←அத்தியாயம் 42: பூங்குழலியின் கத்தி

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திசுழற்காற்று: "நான் குற்றவாளி!"

அத்தியாயம் 44: யானை மிரண்டது!→

 

 

 

 

 


387பொன்னியின் செல்வன் — சுழற்காற்று: "நான் குற்றவாளி!"கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

சுழற்காற்று - அத்தியாயம் 43[தொகு]
"நான் குற்றவாளி!"


"சமுத்திர குமாரி! உனக்கு என்னை நினைவிருக்கிறதா...?" 
'பொன்னியின் செல்வ! இது என்ன கேள்வி! யாரைப் பார்த்து 'நினைவிருக்கிறதா?' என்று கேட்கிறீர்கள்? ஆயிரமாயிரம் ஆண்டுகள் கலந்து பழகிய பின்னர் 'நினைவிருக்கிறதா?' என்று கேட்பது தகுமா? அல்லது தங்களுக்குத்தான் நினைவில்லாமல் போய்விட்டதா? எத்தனை யுகம் என்னுடைய சின்னஞ்சிறு படகில் தாங்கள் ஏறி வந்திருக்கிறீர்கள்? கடலில், முடிவில்லாத கடலில், எல்லையில்லாத வெள்ள அலைகளுக்குகிடையில், நாம் இருவரும் என் சிறு படகில் ஏறிக்கொண்டு உல்லாச யாத்திரை செய்ததையெல்லாம் மறந்து விட்டீர்களா? திடீரென்று நாலாபுறமும் கரிய இருள் சூழ்ந்து வர, நாம் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக, ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக்கொண்டு நெடுங்காலம் நின்றதை மறந்து விட்டீர்களா? பயங்கரமான புயல்காற்று அடித்தபோது, மலைமலையாக எழுந்த பேரலைகள் நம்முடைய படகைத் தாக்கி, ஒரு கணம் நம்மை வான மண்டலத்துக்கு உயர்த்தி, மறுகணம் பாதாளத்தில் அழுத்தி, இப்படியெல்லாம் அல்லோலகல்லோலம் செய்த நாட்களில், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதாரமாக நின்று அக்கொடும்புயலை எதிர்த்து வென்றதை மறந்துவிட்டீர்களா? ஒருசமயம் வானவெளியில் நாம் பறந்து பறந்து பறந்து சென்று கொண்டிருந்தோமே, அதை மறந்துவிட்டீர்களா? விண்மீன்களைத் தாங்கள் தாவிப் பிடித்து என் தலையில் ஆபரணங்களாகச் சூட்டினீர்களே, அதுவும் மறந்துவிட்டதா? பூரண சந்திரனை என் முகத்தருகிலே கொண்டு வந்து, 'இதோ இந்த வெள்ளித் தகட்டில் உன் பொன் முகத்தைப் பார்!' என்று சொல்லிக் காட்டினீர்களே, அதையும் மறந்துவிட்டீர்களா? மற்றொரு சமயம் ஆழ்கடலிலே தாங்கள் மூழ்கினீர்கள்; நான் உள்ளம் பதைபதைத்து நின்றேன்; சற்று நேரத்துக்கெல்லாம் இரண்டு கைகளிலும் முத்துக்களையும் பவழங்களையும் எடுத்துக் கொண்டு வெளிவந்து அவற்றை மாலையாகக் கோத்து என் கழுத்தில் சூட்டினீர்கள்! அதைத் தாங்கள் மறந்துவிட்டாலும் நான் மறக்க முடியுமா? அரசே! உச்சி வேளைகளில், நீலநிறம் ததும்பிய ஏரிக்கரைகளில், பூங்கொத்துக்களின் பாரம் தாங்காமல் மரக்கிளைகள் வந்து வளைந்து அலங்காரப் பந்தல் போட்ட இடங்களில், பசும்புல் பாய்களில், நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் எத்தனை எத்தனை எத்தனையோ நாட்கள் கழித்தோமே, அதையெல்லாம் மறந்துவிட முடியுமா? அந்த நேரங்களில் மரக்கிளைகளில் நூறு ஜோடிக் குயில்கள் உட்கார்ந்து கீதமிசைத்ததையும், ஆயிரம் பதினாயிரம் வண்டுகள் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரம் செய்ததையும், கோடிகோடி பட்டுப்பூச்சிகள் பல வர்ணச் சிறகுகளை அடித்துக்கொண்டு ஆனந்த நடனம் ஆடியதையும் நான் என்றேனும் மறக்க முடியுமா? எத்தனை ஜன்மங்களிலும் மறக்க முடியுமா? என்னைப் பார்த்து 'நினைவிருக்கிறதா?' என்று கேட்டீர்களே, அப்படிக் கேட்கலாமா? நினைவிருக்கிறது, ஐயா, நன்றாக நினைவிருக்கிறது!...' 
இவ்வாறெல்லாம் சொல்ல வேண்டும் என்று அந்த பேதைப் பெண்ணின் உள்ளம் துள்ளித் துடித்தது. 
ஆனால் அவளுடைய பவள இதழ்களோ, "நினைவிருக்கிறது!" என்ற இரு சொற்களை மட்டுமே முணு முணுத்தன. 
"ஆகா! சமுத்திரகுமாரி, நீ வாய் திறந்து பேசுகிறாயே! இந்த அதிசயமான இலங்கைத் தீவிலே உள்ள எத்தனையோ மணிமாட மண்டபங்களின் தூண்களில் அழகிய தேவ கன்னிகைகளின் சிலைகளை அமைந்திருக்கிறார்கள்! ஒருவேளை அத்தகைய சிலை வடிவமோ நீ, என்று நினைத்தேன். நல்ல வேளையாக நீ வாய் திறந்து பேசுகிறாய். இன்னும் சில வார்த்தைகள் சொல்! உன் இனிய குரலைக் கேட்க எனக்கு எவ்வளவோ ஆசையாயிருக்கிறது. நம் சேநாபதியிடம் நீ சில விஷயங்களைச் சொன்னாயாம். தொண்டைமான் நதியில் இரண்டு பெரிய மரக்கலங்கள் வந்து மறைவான இடத்தில் ஒதுங்கியிருப்பதாயும் அவை நிறையப் போர்வீரர்கள் வந்திருப்பதாயும் சொன்னாயாம். அது உண்மைதானே, சமுத்திரகுமாரி? அந்தக் கப்பல்களை உன் கண்களினால் நீயே பார்த்தாயா?" என்று இளவரசர் கேட்டார்.
"ஆம், ஐயா, என் கண்களினால் பார்த்தேன்!" என்றாள் பூங்குழலி. 
"ஆகா! இப்போது கொஞ்சம் உன் குரலைக் கேட்க முடிகிறது. என் செவிகள் இன்பமடைகின்றன. நல்லது; மரக்கலங்களைப் பார்த்ததும் நீ உன் படகை ஒரு குறுகிய கால்வாயில் விட்டுக் கொண்டு போனாய். கப்பல்கள் போகும் வரையில் காத்திருப்பதற்காக அடர்ந்த காட்டினுள் புகுந்து மறைவான இடத்தில் படுத்துக் கொண்டிருந்தாய். அச்சமயம் கப்பல்களிலிருந்து இறங்கிய வீரர்கள் சிலர் அங்கே வந்தார்கள். நீ படுத்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் அவர்கள் நின்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்க வேண்டும் என்று நீ விரும்பவில்லை. உன் விருப்பமில்லாமலே அவர்கள் பேச்சு உன் காதில் விழுந்தது. நீ கேட்கும்படி நேர்ந்தது. இவையெல்லாம் நம் சேநாதிபதியிடம் நீ கூறியவை தானே?" 
"நடந்ததை நடந்தபடியே கூறினேன்." 
"அவர்களுடைய பேச்சைக் கேட்டது அதைப்பற்றி உடனே சேநாதிபதியிடம் எச்சரிக்கை செய்யவேண்டும் என்று உனக்குத் தோன்றியது. வீரர்கள் அப்பால் போன உடனே நீ புறப்பட்டாய். சேநாதிபதி இருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு விரைந்து வந்தாய்! எப்படி வந்தாய், சமுத்திரகுமாரி?" 
"பாதி வழி படகில் வந்தேன்; பிறகு காட்டு வழியில் நடந்து வந்தேன்." 
"எங்கே போகும் உத்தேசத்துடன் கிளம்பினாய், அம்மா?" 
"சேநாதிபதி மாதோட்ட நகரில் இருப்பார் என்று எண்ணி அங்கே போகும் உத்தேசத்துடன் வந்தேன். வழியில் மகிந்தலையில் இருப்பதாக அறிந்தேன். சேநாதிபதியைப் பார்த்துச் சொல்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. எத்தனை பேர் குறுக்கே நின்று தடுப்பது?" என்று சொல்லிப் பூங்குழலி சேநாதிபதி நின்ற பக்கம் நோக்கினாள். அவளுடைய பார்வையில் கோடைகாலத்து இடிமுழக்கத்துக்கு முன்னால் தோன்றும் மின்வெட்டு ஜொலித்தது. 
"சேநாதிபதியைப் பார்ப்பது என்றால் இலேசான காரியமா? இதோ நிற்கும் என் சிநேகிதர் உன்னைப்போலவே சேநாதிபதியைப் பார்க்க முயன்று அடைந்த கஷ்டத்தைக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய். தடைகளைப் பொருட்படுத்தாமல் நீ பிடிவாதம் பிடித்துச் சேநாதிபதியைப் பார்த்துச் சொன்னதே நல்லதாய்ப் போயிற்றுப் பூங்குழலி! சேநாதிபதியிடம் கூறியதை என்னிடமும் ஒருதடவை கூறுவாயா? மரத்தின் மறைவிலிருந்து நீ கேட்டாயே அப்போது அந்த வீரர்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசினார்கள்?" 
"அரசே! அதைச் சொல்வதற்கு என் நாகூசுகிறது." 
"பெரிய மனது பண்ணி எனக்காக இன்னொரு தடவை சொல்!" 
"தங்களை சிறைப்படுத்திக்கொண்டு போவதற்காக அவர்கள் வந்திருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்." 
"யாருடைய கட்டளையின் பேரில் அவ்விதம் வந்தார்கள் என்பது பற்றி ஏதாவது பேசிக்கொண்டார்களா?" 
"அதை நான் நம்பவில்லை, ஐயா! பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தேன்." 
"உன்னுடைய கருத்தைப் பிறகு தெரிவிக்கலாம். அவர்கள் பேசிக்கொண்டதை மட்டும் சொல், சமுத்திரகுமாரி!" 
"சக்கரவர்த்தியின் கட்டளை என்று பேசிக்கொண்டார்கள்." 
"ரொம்ப நல்லது; அதற்குக் காரணம் ஏதாவது சொல்லிக் கொண்டார்களா?" 
"சொல்லிக்கொண்டார்கள். தாங்கள் இந்த நாட்டிலுள்ள புத்த குருக்களுடன் சேர்ந்து கொண்டு இலங்கை ராஜ்யத்துக்கு மன்னராக முடிசூட்டிக் கொள்ளச் சூழ்ச்சி செய்தீர்களாம்... இவ்விதம் சொன்ன அந்தப் பாவிகளை அங்கேயே கொன்றுவிடவேண்டும் என்று எனக்குக் கோபமாக வந்தது." 
"நல்ல காரியம் செய்ய எத்தனித்தாய்! சக்கரவர்த்தியின் தூதர்களை எந்த விதத்திலும் தடை செய்யக் கூடாது என்று உனக்குத் தெரியாதா...? நல்லது; இன்னும் அவர்கள் முக்கியமான விஷயம் ஏதேனும் சொன்னதாக உனக்கு ஞாபகம் இருக்கிறதா?" 
"சேநாதிபதிக்கு அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் என்கிற விஷயம் தெரியக் கூடாது என்றும், தெரிந்தால் தங்களைத் தப்புவிக்க அவர் பிரயத்தனம் செய்யலாம் என்றும் சொன்னார்கள். ஆகையால் தாங்கள் இருக்குமிடம் தெரிந்து கொண்டு நேரில் தங்களிடம் கட்டளையைக் கொடுத்துக் கையோடு அழைத்துப் போக வேண்டும் என்றும் சொன்னார்கள்..." 
"ஆகையால் நீ உடனே சேநாதிபதியைத் தேடிக்கொண்டு புறப்பட்டாயாக்கும். எனக்குப் பெரிய உதவி செய்தாய். சமுத்திரகுமாரி! சற்று அப்பால் இரு. இவர்களிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நான் கலந்து ஆலோசிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் முன் மாதிரி ரொம்ப தூரம் ஓடிப்போய் விடாதே. மறுபடியும் உன்னைப் பிடித்துக் கொண்டு வருவதற்கு வந்தியத்தேவரை அனுப்பும்படி செய்துவிடாதே!" 
சமுத்திர குமாரி சற்று நகர்ந்து ஒரு தூணின் அருகில் நின்று கொண்டாள். இளவரசரின் முகத்தைப் பார்க்கக்கூடிய இடத்திலேதான் நின்றாள். 
தேன் குடத்தில் முழுகிய இரு வண்டுகள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தன. மெதுவாகச் சமாளித்துக் கரைக்கு வந்து பிறகு தேனைச் சுவை பார்த்துக் களிக்கத் தொடங்கின. பூங்குழலியின் கண்களும் இப்போது அத்தகைய சௌகரியமான நிலையில் இருந்தன. இளவரசரின் முக சௌந்தரியமாகிய தேனை அவை பருகித் திளைத்தன. அவளுடைய உள்ளமோ நெஞ்சுக்குள் கட்டுப்பட்டு நிற்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தது. நெஞ்சை வெடித்துக் கொண்டு வெளியேறி வானவெளியெங்கும் பொங்கி நிறைந்துவிட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தது.
இளவரசர் சேநாதிபதி பூதி விக்கரம கேசரியைப் பார்த்து "ஐயா! பரம்பரையாக எங்கள் குடும்பத்துக்குச் சிநேகிதமான குலத்தின் தலைவர் தாங்கள். என் தந்தையின் உற்ற நண்பர். தங்களை நான் என் தந்தைக்கு இணையாகவே மதித்து வந்திருக்கிறேன். தாங்களும் என்னைத் தங்கள் சொந்தப் புதல்வனாகவே கருதிப் பாராட்டி வந்திருக்கிறீர்கள். ஆகையால் இச்சமயம் என்னுடைய கடமையைச் செய்வதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும். அதற்குக் குறுக்கே நிற்கக் கூடாது!" என்றார். 
சேநாதிபதி மறுமொழி சொல்வதற்குள் பார்த்திபேந்திரனையும் திரும்பிப் பார்த்து, "ஐயா! தங்களையும் கேட்டுக் கொள்கிறேன். தாங்கள் என் அருமைத் தமையனாரின் உற்ற நண்பர். என் தமையனாரின் வாக்கைத் தெய்வத்தின் வாக்காக மதித்து நான் போற்றுகிறவன். ஆகையால் தங்களுடைய வார்த்தையையும் மதித்துப் போற்றக் கடமைப்பட்டவன். தங்களைப் பெரிதும் வேண்டிக் கொள்கிறேன். என் கடமையை நான் நிறைவேற்றுவதற்குத் தடை எதுவும் சொல்லக்கூடாது!" என்றார். 
சேநாதிபதியும், பார்த்திபேந்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பார்வையின் மூலம் ஒருவருடைய பயத்தை இன்னொருவருக்குத் தெரிவித்துக் கொண்டார்கள். 
சேநாதிபதி இளவரசரைப் பார்த்து, "இளவரசே! தாங்கள் கூறுவது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. வாழ்நாளெல்லாம் நான் போர்க்களத்திலே கழித்தவன். மூடுமந்திரமாகப் பேசினால் தெரிந்துகொள்ள இயலாதவன். தங்களுடைய கடமையைச் செய்யப்போவதாகச் சொல்கிறீர்கள். அப்படியென்றால் என்ன? எந்தக் கடமையை, என்ன மாதிரி செய்யப் போவதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?" என்று கேட்டார். 
"இச்சமயம் என்னுடைய கடமை ஒன்றே ஒன்றுதான். என் தந்தையின் கட்டளையை நிறைவேற்றி வைக்க வேண்டியதுதான். என்னைச் சிறைப்படுத்திக்கொண்டு வரும்படியான கட்டளையுடன் என் தந்தை ஆட்களை அனுப்பி வைத்திருக்கிறார். என்னை அவர்கள் தேடி அலையும்படியாக ஏன் வைத்துக் கொள்ள வேண்டும்? நானே அவர்கள் இருக்குமிடம் சென்று என்னை ஒப்புக் கொடுத்துவிடுவேன். அதுவே இப்போது நான் செய்ய வேண்டிய கடமை..." 
"முடியவே முடியாத காரியம் என் உடம்பில் உயிருள்ள வரையில் அதை நான் அநுமதிக்க மாட்டேன் தடுத்தே தீருவேன்!" என்றான் பார்த்திபேந்திரன். 
சேநாதிபதி அவனைப் பார்த்து, "பதறவேண்டாம்; பொறுங்கள்!" என்றார். பின்னர் இளவரசரை நோக்கிக் கூறினார். 
"ஐயா! தங்களுடைய கடமையைப் பற்றிச் சொன்னீர்கள். எனக்கும் ஒரு கடமை இருக்கிறது. அருள் புரிந்து அதைக் கேட்கவேண்டும். கொடும்பாளூர் வேளார் பெருங்குடியில் இன்று உயிரோடிருக்கும் ஆண் மகன் நான் ஒருவன்தான். மற்றவர்கள் அனைவரும் சோழ சாம்ராஜ்யத்தின் சேவையில் இறந்து போனார்கள். அநேகமாக எல்லாரும் போர்க்களத்தில் மடிந்தார்கள். நானும் ஒருநாள் அவ்விதம் இறந்து போவேன். யார் கண்டது? ஆகையால் என் வார்த்தையைக் கொஞ்சம் பொறுமையுடன் கேட்கவேண்டும். அரண்மனை மாடங்களில் அருமையாக வளர்க்கப்பட்டு வந்த தங்களைச் சென்ற ஆண்டில் தென்திசைப் படைகளின் மாதண்ட நாயகராகச் சக்கரவர்த்தி நியமித்தார். அப்போது என்னைத் தனியாக அழைத்துச் சொன்னார்: 'இளவரசன் என்னை விட்டுப்பிரிவது என் உயிரே உடலிலிருந்து பிரிவது போலிருக்கிறது. ஆயினும் என்னுடைய ஆசைக்காக அவனை நான் அரண்மனைக்குள்ளேயே வைத்து வளர்க்கக் கூடாது. அவன் வெளியேறிப் போக வேண்டியதுதான்; அண்ணனைப்போல் வீரன் என்று பெயர் எடுக்கவேண்டியதுதான். ஆனால் அவன் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அதே கணத்தில் என் உயிரும் போய்விடும். அவனுக்கு எவ்வித அபாயமும் நேராமல் பாதுகாக்க வேண்டியது உன் பொறுப்பு...' இவ்வாறு சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டார். சென்ற ஆண்டில் அவ்வாறு கூறிய சக்கரவர்த்தி இப்போது தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிடுவாரா? அவ்வாறு கட்டளையிடும்படியாகத் தாங்கள் என்ன செய்துவிட்டீர்கள்? இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றுவதற்குத் தாங்கள் சூழ்ச்சி செய்ததாகச் சொல்வது எவ்வளவு அபத்தம்? இந்த அபவாதத்தை யாராவது நம்ப முடியுமா?..." 
கொடும்பாளூர்ப் பெரிய வேளார் கூறி வந்ததை இதுவரை பொறுமையுடன் கேட்டு வந்த இளவரசர் இப்போது குறுக்கிட்டார். "வேறு யாராவது நம்ப முடியாதோ, என்னமோ? ஆனால் என்னால் நம்ப முடியும்!" என்றார். 
"என்ன சொல்கிறீர்கள், இளவரசே!" 
"இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்ற நான் சூழ்ச்சி செய்தது உண்மைதான் என்று சொல்கிறேன்?" 
வந்தியத்தேவன் இப்போது முன்னால் வந்து, "இது என்ன ஐயா! சற்று முன் வரையில் சத்தியம் - தர்மம் என்று சொல்லி வந்தீர்கள். இப்போது இப்படிப் பெரும் பொய் சொல்கிறீர்களே!... சேநாதிபதி ! இவர் வார்த்தையை நீங்கள் நம்பவேண்டாம். நேற்றிரவு புத்த குருக்களின் மகாசபையார் இவருக்கு இலங்கைச் சிம்மாசனத்தையும் கிரீடத்தையும் அளித்தார்கள் இவர் வேண்டாம் என்று மறுதளித்தார். இதற்கு நானும் இதோ நிற்கும் இந்த வைஷ்ணவனும் சாட்சி!"என்றான். 
பொன்னியின் செல்வர் புன்னகை புரிந்து, "வந்தியத்தேவரே! ஒரு கேள்வி! சூழ்ச்சி செய்கிறவர்கள் சாட்சி வைத்துக் கொண்டு சூழ்ச்சி செய்வார்களா? நீங்கள் இருவரும் பக்கத்தில் இருந்ததினாலேயே நான் இலங்கைச் சிம்மாசனத்தையும் கிரீடத்தையும் மறுதளித்திருக்கலாம் அல்லவா?" என்றார். 
வந்தியத்தேவன் அசந்துபோனான்! இதற்கு எதிராக அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. 
இளவரசர் மேலும் கூறினார்: "வாணர்குல வீரரே! உமக்குச் சந்தேகம் இருந்தால் அதோ நிற்கும் வைஷ்ணவரைக் கேட்கலாம். முதன்மந்திரி அநிருத்தப் பிரமராயர் அவரிடம் என்ன சொல்லி அனுப்பினார் என்று கேட்டு அறிந்து கொள்ளலாம். 'புத்த குருமார்கள் தங்களுக்கு இலங்கைச் சிம்மாசனம் அளிக்க முன்வருவார்கள். சாட்சியம் வைத்துக் கொண்டு அதை மறுதளிக்கவும்' என்று சொல்லி அனுப்பினாரா, இல்லையா என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்!" இதைக்கேட்டு அங்கிருந்த எல்லாருமே திகைத்துப்போய் நின்றார்கள். 
இளவரசர் சேநாதிபதியைப் பார்த்துச் சொன்னார்: "ஐயா! இதைக்கேளுங்கள். இந்த இலங்கையைக் கவர்ந்து ஆளவேண்டும் என்று பேராசை என் மனத்தில் இருந்தது உண்மை. இந்தப் பேராசையை எனக்கு உண்டு பண்ணியவர் என் தமக்கையார். 'தம்பி! நீ நாடு ஆளப் பிறந்தவன். உன் கையில் சங்கு சக்கர ரேகை இருக்கிறது. இங்கே உனக்கு இடம் இல்லை. ஆகையால் இலங்கைக்குப் போ! இலங்கைச் சிம்மாசனத்தைக் கைப்பற்றிக் கொள்!' என்று இப்படியெல்லாம் இளையபிராட்டி அடிக்கடி சொல்லி என் மனத்தில் ஆசையை வளர்த்து விட்டார். ஆகையால் நான் குற்றவாளிதான், சக்கரவர்த்தி என்னைச் சிறைபடுத்திக் கொண்டு வரும்படி கட்டளையிட்டதற்குக் காரணம் இருக்கிறது..." 
"கொஞ்சம் பொறுங்கள், இளவரசே! அப்படித் தங்கள் மனத்தில் எண்ணம் உதித்திருந்தால் அது இந்த இலங்கைத் தீவின் பாக்கியம். அதற்குப் பொறுப்பாளியும் தாங்கள் அல்ல; தங்கள் தமக்கையார் இளைய பிராட்டியும் அல்ல. சுந்தர சோழ சக்கரவர்த்திதான் அதற்குப் பொறுப்பாளி அவரே என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்; தங்களை இலங்கைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துப்பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். குந்தவை தேவியிடம் இதைப் பற்றி முதன் முதலில் கூறியவரும் சக்கரவர்த்தி தான். தங்கள் தந்தையின் விருப்பத்தையே தமக்கையார் தங்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். ஆகையால் தாங்கள் குற்றவாளி அல்ல..." 
"சேநாதிபதி! அப்படியானால் என் தந்தையிடம் போவதற்கு நான் ஏன் தயங்கவேண்டும்? அவரிடம் நடந்தது நடந்தபடி சொல்கிறேன். இதோ இருக்கும் இந்த இரண்டு பேரும் எனக்காகச் சாட்சி சொல்லட்டும். பிறகு சக்கரவர்த்தி என்ன கட்டளை இடுகிறாரோ, அதன்படி நடந்துகொள்வது என் கடமை..." 
பார்த்திபேந்திரன் இப்போது அனல் கக்கும் குரலில் கூறினான்: "சேநாதிபதி ஏதேதோ வெறும் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறோம். இனியும் மூடி மறைப்பதில் பயன் ஒன்றுமில்லை. இளவரசரிடம் உண்மையைச் சொல்லியே தீரவேண்டும். தாங்கள் சொல்கிறீர்களா அல்லது நான் சொல்லட்டுமா!" 
"நானே சொல்கிறேன்; பொறுங்கள்!" என்றார் சேநாதிபதி. அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக் கூறினார்: "இளவரசே! தங்களுடைய களங்கமற்ற உள்ளத்தை மாசுபடுத்த வேண்டாம் என்று எண்ணியது பயன்படவில்லை. ஒரு விரஸமான விஷயத்தைப் பற்றித் தங்களுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது. பெரிய பழுவேட்டரையர் இந்த முதிய பிராயத்தில் நந்தினி என்னும் பெண்ணை மணம் புரிந்து கொண்டிருப்பது தங்களுக்குத் தெரிந்த விஷயமே. அவள் ஒரு சூனியக்காரி. பயங்கரமான மாய மந்திர வித்தைகள் அவளுக்குத் தெரிந்திருக்கின்றன. அவற்றின் உதவியால் பெரிய பழுவேட்டரையரை அவள் தன் காலடியில் போட்டு வைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் தன் காலால் இட்ட பணியை இவர் தலையில் ஏந்தி நிறைவேற்றி வைக்கிறார். பழங்குடியில் பிறந்து, பல வீரச் செயல்கள் புரிந்த அந்தப் பெரியவருக்கு விதி வசத்தால் இந்த மாதிரி துர்க்கதி சம்பவித்து விட்டது." 
"சேநாதிபதி! இது நான் கேள்விப்படாதது அல்லவே? சோழ தேசத்தில் நாடு நகரமெல்லாம் பேசிக்கொள்ளும் விஷயந்தானே?" என்றார் இளவரசர். 
"அந்த மந்திரக்காரி நந்தினியின் சக்தி இதுவரையில் பழுவேட்டரையர்களை மட்டும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. இளவரசே! மன்னிக்க வேண்டும்! இப்போது அவள் சக்கரவர்த்தியின் பேரிலும் தன்னுடைய மந்திரத்தைப் போட ஆரம்பித்து விட்டாள். அதனால்தான் இத்தகைய கட்டளையை, - தங்களைச் சிறைப்படுத்தி வரும்படியான கட்டளையை, சக்கரவர்த்தி பிறப்பித்திருக்கிறார்!..." 
"சேநாதிபதி! எச்சரிக்கை! சக்கரவர்த்தியைப் பற்றிக் கௌரவக் குறைவாக எதுவும் சொல்ல வேண்டாம். என் தந்தையின் உடம்பில் உயிர் உள்ளவரையில் அவர் இடும் கட்டளை எதுவானாலும், எந்தச் சந்தர்ப்பத்தில் இடப்பட்டாலும், அதுவே தெய்வத்தின் கட்டளையாகும்..." 
"அதை நாங்கள் மறுக்கவில்லை, இளவரசே! சக்கரவர்த்தியின் சுதந்திரத்துக்கு மட்டுமின்றி அவருடைய உயிருக்கே அபாயம் வந்துவிடுமோ என்றுதான் அஞ்சுகிறோம். நந்தினியைப் பற்றிய முழு உண்மையை நேற்றுவரை நானே அறிந்து கொள்ளவில்லை. நேற்றிரவுதான் பார்த்திபேந்திரன் மூலமாகத் தெரிந்து கொண்டேன். அந்தப் பயங்கரமான விஷயத்தைத் தாங்களும் தெரிந்து கொள்வது அவசியம்." 
"மூன்று வருஷத்துக்கு முன்னால் மதுரைக்கு அருகில் வீர பாண்டியனோடு இறுதி யுத்தம் நடந்தது அல்லவா? அப்போது தங்கள் தமையனார் கரிகாலரும் இதோ உள்ள பார்த்திபேந்திரரும் நானும் கலந்தாலோசித்து ஒவ்வொரு காரியத்தையும் செய்து வந்தோம். பாண்டியனுடைய சைனியங்கள் அடியோடு நிர்மூலமாயின. வீரபாண்டியன் முன்னொரு தடவை பாலைவனத்தில் ஓடி ஒளிந்ததுபோல் இப்போதும் ஓடித் தப்பிக்க முயன்றான். அதற்கு இடம் கொடுக்கக் கூடாதென்று நாங்கள் மூவரும் அவனை எப்படியாவது கைப்பற்றத் தீர்மானித்துப் பெரு முயற்சி செய்தோம். இந்தத் தடவை வீர பாண்டியனுடைய தலையைக் கொண்டு போகாமல் தஞ்சாவூருக்குத் திரும்புவதில்லை என்று நாங்கள் மூவரும் சபதம் செய்திருந்தோம். ஆகையால் வேறு யாரையும் நம்புவதில்லையென்று நாங்களே அவனைத் தொடர்ந்து சென்றோம். கடைசியாக ஒரு கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த குடிசையில் அவன் ஒளிந்திருப்பதைக் கண்டுபிடித்தோம். குடிசைக்கு வெளியில் எங்களைக் காவலுக்கு நிறுத்தி வைத்து விட்டுத் தங்கள் அண்ணன் கரிகாலர்தான் உள்ளே நுழைந்தார். வீர பாண்டியனைக் கொன்று அவன் தலையை எடுத்து வந்தார். நாங்களும் எங்கள் காரியம் முடிந்துவிட்டதென்று குதூகலமாகத் திரும்பிச் சென்றோம். ஆனால் அந்தக் குடிசைக்குள்ளே ஒரு சிறிய நாடகம் நடந்ததென்பது எங்களுக்குத் தெரியாது. வீர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த பெண் ஒருத்தி குறுக்கே நின்று தடுத்துத் தன் காதலனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். கரிகாலர் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு வீரபாண்டியனுடைய தலையைக் கொய்து வெளியே எடுத்து வந்தார். இளவரசே! அவ்விதம் சோழ குலத்தின் ஜன்ம சத்துருவான வீர பாண்டியனைக் காப்பாற்ற முயன்றவள்தான் நந்தினி! அவள்தான் பிற்பாடு எழுபது வயதுக் கிழவரை மணந்து தஞ்சாவூருக்கு வந்து, 'பழுவூர் இளைய ராணி' யாக விளங்குகிறாள்! அவள் எதற்காக, என்ன நோக்கத்துடன், - வந்திருப்பாள் என்பதை நாம் ஊகிக்கலாம் அல்லவா? வீர பாண்டியனுக்காகப் பழிக்குப் பழி வாங்கத்தான் வந்திருக்கிறாள். சோழ குலத்தை அடியோடு நிர்மூலமாக்கி விடுவதற்காக வந்திருக்கிறாள். அவள் அருகில் சென்றவர் யாரும் அவளுடைய மோக வலையிலிருந்து தப்பித் திரும்புவது கடினம். அதோ நிற்கும் வந்தியத்தேவன் அதற்குச் சாட்சி சொல்லுவான். சோழ குலத்தைப் பூண்டோ டு அழித்துவிடப் பயங்கர சபதம் எடுத்திருக்கும் கூட்டத்தைப்பற்றி அதோ நிற்கும் வைஷ்ணவன் சாட்சி சொல்வான். அவர்களுக்கு அவசியமான பணத்தையெல்லாம் நந்தினி தான் கொடுக்கிறாள். இளவரசே! துரதிஷ்ட வசமாக நம் சக்கரவர்த்திப் பெருமானும் அந்தப் பாதகியின் வலையில் விழுந்து விட்டதாகக் காண்கிறது. மதுராந்தகத் தேவனுக்குப் பட்டம் கட்டுவது பற்றிச் சக்கரவர்த்தியே யோசித்து வருவதாகத் தெரிகிறது. ஆகையால் சக்கரவர்த்தியின் கட்டளையென்று கருதித் தாங்கள் தஞ்சைக்குப் போவதற்கு இது தருணமல்ல..." 
"சேநாதிபதி! தாங்கள் கூறிய செய்திகள் எனக்கு மிக்க வியப்பை உண்டு பண்ணியிருக்கின்றன. ஆயினும் அச்செய்திகளில் நான் செய்த முடிவுதான் உறுதிப்படுகிறது. என் தந்தையை அவ்வளவு பயங்கரமான அபாயங்கள் சூழ்ந்திருக்கும்போது நான் இருக்க வேண்டிய இடம் அவர் அருகிலேதான். இலங்கை அரசு எனக்கு என்னத்திற்கு? அல்லது இந்த உயிர்தான் என்னத்திற்கு? இனி யோசனை ஒன்றுமே தேவையில்லை. என்னைத் தடை செய்வதற்கு யாரும் முயலவேண்டாம்!" என்று இளவரசர் கம்பீரமாகக் கூறினார். பிறகு, சற்றுத் தூரத்தில் தூணில் சாய்ந்து கொண்டு தம்மைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த பூங்குழலியின் மீது அவர் கண்கள் சென்றன. 
"சமுத்திர குமாரி! சற்று இப்படி அருகில் வா!" என்றார். 
பூங்குழலி நெருங்கி வந்தாள். 
"பெண்ணே! நீ கொண்டுவந்த செய்தியின் மூலம் எனக்குப் பெரிய உதவி செய்தாய். இன்னும் ஓர் உபகாரம் எனக்கு நீ செய்ய வேண்டும். செய்வாயா?" என்று கேட்டார். 
'அடடா! இது என்ன? இந்த ஏழைப் படகுக்காரியிடமா இவர் உதவி கோருகிறார்? இவருக்குக் குற்றேவல் செய்யும் பாக்கியத்தை நாடி வந்தேன்; இவர் என்னிடம் உதவி வேண்டும் என்று யாசிக்கிறாரே! கடவுளிடம் வரம் கேட்க வந்தேன்; கடவுள் தம் திருக் கரங்களை நீட்டி என்னிடம் 'பிச்சை போடு' என்று கேட்கிறாரே?' இவ்வாறு மனத்தில் எண்ணி, "இளவரசே! தாங்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றக் காத்திருக்கிறேன்!" என்றாள் பூங்குழலி. 
"சமுத்திரகுமாரி! என்னைத் தேடிக் கொண்டு இரண்டு மரக்கலங்கள் தொண்டைமான் ஆற்று முகத்துவாரத்தின் அருகில் காத்திருக்கின்றன என்று சொன்னாய் அல்லவா? அந்த இடத்துக்கு நான் அதி சீக்கிரமாகப் போய்ச் சேரவேண்டும். எனக்கு வழிகாட்டி அழைத்துக்கொண்டு போவாயா?" 
"பெண்ணே! 'முடியாது' என்று சொல்!" என்பதாக ஒரு குரல் கர்ஜித்தது. அது சேநாதிபதியின் குரல்தான் என்பதைப் பூங்குழலி உணர்ந்தாள். 
இத்தனை நேரமும் ஏதோ ஒரு சொப்பன லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போதுதான் தன் நெருக்கடியான நிலைமை தெரிந்தது. எந்த அபாயத்திலிருந்து இளவரசரைத் தப்புவிக்கலாம் என்ற ஆசையுடன் இவள் அவசர அவசரமாக ஓடி வந்தாளோ, அந்த அபாயத்தின் வாயிலிலேயே கொண்டு சேர்க்கும்படி இளவரசர் இப்போது தன்னைக் கேட்டுக்கொள்கிறார்! 
"பெண்ணே! 'முடியாது' என்று சொல்!" - சேநாதிபதியின் இந்தக் கட்டளையின் பொருள் அவளுக்கு இப்போது புலனாயிற்று. நாலாபுறத்திலிருந்தும் ஆயிரம் குரல்கள் அதே கட்டளையை அவளுக்கு இட்டன. மரங்கள் அவ்வாறு முழங்கின; மண்டபத்தின் தூண்கள் அவ்விதம் அலறின; மரக்கிளைகளின் மேலிருந்து பறவைகள் கதறின. 
ஆனால் அந்த பேதைப் பெண்ணின் இதயத்தின் உள்ளே மெல்லிய குரல் கேட்டது. 'பூங்குழலி! இதோ உன் அதிர்ஷ்டம்! இளவரசருக்கு வழிகாட்டி அழைத்துப் போவாயானால் அவருடன் இரண்டு தினங்கள் கழிக்கலாம். அவர் அருகில் நீ இருக்கலாம். அவர் உன்னைப் பாராதபோது அவரை நீ பார்க்கலாம். அவர் மீது பட்டு வரும் காற்று உன்மீதும் படும். அவருடைய குரல் உன் காதில் அடிக்கடி கேட்கும். அடி பெண்ணே! நீ கண்டு வந்த எட்டாத கனவில் ஒரு சிறிது நிறைவேறும். பிறகு அது எப்படியானால் என்ன? பூங்குழலி! ஒத்துக்கொள்!' என்று அந்த மெல்லிய குரல் அவள் மனக் காதில் கூறியது. 
"சமுத்திரகுமாரி! ஏன் தயங்குகிறாய்? எனக்கு இந்த உதவி நீ செய்ய மாட்டாயா? நானே வழி கண்டுபிடித்துக் கொண்டு போக வேண்டியதுதானா?" என்று இளவரசர் கூறியது அவளுடைய மனம் திடமடையக் காரணமாயிற்று. 
"இளவரசே! வழிகாட்ட நான் வருகிறேன்!" என்றாள். 
சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி அப்போது தம் தொண்டையைக் கனைத்துக் கொண்ட சப்தம் பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னால் பூமியின் கர்ப்பத்திலிருந்து எழுகின்ற பயங்கரத் தொனியை நிகர்த்திருந்தது. அவர் ஓர் அடி முன்னால் வந்து கூறினார்:- 
"இளவரசே! தங்கள் விருப்பத்துக்குக் குறுக்கே நான் நிற்கமாட்டேன். ஆனாலும் என் வேண்டுகோள் ஒன்றுக்குச் செவி சாய்க்க வேணும். தங்களைச் சிறைப்படுத்த வந்திருப்பவர்களிடம் தங்களை ஒப்படைக்கும் வரையில் தங்களைப் பாதுகாப்பது என் பொறுப்பு. நேற்றிரவு தங்களைக் கொல்ல நடந்த முயற்சிகளைப் பற்றிச் சற்று முன்னால் தங்கள் தோழர்கள் சொன்னார்கள். அந்தக் கொலைகாரர்கள் இன்னும் பிடிபடவில்லை. அவர்கள் யாரென்று தெரியவும் இல்லை. என் மனத்தில் உள்ளதைச் சொல்வதற்காக மன்னியுங்கள். இந்தப் பெண்ணின் பேரிலேயே எனக்குக் கொஞ்சம் சந்தேகமுண்டு. அந்தக் கொலைகாரர்களுக்கு இவளும் ஒருவேளை உடந்தையாயிருக்கலாம் அல்லவா? மரக்கலங்களில் தங்களைச் சிறைப்படுத்தி அழைத்துப்போக வந்திருக்கிறார்கள் என்பதே இவளுடைய கற்பனையாயிருக்கலாம் அல்லவா? ஏன் இருக்கக் கூடாது? சற்றுமுன்னால் இவளுடைய கத்தியைத் தங்கள் தோழர் வந்தியத்தேவர் பிடுங்கி எறிந்தபோது, அது யார் பேரிலோ விழுந்து ஓலக்குரல் கேட்டதே? அது யாருடைய குரல்? இந்தப் பெண் தாராளமாக வழி காட்டிக் கொண்டு வரட்டும். நம்முடைய யானை மேல் ஏறிக்கொண்டு முன்னால் செல்லட்டும். ஆனால் தங்களுடன் நானும் தொண்டைமான் ஆற்றில் உள்ள கப்பல்களைக் காணும் வரையில் வந்தே தீருவேன்! அது என்னுடைய கடமை!" 
சேநாதிபதி இந்தப் பேச்சைப் புன்னகை பூத்த முகத்துடன் கேட்டுக்கொண்டு நின்ற இளவரசர், "அப்படியேயாகட்டும்! தங்களுடைய கடமையை நிறைவேற்றுவதற்கு நானும் குறுக்கே நிற்கவில்லை!" என்றார்.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel