள் உதடு அசைவதைப் பார்த்து அவள் சொல்ல விரும்புவது இன்னதென்று தெரிந்து கொள்வேன்! அந்தச் சக்தியை மீண்டும் நான் பெற்று விட்டேன், குந்தவை! நாலைந்து முறை நள்ளிரவில் அவள் என் முன்னால் தோன்றி எனக்கு எச்சரிக்கை செய்துவிட்டாள். 
"'என்னைக் கொன்றாயே! அதை நான் மன்னிக்கிறேன். ஆனால் மீண்டும் பாவம் செய்யாதே! ஒருவனுக்குச் சேர வேண்டிய இராஜ்யத்தை இன்னொருவனுக்குக் கொடுக்காதே!' என்று அவள் சொல்வதைப் புரிந்து கொண்டேன். அவளுக்குப் பேசும் சக்தி வந்து வாயினால் பேசினால் எப்படி தெரிந்து கொள்வேனோ அவ்வளவு தெளிவாகத் தெரிந்துகொண்டேன். மகளே! அதை நிறைவேற்றி வைக்க எனக்கு நீ உதவி செய்ய வேண்டும். சாபமுள்ள இந்த இராஜ்யம் - இந்தச் சோழ சிம்மாசனம், - என் புதல்வர்களுக்கு வேண்டாம்! இதை மதுராந்தகனுக்குக் கொடுத்துவிடலாம்..." 
குந்தவை அப்போது குறுக்கிட்டு, "அப்பா! என்ன சொல்கிறீர்கள்? நாடுநகரமெல்லாம் ஒப்புக்கொண்டு முடிந்து போன காரியத்தை இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன? தாங்கள் மாற்றினாலும் உலகம் ஒப்புக் கொள்ளுமா?" என்று கேட்டாள். 
"உலகம் ஒப்புக் கொண்டால் என்ன, ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன? தர்மம் இன்னதென்று தெரிந்து செய்ய வேண்டியது என் கடமை. நான் இந்தச் சோழ ராஜ்யத்துக்கு இளவரசனாகவும், பிறகு சக்கரவர்த்தியாகவும் முடிசூட்டிக் கொண்டபோதே என் மனம் நிம்மதியாயில்லை. என் மனச்சாட்சி என்னை உறுத்தியது. மூத்தவரின் மகன் உயிரோடிருக்கும்போது இளையவரின் மகனாகிய நான் பட்டத்துக்கு வந்ததே முறையன்று. அந்தப் பாவத்தின் பலனை இன்று நான் அனுபவிக்கிறேன். என் புதல்வர்களும் அத்தகைய பாவத்துக்கு ஏன் உள்ளாக வேண்டும்? ஆதித்தனுக்கு இந்த ராஜ்யம் வேண்டாம்; அருள் மொழிக்கும் வேண்டாம். இந்த ராஜ்யத்துடன் வரும் சாபமும் வேண்டாம். நான் உயிரோடிருக்கும் போதே, மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டிவிட வேண்டும். அதன் பிறகு ஆதித்தன் காஞ்சியில் கட்டியிருக்கும் பொன் மாளிகையில் சென்று நான் மன நிம்மதியோடு வசிப்பேன்..." 
"அப்பா! பெரிய பிராட்டி இதற்குச் சம்மதிக்க வேண்டாமா?" 
"மகளே! அதற்காகத்தான் உன் உதவியை நாடுகிறேன், எந்தக் காரணம் சொல்லியாவது என் பெரியம்மையை இங்கே வரும்படி செய். ஆகா! எவ்வளவோ தெரிந்த பரமஞானியான அந்த மூதாட்டிக்கு இந்தத் தர்ம நியாயம் ஏன் தெரியவில்லை? என்னை, ஏன் இந்தப் பாவம் செய்யும்படி ஏவினார்? அல்லது அவருடைய சொந்தப் பிள்ளையின் பேரிலேதான் அவருக்கு என்ன கோபம்? தாயின் இயற்கைக்கே மாறான இந்தக் காரியத்தில் அவருக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? மதுராந்தகன் ஏதோ சிவபக்தியில் ஈடுபட்டுச் சந்நியாசியாகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது அதற்கு நியாயம் உண்டு. இப்போது அவனுக்கே இராஜ்யம் ஆளும் ஆசை வந்திருக்கும் போது இன்னொருவனுக்கு எப்படிப் பட்டம் கட்டலாம்!" 
"அப்பா! இராஜ்யம் ஆள ஆசை இருக்கலாம்; அதற்குத் தகுதி இருக்க வேண்டாமா?" 
"ஏன் தகுதி இல்லை? மகானாகிய கண்டராதித்தருக்கும், மகாஞானியான மழவைராய மகளுக்கும் பிறந்த மகனுக்கு எப்படித் தகுதி இல்லாமற் போகும்?" 
"தகுதி இருக்கட்டும்; இராஜ்யத்தின் குடிகள் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டாமா?" 
"குடிகளுடைய அபிப்பிராயத்தைக் கேட்பதாயிருந்தால் அவர்கள் உன் தம்பிக்கு உடனே பட்டம் கட்டிவிட வேண்டும் என்பார்கள். அது நியாயமா? அருள்மொழிதான் அதை ஒப்புவானா?... அதெல்லாம் வீண் யோசனை, மகளே! எப்படியாவது உன் பெரிய பாட்டியை இங்கே சீக்கிரம் வரும்படி செய்! நான் யமனோடு போராடிக் கொண்டிருக்கிறேன் என்று எழுதி அனுப்பு; என்னை உயிரோடு பார்க்க வேண்டுமானால் உடனே புறப்பட்டு வரவேண்டுமென்று சொல்லி அனுப்பு..." 
"அது ஒன்றும் அவசியமில்லை, அப்பா! தஞ்சைத் தளிக்குளத்தார் கோயிலுக்குத் திருப்பணி செய்யவேண்டுமென்ற விருப்பம் பெரிய பிராட்டிக்கு இருக்கிறது. அதைக் குறிப்பிட்டு இச்சமயம் வரும்படி எழுதி அனுப்புகிறேன். அதுவரை தாங்கள் அலட்டிக் கொள்ளாமல் பொறுமையாயிருங்கள், அப்பா!" 
இவ்விதம் கூறித் தந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு குந்தவை தன் இருப்பிடத்துக்குச் சென்றாள். வழியில் அன்னை வானமாதேவியைச் சந்தித்தாள். "அம்மா! இனிமேல் என் தந்தையை ஒரு கண நேரம்கூட விட்டுப் பிரியாதீர்கள்! மற்றவர்கள் போய்ச் செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யட்டும்!" என்றாள். 
குந்தவையின் உள்ளத்தில் சில காலமாக ஏற்பட்டிருந்த ஐயங்கள் இப்போது கொஞ்சம் தெளிவு பெறத் தொடங்கியிருந்தன. கண் இருட்டாயிருந்த இடங்களில் கொஞ்சம் வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விரோதமாக ஏதோ ஒரு பயங்கரமான மந்திரதந்திரச் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பதை அவள் அறிவு நன்கு உணர்த்தியது. ஆனால் அது எத்தகைய சூழ்ச்சி, எப்படி எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதை முழுவதும் அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை. சோழ மகாராஜ்யத்துக்கும், அந்த ராஜ்யத்துக்குத் தன் சகோதரர்கள் பெற்றுள்ள உரிமைக்கும் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறதென்பதை அவள் உணர்ந்தாள். அந்த அபாயத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பெண்பாலாகிய தன்மீது சுமந்திருக்கிறதாகவும் நம்பினாள்.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel