←அத்தியாயம் 2: மோக வலை
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திகொலை வாள்: ஆந்தையின் குரல்
அத்தியாயம் 4: தாழைப் புதர்→
401பொன்னியின் செல்வன் — கொலை வாள்: ஆந்தையின் குரல்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
கொலை வாள் - அத்தியாயம் 3[தொகு]
ஆந்தையின் குரல்
நந்தினி கடலை நோக்கினாள். பழுவேட்டரையர் ஏறிச் சென்ற படகு பார்த்திபேந்திரனுடைய கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தது.
நந்தினி பெருமூச்சு விட்டாள். அது பார்த்திபேந்திரனுடைய நெஞ்சில் புயலாக அடித்தது.
"தேவி! சொல்லுங்கள். நான் செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள். தங்களுக்கும் எனக்கும் உகந்தது என்று பிரித்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தங்களுக்கு எது உகந்ததோ அதுதான் எனக்கும் உகந்தது!" என்றான் பல்லவ வீரன்.
அவன் மனத்தில் விசித்திரமான எண்ணங்கள் எல்லாம் அந்நேரத்தில் உதித்தன. இந்தப் பெண் அந்தக் கொடிய கிழவனிடம் அகப்பட்டுக்கொண்டு கூண்டுக் கிளியைப்போல் தவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதில் சந்தேகமில்லை. அந்தக் காட்டுப் பூனையிடமிருந்து இவளை ஏன் விடுதலை செய்யக்கூடாது? இவள் மட்டும் தன் விருப்பத்தைத் தெரிவிக்கட்டும்! அவனை அக்கப்பலிலேயே சிறைப்படுத்திக் கண்காணாத தேசத்துக்குக் கொண்டு போய்விட்டுவிடச் செய்யலாம்! சண்டாளன்! புதல்வியும், பேத்தியுமாக இருப்பதற்குரிய இளம் பிராயமுடைய பெண்ணை மனைவியாக்கிக் கொள்ள எப்படி இவன் மனந் துணிந்தது?...
நந்தினி இன்னமும் படகையும், கப்பலையும் பார்த்துக் கொண்டிருந்தாள். படகிலிருந்து பழுவேட்டரையர் கப்பலில் ஏறுவதைப் பார்த்தாள்.
"நல்லவேளை! பத்திரமாக ஏறிவிட்டார்! எவ்வளவு வீரராயிருந்தாலும் வயதாகிவிட்டதல்லவா? படகிலிருந்து கப்பலில் ஏறும்போது தடுமாறாமல் இருக்கவேண்டுமே என்று எனக்குக் கவலையாயிருந்தது!" என்றாள்.
பல்லவன் ஏமாற்றமடைந்தான்! 'கிழவனிடம் இவளுக்கு இவ்வளவு பரிவு ஏன்? படகிலிருந்து அவன் கடலில் விழுந்து இறந்தால்தான் என்ன? நாட்டுக்கும் க்ஷேமம்; இவளுக்கும் விடுதலை! எதற்காக இவ்வளவு பரிவு காட்டுகிறாள்?'
"கிழவருக்குச் சோழ குலத்தாரிடம் எவ்வளவு அபிமானம் என்பது இன்றைக்குத்தான் எனக்குத் தெரிந்தது. இளவரசருக்கு ஆபத்து என்றதும் எப்படித் துடிதுடித்துப் போய் விட்டார்? ஐயா! இளவரசர் தப்பிப் பிழைத்திருக்கக்கூடும் அல்லவா? இறந்துதான் போயிருக்கவேண்டும் என்பது நிச்சயம் இல்லையே?" என்றாள் நந்தினி.
"நிச்சயம் இல்லை; ஆனால் அப்பேர்ப்பட்ட சுழற் காற்றில் கடலில் குதித்தவர் பிழைத்திருப்பது அசாத்தியம்! விதியின் போக்குக்கு நாம் என்ன செய்யமுடியும்?" என்றான் பல்லவன்.
"இதற்கு விதி காரணம் இல்லை; அந்தப் பழையாறை ராட்சஸியின் பேராசைதான் காரணம். தங்களுக்குத் தெரியுமா, ஐயா? குந்தவை தேவிக்குச் சோதிடத்திலும் ரேகை சாஸ்திரத்திலும் அபார நம்பிக்கை. தம்பியின் ஜாதகத்தையும், கைரேகையையும் பார்த்து வைத்துக்கொண்டு அவன் மூன்று உலகையும் ஆளும் சக்கரவர்த்தியாகப் போகிறான் என்று நம்பிக்கை வைத்திருந்தாள். ஐயோ! பாவம்! அந்த அருமைத் தம்பிக்கு இந்த கதி நேர்ந்தது என்று அறியும் போது அவள் எவ்வளவு கஷ்டம் அடைவாள்? அச்சமயம் நான் அவள்கூட இருந்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருக்கிறது!"
இவ்விதம் கூறிய நந்தினியின் குரலில் குதூகலம் தொனித்தது. பல்லவன் ஒருகணம் ஆச்சரியப்பட்டுப் போனான். பிறகு தன் செவிகளில் தான் கோளாறு என்று தீர்மானித்துக் கொண்டான்.
"ராணி தாங்கள் எதற்காக ஆறுதல் சொல்லவேண்டும்? அவளுடைய பேராசையினால் நேர்ந்துவிட்ட விபரீதம்தானே இது? அதற்காக அவள் கஷ்டப்பட வேண்டியதுதான்..."
"அது எப்படி ஐயா? அவள் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் துளித்தால், நெஞ்சு பதறுகிறவர்கள் சோழ நாட்டில் ஆயிரம் பதினாயிரம் பேர் இருக்கிறார்கள். அவள் சக்கரவர்த்தியின் செல்வப் புதல்வி மூன்று உலகிலும் ஈடு இணையற்ற அழகி!"
"நானும் ஒரு சமயம் அவ்வாறுதான் நினைத்திருந்தேன்! அதாவது, தங்களைப் பார்ப்பதற்கு முன்னால்!"
"என்னைப் பார்த்த பிறகு என்ன நினைக்கிறீர்கள்?"
"குந்தவை தேவியின் அழகு தங்கள் பாதச் சுண்டு விரலின் அழகுக்கு இணையாகாது என்றுதான்."
"இப்போது இப்படித்தான் சொல்வீர்கள். நாளைக்கு அவளைப் பார்த்தால் நான் ஒருத்தி இவ்வுலகில் இருக்கிறேன் என்பதையே மறந்துவிடுவீர்கள்!"
"ஒரு நாளும் மாட்டேன். தேவி! என்னைச் சோதனை செய்து பாருங்கள் என்று தான் சொல்லுகிறேனே? தங்கள் கட்டளை இன்னதென்று இக்கணமே தெரிவியுங்கள்."
"கட்டளையிடும் பாத்தியதை எனக்குக் கிடையாது. ஐயா! விண்ணப்பம் செய்து கொள்கிறேன். பெரிய பழுவேட்டரையரை நான் மணந்த பிறகு சோழ நாட்டில் பிளவும், குழப்பமும் ஏற்பட்டிருப்பதாகச் சிலர் அவதூறு சொல்கிறார்கள். அது பொய் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். அதற்குத்தான் தங்கள் உதவியை நாடுகிறேன்."
பார்த்திபேந்திரன் சிறிது ஏமாற்றம் அடைந்தான். நந்தினி, அவளுக்காக ஏதோ ஒரு கஷ்டமான காரியத்தில் தன்னை ஏவுவாள் என்று எண்ணியிருந்தான். அதை நிறைவேற்றி அவளை மகிழ்விக்க ஆர்வம் கொண்டிருந்தான். ஆனால் அவள் இராஜ்ய காரியத்தைப் பற்றி எதுவோ சொல்லுகிறாள்!
"சொல்லுங்கள் ராணி! தங்கள் விருப்பம் எதுவாயிருந்தாலும் சொல்லுங்கள்!" என்றான்.
"ஐயா! சோழநாட்டில் அமைதி ஏற்படாமல் தடுத்து வந்தவள் இளைய பிராட்டி. அவளுடைய அகம்பாவத்தினால் சோழ நாட்டுச் சிற்றரசர்களையும், பெருந்தர அதிகாரிகளையும் கோபங்கொள்ளச் செய்தாள். தம்பி அருள்மொழிவர்மனை எப்படியாவது இந்தச் சோழநாட்டுச் சிம்மாசனத்தில் ஏற்றி விடவேண்டும் என்று அவளுக்கு ஆசை. இதனால் சமரசம் ஏற்படாமல் தடுத்து வந்தாள். இப்போது அந்தக் காரணம் போய்விட்டது. இனிமேல் சமரசம் செய்து வைப்பது சுலபம். கேளுங்கள், ஐயா! தாங்கள்தான் சொன்னீர்களே! மந்திரிகளும், மற்றப் பெருந்தர அதிகாரிகளும் சுந்தர சோழருக்குப் பிறகு மதுராந்தகருக்குப் பட்டம் கட்ட விரும்புகிறார்கள். சக்கரவர்த்தியும் அதற்கு இணங்கிவிட்டார்."
"அப்படியா, தேவி!"
"ஆம், ஐயா! இல்லாவிடில் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டுவரக் கட்டளையிட்டிருப்பாரா? ஆனாலும் அது சரியல்ல என்பது என் கருத்து. சமரசமாகத் தீர்த்துக் கொள்வதற்கு இடம் இருக்கிறது. வெள்ளாற்றுக்கு வடக்கேயுள்ள ராஜ்யத்தை ஆதித்த கரிகாலருக்கு என்றும், தெற்கேயுள்ள பகுதியை மதுராந்தகருக்கு என்றும் பிரித்துக் கொள்ளலாமே? தங்கள் முன்னோர்கள், பல்லவ மகாசக்கரவர்த்திகள் 'தொண்டை மண்டலத்தை ஆள்வதுடன் திருப்தி அடைய வில்லையா? பூர்வீகச் சோழ மன்னர்கள் இரண்டு வெள்ளாற்றுக்கும் இடையே உள்ள ராஜ்யத்துடன் திருப்தி அடையவில்லையா?"
"தேவி இதையெல்லாம் எதற்காக என்னிடம் சொல்லுகிறீர்கள் எந்தச் சாம்ராஜ்யம் எப்படிப் போனால் எனக்கு என்ன? யார் எந்த ராஜ்யத்தை ஆண்டால் எனக்கு என்ன?.."
"ஐயா! தாங்கள் ஆதித்த கரிகாலரிடம் உண்மை விசுவாசம் உள்ள சிநேகிதர் என்று எண்ணினேன்."
"பிறருக்கு விசுவாசமாயிருந்து, பிறருடைய புகழுக்காகப் போராடி, பிறருடைய நன்மைக்காக உழைத்து, - இத்தனை நாளும் கழித்தாகிவிட்டது. இனிமேல் எனக்காக நான் வாழ விரும்புகிறேன். ராணி! இதைக் கேளுங்கள்! நான் எதற்காக இவ்வுலகில் பிறந்தேன். எதற்காக உயிரோடிருக்கிறேன் என்று பலதடவை நான் சிந்தித்ததுண்டு. என் முன்னோர்களாகிய பல்லவ சக்கரவர்த்திகள் பெரிய சாம்ராஜ்யங்களை ஆண்டார்கள். மாமல்லபுரத்தைப் போன்ற சொப்பன உலகங்களைச் சிருஷ்டித்தார்கள். அவர்களுடைய பெருமையை என் காலத்தில் மீண்டும் நிலைநாட்டப் பிறந்திருக்கிறேனோ என்று நான் எண்ணியதுண்டு. ஆனால் அதில் என் மனம் ஈடுபடவில்லை. ராஜ்யங்களைச் சிருஷ்டிப்பதில் உற்சாகம் கொள்ளவில்லை. சோழ குலத்தின் பெருமைக்கு உழைப்பதிலேயே திருப்தி அடைந்தேன். ஆதித்த கரிகாலரின் சிநேகத்தில் மகிழ்ந்தேன். இப்படியே என் வாழ்நாளைக் கழித்துவிடுவது என்றுதான் எண்ணியிருந்தேன். இன்றைக்குத்தான் என் கண்கள் திறந்தன; சற்று முன்னாலே தான் நான் பிறந்தது எதற்காக என்று தெரிந்தது. அதோ கேளுங்கள்! அந்தக் கடல் அலைகளின் குரல் என் உள்ளத்தின் குரலை 'ஆம் ஆம்' என்று ஆமோதிக்கிறது. அதோ காட்டில் வாழும் பறவைகள் எல்லாம் 'சரி, சரி' என்று கூவுகின்றன. தேவி! சோழ சாம்ராஜ்யத்தைப் பங்கு போடுவது பற்றி என்னிடம் சொல்லவேண்டாம். வேறு ஏதாவது சொல்லுங்கள்! கடல்களுக்கப்பால் உள்ள பவழத் தீவிலிருந்து விலை மதிக்க முடியாத பவழங்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். ஆழ்கடலின் அடியிலிருந்து முத்துக்களைக் கொண்டுவரச் சொல்லுங்கள். மேருமலையின் உச்சிச் சிகரத்திலே ஏறிச் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வரச் சொல்லுங்கள். மேகமண்டலத்துக்கு மேலே பறந்து நட்சத்திரங்களைப் பறித்துக் கொண்டு வந்து ஆரம் தொடுத்துத் தங்கள் கழுத்தில் போடச் சொல்லுங்கள். பூரணச் சந்திரனைக் கொண்டு வந்து தங்களுடைய முகம் பார்க்கும் கண்ணாடியாக்கித் தரும்படி சொல்லுங்கள்!"
"போதும், ஐயா, போதும்! என்னை ஏற்கனவே அந்தப் பழையாறைப் பிராட்டி 'பைத்தியம்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். உண்மையாகவே எனக்குப் பைத்தியம் பிடிக்கச் செய்து விடாதீர்கள்!" என்றாள் நந்தினி.
பார்த்திபேந்திரன் சிறிது வெட்கம் அடைந்தான். "பைத்தியம் பிடித்திருப்பது எனக்குத்தான்; மன்னியுங்கள். தங்களுடைய விருப்பத்தை முதலில் தெரிவியுங்கள்!" என்றான்.
"சோழ நாடெங்கும் - தமிழகமெங்கும் - எனக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயரைப் போக்கிக் கொள்ள விரும்புகிறேன். அதற்குத்தான் தங்கள் உதவியை நாடுகிறேன். நான் இந்தக் கிழவரை மணந்ததின் காரணமாகச் சோழ குலத்துக்கே கேடு வந்துவிட்டதென்று ஜனங்கள் பேசிக் கொள்கிறார்களாம். மதுராந்தகத்தேவரை இராஜ்ய ஆசை கொள்ளச் செய்தது நான்தான் என்று சொல்லுகிறார்களாம். சோழ நாட்டுச் சிற்றரசர்களை அவர் பக்கம் திருப்பியதும் நான்தான் என்றும் சொல்கிறார்களாம். இந்த அவப்பெயருடன் இறந்து போவதற்கு நான் விரும்பவில்லை...!"
"இறந்து போவதைப்பற்றி ஏன் பேசுகிறீர்கள்? என்னைத் துன்புறுத்துவதற்காகவா?"
"பல்லவ குமாரா! தங்களுக்கு ரேகை சாஸ்திரம் தெரியுமா? ரேகை சாஸ்திரத்தில் தங்களுக்கு நம்பிக்கை உண்டா?" என்று நந்தினி சம்பந்தமில்லாத ஒரு கேள்வியைக் கேட்டாள்.
பார்த்திபேந்திரன் அதற்கு நேர் மறுமொழி சொல்லாமல் "எங்கே? கையைக் காட்டுங்கள்!" என்றான்.
நந்தினி வலது கையை நீட்டினாள். அதைப் பார்த்திபேந்திரன் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, "ஆச்சரியமான ரேகைகள். இம்மாதிரி காண்பதே அபூர்வம்! அந்தக் கையையும் சிறிது காட்டுங்கள்!" என்றார்.
நந்தினி இன்னொரு கையையும் நீட்டினாள். பல்லவன் அதையும் பார்த்துவிட்டு, "தேவி! இதற்கு முன் யாராவது தங்கள் கரங்களின் அதிசயமான ரேகைகளைப் பார்த்துவிட்டு ஏதாவது சொல்லியிருக்கிறார்களா?" என்று கேட்டான்.
"ஆம்! பழையாறை இளைய பிராட்டி ஒரு தடவை என் கையைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்..."
"என்ன சொன்னாள்?"
"நான் அற்பாயுளில் சாவேன் என்று சொன்னாள்."
"அது உண்மைதான்!" என்றான் பார்த்திபேந்திரன்.
"ஐயா! நீங்களுமா அப்படிச் சொல்லுகிறீர்கள்?"
"ஆனால் அவள் அரைகுறையாக சாஸ்திரம் படித்தவள் என்று தெரிகிறது. இந்தக் கைரேகையில் ஒன்று அற்பாயுளைக் குறிப்பது உண்மைதான்; ஆனால் மற்றொரு ரேகை அந்தக் கண்டத்தைக் கடந்து புனர் ஜன்மம் ஏற்படும் என்றும் கூறுகிறது. அந்தப் புனர்ஜன்மத்துக்குப் பிறகு கடல் கடந்த பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்யும் பாக்கியம் உண்டு என்றும் மன்னாதி மன்னர்களுக்குக் கிட்டாத ஆனந்த வாழ்க்கை வெகுகாலம் உண்டு என்றும் கூறுகிறது. இவ்வளவும் தற்செயலாகக் கடற்கரையில் சந்தித்த ஒரு யௌவன புருஷனுடைய உண்மை அன்பினால் கிடைக்கும் என்று தெரிகிறது தங்களுடைய சின்னஞ் சிறு விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவன் தன் உயிரையே அர்ப்பணம் செய்வான் என்று ரேகைகள் மிகத்தெளிவாகச் சொல்லுகின்றன..."
இவ்விதம் கூறிக்கொண்டே பார்த்திபேந்திரன் சட்டென்று நந்தினியின் விரிந்த இரு கரங்களையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.
நந்தினி கைகளை உதறி விடுவித்துக்கொண்டு, "சீச்சீ! இது என்ன காரியம் செய்தீர்?" என்றாள்.
"மன்னியுங்கள்! இவை தங்கள் கரங்கள் என்பதை மறந்து விட்டேன். இரண்டு செந்தாமரை மலர்கள் என்று எண்ணிக் கொண்டேன்" என்றான்.
"பழுவேட்டரையர் பார்த்திருந்தால் உம்மை ஈட்டி முனையில் கழுவேற்றிருப்பார்!"
"தேவி! தங்களுக்காகக் கொடுப்பதற்கு எனக்கு இருப்பது ஓர் உயிர்தானே என்று கவலைப்படுகிறேன்..."
"அந்த ஓர் உயிரையும் இப்படிக் கொடுப்பானேன்? இந்த அநாதைப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காகக் காப்பாற்றி வைத்துக் கொண்டிருங்கள்!"
"என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்!"
"சோழ சாம்ராஜ்யம் தாயாதிக் கலகத்தினால் பாழாகி விடாமல் காப்பாற்றப்பட வேண்டும். அதற்குத் தங்களுடைய உதவி வேண்டும்."
"எப்படி?"
"தங்கள் சிநேகிதர் கரிகாலரைக் கடம்பூர் சம்புவரையர் வீட்டுக்கு அழைத்து வாருங்கள். சம்புவரையருக்கு ஒரு பெண் இருக்கிறாள். அவளை ஆதித்த கரிகாலருக்கு மணம் செய்து விட்டால் என் மனோரதம் பூர்த்தியாகும்."
"இந்த அற்பக் காரியத்துக்குத்தானா இவ்வளவு பீடிகை? ஆதித்த கரிகாலரை அவசியம் கடம்பூருக்குக் கொண்டு வந்து சேர்க்கிறேன். அப்புறம்?"
"ஆதித்த கரிகாலருக்குச் சம்புவரையர் மகளைக் கலியாணம் செய்து வைத்துவிட்டால் கலகம் பாதி தீர்ந்து விட்டதாகும். சோழ சாம்ராஜ்யத்தில் மதுராந்தகருக்குத் தென்பாதியும் கரிகாலருக்கு வடபாதியும் என்று பிரித்துக் கொடுத்துவிட்டால் கலகம் முழுதும் தீர்ந்ததாகும்."
"பின்னர்?..."
"எனக்கு ஏற்பட்டிருக்கும் கெட்ட பெயர் போய்விடும். பிறகு என் தலைவிதியை நானே நிறைவேற்றிக் கொள்வேன். நடுக்கடலில் விழுந்து உயிரை விடுவேன்..."
"நான் பின் தொடர்ந்து வந்து தங்களைக் காப்பாற்றுவேன். நம் இருவருடைய புனர் ஜன்மம் ஆரம்பமாகும். கடல்களைக் கடந்து தூரதேசங்களுக்குச் செல்வோம். அங்கே தங்களுக்காக ஒரு மாபெரும் ராஜ்யத்தை ஸ்தாபிப்பேன்."
"ஐயா! இப்படியெல்லாம் பேசவேண்டாம். தென் தமிழ் நாட்டுப் பத்தினிப் பெண்களின் மரபில் வந்தவள் நான். பழுவேட்டரையரின் தர்ம பத்தினி..."
"தேவி! என்னிடம் உண்மையைச் சொல்லுங்கள். இந்தக் கிழவரை எதற்காக மணந்து கொண்டீர்கள்? இவர் பேரில் காதல் உண்டா? அல்லது இவருடைய பலாத்காரத்திற்காகவா?"
நந்தினி பெருமூச்சு விட்டாள். அவளுடைய கண் விழிகள் மேல் நோக்கிச் சென்றன. ஏதோ, பழைய துயரமான ஞாபகங்களில் சிறிது நேரம் ஆழ்ந்திருந்தாள் என்று தோன்றியது.
"பாவம்! கிழவர் பேரில் பழி சொல்ல வேண்டாம். மனதார இஷ்டப்பட்டுத்தான் இவரை மணந்தேன்."
"ஏன்? எதற்காக? இவரிடம் அப்படி என்ன கண்டீர்கள்?"
"இவரிடம் ஒன்றும் காணவில்லை. அரண்மனை வாழ்வுக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப்பட்டு நானாகவே இவரை மணந்தேன்."
"என்னால் நம்பமுடியவில்லை!"
"நம்ப முடியாதுதான், ஆனாலும் அது உண்மை. சின்னஞ் சிறு பிராயத்திலிருந்து என்னை ஒருத்தி ஏழை என்றும், அனாதையென்றும் ஏளனம் செய்து வந்தாள். அரச குலத்துப் பிள்ளைகளுடன் விளையாடும் உரிமைக்கூடக் கிடையாது என்று சொல்லி வந்தாள். அந்த அவமதிப்பைப் பொறுக்க முடியாமல் இந்தத் தவற்றைச் செய்தேன்."
"தேவி! அப்படித் தங்களை அவமதித்த பெண் பேய் யார்?"
"தெரியவில்லையா, ஊகிக்க முடியவில்லையா?"
"இளைய பிராட்டி குந்தவைதானே?"
"ஆமாம்."
"அவளுக்கு ஒரு நாள் நான் புத்தி புகட்டியே தீர்வேன்."
"கடவுளே அவளுக்குத் தண்டனை அளித்துவிட்டார்! அருமைத் தம்பியும், ஆருயிர் காதலனும் ஒரே போக்கில் போய் விட்டார்கள். இப்போது அவளுடைய நிலையை நினைத்தால் எனக்கு அநுதாபமாயிருக்கிறது."
"இந்தத் தண்டனை அந்த அகம்பாவக்காரிக்குப் போதவே போதாது."
"சற்று முன் நான் தங்களை வேண்டிக்கொண்ட காரியத்துக்கு உதவி செய்தால் அவளுடைய தண்டனை பூர்த்தியாகும். சோழ சாம்ராஜ்யத்திற்குத் தனி நாயகியாக இருக்க வேண்டும் என்ற அவள் ஆசை மண்ணோடு மண்ணாகும்."
"தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். பரிசு என்ன தருவீர்கள்?"
"எது கேட்டாலும் தருவேன். தமிழ்ப் பெண்குலத்தின் மரபுக்கு மாறுபடாத எதைக் கேட்டாலும் தருகிறேன்..."
"ராணி மேலை நாடுகளில் ஒரு புதிய சமயம் தோன்றியிருக்கிறதாம். அரபுதேசம், பாக்தாத் தேசம், பாரஸீகம் முதலிய தேசங்களில் அது பரவியிருக்கிறதாம். அந்தச் சமயக் கோட்பாட்டின்படி கல்யாணமான தம்பதிகள் விரும்பினால் பிரிந்து விடலாம். அதற்குச் சடங்கு உண்டாம். ஸ்திரீகள்கூட வேறு கல்யாணம் செய்து கொள்ளலாமாம்."
"ஆம், நானும் அவ்வாறு கேள்விப்பட்டிருக்கிறேன்."
"நாம் அந்த நாடுகளுக்குப் போய்விடுவோம். அந்தச் சமயக் கோட்பாட்டில் சேர்ந்துவிடுவோம்..."
"அப்படியெல்லாம் சில சமயம் நானும் பகற்கனவு காண்பதுண்டு. ஆனால் நடக்கக்கூடிய காரியமா?"
"தேவி! ஏன் நடக்காது? அவசியம் நடக்கும். தாங்கள் மட்டும் சம்மதித்தால் நடக்கும். தங்களுடன் கப்பல் ஏறிக் கடல் கடந்து செல்வேன். தூரதேசங்களில் இறங்குவேன். இந்தக் கையில் பிடித்த கத்தியின் வலிமையினால் பெரியதொரு ராஜ்யத்தை ஸ்தாபிப்பேன். நவரத்தின கசிதமான சிங்காதனத்தில் தங்களை ஏற்றி வைப்பேன்! தங்களுடைய சிரஸில் பார்த்தோர் கண் கூசும்படியான மணிமகுடத்தைச் சூட்டுவேன். இதற்காகவே நான் பிறந்திருக்கிறேன்; இதற்காகவே இவ்வளவு போர்க்களங்களிலும் சாகாமல் உயிரோடு இருந்து வருகிறேன்..."
"ஐயா! அதோ என் கணவர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார். படகு கரையை நெருங்கிவிட்டது. அமைதி அடையுங்கள், மற்ற விஷயங்களைப் பிறகு பேசிக் கொள்ளலாம்..."
"பிறகு எப்போது தேவி?"
"எங்களுடன் தஞ்சாவூருக்கு வாருங்கள்! விருந்தாளியாக வர அழைப்புக் கிடைக்காவிட்டால் சிறையாளியாகவாவது வாருங்கள்!"
"தங்களுடைய அழைப்பே எனக்குப் போதும்" என்றான் பார்த்திபேந்திரன்.
பழுவேட்டரையர் ஏறி வந்த படகு கரையை அடைந்தது. கிழவர் படகிலிருந்து இறங்கி ஆங்காரமே உருவெடுத்தவர் போல் வந்தார்.
நந்தினியும், பார்த்திபேந்திரனும் எழுந்து நின்றார்கள். அவர்களைப் பழுவேட்டரையர் பார்த்த பார்வையில் அனல் பொறி கிளம்பிற்று. பாவம்! அத்தனை நேரம் அவர்கள் சேர்ந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்ததை நினைத்தாலே கிழவருக்குக் கோபமாயிருந்தது. அதை வெளியிடுவதற்கும் வழியில்லை. ஆகையால் உள்ளத்தில் கோபம் மேலும் கொதித்துப் பொங்கியது.
"நாதா! கப்பலை நன்கு சோதித்தீர்களா? மாலுமிகளை நன்றாய் விசாரித்தீர்களா? இவர் கூறியதெல்லாம் உண்மைதானா?" என்று நந்தினி கொஞ்சம் குதலை மொழியில் கேட்டாள்.
அந்தக் குரல் பழுவூர் அரசரைக் கொஞ்சம் சாந்தப்படுத்தியது.
"ஆம், ராணி! இவன் கூறியதெல்லாம் உண்மையென்று தெரிந்தது? சோழ நாட்டின் தவப்புதல்வன், சோழகுலத்தின் செல்வக்குமரன், - தமிழகத்தின் கண்ணின் மணியான இளவரசன், - போய்விட்டான்!" என்று கூறிப் பல்லவனைத் திரும்பிப் பார்த்து, "அதற்குக் காரணமானவன் இதோ நிற்கும் கொலை பாதக சண்டாளன்தான்!" என்று கர்ஜித்தார்.
"ஐயா! அதற்குக் காரணம் நான் அல்ல; என் பேரில் பழி போடாதீர்கள்! இளவரசரைக் கடல் கொண்டதற்குக் காரணம் சோழ நாட்டையே ஆட்டுவிக்கும் பெண் உருக் கொண்ட மோகினிப் பிசாசு!" என்றான் பார்த்திபேந்திரன்.
கிழவரின் கோபம் இப்போது அணை கடந்த வெள்ளமாயிற்று. நந்தினியைப் பற்றித்தான் அவன் அவ்வாறு சொன்னதாக எண்ணினார்.
"அடபாவி! என்ன சொன்னாய்?" என்று கூறிக்கொண்டு தரையில் கிடந்த ஈட்டியைச் சட்டென்று குனிந்து எடுத்தார். பார்த்திபேந்திரனைக் குறி வைத்து ஓங்கினார்.
நந்தினி அவருடைய கையைப் பிடித்துத் தடுத்தாள். "நாதா! இது என்ன காரியம்! எத்தனையோ பகைவர்களைக் கொன்ற தங்கள் வெற்றிவேல் இந்த விருந்தாளியின் இரத்தத்தினால் கறைபடலாமா?" என்றாள்.
"ராணி! இவனா விருந்தாளி! சற்று முன்னால் உன்னைப்பற்றி இவன் கூறியதை நீ கேட்கவில்லையா?" என்றார் கிழவர். கோபத்தினால் அவர் குரல் குழறிச் சொற்கள் தடுமாறின.
"அவர் என்னைப்பற்றியா சொன்னார்? நன்றாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அப்படியானால் என் கையிலுள்ள கத்தியினாலேயே பழி வாங்குவேன். தங்களுக்குச் சிரமம் தரமாட்டேன்!" என்றாள் நந்தினி.
"ஐயா! நான் என்ன பைத்தியமா, பழுவூர் இளையராணியைப் பற்றி அவ்விதம் சொல்வதற்கு? பழையாறையில் உள்ள மோகினிப் பிசாசைப் பற்றியல்லவா சொன்னேன்? இளைய பிராட்டி குந்தவை வந்தியத்தேவன் என்ற வாலிபனிடம் இரசிய ஓலை கொடுத்து இளவரசருக்கு அனுப்பினாள். அந்த முரட்டு வாலிபனைக் காப்பாற்றுவதற்காக அல்லவோ நான் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் இளவரசர் அலைகடலில் குதித்தார்? ஆகையால் இளவரசரின் மரணத்துக்குக் குந்தவை காரணம் என்று சொன்னேன்" என்றான் பார்த்திபேந்திரன்.
பழுவேட்டரையர் தம் அவசர புத்தியைக் குறித்துச் சிறிது வெட்கம் அடைந்தார். அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் "வெறுமனே மூடி மறைக்கப் பார்க்காதே! இளவரசரின் அகால மரணத்துக்கு நீயும் பொறுப்பாளிதான். அத்தகைய சுழல் காற்று அடித்த சமயத்தில் அவர் கப்பலிலிருந்து படகில் இறங்குவதற்கு நீ எப்படிச் சம்மதித்தாய்? தொலைந்து போ! என் கண் முன்னால் நிற்காதே!" என்றார்.
நந்தினி குறுக்கிட்டு, "நாதா! இவரையும் தஞ்சாவூர் அழைத்துப் போவது நல்லதல்லவா? நடந்தது நடந்தபடி இவரே சக்கரவர்த்தியிடம் தெரிவிப்பது நலம் அல்லவா? இல்லாவிட்டால், ஏற்கனவே நம் பேரில் குற்றம் சொல்லக் காத்திருப்பவர்கள் இதையும் சேர்த்துக் கொள்வார்களே? நாம்தான் இளவரசரைக் கடலில் மூழ்கடித்து விட்டோ ம் என்று கூடக் கூசாமல் பழி சொல்வார்களே!" என்றாள்.
"சொன்னால் சொல்லட்டும்! அதற்கெல்லாம் நான் அஞ்சியவன் அல்ல. சொல்கிறவன் நாக்கைத் துண்டிக்கச் செய்வேன். ஆனால் இவன் நம்மோடு வருவதும் ஒரு காரியத்துக்கு நல்லது தான். பார்த்திபேந்திரா! ஏன் அங்குமிங்கும் பார்த்து விழிக்கிறாய்? தப்பி ஓடலாம் என்று பார்க்கிறாயா?" என்று கூறிச் சற்றுத் தூரத்தில் நின்ற வீரர்களைக் கைகாட்டி அழைத்தார். நாலு பேர் விரைந்து வந்தார்கள்.
"இவனைப் பிடித்துக் கட்டுங்கள்!" என்று கட்டளையிட்டார்.
வீரர்கள் நாலுபேரும் பார்த்திபேந்திரனை நெருங்கினார்கள். அருகில் நெருங்கி வரும் வரையில் அவன் சும்மாயிருந்தான். பிறகு ஒரு நொடிப்பொழுதில் தன் கைவரிசையைக் காண்பித்தான். நாலு வீரர்களும் நாலு பக்கம் போய் விழுந்தார்கள்.
"ஐயா! என்னைக் கட்டித் தளையிடுவதாயிருந்தால் மற்றவர்களை அனுப்ப வேண்டாம். வீராதி வீரரும் முப்பத்தாறு போர்க்களங்களில் அறுபத்து நாலு காயங்களை அடைந்தவருமான பெரிய பழுவேட்டரையர் கையினால் கட்டுப்படுவதற்கு நான் சித்தமாயிருக்கிறேன். மற்றவர்களை என் அருகிலும் நெருங்க விடமாட்டேன்!" என்றான்.
பழுவேட்டரையர் முகத்தில் சிறிது மலர்ச்சி காணப்பட்டது. "நீ வீர பல்லவ குலத்தில் பிறந்த வீரன், சந்தேகமில்லை. எங்களுடன் தஞ்சாவூருக்கு வந்துவிட்டுப் போகச் சம்மதம் என்றால் சொல், உன்னைக் கட்ட வேண்டிய அவசியமில்லை" என்றார்.
"அதுதான் என் விருப்பம்; சக்கரவர்த்தியை நேரில் பார்த்து, நடந்தது நடந்தபடி சொல்ல விரும்புகிறேன். என் பேரிலும் வீண் பழி ஏற்படக் கூடாதல்லவா?" என்றான் பார்த்திபேந்திரன்.
"அப்படியானால், உடனே புறப்படுவோம்" என்றார் பழுவேட்டரையர்.
அச்சமயம் அவர்கள் இருந்த இடத்துக்குச் சற்றுத் தூரத்திலிருந்த காட்டிலிருந்த ஆந்தை ஒன்று கூவும் சப்தம் கேட்டது.
நந்தினி சப்தம் வந்த திக்கை நோக்கினாள். அதனால் அவள் முகத்தில் ஏற்பட்ட மாறுதலை மற்ற இருவரும் கவனிக்கவில்லை.
"இந்தக் கோடிக்கரைக் காடு மிக விசித்திரமானது. இங்கே பட்டப்பகலிலேயே கோட்டான் கூவுகிறதே!" என்றான் பார்த்திபேந்திரன். இன்னும் இரண்டு தடவை அதே மாதிரி ஆந்தையின் குரல் கேட்டது.
நந்தினி திரும்பிப் பார்த்து, "உடனே புறப்பட வேண்டியது தானா? இன்னும் ஒருநாள் இங்கே இருந்து பார்ப்பது நல்லதல்லவா? இளவரசர் ஏதாவது கட்டையைப் பிடித்துக் கொண்டு கரையில் வந்து ஒதுங்கக் கூடும் அல்லவா?" என்றாள்.
"பார்த்திபேந்திரா! இளையராணியின் மதிநுட்பத்தைப் பார்த்தாயா? நமக்கு இது தோன்றாமல் போயிற்றே? ஆம்; இன்னும் ஒருநாள் இங்கே இருக்க வேண்டியதுதான்; இருப்பது மட்டும் போதாது. கடற்கரை நெடுகிலும் ஆட்களை நிறுத்தி வைக்கவேண்டும்; தேடிப் பார்க்கவும் சொல்ல வேண்டும்!" என்றார் பழுவேட்டரையர்.
"எனக்கு ஆட்சேபமில்லை, ஐயா! ஆனால் இளவரசர் இனி அகப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. சுழற் காற்று அடித்தபோது கடலின் கொந்தளிப்பைப் பார்த்திருந்தால் தாங்களும் என்னைப் போலவே நிராசை கொள்வீர்கள்" என்றான் பார்த்திபேந்திரன்.
எனினும் கிழவர் கேட்கவில்லை. கடற்கரை நெடுகிலும் ஒரு காத தூரத்துக்குத் தம் ஆட்களைப் பரவலாக நிறுத்தி வைத்தார். அவரும் அமைதியின்றிக் கடற்கரை ஓரமாக அலைந்து திரிந்தார்.