←அத்தியாயம் 25: மாதோட்ட மாநகரம்

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திசுழற்காற்று: இரத்தம் கேட்ட கத்தி

அத்தியாயம் 27: காட்டுப் பாதை→

 

 

 

 

 


370பொன்னியின் செல்வன் — சுழற்காற்று: இரத்தம் கேட்ட கத்திகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

சுழற்காற்று - அத்தியாயம் 26[தொகு]
இரத்தம் கேட்ட கத்தி


அந்த வீர வைஷ்ணவர் எப்படி அங்கு வந்து சேர்ந்தார் எதற்காக வந்திருக்கிறார் என்பதைப்பற்றி வந்தியத்தேவனுடைய உள்ளம் கலக்கமடைந்திருந்தது. ஆயினும் அதை அவன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. 
"என்ன வேடிக்கையைச் சொல்வது? சற்று முன்னால் தான் உங்களைப் பற்றி நினைத்துக்கொண்டேன். நிமிர்ந்து பார்த்தால் தாங்கள் சுவரேறிக் குதித்து வருகிறீர்கள். 'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பொத்துக்கொண்டு கொடுக்கும்' என்று சொல்கிறார்களே, அது சரிதான்!" என்றான். 
"அப்பனே! சற்று முன்னால் என்னைப் பற்றி நினைத்தாயா? எதற்காக இந்த நரமனுஷனைப் பற்றி நீ ஏன் நினைக்க வேண்டும்? சாக்ஷாத் இராமபிரானைப் பற்றி நினைத்தாலும் பயன் உண்டு..." 
"தங்கள் வாய்க்குச் சர்க்கரைதான் போடவேண்டும். முதலில் நான் இராமபிரானைப் பற்றித்தான் நினைத்தேன். இங்கே வரும்போது கடலில் அக்கரையில் இராமேசுவரக் கோபுரம் தெரிந்தது. இராமர் அங்கேதானே சிவனைப் பூஜை செய்து இராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்கிக் கொண்டார் என்று எண்ணினேன்..." 
"நில்லு, தம்பி! நில்லு!" 
"நிற்க முடியாது, சுவாமிகளே! என்னால் நிற்க முடியாது. நடந்து நடந்து, நின்று நின்று, என் கால்கள் கெஞ்சுகின்றன. தாங்களும் கருணைபுரிந்து உட்காருங்கள். அப்புறம் இராமரைப் பற்றி நினைத்தேனா? உடனே இராம பக்தனாகிய அனுமாரைப் பற்றி நினைவு வந்தது. அனுமாரைப் பற்றி எண்ணியதும் தங்கள் நினைவு வந்தது. உடனே பார்த்தால், தாங்களே வந்து விட்டீர்கள். சுவரேறிக் குதித்து மட்டும் வந்தீர்களா, அல்லது அனுமாரைப்போல் கடலையே தாண்டிக் குதித்து வந்தீர்களா?" 
"தம்பி மகா பக்த சிரோன்மணியான அனுமார் எங்கே? அடியேன் எங்கே? அனுமார் இந்த இலங்கைக்கு வந்து அக்ஷய குமாரன் முதலிய இராட்சதர்களை அதாஹதம் செய்தார். என்னால் கேவலம் ஒரு பூனைக்கு வழிசொல்ல முடியவில்லை. இதோபார்! எப்படி ஒரு பூனை என் கால்களைப் பிறாண்டி இரத்தக் காயம் செய்துவிட்டது!" என்று ஆழ்வார்க்கடியான் தன் கால்களில் ஏற்பட்டிருந்த காயங்களைச் சுட்டிக் காட்டினான். 
"அடடா! இப்படியா நேர்ந்துவிட்டது? ஆனால் கேவலம் ஒரு பூனையோடு தாங்கள் சண்டைக்குப் போன காரணம் என்ன...?" 
"நான் சண்டைக்குப் போகவில்லை. அதுவேதான் என்னுடன் வலுச்சண்டைக்கு வந்தது..." 
"அது எப்படி சுவாமிகளே!" 
"உன்னைத் தேடிக்கொண்டு நான் வந்தேன். வாசற் காவலர்களை ஏமாற்றி கொல்லைப்புறச் சுவர் வழியாக ஏறிக் குதித்தேன். கீழே நான் கால்வைக்கிற இடத்தில் வேண்டுமென்று அந்தப் பூனை தன் வாலை நீட்டிக் கொண்டிருந்தது. என் கால் அதன் வாலை அப்படி இலேசாகத்தான் தொட்டது. இருந்தாலும் அந்தப் பொல்லாத பூனை தன் கால் நகங்களினால் என்னைத் தாக்கத் தொடங்கிவிட்டது. தம்பி! நான் சொல்வதைக் கேள்! புலியோடு சண்டை போட்டாலும் போடலாம்; ஆனையோடு சண்டை போட்டாலும் போடலாம்; பூனையோடு மட்டும் சண்டை போடக்கூடாது!" 
"சுவாமிகளே! அந்த இரகசியம் எனக்கு இப்போது தெரிந்து போய்விட்டது..." 
"எந்த இரகசியம்?" 
"அந்தப் பூனை இங்கே என் அறைக்கும் வந்தது. என் நெற்றியில் வாலினால் தடவிக் கொடுத்தது. என்னோடு கொஞ்சி விளையாடியது. என்னை நகத்தினால் பிறாண்டவில்லை. உம்மை மட்டும் தாக்கிப் பிறாண்டியது! அதற்குக் காரணம் என்ன? வைஷ்ணவர்களைக் கண்டால் பிடிக்காத வீர சைவப் பூனை அது!... 
"ஓகோ! அப்படியோ? இந்த யோசனை எனக்குத் தோன்றாமல் போயிற்றே? வீர சைவப் பூனை என்று தெரிந்திருந்தால் தடியினால் நாலு திருச்சாத்துச் சாத்தியிருப்பேனே?" 
"உம் கையில் தடி இல்லாததே நல்லது. ஏனென்றால், இந்த ஷேத்திரத்துக்கு வந்ததிலிருந்து என் உடம்பிலே கூட வீர சைவ இரத்தம் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது. என் உறையிலுள்ள கத்தி 'வீர வைஷ்ணவ இரத்தம் வேண்டும்' என்று அழுகிறது. நீர் எனக்குச் செய்த பேருதவியை நினைத்து அதை அடக்கி வைத்திருக்கிறேன்!" 
"அப்பனே! உனக்கு நான் ஓர் உதவியும் செய்யவில்லையே!" 
"வைஷ்ணவரே! தங்கள் சகோதரியாகிய பழுவூர் இளைய ராணியைப் பற்றி எனக்கு நீர் சொல்லவில்லையா?" 
"ஆமாம்; சொன்னேன்." 
"பழுவூர் இளையராணி கடம்பூருக்கு அருகில் மூடு பல்லக்கில் போனபோது, திரை விலகியதே, அப்போது அந்தத் தேவியை நீர் எனக்குச் சுட்டிக் காட்டவில்லையா?" 
"ஆம், ஆம் அதனால் என்ன?" 
"சொல்லுகிறேன், அதே பல்லக்கு தஞ்சைக் கோட்டைக்கருகில் சென்று கொண்டிருந்தபோது நான் பார்த்தேன். பல்லக்கு சுமப்பவர்கள் வேண்டுமென்று வந்து என் குதிரையின் மேல் இடித்தார்கள். நான் நியாயம் கோருவதற்காகப் பல்லக்கின் திரையை விலக்கிப் பார்த்தேன்..." 
"உள்ளே இருந்தது யார்?" 
"பழுவூர் இளையராணி சாக்ஷாத் நந்தினி தேவிதான்!" 
"ஓஹோ! நீ அதிர்ஷ்டசாலி. நான் ஆனமட்டும் முயன்றும் நந்தினியைப் பார்க்க முடியவில்லை. உனக்கு அது கைகூடிவிட்டதே!" 
"அதிர்ஷ்டம் வரும்போது அப்படித்தான் தானாகவே வரும்!" 
"அப்புறம்?" 
"நான் தங்கள் பெயரைச் சொன்னேன். தேவிக்கு முக்கியமான செய்தி தாங்கள் சொல்லி அனுப்பியதாகக் கூறினேன்..." 
"நானும் பார்த்தாலும் பார்த்தேன். உன்னைப் போல் கூசாமல் பொய் சொல்லுகிறவனை இந்தப் பிரபஞ்சத்தில் எங்கும் பார்த்ததே கிடையாது..." 
"வைஷ்ணவரே! என் மூதாதைகளுக்குக் கவிஞர்களின் பேரில் மிக்க பிரியம். அவர்களே கவிதைகளும் பாடியிருக்கிறார்கள்..." 
"அதனால் என்ன?" 
"கவி பரம்பரை இரத்தம் என் உடம்பிலும் ஓடுகிறது. அதனால் சில சமயம் கற்பனை பொங்கி வருகிறது. உம்மைப் போன்ற பாமரர்கள் அதைப் பொய் என்று சொல்லுவார்கள்..." 
"நல்லது; அப்புறம் என்ன நடந்தது?" 
"என் கற்பனையைக் கேட்டு வியந்து நந்தினிதேவி பழுவூர் முத்திரை மோதிரத்தைக் கொடுத்தார். அரண்மனையில் வந்து பார்க்கச் சொன்னார்."
"போய்ப் பார்த்தாயா?" 
"பின்னே, பார்க்காமலிருப்பேனா? உடனே போய்ப் பார்த்தேன். என் வீரதீரபராக்கிரமங்களைப் பற்றி நானே சொல்லித் தெரிந்து கொண்ட நந்தினிதேவி, எனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுத்தார்." 
"அது என்ன வேலை?" 
"இந்த இலங்கையில் மதுரை பாண்டியவம்சத்து மணிமகுடமும் இந்திரமாலையும் இருக்கின்றனவாம். இலங்கை அரச குடும்பத்தார் மலைநாட்டில் ஒளித்து வைத்திருக்கிறார்களாம். 'அந்த, நகைகளை எப்படியாவது தேடிக் கொண்டு வந்துவிடு!' என்று சொல்லி அனுப்பினார். அது இவ்வளவு கஷ்டமான வேலை என்று எனக்குத் தெரியாமல் போயிற்று..." 
"பெரிய பழுவேட்டரையரின் பொக்கிஷத்தில் உள்ள ஆபரணங்கள் ஆயிரம் கழுதைப் பொதி கனமிருக்கும் என்கிறார்கள். அவ்வளவும் இளையராணிக்குப் போதவில்லையாக்கும். சரி கொண்டுவந்தால் உனக்கு என்ன தருவதாகச் சொன்னாள்?" 
"தஞ்சைக் கோட்டைக் காவலைச் சின்னப் பழுவேட்டரையரிடமிருந்து பிடுங்கி எனக்குத் தந்து விடுவதாகச் சொன்னார்." 
"தம்பி! தம்பி! தஞ்சைக் கோட்டைக் காவல் உனக்குக் கிடைத்தால், தட்டுத் தடங்கலில்லாமல் நான் கோட்டைக்குள் வரலாம் அல்லவா?" 
"அழகாய்த் தானிருக்கிறது. எனக்குத் தஞ்சைக் கோட்டைக் காவல் கிடைக்கிற வழி என்ன? நான் தான் இந்த ஊரில் வந்து இப்படி அகப்பட்டுக் கொண்டேனே?" என்று வந்தியத் தேவன் மிகவும் சோகமான குரலில் கூறினான். 
"ஏன் அகப்பட்டுக் கொண்டாய்? எதற்காக உன்னைச் சிறைப்படுத்தியிருக்கிறார்கள், தெரியுமா?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான். 
"பழுவூர் ராணி கொடுத்த முத்திரை மோதிரத்தை என்னுடன் கொண்டுவந்தேன். இங்கேயும் அதற்குச் செல்வாக்கு இருக்கும் என்று எண்ணினேன். அதுதான் தவறாய்ப் போயிற்று?" 
"அது தவறுதான், தம்பி, பெரிய தவறு! இங்கே சேநாதிபதி கொடும்பாளூர்ப் பெரிய வேளார் அல்லவா? பழுவூர் வம்சத்துக்கும் கொடும்பாளூர் வம்சத்துக்கும் பெரும்பகை என்பது உனக்குத் தெரியாதா?" 
"தெரியாமல் வந்துதான் அகப்பட்டுக் கொண்டேன். என்ன செய்கிறதென்று தெரியவில்லை..." 
"தம்பி! நீ கவலைப்பட வேண்டாம்!" 
"கவலைப்படாமல்..." 
"உன்னை விடுதலை செய்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன்..." 
"ஓகோ!" 
"உன்னை ஒரு சமயம் ஓர் உதவி கேட்டேன்; நீ மறுத்து விட்டாய். ஆயினும் நான் உனக்கு உதவி செய்ய வந்தேன். என்னுடன் எழுந்து வா! இந்தக் கணமே இச்சிறையிலிருந்து தப்பிவிடலாம்!" 
"வைஷ்ணவரே! தாங்கள் சீக்கிரமே இங்கிருந்து போய்விடுங்கள்!" 
"ஏன், அப்பனே!" 
"என் உறையிலுள்ள கத்தி அதிகமாகப் புலம்பத் தொடங்கியிருக்கிறது. ஒரு 'வீர வைஷ்ணவனுடைய இரத்தம் வேண்டும் என்று கேட்கிறது." 
"கேட்டால் கேட்கட்டுமே! என் உடம்பில் வேண்டிய இரத்தம் இருக்கிறது. உன் கத்திக்குத் தேவையானால் கொஞ்சம் சாப்பிட்டு விட்டுப் போகட்டும். நீ எழுந்து என்னுடன் வா!" 
"இல்லை, நான் வர முடியாது!" 
"காரணம் என்ன?" 
"கண்ணைச் சுற்றிக்கொண்டு எனக்குத் தூக்கம் வருகிறது. எத்தனையோ நாளாக இரவில் நான் தூங்கவில்லை. இன்றைக்கு நன்றாய்த் தூங்குவது என்று தீர்மானித்திருக்கிறேன். அதனால்தான் பூனையைக் கூடத் தூக்கி எறிந்தேன்." 
"தம்பி! இது என்ன இப்படிச் சொல்லுகிறாய்? இளைய பிராட்டி குந்தவை தேவியிடம் நீ ஒப்புக்கொண்ட காரியத்தை இப்படித்தானா நிறைவேற்றப் போகிறாய்? இந்த ஓலையைப் 'பொன்னியின் செல்வன்' கையில் சேர்ப்பிக்கும் வரையில் இரவென்றும் பகலென்றும் பார்க்காமல் பிரயாணம் செய்வேனென்று நீ ஒப்புக்கொள்ளவில்லையா!"... இவ்விதம் சொல்லி ஆழ்வார்க்கடியான் தன்னுடைய மடியிலிருந்து ஓலையை எடுத்து வந்தியத்தேவனிடம் கொடுத்தான். 
அதை ஆர்வத்துடன் வந்தியத்தேவன் வாங்கிக் கொண்டான். இது வரையில் ஆழ்வார்க்கடியான் தன் வாயைப் பிடுங்கி வஞ்சித்து ஏமாற்றப் பார்க்கிறான் என்றே அவன் எண்ணியிருந்தான். இப்போது அந்த எண்ணம் மாறியது. 
"இந்த ஓலை தங்களிடம் எப்படி வந்தது?" என்று கேட்டான். 
"சேநாதிபதி விக்கிரமகேசரிதான் கொடுத்தார். இதோ இந்தப் பழுவூர் பனை இலச்சினையையும் திருப்பிக் கொடுக்கச் சொன்னார். உனக்கு எப்போது இஷ்டமோ அப்போது பிரயாணம் புறப்படலாம் என்று சொன்னார்." 
"வைஷ்ணவரே! தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி" 
"நன்றியையெல்லாம் சேர்த்து வைத்துக்கொள். சமயம் வரும்போது கொடுக்கலாம்." 
"ஐயா! இளவரசர் தற்சமயம் எங்கே இருக்கிறார் என்று தெரியுமா?" 
"அது யாருக்கும் தெரியாது. அநுராதபுரத்திலிருந்து மலை நாட்டுக்குச் சென்றிருக்கிறார். தேடிக் கண்டுபிடித்தேயாக வேண்டும். உன்னோடு வழிகாட்டிப் போகும்படி சேநாதிபதி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். நீ விரும்பினால் வருகிறேன்." 
வந்தியத்தேவனுக்கு மீண்டும் சிறிது சந்தேகம் உண்டாயிற்று. 
"சுவாமிகளே! புறப்படுவதற்கு முன்பு சேநாதிபதியை நான் பார்க்கலாமா?" என்று கேட்டான். 
"அவசியம் பார்க்கலாம், பார்த்துவிட்டுத்தான் பிரயாணம் கிளம்ப வேண்டும். வானதி தேவியைப் பற்றிச் சேநாதிபதியிடம் தெரிவியாமல் போகலாமா!" என்றான் ஆழ்வார்க்கடியான். 
இதைக் கேட்ட வந்தியத்தேவன் இந்த வீர வைஷ்ணவனுக்கு உண்மையிலேயே மந்திர வித்தை கை வந்திருக்குமோ என்று வியப்படைந்தான்.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel