←அத்தியாயம் 46: பொங்கிய உள்ளம்
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திசுழற்காற்று: பேய்ச் சிரிப்பு
அத்தியாயம் 48: 'கலபதி'யின் மரணம்→
391பொன்னியின் செல்வன் — சுழற்காற்று: பேய்ச் சிரிப்புகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
சுழற்காற்று - அத்தியாயம் 47[தொகு]
பேய்ச் சிரிப்பு
இளவரசரும் பூங்குழலியும் யானை மீது ஏறிச் சென்ற பிறகு, பின் தங்கியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாமும் நேயர்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
"யானைக்கு மதம் பிடித்து விட்டது!" என்று சேநாதிபதி கூச்சலிட்டதைக் கேட்டு மற்றவர்களும் அப்படியே முதலில் நம்பினார்கள். யானையைப் பின் தொடர்ந்து குதிரைகளை வேகமாக விட்டுக்கொண்டு போகப் பார்த்தார்கள். ஆனால் அது இயலுகிற காரியமாயில்லை. "யானை இறவுத் துறையை அடைந்ததும் அவர்களுடைய பிரயாணம் தடைப்பட்டு விட்டது. வழக்கம் போல் எல்லாருக்கும் முதலில் சென்ற வந்தியத்தேவனுடைய குதிரை அக்கடல் துறையில் இறங்கிப் பாய்ந்து சேற்றில் அகப்பட்டுக் கொண்டது. மிக்க சிரமப்பட்டு அதை வெளியேற்றினார்கள். ஆனாலும் குதிரை இனிப் பிரயாணத்துக்குத் தகுதியில்லையென்று ஏற்பட்டது.
சேநாதிபதி பூதிவிக்கிரம கேசரி இன்னது செய்வதென்று தெரியாமல் தலையில் அடித்துக் கொண்டார். "என் வாழ்க்கையில் இம்மாதிரி தவறு செய்ததில்லை. எல்லாரும் சும்மா நிற்கிறீர்களே? என்ன செய்யலாம்? இளவரசரை எப்படிக் காப்பாற்றலாம்? யாருக்காவது யோசனை தோன்றினால் சொல்லுங்கள்!" என்றார்.
அப்போது ஆழ்வார்க்கடியான் முன் வந்து, "சேநாதிபதி! எனக்கு ஒன்று தோன்றுகிறது; சொல்லட்டுமா?" என்றான்.
"சொல்வதற்கு நல்ல வேளை பார்த்துக் கொண்டிருக்கிறாயா? சீக்கிரம் சொல்!" என்றார் சேநாதிபதி.
"இளவரசர் சென்ற யானைக்கு உண்மையில் மதம் பிடிக்கவில்லை..."
"என்ன உளறுகிறாய்? பின்னே யாருக்கு மதம் பிடித்தது? உனக்கா?"
"ஒருவருக்கும் மதம் பிடிக்கவில்லை. தாங்கள் வேண்டுமென்று பிரயாணத்தைத் தாமதப்படுத்துகிறீர்கள் என்ற சந்தேகம் இளவரசருக்கு உண்டாகி விட்டது. அதனால் நம்மை விட்டுப் பிரிந்து போவதற்காக யானையை அப்படித் தூண்டி விட்டு வேகமாய்ப் போய்விட்டார். யானையைப் பழக்கும் வித்தையின் சகல இரகசியங்களையும் அறிந்தவர் இளவரசர் என்பதுதான் நம் எல்லாருக்கும் தெரியுமே!"
இது உண்மையாயிருக்கும் என்று சேநாதிபதிக்கும் பட்டது அவர் உள்ளம் நிம்மதி அடைந்தது.
"சரி; அப்படியேயிருக்கட்டும். ஆனால் நாம் தொண்டைமானாற்றின் முகத்துவாரத்துக்குப் போய்ச் சேர வேண்டும் அல்லவா? அங்கே நடப்பது என்ன என்றாவது தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?"
"போக வேண்டியதுதான். கடற்கரையின் ஓரமாகச் சென்று எங்கேயாவது படகு கிடைத்தால் அதில் ஏறிக்கொண்டுதான் கடந்தாக வேண்டும் அல்லது பார்த்திபேந்திர பல்லவரின் கப்பல் வரும் வரையில் காத்திருக்கலாம்."
"வைஷ்ணவரே! நீர் பொல்லாதவர். இளவரசரிடம் இப்படி ஏதாவது சொல்லிவிட்டீர் போலிருக்கிறது."
"சேநாதிபதி! இந்தப் பிரயாணம் கிளம்பியதிலிருந்து நான் இளவரசருடன் பேசவே இல்லை."
இதன் பிறகு அவர்கள் அந்தக் கடற்கழியின் ஓரமாகக் கிழக்கு நோக்கிச் சென்றார்கள்.
நேயர்கள் இலங்கைத் தீவின் வட பகுதியின் இயல்பு எத்தகையது என ஒருவாறு அறிந்திருக்கலாம். இலங்கையின் வடக்கு முனைப் பகுதிக்கு அந்நாளில் நாகத்வீபம் என்று பெயர் வழங்கியது. அந்தப் பகுதியையும் இலங்கையின் மற்றப் பெரும் பகுதியையும் இரு புறத்திலிருந்தும் கடல் உட்புகுந்து பிரித்தது. ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்லும் படியாகக் கடற்கழி மிகக் குறுகியிருந்த இடத்துக்கு 'யானை இறவு'த் துறை என்று பெயர். சில சமயம் இத்துறையில் தண்ணீர் குறைவாயிருக்கும். அப்போது சுலபமாக இறங்கிக் கடந்து செல்லலாம். மற்றச் சமயங்களில் அதைக் கடப்பது எளிதன்று. படகுகளிலேதான் கடக்கவேண்டும். (யானை மந்தைகள் இந்த இடத்தில் கடலில் இறங்கி கடந்து செல்வது வழக்கமான படியால் 'யானை இறவு' என்ற பெயர் வந்தது. முற்காலத்தில் இவ்விடத்தில் யானைகளைக் கப்பலில் ஏற்றி வெளி நாடுகளுக்கு அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.)
அந்தச் சமயத்தில் இலங்கைக் கடற்கரையோரமாக இருந்த படகுகள் எல்லாம் பெரும்பாலும் மாதோட்டத்துக்கும் திரிகோண மலைக்கும் சென்றிருந்தன. என்றாலும், தப்பித் தவறி எங்கேயாவது ஒன்றிரண்டு படகுகள் இருக்கலாம் என்று எண்ணிச் சேநாதிபதி முதலியவர்கள் பார்த்துக்கொண்டே சென்றார்கள். கடைசியாக மீன் பிடிக்கும் வலைஞனுடைய சிறிய படகு ஒன்று சிக்கியது. அதில் படகோட்டி ஒருவனேயிருந்தான். கேட்கிறவர் சோழ நாட்டுச் சேநாதிபதி என்று தெரிந்து கொண்டு சம்மதித்தான்.
படகில் ஏறிக் கடல் கால்வாயைக் கடந்தார்கள். ஆனால் பிறகு எப்படித் தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தை அடைவது? காட்டு வழியில் நடந்து போய்ச்சேர்வது சுலபமன்று. அதிக நேரமும் ஆகும்; ஆகையால் அதே படகை உபயோகித்துக் கீழைக் கடற்கரையோரமாகவே சென்று தொண்டைமானாற்றின் சங்கமத்தை அடைவதென்று தீர்மானித்தார்கள்.
நள்ளிரவு வரையில் படகுக்காரன் கடலோரமாகப் படகு விட்டுக்கொண்டு சென்றான். அதற்குப் பிறகு அவன் களைத்து விட்டான். மற்றவர்கள் உதவிசெய்வதாகச் சொல்லியும் பயனில்லை. "இனி அடிக்கடி திசை திரும்பவேண்டும். மூலை முடுக்குகளும் கற்பாறைகளும் அதிகம். பாறையில் மோதினால் படகு உடைந்து சுக்குநூறாகிவிடும். இனிப் பொழுது விடிந்துதான் படகு செலுத்த முடியும்" என்றான். சேநாதிபதி முதலியவர்களும் களைப்படைந்து போயிருந்தார்கள். ஆகையால் கரையில் இறங்கித் தோப்பு ஒன்றில் படுத்தார்கள்.
வந்தியத்தேவனுக்கு இது ஒன்றும் பிடிக்கவில்லை. அவன் ஆழ்வார்க்கடியானோடு சண்டை பிடித்தான். "எல்லாம் உன்னாலே வந்தவினை!" என்றான்.
"என்னால் என்ன இப்போது வந்தது?" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான்.
"நீ ஒன்றையும் மனம் விட்டுச் சொல்வதில்லை. கடம்பூரிலிருந்து நானும் பார்த்துக்கொண்டுதான் வருகிறேன். கொஞ்சம் சொல்வது போல் சொல்கிறாய்; பாதிச் செய்தியை இரகசியமாய் வைத்துக் கொள்கிறாய்; இளவரசர் யானை மேல் ஏறியதன் நோக்கம் உனக்குத் தெரிந்திருக்கிறதே? அதை என்னிடம் முன்னமே சொல்லியிருந்தால் நானும் அந்த யானையின் மேல் ஏறியிருப்பேன் அல்லவா? இவ்வளவு கஷ்டப்பட்டுத் தேடிப் பிடித்த இளவரசரை இப்போது கை நழுவவிட்டு விட்டோ மே? பழையாறைக்குப் போய் இளைய பிராட்டியிடம் என்ன சொல்வது?" என்றான் வந்தியத்தேவன்.
"ஓலையைக் கொடுத்ததும் உன் கடமை தீர்ந்துவிட்டது. இன்னும் என்ன?" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"அதுதான் இல்லை, இளவரசரை இளைய பிராட்டியிடம் கொண்டு போய்ச் சேர்த்த பிறகுதான் என்னுடைய கடமை தீர்ந்ததாகும். நீயே அதற்குக் குறுக்கே நிற்பாய் போலிருக்கிறதே!"
"இல்லை, அப்பா, இல்லை! நான் குறுக்கே நிற்கவில்லை. நாளைக்கே நான் சேநாதிபதியிடம் விடைபெற்றுக் கொண்டு என் வழியே போகிறேன்."
"உன் காரியம் முடிந்துவிட்டது. இளவரசரைப் பிடித்துக் கொடுத்தாகிவிட்டது என்று போகப் பார்க்கிறாயாக்கும். உன் பேரில் எனக்கு எப்போதுமே கொஞ்சம் சந்தேகமிருந்தது. இப்போது அது உறுதியாகிறது."
இவ்விதம் அவர்கள் சிறிது நேரம் சண்டை பிடித்துக் கொண்டிருந்த பிறகு தூங்கிப் போனார்கள். நன்றாகக் களைத்திருந்த படியால் அடித்துப் போட்டவர்களைப் போல் தூங்கினார்கள்.
பலபலவென்று பொழுது விடியும் சமயத்தில் படகு வலிக்கும் சத்தம் கேட்டு ஆழ்வார்க்கடியான் முதலில் விழித்துக் கொண்டான். அவன் எதிரே தோன்றிய காட்சி அவனைத் திடுக்கிடச் செய்தது. கடலில் கொஞ்ச தூரத்துக்கப்பால் பாய் மரம் விரித்த மரக்கலம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அது பயணப்படுவதற்கு ஆயத்தமாக நின்றதாக நன்கு தெரிந்தது. அந்த மரக்கலத்தை நோக்கிக் கரையிலிருந்து ஒரு படகு போய்க் கொண்டிருந்தது. அதில் படகுக்காரனைத் தவிர மூன்று பேர் இருந்தார்கள். அந்தப் படகு முதல் நாள் மாலை தங்களை ஏற்றி வந்த படகுதான் என்று தெரிந்து கொள்ள ஆழ்வார்க்கடியானுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை.
அந்த மரக்கலம் எங்கிருந்து திடீரென்று கிளம்பிற்று என்பதையும் அவன் விரைவிலே ஊகித்துக் கொண்டான். அவர்கள் படுத்திருந்த இடத்துக்குப்பக்கத்தில் கடல் பூமிக்குள் குடைந்து சென்றிருந்தது. மரங்கள் அந்த இடத்தை ஓரளவு மறைந்திருந்தன. அந்தக் குடாவிலேதான் அம்மரக்கலம் நின்றிருக்க வேண்டும் பொழுது விடிந்ததும் புறப்பட்டிருக்க வேண்டும்.
அந்த மரக்கலம் யாருடையது? எங்கிருந்து வந்தது? எங்கே போவது? படகு எதற்காகக் கப்பலை நோக்கிப் போகிறது? அதில் இருப்பவர்கள் யார்? இவ்வளவு கேள்விகளும் ஆழ்வார்க்கடியானுடைய மனத்தில் மின்னலைப் போல் தோன்றி மறைந்தன.
"சேநாதிபதி! சேநாதிபதி! எழுந்திருங்கள்!" என்று கூவினான்.
சேநாதிபதியும், வந்தியத்தேவனும், மற்ற இரு வீரர்களும் திடுக்கிட்டு விழித்தெழுந்தார்கள்.
முதலில் கடலில் நின்ற பாய்மரக் கப்பல் அவர்கள் கண்ணில் தென்பட்டது. சேநாதிபதி, "ஓ! அது சோழ நாட்டுக் கப்பல்தான். பழுவேட்டரையர்கள் அனுப்பிய கப்பலாகவே இருக்கலாம்! இளவரசர் ஒருவேளை அதில் போகிறாரோ, என்னமோ? ஐயோ! தூங்கிப் போய்விட்டோ மே! என்ன பிசகு செய்தோம்!" என்றார்.
பிறகு, "படகு எங்கே? போய்க்கப்பலைப் பிடிக்கமுடியுமா என்று பார்க்கலாம்!" என்றார்.
அதற்குள் படகு சென்று கொண்டிருப்பதும் அவர் கண்ணில் படவே, "அடடே! அதோ போகிறது நாம் வந்த படகல்லவா? அதில் ஏறிப் போகிறவர்கள் யார்? அடே படகுக்காரா! நில் நில்!" என்று இரைந்தார்.
படகுக்காரனின் காதில் விழுந்ததோ என்னமோ தெரியாது. அவன் படகை நிறுத்தவில்லை. மேலே செலுத்திக் கொண்டு போனான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டுமிருந்தான் வந்தியத்தேவன். "அந்தக் கப்பலில் இளவரசர் போகிறார்!" என்று சேநாதிபதி கூறியது அவன் செவி வழியாக புகுந்து மனத்தில் பதிந்தது. அதற்குப் பிறகு வேறு எந்த நினைவிற்கும் அவன் மனத்தில் இடமிருக்கவில்லை. அவன் செய்ய வேண்டியது என்னவென்பதைப் பற்றித்தான் ஏதேனும் சந்தேகமுண்டா? அவன் கால்களுக்குக் கட்டளையிட வேண்டிய அவசியந்தான் உண்டா? இல்லவே இல்லை! அடுத்த நிமிஷத்தில் அவன் கடலில் பாய்ந்து இறங்கினான். அலைகளைத் தள்ளிக் கொண்டு அதிவேகமாகச் சென்றான். நல்ல வேளையாகக் கடலோரத்தில் அங்கே தண்ணீர் அதிகம் இல்லை. ஆகையால் அதிசீக்கிரத்தில் வெகுதூரம் போய் விட்டான். படகின் அருகிலும் சென்று விட்டான். தண்ணீரின் ஆழம் திடீரென்று அதிகமாகி விட்டது. தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டது. "ஐயோ! நான் முழுகிச்சாகப்போகிறேன்! என்னைக் காப்பாற்றுங்கள்!" என்று கத்தினான். படகில் யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டது. பிறகு சிலர் பேசும் குரல்கள் கேட்டன. படகு நின்றது; படகுக்காரன் குனிந்து கை கொடுத்தான். வந்தியத்தேவன் படகில் ஏறி உட்கார்ந்தான். படகு மேலே சென்றது.
படகில் இருந்தவர்களை வந்தியத்தேவன் ஆராய்ந்து பார்த்தான். ஒருவன் தமிழ்நாட்டானே அல்ல. அரபுநாட்டான் போலக் காணப்பட்டான். அவன் எப்படி இங்கு வந்தான் என்ற வியப்புடன் மற்ற இருவரையும் பார்த்தான். அவர்கள் முகத்தில் பாதியை மறைத்து முண்டாசு கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் தமிழ்நாட்டவர்கள் என்று தெரிந்தது. அதுமட்டுமன்று, பார்த்த முகங்களாகவும் காணப்பட்டன. எங்கே, எங்கே பார்த்தோம் இவர்களை?- ஆ! நினைவு வருகிறது! பார்த்திபேந்திர பல்லவனுடைய தம்பளையிலிருந்து திரும்பி வந்தவர்கள் அல்லவா இவர்கள்? ஆழ்வார்க்கடியான் இவர்களைத் தானே இளவரசரைக் கொல்ல வந்தவர்கள் என்று சொன்னான்? ஓகோ! இவர்களில் ஒருவனை வேறொரு இடத்தில் கூடப் பார்த்திருக்கிறோமே? மந்திரவாதி ரவிதாஸன் அல்லவா இவன்? ஆந்தை கத்துவதுபோல் கத்திவிட்டுப் பழுவூர் ராணியைப் பார்க்க வந்தான் அல்லவா இவன்? சரி, சரி இளவரசர் கப்பலில் இருப்பது தெரிந்துதான் இவர்கள் அதில் ஏறிக்கொள்ளப் போகிறார்கள்! ஆகா! இளவரசர் போகும் வழியில் இது ஓர் அபாயமா? நாம் அவசரமாய் ஓடி வந்து இந்தப் படகைப் பிடித்து ஏறியது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று?...
படகு போய்க்கொண்டிருந்தது; மரக்கலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. படகில் இருந்தவர்கள் மௌனம் சாதித்தார்கள். வந்தியத்தேவனால் மௌனத்தைப் பொறுக்க முடியவில்லை. பேச்சுக் கொடுத்துப் பார்க்க விரும்பினான்.
"நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டான்.
"தெரியவில்லையா? அதோ நிற்கும் கப்பலுக்குப் போகிறோம்!" என்றான் மந்திரவாதி. பாதி மூடியிருந்த வாயினால் அவன் பேசிய குரல் பேயின் குரலைப் போலிருந்தது.
"கப்பல் எங்கே போகிறது?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"அது கப்பலுக்குப் போனபிறகு தெரியவேண்டும்" என்றான் ரவிதாஸன்.
மறுபடியும் படகில் மௌனம் குடிகொண்டது. வெளியில் கடலின் ஓங்கார நாதம் சூழ்ந்தது.
இப்போது மந்திரவாதி ரவிதாஸன் மௌனத்தைக் கலைத்தான். "நீ எங்கே அப்பா, போகிறாய்?" என்று கேட்டான்.
"நானும் கப்பலுக்குத்தான் போகிறேன்" என்றான் வந்தியத்தேவன்.
"கப்பலுக்குப்போய் பிறகு எங்கே போவாய்?"
"அது கப்பலில் ஏறிய பிறகுதான் தெரியவேண்டும்!" என்று பாடத்தைத் திருப்பிப் படித்தான் வந்தியத்தேவன்.
படகு கப்பல் அருகில் சென்றது. மேலேயிருந்து ஓர் ஏணி கீழே இறங்கியது. அதில் ஒவ்வொருவராக ஏறிச் சென்றார்கள். ஏணி மேலே போவதற்குள் வந்தியத்தேவன் அதில் தொத்திக் கொண்டான். கப்பலின் மேல் தளத்தில் ஏதோ பேச்சு நடந்தது. அவனுக்குப் புரியாத பாஷையாகத் தொனித்தது. வந்தியத்தேவன் இன்னும் துரிதமாக ஏணியின் மீது ஏறிக் கப்பலின் தளத்தில் குதித்தான். குதித்த உடனே, "எங்கே இளவரசர்?" என்று இரைந்துகொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். சுற்றிலும் அவன் பார்த்த காட்சி அவனுடைய இரும்பு நெஞ்சத்தையும் சிறிது கலக்கிவிட்டது. அவனைச் சுற்றிலும் பயங்கர ரூபமுள்ள அரபு நாட்டு மனிதர்கள் நின்றார்கள். ஒவ்வொருவனும் ஒரு ராட்சதனைப் போல் தோன்றினான். எல்லாரும் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். அவனுடைய கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.
"ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோம்" என்ற உணர்ச்சி வந்தியத்தேவன் உள்ளத்தில் உதித்தது. இது சோழ நாட்டுக் கப்பல் அல்ல; இருக்க முடியாது. இதில் உள்ளவர்கள் தமிழ் மாலுமிகள் அல்ல. பெரிய பெரிய குதிரைகளை விற்பதற்காகக் கொண்டு வரும் அரபு நாட்டு மனிதர்கள்.
இந்தக் கப்பலில் இளவரசர் இருப்பது இயலாத காரியம். அவசரப்பட்டு வந்து ஏறிவிட்டோ ம். தப்பிச் செல்வது எப்படி? கடல் ஓரத்தில் நின்று குனிந்து பார்த்தான். படகு போய்க் கொண்டிருந்தது. "படகுக்காரா! நிறுத்து!" என்று கூவிக் கொண்டு கடலில் குதிக்கப் போனான். அச்சமயம் ஒரு வஜ்ரத்தை நிகர்த்த கை பின்னாலிருந்து அவனுடைய குரல் வளையைப் பிடித்து ஓர் இழுப்பு; ஒரு தள்ளு. வந்தியத்தேவன் கப்பல் தளத்தில் மத்தியில் வந்து விழுந்தான். அவனுக்கு உக்கிர ஆவேசம் வந்துவிட்டது. குதித்து எழுந்து அவனைத் தள்ளியவனது முகவாய்க் கட்டையில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். அந்த ஆறு அடி உயரமுள்ள அராபியன் தனக்குப் பின்னால் நின்றவனையும் தள்ளிக்கொண்டு படார் என்று விழுந்தான்.
வந்தியத்தேவனுக்குப் பின்னால் பயங்கரமான உறுமல் சத்தம் கேட்டது. நல்ல சமயத்தில் திரும்பிப் பார்த்தான். இல்லாவிட்டால் அவன் முதுகில் கத்தி பாய்ந்திருக்கும். திரும்பிய வேகத்தோடு கத்தியைத் தட்டி விட்டான். அது 'டணார்' என்ற சத்ததுடன் கப்பலில் விழுந்து, அங்கிருந்து தெறித்துப் பாய்ந்து, கடலில் விழுந்து மறைந்தது.
மறுகணம் வந்தியத்தேவன் நாலாபுறத்திலிருந்தும் பலர் வந்து பிடித்தார்கள். பிடித்தவர்கள் புரியாத பாஷையில் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அவர்களுடைய தலைவன் அதிகாரக் குரலில் கட்டளையிட்டான். உடனே மணிக்கயிறு கொண்டு வந்து வந்தியத்தேவனுடைய கால்களையும் கைகளையும் கட்டினார்கள். கைகளை உடம்போடு சேர்த்துப் பிணைத்தார்கள் பின்னர் நாலு பேராக அவனைத் தூக்கிக் கொண்டு கீழ்த் தளத்துக்குப் போனார்கள். போகும் போதெல்லாம் உதைத்துத் திமிறி விடுவித்துக் கொள்ள வந்தியத்தேவன் முயன்றான். அந்த முயற்சி பலிக்கவில்லை. கப்பலின் அடித்தளத்தில் கொண்டு போய் அங்கே அடுக்கியிருந்த மரக்கட்டைகளின் மீது அவனைப் படார் என்று போட்டார்கள். அந்தக் கட்டைகளில் ஒன்றோடு சேர்த்துக் கட்டிவிட்டு மேலே சென்றார்கள்.
கப்பல் அப்படியும் இப்படியும் அசைந்து ஆடிற்று. கப்பல் தன் பிரயாணத்தைத் தொடங்கி விட்டது என்று வந்தியத்தேவன் அறிந்தான். கப்பல் ஆடியபோது மரக் கட்டைகள் அவன்மீது உருண்டு விழுந்தன. அவற்றை விலக்கிக் கொள்ள முடியாமல் அவனுடைய கைகள் கட்டப்பட்டிருந்தன.
"இந்த முறை மட்டும் தப்பிப் பிழைத்தால் இனி அவசரப்பட்டு எந்தக் காரியமும் செய்வதில்லை. ஆழ்வார்க்கடியானைப் போல் ஆழ்ந்து யோசித்த பிறகே செய்ய வேண்டும்" என்று வந்தியத்தேவன் மனத்தில் எண்ணிக் கொண்டான்.
அச்சமயம் பேய் சிரிப்பது போன்ற சிரிப்புச் சத்தம் அருகில் கேட்டது. வந்தியத்தேவன் மிகச் சிரமத்துடன் சற்று முகத்தைத் திருப்பிப் பார்த்தான். அங்கே மந்திரவாதி ரவிதாஸன் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். இதுவரை மந்திரவாதியின் முகத்தில் பாதியை மறைத்துக் கொண்டிருந்த துணி இப்போது நீக்கப்பட்டிருந்தது.
"அப்பனே! அந்தச் சோழர் குலத்துப் புலியைத் தேடிக் கொண்டு வந்தேன்; புலி அகப்படவில்லை. ஆனால் வாணர் குலத்து நரியாகிய நீ அகப்பட்டுக் கொண்டாய்! அந்த வரைக்கும் அதிர்ஷ்டந்தான்!" என்றான்.
மேற்கூறிய நிகழ்ச்சிகளில் வந்தியதேவன் படகில் ஏறிச் சென்ற வரையில்தான் இருந்தவர்கள் பார்த்தார்கள். மரக்கலத்திற்குள்ளே நடந்தது இன்னவென்பது படகோட்டிச் சென்றவனுக்கே தெரியாது. அவன் உடனே திரும்பிக் கரைக்கு வந்து சேர்ந்தான்.
சேநாதிபதி முதலியவர்கள் படகில் ஏறிக் கொண்டார்கள். இனி அந்த மரக்கலத்தைத் தொடர்ந்து போய்ப் பிடிக்க முடியாது என்ற தீர்மானத்துக்கு அவர்கள் வந்திருந்தார்கள். ஆகையால் தொண்டைமானாற்றின் சங்கமத்துக்குப் போய்ப் பார்க்க அவர்கள் எண்ணினார்கள். இன்னொரு கப்பல் அங்கே இருக்கலாம். அதில் ஒரு வேளை இன்னும் இளவரசர் இருக்கலாம். எப்படியும் ஏதாவது செய்தியாவது கிடைக்கும் அல்லவா?
படகுக்காரனைக் கேட்டுப் பார்த்தார்கள். அவனிடமிருந்து ஒரு விவரமும் தெரியவில்லை. "படகில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். அதிகாலையில் யாரோ வந்து தட்டி எழுப்பினார்கள். கப்பலில் கொண்டு விட்டால் நிறையப் பணம் தருவதாகச் சொன்னார்கள் நீங்கள் விழித்தெழுவதற்குள் திரும்பி வந்து விடலாம் என்று போனேன், வேறொன்றும் தெரியாது" என்றான்.
மேலே கண்ட வரலாறுகளில் ஆழ்வார்க்கடியான் தான் அறிந்த வரையில் ஒன்று விடாமல் இளவரசரிடம் கூறினான்.
பின்னர், "இளவரசே! வந்தியத்தேவன் கடலில் குதித்துப் பாய்ந்து சென்றபோது அவனைத் தொடர்ந்து நானும் போகலாமா என்று முதலில் நினைத்தேன். ஆனால் எனக்குக் கடல் என்றால் எப்போதுமே சிறிது தயக்கம் உண்டு; நன்றாக எனக்கு நீந்தத் தெரியாது. அத்துடன், அதோ போகிறதே அந்தக் கப்பலைப் பற்றியும் எனக்குச் சிறிது சந்தேகம் ஏற்பட்டது. அதில் தாங்கள் ஏறிப்போவது சாத்தியமில்லை என்று தோன்றியது. இன்னும், அந்தக் கப்பல் சோழநாட்டுக் கப்பலாயிருக்க முடியுமா என்ற ஐயமும் உண்டாயிற்று. இதைப்பற்றிச் சேநாதிபதியிடமும் கூறினேன். இருவரும் இங்கே வந்து பார்த்து முடிவு செய்வது என்று தீர்மானித்துக் கொண்டு வந்தோம். தங்களைப் பார்த்த பிறகுதான் எங்கள் மனம் நிம்மதி அடைந்தது"! என்றான்.
ஆழ்வார்க்கடியான் கூறியதையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்து அருள்மொழிவர்மர், "ஆனால் என் மனத்தில் நிம்மதி இல்லை, திருமலை! வந்தியத்தேவன் அந்தக் கப்பலில் போகிறான். அவனைப் பழுவேட்டரையர்கள் பிடித்துப் பாதாளச் சிறையில் தள்ளி விடுவார்கள்!" என்றார்.
அப்போது சேநாதிபதி, "இளவரசே! அந்தக் கொடியவர்களின் அதிகாரத்தை எதற்காகப் பொறுத்திருக்க வேண்டும்? தாங்கள் மட்டும் சம்மதம் கொடுங்கள். அடுத்த பௌர்ணமிக்குள் பழுவேட்டரையர்களின் அதிகாரத்தைத் தீர்த்துக் கட்டி அந்தப் பாதாளச் சிறையில் அவர்களையே அடைத்துவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன்" என்றார்.
"ஐயா! என் தந்தையின் விருப்பத்துக்கு விரோதமாக நான் அணுவளவும் நடந்து கொள்வேன் என்று தாங்கள் கனவிலும் எதிர்பார்க்க வேண்டாம்!" என்றார் இளவரசர்.
இந்தச் சமயத்தில் குதிரை ஒன்று வேகமாக வரும் சத்தம் கேட்டு எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். சற்றுத் தூரத்திலேயே அந்தக் குதிரை நின்றது. முகக்கயிறு, உட்கார ஆசனம் ஒன்றுமில்லாமல் அந்தக் குதிரை மேல் ஏறி வந்தவள் ஒரு ஸ்திரீ என்று அறிந்ததும் அனைவரும் வியப்படைந்தார்கள்.