←அத்தியாயம் 26: அநிருத்தரின் பிரார்த்தனை

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திகொலை வாள்: குந்தவையின் திகைப்பு

அத்தியாயம் 28: ஒற்றனுக்கு ஒற்றன்→

 

 

 

 

 


429பொன்னியின் செல்வன் — கொலை வாள்: குந்தவையின் திகைப்புகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

கொலை வாள் - அத்தியாயம் 27[தொகு]
குந்தவையின் திகைப்பு


முதன் மந்திரி அநிருத்தர் குந்தவையின் அரண்மனையை அடைந்தார். இளவரசி அவரைப் பார்த்ததும் எழுந்து நின்று நமஸ்கரித்தாள். 
"வீரத்திலும் குணத்திலும் சிறந்த கணவனை அடைந்து நீடுழி வாழ்வாயாக!" என்று முதன் மந்திரி அநிருத்தர் ஆசீர்வதித்தார். 
"ஐயா! இந்தச் சமயத்தில் இத்தகைய ஆசீர்வாதத்தைத் தானா செய்வது?" என்றாள் இளவரசி. 
"ஏதோ இக்கிழவனுக்குத் தெரிந்த ஆசியைக் கூறினேன். வேறு எந்த ஆசியைக் கோருகிறாய், அம்மா?" 
"என் அருமைத் தந்தையின் உடல் நிலையைப்பற்றி எல்லாரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அருள்மொழிவர்மரைப் பற்றி நாடெல்லாம் கவலையில் ஆழ்ந்திருக்கிறது..." 
"ஆனால் உன்னுடைய திரு முகத்தில் அதைப்பற்றிய கவலை எதையும் நான் காணவில்லையே, தாயே!" 
"வீரமறக் குலத்தில் பிறந்தவள் நான். எல்லோரையும் போல் அபாயம் என்றதும் அழுதுகொண்டிருக்கச் சொல்கிறீர்களா?..." 
"ஒரு நாளும் அவ்விதம் சொல்லமாட்டேன். என்னைப் போன்ற வீரமற்ற ஜனங்களுக்கு இளவரசி ஆறுதல் கூறும்படி தான் சொல்லுகிறேன்." 
"ஆச்சாரியரே! தங்களுக்கா நான் ஆறுதல் கூறவேண்டும்? உலகமே புரண்டாலும், நிலை கலங்காத வயிர நெஞ்சம் படைத்தவராயிற்றே தாங்கள்!" 
"அப்படிப்பட்ட என்னையும் கலக்கி விடுகிறாய், அம்மா! அந்தப்புரத்துப் பெண்கள் ஆடல் பாடல்களில் ஆனந்தமாகக் காலங்கழித்து வரவேண்டும் அதைவிட்டு இராஜாங்க விஷயங்களில் நீ தலையிட்டதனால் எத்தகைய விபரீதம் நேர்ந்தது பார்த்தாயா!" 
"ஐயோ! இது என்ன பழி? நான் எந்த இராஜாங்க விஷயத்தில் தலையிட்டேன்? என்னால் என்ன விபரீதம் நடந்தது?" 
"இன்னும் சில காலத்துக்குப் பொன்னியின் செல்வன் இலங்கையிலேயே இருக்கவேண்டும் என்று நான் சொல்லிவிட்டு வந்தேன். அதற்கு விரோதமாக நீ உடனே புறப்பட்டு வரும்படி உன் தம்பிக்கு ஓலை அனுப்பினாய். உன் விருப்பத்துக்கு மாறாக இந்தக் கிழவன் பேச்சை யார் மதிப்பார்கள்? அதனால் நேர்ந்துவிட்ட விபத்தைப் பார்த்தாயா? சோழநாட்டு மக்களின் கண்ணுக்குக் கண்ணான இளவரசரைக் கடல் கொண்டு விட்டது. சற்றுமுன் இந்த அரண்மனை வாசலில் ஜனத்திரள் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததைப் பார்த்தாய். இம்மாதிரி நாடெங்கும் இன்று குழப்பம் நடந்து வருகிறது. இந்த அல்லோலகல்லோலத்துக்குக் காரணம் நீயல்லவா தாயே!" 
"என்னுடைய ஓலையைப் பார்த்துவிட்ட அருள்மொழிவர்மன் இலங்கையிலிருந்து புறப்பட்டான் என்று ஏன் சொல்கிறீர்கள்? பழுவேட்டரையர் இரண்டு கப்பல் நிறைய வீரர்களை அனுப்பி இளவரசனைச் சிறைப் பிடித்துக்கொண்டு வரச்செய்தது உமக்குத் தெரியாதா?" 
"தெரியும் அம்மா! தெரியும்! அத்துடனிருந்தால், இப்பொழுது பொன்னியின் செல்வனுக்கு நேர்ந்துவிட்ட கதிக்குப் பழுவேட்டரையர்களைப் பொறுப்பாளிகளாக்கலாம். அவர்கள் அனுப்பிய கப்பல்கள் இரண்டும் நாசமாகிவிட்டன. உன்னுடைய ஓலைக்காகத்தான் இளவரசன் புறப்பட்டான் என்று அவர்கள் சொன்னால், யார் அதை மறுக்க முடியும்?" 
"ஐயா! நான் ஓலை அனுப்பியது தங்களுக்கு எப்படித் தெரியும்? பழுவேட்டரையர்களுக்கு எப்படித் தெரியும்?" 
"நல்ல கேள்வி கேட்டாய், அம்மா! எங்களுக்கு மட்டுந்தானா தெரியும்? உலகத்துக்கெல்லாம் தெரியும். நீ அனுப்பிய தூதன் இலங்கையில் முதலில் நம் வீரர்களால் சிறைப்படுத்தப்பட்டான். அதனால் இலங்கையில் உள்ளவர்களுக்கெல்லாம் தெரியும். அவனோடு கோடிக்கரை வரை சென்ற வைத்தியர் மகன் மூலமாக இந்த நாட்டில் உள்ளவர்களுக்கெல்லாம் தெரியும். நீ அந்தரங்கமாகச் செய்த காரியம் இவ்வளவு தூரம் அம்பலமாகியிருக்கிறது! ஆகையினாலேதான் ஸ்திரீகள் இராஜாங்கக் காரியங்களில் தலையிடக் கூடாது என்று நம் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்." 
குந்தவை சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றாள். மறுமொழி என்ன சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. முதன்மந்திரி நன்றாகத் தன்னை மடக்கிவிட்டார். அவர் சொல்வதில் உண்மை இருக்கத்தான் இருக்கிறது. இந்த எண்ணம் தோன்றியதும் வாணர்குல வீரன் மீது அவளுக்குக் கோபம் எழுந்தது. வீர சாகஸச் செயல்கள் அவன் செய்யக்கூடியவன்தான். ஆனால் காரியத்தைப் பகிரங்கப்படுத்திக் கெடுத்து விட்டானே? அவனைப் பார்த்து நன்றாகக் கண்டிக்க வேண்டும். இவ்வாறு எண்ணியதும் முதல் மந்திரியின் கட்டளையின்படி அவன் சிறைப்படுத்தப்பட்டது நினைவு வந்தது. என்னவெல்லாம் தொந்தரவுக்கு ஆளாகிக் கொண்டு எனக்கும் தொந்தரவு அளிக்கிறான்! சற்றுநேரம் சும்மா இருந்திருக்கக் கூடாதா? வைத்தியர் மகன் ஏதாவது உளறினால் அதற்காக அவர் பேரில் மேல் மாடத்திலிருந்து பாய்ந்து சண்டை துவக்கியிருக்க வேண்டுமா? 
"ஐயா! ஒரு கோரிக்கை செய்து கொள்கிறேன். பெரிய மனது செய்து நிறைவேற்றித் தரவேண்டும்." 
"தேவி! கட்டளை இடு! இந்த இராஜ்யத்தில் உன்னுடைய வார்த்தைக்கு மறு வார்த்தை ஏது?" 
"தாங்கள் அரண்மனை வாசலுக்கு வரும் சமயத்தில் இரண்டு பேர்சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களைச் சிறைப்படுத்தத் தாங்கள் கட்டளையிட்டீர்கள்." 
"அவர்கள் செய்தது பெருங்குற்றம். அரண்மனையில் மகாராணியின் கண் முன்னால் அவர்கள் சண்டை தொடங்கியது பெரும் பிசகு! அதுவும் எப்பேர்ப்பட்ட சமயத்தில்? பெரும் ஜனக்கூட்டம் கொதிப்புடனிருந்த நேரத்தில்! காரணம் தெரியாத ஜனங்கள் தாங்களும் சண்டையில் கலந்து கொண்டிருந்தால் எத்தகைய விபத்து நேர்ந்திருக்கும்? சிறு நெருப்புப்பொறி பெருங்காட்டையே அழிப்பது போல் நாடு நகரமெல்லாம் கலகமும் குழப்பமும் விளைந்திருக்குமே!" 
"ஆம், ஐயா! அவர்கள் செய்தது பெரும் குற்றம்தான். ஆயினும் அவர்களில் ஒருவனை மன்னித்து விடுதலை செய்யும்படி தங்களை மன்றாடி வேண்டிக் கொள்கிறேன்." 
"இளவரசியின் அருளுக்குப்பாத்திரமான அந்தப் பாக்கியசாலி யார்?" 
"நான் இலங்கைத் தீவுக்கு அனுப்பிய தூதன் அவன்தான்." 
"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று!" 
"எதனால் இவ்வாறு சொல்கிறீர்கள்?" 
"அந்தத் தூதனை நானே சிறைப் படுத்த வேண்டும் என்றிருந்தேன். இங்கே அவனாகவே எளிதில் அகப்பட்டுக் கொண்டான்." 
"எதற்காக? என்ன குற்றத்திற்காக?" 
"தாயே! அவன் பேரில் பயங்கரமான குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது." 
"அது என்ன?" 
"பொன்னியின் செல்வனை அவன்தான் கடலில் தள்ளி மூழ்கடித்து விட்டான் என்று." 
"என்ன நாராசமான வார்த்தைகள்! அப்படிக் குற்றம்சாட்டுவது யார்?" 
"பலரும் அவ்வாறு குற்றம் சாட்டுகிறார்கள். இளவரசரைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு வந்த பார்த்திபேந்திரன் சொல்கிறான்; பழுவேட்டரையர்கள் 'இருக்கலாம்' என்கிறார்கள். நானும் சந்தேகிக்கிறேன்." 
"ஆச்சாரியரே! ஜாக்கிரதை! நான் ஒரு கொலைகாரனைப் பிடித்து அனுப்பி என் தம்பியைக்கொன்று விட்டு வரச் சொன்னதாகவா சந்தேகிக்கிறீர்!" 
"ஒரு நாளும் இல்லை, தாயே! அவனை உனது நம்பிக்கைக்குரிய தூதன் என்று நினைத்துக்கொண்டு நீ அனுப்பினாய். அது தவறாயிருக்கலாம் அல்லவா? அவன் மாற்றார்களின் ஒற்றனாயிருக்கலாம் அல்லவா?" 
"இல்லவே இல்லை, ஆதித்த கரிகாலன் அவனை என்னுடைய உதவிக்கு அனுப்பினான். அவனைப் பூரணமாக நம்பலாம் என்று எழுதி அனுப்பினான்..." 
"ஆதித்த கரிகாலனும் ஏமாந்திருக்கலாம் அல்லவா இளவரசி? வழியில் அவன் மாற்றப்பட்டும் இருக்கலாம் அல்லவா? நான் இங்கே வரும்போது 'ஒற்றன்' என்ற குற்றச்சாட்டு என் காதில் விழுந்தது. மேலே இருந்தவனைப் பார்த்துக் கீழே நின்றவன் குற்றம் சாட்டினான். அது என்ன, அம்மா?" 
"மேலே நின்றவன்தான் என் தமையன் அனுப்பிய தூதன். வாணர் குலத்தில் வந்த வல்லவரையன் வந்தியத்தேவன். கீழே நின்றவர் வைத்தியர் மகன் பினாகபாணி. வந்தியத்தேவனைப் பழுவேட்டரையர்களின் ஒற்றன் என்று வைத்தியர் மகன் குற்றம் சாட்டினான், என்ன அறிவீனம்?" 
"ஏன் இருக்கக் கூடாது, தாயே!" 
"ஒருநாளும் இருக்கமுடியாது, பழுவேட்டரையர் காவலிலிருந்து அவன் தப்பி வந்தவன். அவனைத் திரும்பக் கைப்பற்றப் பழுவேட்டரையர்கள் எத்தனையோ ஆட்களை அனுப்பிப் பிரம்மப் பிரயத்தனம் செய்தார்கள்..." 
"அவனிடம் பழுவூர் முத்திரை மோதிரம் எவ்விதம் வந்தது தாயே?" 
"அந்த வஞ்சக அரக்கி, - மாயமோகினி - விஷ நாகம் - தயவு செய்து மன்னித்துக்கொள்ளுங்கள், - பழுவூர் இளையராணி கொடுத்துத்தான் அவனுக்கு அம்மோதிரம் கிடைத்தது." 
"அது உனக்குத் தெரிந்திருப்பது பற்றிச் சந்தோஷப்படுகிறேன். நான் சொன்னால் நீ நம்பியிருக்கமாட்டாய். அந்த வல்லத்து வீரன் பழுவேட்டரையர்களின் ஒற்றன் அல்ல என்பது சரி. ஆனால் பழுவூர் ராணியின் ஒற்றனாயிருக்கலாம் அல்லவா!" 
"அது எப்படி முடியும்?" 
"எப்படி முடியும் என்று சொல்கிறேன். வந்தியத்தேவன், - நீ இலங்கைக்கு அனுப்பிய அந்தரங்கத்தூதன், - தஞ்சைக் கோட்டைக்கு வெளியில் பழுவூர் ராணியைப் பல்லக்கில் சந்தித்தான். அப்போது முத்திரை மோதிரத்தைப் பெற்றுக் கொண்டான். பிறகு, கோட்டைக்குள் பழுவூர் அரண்மனையின் அந்தப்புரத்தில் அவளைச் சந்தித்தான். அவனைப் பழுவூர் இளைய ராணி பொக்கிஷ நிலவறையில் ஒளித்து வைத்திருந்து வெளியே அனுப்பினாள். உன்னிடம் ஓலை கொண்டு வரப் போகிறான் என்று அவளுக்குத் தெரியும். இலங்கையிலிருந்து அவன் திரும்பி வரும்போது அரிச்சந்திர நதிக்கரையில் பாழடைந்த பாண்டியன் அரண்மனையில் நள்ளிரவில் அவர்கள் இருவரும் சந்தித்துப் பேசினார்கள். அதற்குப் பிறகும் பழுவூர் முத்திரை மோதிரம் வந்தியத்தேவனிடம் இருக்கிறது. இதையெல்லாம் பற்றி நீ என்ன நினைக்கிறாய், அம்மா! உன் தூதனிடம் இன்னமும் பரிபூரண நம்பிக்கை வைத்திருக்கிறாயா?" 
குந்தவையின் உள்ளம் இப்போது உண்மையாகவே குழப்பத்தில் ஆழ்ந்தது.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel