←அத்தியாயம் 29: யானைப் பாகன்

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திசுழற்காற்று: துவந்த யுத்தம்

அத்தியாயம் 31: "ஏலேல சிங்கன்" கூத்து→

 

 

 

 

 


374பொன்னியின் செல்வன் — சுழற்காற்று: துவந்த யுத்தம்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

சுழற்காற்று - அத்தியாயம் 30[தொகு]
துவந்த யுத்தம்


முடிவில்லாத வழியில் குதிரைகள் போய்க் கொண்டிருப்பதாக வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. இந்த வைஷ்ணவன் நம்மை உண்மையில் ஏமாற்றிவிட்டானா? சத்துருக்களிடம் நம்மைக் கொண்டு போய் ஒப்புவிக்கப் போகிறானா? இருபுறமும் காடுகள் அடர்ந்திருந்தன. அவற்றுக்குள் பார்த்தால் கன்னங்கரிய பயங்கரமான இருள். அந்த இருண்ட காட்டில் என்னென்ன அபாயங்கள், என்னென்ன விதத்தில் இருக்கின்றனவோ தெரியாது. சிறுத்தைகள், கரடிகள், யானைகள், விஷ ஜந்துக்கள்,- இவற்றுடன் பகைவர்களும் மறைந்திருக்கக் கூடும்; யார் கண்டது? தெற்குத் திசையில் சோழ சைன்யம் கடைசியாகப் பிடித்திருக்கும் இடம் தம்பளைதான் என்று சொன்னார்களே? இவன் நம்மை எங்கே அழைத்துப் போகிறான்? 
நல்ல வேளையாக நிலா வெளிச்சம் கொஞ்சம் இருந்தது. சந்திர கிரணங்கள் வானுறவோங்கிய மரங்களின் உச்சியில் தவழ்ந்து விளையாடின. அதனால் ஏற்பட்ட சலன ஒளி சில சமயம் பாதையிலும் விழுந்து கொண்டிருந்தது. எதிரே மூன்று குதிரைகள் போவது சில சமயம் கண்ணுக்கு நிழல் உருவங்களாகத் தெரிந்தது. ஆனால் குதிரைகளின் குளம்புச் சத்தம் மட்டும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது. 
திடீரென்று வேறு சில சப்தங்கள் கேட்டன. காட்டின் நடுவில் எதிர்பார்க்க முடியாத சப்தங்கள். பல மனிதக் குரல்களின் கோலாகல சப்தம். குதூகலமாக ஆடிப்பாடும் சப்தம். ஆ! அதோ மரங்களுக்கிடையில் வெளிச்சம் தென்படுகிறது. சுளுந்துகளின் வெளிச்சத்தோடு பெரிய காளவாய் போன்ற அடுப்புகள் எரியும் வெளிச்சமும் தெரிகிறது. ஆகா! இந்தக் காட்டின் நடுவே தாவடி போட்டுக் கொண்டு குதூகலமாயிருக்கும் வீரர்கள் யார்? சோழ நாட்டு வீரர்களா? அல்லது பகைவர் படையைச் சேர்ந்த வீரர்களா? 
இதைப் பற்றி வந்தியத்தேவன் மிகச் சொற்ப நேரந்தான் சிந்தித்திருப்பான். அந்தச் சிறிய நேரத்தில் முன்னால் போன குதிரைகள் சட்டென்று நின்றதையும் ஒரு குதிரை பளீர் என்று திரும்பியதையும் வந்தியத்தேவன் கவனிக்கவில்லை. திரும்பிய குதிரை முன்னோக்கி வந்து வந்தியத்தேவன் குதிரையை அணுகியது. அதன்மேலிருந்தவன் வந்தியத்தேவன் பக்கம் சட்டென்று சாய்ந்து ஓங்கி ஒரு குத்து விட்டான். அந்தக் குத்தின் அதிர்ச்சியினால் வந்தியத்தேவன் கதி கலங்கித் தடுமாறியபோது அவனுடைய ஒரு முழங்காலைப் பிடித்து ஓங்கித் தள்ளினான். வந்தியத்தேவன் தடால் என்று தரையில் விழுந்தான். வந்த வேகத்தில் அவன் குதிரை அப்பால் சிறிது தூரம் பாய்ந்து சென்று அப்புறம் நின்றது. 
இதற்குள் அவனைத் தள்ளிய வீரன் குதிரையிலிருந்து கீழே குதித்து வந்தியத்தேவன் அருகில் வந்தான். திக்பிரமை கொண்டவனாய்த் தள்ளாடி எழுந்திருக்க முயன்ற வந்தியத்தேவனுடைய இடையிலிருந்த கத்தியைப் பறித்துத் தூர வீசி எறிந்தான். உடனே வந்தியத்தேவனுக்குப் புத்துயிர் வந்தது. அத்துடன் ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. ஒரு குதி குதித்து எழுந்து நின்றான். இரண்டு கையையும் இறுக மூடிக் கொண்டு வஜ்ரம் போன்ற முஷ்டியினால் தன்னைத் தள்ளிய ஆளைக் குத்தினான். குத்து வாங்கிக் கொண்டவன் சும்மா இருப்பானா? அவனும் தன் கைவரிசையைக் காட்டினான். இருவருக்குள்ளும் பிரமாதமான துவந்த யுத்தம் நடந்தது. கடோ த்கஜனும், இடும்பனும் சண்டை போடுவது போல் போட்டார்கள். வேடன் வேடந்தரித்த சிவபெருமானும் அர்ச்சுனனும் கட்டிப் புரண்டதைப் போல் புரண்டார்கள். திக் கஜங்களில் இரண்டு இடம் பெயர்ந்து ஒன்றோடொன்று மோதிக் கொள்வது போல் அவர்கள் மோதிக் கொண்டார்கள். 
வந்தியத்தேவனுடன் வந்த ஆழ்வார்க்கடியானும், அவர்களுக்கு முன்னால் வந்த வீரர்களும் விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள். மரக் கிளைகளின் அசைவினால் அடிக்கடி சலித்த நிலாவெளிச்சத்தில் அவர்கள் அந்த அதிசயமான சண்டையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சீக்கிரத்தில் காலடிச் சத்தங்கள் கேட்டன. கையில் கொளுத்தப்பட்ட சுளுந்துகளுடன் வீரர்கள் சிலர் மரக்கிளைகளை விலக்கிக்கொண்டு அவ்விடத்திற்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களும் அதிசயத்துடன் அந்தத் துவந்த யுத்தத்தைப் பார்த்துக் கொண்டு நிற்கலானார்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் சுற்றிலும் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. 
கடைசியாக வந்தியத்தேவன் கீழே தள்ளப்பட்டான். அவனைத் தள்ளியவீரன் அவன் மார்பின்பேரில் ஏறி உட்கார்ந்து கொண்டு இடையில் சுற்றியிருந்த துணிச் சுருளை அவிழ்த்தான். அதற்குள்ளிருந்த ஓலையைக் கைப்பற்றினான். அதைத் தடுப்பதற்கு வந்தியத்தேவன் ஆனமட்டும் முயன்றும் அவன் முயற்சி பலிக்கவில்லை. 
ஓலை அவ்வீரனுடைய கையில் சிக்கியதும் துள்ளிப் பாய்ந்து சுற்றிலும் நின்றவர்கள் பிடித்திருந்த சுளுந்து வெளிச்சத் தண்டை சென்றான். அவன் ஒரு சமிக்ஞை செய்யவும் மற்றும் இரு வீரர்கள் ஓடிவந்து வந்தியத்தேவன் தரையிலிருந்து எழுந்திருக்க முடியாமல் பிடித்துக் கொண்டார்கள். 
வந்தியத்தேவன் சொல்ல முடியாத ஆத்திரத்துடனும் தாபத்துடனும், "பாவி வைஷ்ணவனே! இப்படிப்பட்ட சிநேகத் துரோகம் செய்யலாமா! அவனிடமிருந்து அந்த ஓலையைப் பிடுங்கு!" என்று கத்தினான். 
"அப்பனே! என்னால் இது இயலாத காரியம் ஆயிற்றே!" என்றான் ஆழ்வார்க்கடியான். 
"சீச்சீ! உன்னைப்போன்ற கோழையை நான் பார்த்ததேயில்லை! உன்னை வழித்துணைக்கு நம்பி வந்தேனே?" என்றான் வந்தியத்தேவன். 
ஆழ்வார்க்கடியான் குதிரையிலிருந்து சாவதானமாக இறங்கி வந்தியத்தேவன் அருகில் சென்று, அவன் செவியில், "அடே அசடே! ஓலை நீ யாருக்குக் கொண்டுவந்தாயோ, அவரிடந்தான் போயிருக்கிறது! ஏன் வீணாகப் புலம்புகிறாய்?" என்றான். 
சுளுந்து வெளிச்சத்தில் ஓலையைப் படித்துக் கொண்டிருந்த வீரனுடைய முகத்தை மற்ற வீரர்கள் பார்த்துவிட்டார்கள். உடனே ஒரு மகத்தான குதூகல ஆரவாரம் அவர்களிடமிருந்து எழுந்தது. 
"பொன்னியின் செல்வர் வாழ்க! வாழ்க!" 
"அன்னிய மன்னரின் காலன் வாழ்க!" 
"எங்கள் இளங்கோ வாழ்க!" 
"சோழ குலத் தோன்றல் வாழ்க!" என்பன போன்ற கோஷங்கள் எழுந்து அந்த வனப்பிரதேசமெல்லாம் பரவின. அவர்களுடைய கோஷங்களின் எதிரொலியை போல் மரக்கிளையில் தூங்கிக்கொண்டிருந்த பட்சிகள் விழித்தெழுந்து இறகுகளைச் சடசடவென்று அடித்துக்கொண்டு பலவித ஒலிகளைச் செய்தன. 
இதற்குமுன் வந்திருந்தவர்களைத் தவிர இன்னும் பல வீரர்களும் என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்வதற்காகத் திடுதிடுவென்ற சத்தத்துடனே மரஞ் செடி கொடிகளை விலக்கிக் கொண்டு ஓடிவந்தார்கள். கூட்டம் பெருகுவதை கண்ட வீரன் சுற்றிலும் ஒரு முறை திரும்பிப் பார்த்து, "நீங்கள் அனைவரும் பாசறைக்குச் செல்லுங்கள். விருந்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்யுங்கள். சற்று நேரத்துக்குள் நான் வந்து விடுகிறேன்" என்று சொல்லவே, அவர்கள் எல்லாரும் ஒரு மனிதனைப் போல் விரைந்து அவ்விடம் விட்டுப் போய் விட்டார்கள். 
நன்றாகக் குத்தும் அடியும் பட்ட வந்தியத்தேவன் தரையில் உட்கார்ந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான். உடம்பில் அடிபட்ட வலியெல்லாம் மறந்துவிடும் படியான அதிசயக் கடலில் அவன் மூழ்கியிருந்தான். 
'ஆகா! இவர்தானா இளவரசர் அருள்மொழிவர்மர்! இவர் கையிலே தான் எவ்வளவு வலிவு! என்ன விரைவு! குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப் படவேண்டும் என்பார்களே! குத்துப் பட்டால் இவர் கையினால் அல்லவா குத்துப்பட வேண்டும். இவரிடம் அர்ச்சுனனுடைய அழகும், கம்பீரமும் இருக்கின்றன! பீமசேனனுடைய தேக பலம் இருக்கிறது! நாடு நகரமெல்லாம் இவரைப் போற்றிப் புகழ்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதானே!' என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். 
இந்தக் கதைக்குப் பெயர் அளித்த அரசிளங் குமாரரை, தமிழகத்தின் சரித்திரத்திலேயே இணை யாரும் சொல்ல முடியாத வீராதி வீரரை, சோழ மன்னர் குலத்தை அழியாப் புகழ் பெற்ற அமரர் குலமாக்கினவரை, பின்னால் இராஜராஜர் என்று பெயர் பெறப்போகும் அருள்மொழிவர்மரை, இவ்விதம் சமயமில்லாத சமயத்தில் அசந்தர்ப்பமான நிலைமையில், இராஜகுல சின்னம் எதுவும் இல்லாமல் நேயர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும்படி நேர்ந்துவிட்டது. இது நேயர்களுக்குச் சிறிது மனக் குறை அளிக்கக் கூடியது இயற்கைதான்! ஆயினும் என்ன செய்யலாம்? நம் கதாநாயகனாகிய வந்தியத்தேவனே இப்போது தான் அவரை முதன் முதலில் சந்தித்திருக்கிறான் என்றால், நாம் எப்படி அவரை முன்னதாகப் பார்த்திருக்க முடியும்! 
அருள்மொழித்தேவர் வந்தியத்தேவனை நோக்கிச் சமீபத்தில் வந்தார். மீண்டும் அவருடைய கை முஷ்டியின் பலத்தைச் சோதிக்க வருகிறாரோ என்று வந்தியத்தேவன் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான். 
ஆனால் அவருடைய புன்னகை ததும்பிய மலர்ந்த முகத்தைப் பார்த்து அந்தச் சந்தேகத்தை மாற்றிக் கொண்டான். 
"அன்பரே! வருக! வருக! அழகிய இலங்கைத் தீவுக்கு வருக! சோழ நாட்டு வீராதி வீரர்களுடனே சேர்வதற்கு இத்தனை தூரம் கடல் கடந்து வந்தீர் அல்லவா? அப்படி வந்த உமக்கு நான் அளித்த வீர வரவேற்பு திருப்தி அளித்திருக்கிறதா? அல்லது அது போதாது, இன்னும் சிறிய படாடோ பமான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கருதுகிறீரா?" என்று இளவரசர் கூறிப் புன்னகை பூத்தார். 
வந்தியத்தேவன் குதித்து எழுந்து வணக்கத்துடன் நின்று, "இளவரசரே! தங்கள் தமக்கையார் அளித்த ஓலை தங்களிடம் சேர்ந்துவிட்டது என் கடமையும் தீர்ந்துவிட்டது. இனி இந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் எனக்கில்லை. தங்களுக்கு விருப்பமானால் இன்னும் சிறிது நேரம் நாம் யுத்த காண்டம் படித்துப் பார்க்கலாம்!" என்றான். 
"ஆகா! உமக்கு என்ன சொல்வதற்கு? உம் உயிரைப் பற்றி இனி உமக்குக் கவலையில்லை. அந்தக் கவலை இனி என்னுடையது. இல்லாவிடில் நாளைக்கு இளைய பிராட்டிக்கு என்ன மறுமொழி சொல்வேன்? நண்பரே, இப்போது நான் படித்த ஓலை என் தமக்கையாரின் திருக்கரத்தினாலேயே எழுதப்பட்டதாகத் தெரிகிறது. அவர் உம்மிடம் அதை நேரில் கொடுத்தாரா?" என்று கேட்டார். 
"ஆம், இளவரசரே! இளைய பிராட்டியின் திருக்கரங்களிலிருந்து நேரில் இந்த ஓலையைப் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பின்னர் எங்கும் நிற்காமல் இரவு பகல் பாராமல் பிரயாணம் செய்து வந்தேன்" என்றான். 
"அது நன்றாய்த் தெரிகிறது. இல்லாவிடில் இவ்வளவு விரைவில் இங்கு வந்திருக்க முடியுமா? இப்படிப்பட்ட அரிய உதவி செய்தவருக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்!" என்று சொல்லிவிட்டு, இளவரசர் வந்தியத்தேவனை மார்புற அணைத்துக்கொண்டார். அப்போது வந்தியத்தேவன் சொர்க்கலோகத்தில் தான் இருப்பதாகவே எண்ணினான். அவன் உடம்பிலிருந்து வலியெல்லாம் மாயமாய் வந்துவிட்டது.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel