←அத்தியாயம் 34: தீவர்த்தி அணைந்தது!

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திகொலை வாள்: "வேளை நெருங்கிவிட்டது!"

அத்தியாயம் 36: இருளில் ஓர் உருவம்→

 

 

 

 

 


437பொன்னியின் செல்வன் — கொலை வாள்: "வேளை நெருங்கிவிட்டது!"கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

கொலை வாள் - அத்தியாயம் 35[தொகு]
"வேளை நெருங்கிவிட்டது!"


நூறு வருஷங்களுக்கு முன்பு கட்டப்பட்டு இப்போது பாழடைந்த காடு அடர்ந்திருந்த பள்ளிப்படைக் கோவிலை முன்னொரு தடவை நாம் பார்த்திருக்கிறோம். ஆழ்வார்க்கடியான் இங்கே ஒளிந்திருந்துதான் ரவிதாஸன் முதலியவர்களின் சதியைப் பற்றி ஓரளவு தெரிந்து கொண்டான். அதே இடத்துக்கு இப்போது வந்தியத்தேவனும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். 
பாழடைந்த பள்ளிப்படையின் ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக வந்தியத்தேவனையும், அவன் குதிரையையும் அழைத்து வந்தார்கள். 
"அப்பனே! சற்று நீ இங்கேயே இரு! உன்னைக் கூப்பிட வேண்டிய சமயத்தில் கூப்பிடுகிறோம். தப்பித்துச் செல்லலாம் என்று கனவு காணாதே! பழக்கப்பட்டவர்களைத் தவிர, வேறு யாரும் இக்காட்டுக்குள் வரவும் முடியாது; வெளியேறவும் முடியாது; அப்படி வெளியேற முயன்றால், நிச்சயம் உயிரை இழப்பாய்!" என்றான் ரவிதாஸன். 
"அப்படி நான் வழி கண்டுபிடித்துப் போகப் பார்த்தால் நீ மந்திரம் போட்டுக் கொன்று விடுவாய்! இல்லையா, மந்திரவாதி!" என்று கூறி வந்தியத்தேவன் நகைத்தான். 
"சிரி, சிரி! நன்றாய்ச் சிரி!" என்று சொல்லி, ரவிதாஸனும் சிரித்தான். 
அச்சமயம் பார்த்து எங்கேயோ தூரத்தில் நரி ஒன்று ஊளையிடத் தொடங்கியது, அதைக் கேட்டுப் பக்கத்தில் எங்கேயோ கோட்டான் ஒன்று முனகியது. வந்தியத்தேவனுடைய உடல் சிலிர்த்தது, குளிரினால் அல்ல. அடர்ந்த அந்தக் காட்டின் மத்தியில் வாடைக் காற்றுப் பிரவேசிக்கவும் பயந்ததாகக் காணப்பட்டது; ஏன்? அங்கே மழைகூட அவ்வளவாகப் பெய்ததாகத் தெரியவில்லை. தரையில் சில இடங்களில் மட்டும் மழைத்துளிகள் சொட்டி ஈரமாயிருந்தது. காற்று இல்லாதபடியால் இறுக்கமாக இருந்தது. அங்கே வந்து சேர்வதற்குள் வந்தியத்தேவனுடைய அரைத்துணி உலர்ந்து போயிருந்தது. சுற்றிக் கட்டியிருந்த துணிச் சுருள் மட்டும் ஈரமாயிருந்தது அதை எடுத்து விரித்துப் பக்கத்தில் கிடந்த பாறாங்கல்லின் மீது உலர்த்தினான். அதே கல்லின் ஒரு மூலையில் வந்தியத்தேவன் உட்கார்ந்து பள்ளிப்படைச் சுவரின் மீது சாய்ந்து கொண்டான். அவனுக்குக் காவலாக அருகில் ஒருவன் மட்டும் இருந்தான். 
சற்றுத் தூரத்தில் காட்டின் மத்தியில் ஏற்பட்டிருந்த இடைவெளியில் அவனுடன் மற்றவர்கள் வட்ட வடிவமாக உட்கார்ந்தார்கள். பள்ளிப்படைக்கு உள்ளேயிருந்து ஒருவன் பழைய சிம்மாசனம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து போட்டான். அதில், 'சக்கரவர்த்தி' என்று அழைக்கப்பட்ட சிறுவனை உட்காரச் செய்தார்கள். தீவர்த்திகளில் இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை அணைத்து விட்டார்கள். அவ்விதம் தீவர்த்திகளை அணைத்த போது எழுந்த புகை நாலாபுறமும் சூழ்ந்தது. 
"ராணி இன்னும் வரவில்லையே?" என்றான் ஒருவன். 
"சமயம் பார்த்துத் தானே வரவேண்டும்? இரண்டாவது ஜாமத்திலேதான் நானும் வரச் சொல்லியிருக்கிறேன். அதுவரையில் வழுதி குலத்துப் புகழ்மாலையை யாராவது பாடுங்கள்!" என்றான் சோமன் சாம்பவன். 
இடும்பன்காரி உடுக்கு ஒன்றை எடுத்து இலேசாக அதைத் தட்டினான். தேவராளன் ஏதோ ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினான். 
வந்தியத்தேவன் தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்; கேட்டுக் கொண்டுமிருந்தான். 'வழுதிகுலம்' என்பது பாண்டியகுலம் என்று அவன் அறிந்திருக்கிறான். பாடல் ஏதோ ஒரு சோகப் பிரலாபமாக அவன் காதில் தொனித்து. உடுக்கின் நாதமும், சோகப் பாடலின் இசையும் அவன் உள்ளத்தில் ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. பாடலில் சிற்சில வார்த்தைகள் அவன் காதில் விழுந்தன. அவற்றிலிருந்து அந்த இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் நடந்த மாபெரும் போரைப் பற்றிய வரலாறு அவன் நினைவுக்கு வந்தது. 
ஆம்; அங்கேதான் வரகுண பாண்டியனுக்கும், அபராஜித பல்லவனுக்கும் மூன்று நாட்கள் கொடிய யுத்தம் நடந்தது. பல்லவனுக்குத் துணையாகக் கங்க மன்னன் பிருதிவீபதி வந்தான். அப்போரில் மாண்ட லட்சக்கணக்கான வீரர்களைப் போல் அம்மகாவீரனும் இறந்து விழுந்தான். அவனுடைய ஞாபகமாகக் கட்டிய பள்ளிப்படைக் கோவில்தான் இப்போது சதிகாரர்கள் கூடும் இடமாக அமைந்திருக்கிறது. 
கங்க மன்னன் இறந்ததும், பல்லவர் படைகள் சிதறி ஓடத் தொடங்கின. பாண்டிய சைன்யத்தின் வெற்றி நிச்சயம் என்று தோன்றியது. இச்சமயத்தில் சோழர் படைகள் பல்லவர்களின் உதவிக்கு வந்தன. அப்படைக்கு தலைமை வகித்துத் திருமேனியில் தொண்ணூற்றாறு புண் சுமந்த விஜயாலய சோழன் வந்தான். இரண்டு கால்களையும் முன்னமே இழந்திருந்த அவ்வீரப் பெருங்கிழவனை நாலு பேர் தூக்கிக் கொண்டு வந்தார்கள். இரண்டு கைகளிலும் இரண்டு நெடிய வாள்களை ஏந்திக் கொண்டு அவன் பாண்டியர் சைன்யத்தில் புகுந்தான். இரண்டு வாள்களையும் சக்கராகாரமாகச் சுழற்றிக் கொண்டே போனான். அவன் சென்ற இடங்களிலெல்லாம் இருபுறமும் பாண்டிய வீரர்களின் உயிரற்ற உடல்கள் மலைமலையாகக் குவிந்தன. 
சிதறி ஓடிய பல்லவ சேனா வீரர்கள் திரும்பி வரத் தொடங்கினார்கள். ஜண ஜண ஜண ஜணார்! - பதினாயிரம் வாள்கள் மாலைச் சூரியனின் மஞ்சள் வெய்யிலில் மின்னிக் கொண்டு வந்தன! டண டண டண டணார்- பதினாயிரம் வேல்கள் இன்னொரு பக்கமிருந்து ஒளி வீசிப் பாய்ந்து வந்தன! வாள்களும் வேல்களும் மோதின! ஆயிரம் பதினாயிரம் தலைகள் நாலாபுறமும் உருண்டன. ஆயிரம் பதினாயிரம் உயிரற்ற உடல்கள் விழுந்தன! ஈ ஈ ஈ ஈ!- குதிரைகள் கனைத்துக் கொண்டே செத்து விழுந்தன! ப்ளீ ளீ ளீ ளீ!- யானைகள் பிளிறிக் கொண்டே மாண்டு விழுந்தன! இரத்த வெள்ளத்தில் செத்த மனிதர்கள் - மிருகங்கள் உடல்கள் மிதந்தன. இருபதினாயிரம் கொட்டைப் பருந்துகள் வட்டமிட்டுப் பறந்து வானத்தை மூடி மறைத்தன! முப்பதினாயிரம் நரிகள் ஊளையிட்டுக் கொண்டு ஓடிவந்து போர்க்களத்தைச் சூழ்ந்து கொண்டன! "ஐயோ! ஓ ஓ ஓ!" என்ற ஐம்பதினாயிரம் ஓலக் குரல்கள் ஒன்றாய்ச் சேர்ந்து எழுந்தன! "விடாதே! பிடி! துரத்து! வெட்டு! குத்து!" இவ்விதம் நூறு ஆயிரம் குரல்கள் முழங்கின. பதினாயிரம் ஜயபேரிகைகள் "அதம்! அதம்! அதம்!..." என்று சப்தித்தன. இருபதினாயிரம் வெற்றிச் சங்கங்கள் "பூம்! பூம்! பூம்!" என்று ஒலித்தன. "ஹா! ஹா! ஹா! ஹா!" என்று அறுபதினாயிரம் பேய்கள் சிரித்தன. 
வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நாலாபுறமும் பார்த்து விழித்தான். பள்ளிப்படைச் சுவரில் சாய்ந்தபடியே சிறிது நேரம் தான் கண்ணயர்ந்துவிட்டதாக அறிந்து கொண்டான். அந்த அரைத்தூக்கத்தில் கண்ட பயங்கரமான கனவை மறுபடி நினைத்துப் பார்த்தான். கனவுதானா அது! இல்லை! உடுக்கின் முழக்கத்துக்கு இணங்கத் தேவராளன் பாடிய பாடலில் போர்க்களத்தைப் பற்றிச் செய்த வர்ணனை தான் அப்படி அவன் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும். 
அச்சமயம் தேவராளன் பாண்டியர் படைக்கு முன்னால் பல்லவரும், கங்கரும் தோற்று ஓடியதைப் பற்றிப் பாடிக் கொண்டிருந்தான். அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரித்த களிச் சிரிப்புத்தான் அப்படி அநேகாயிரம் பேய்களின் சிரிப்பைப் போல் ஒலித்து, வந்தியத்தேவனைத் திடுக்கிட்டுக் கண் விழிக்கச் செய்திருக்க வேண்டும். உடுக்கு முழக்கம் திடீர் என்று நின்றது. தேவராளனும் பாட்டை உடனே நிறுத்தினான். 
சற்றுத் தூரத்தில் ஒரு தீவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. அது நெருங்கி நெருங்கி வந்தது. தீவர்த்தி வெளிச்சத்தைத் தொடர்ந்து ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கைச் சுமந்து வந்தவர்கள் அதைக் கீழே இறக்கி வைத்தார்கள். பல்லக்கின் திரைகள் விலகின. உள்ளேயிருந்து ஒரு ஸ்திரீ வெளியில் வந்தாள். ஆம்; அவள் பழுவூர் ராணி நந்தினிதான். ஆனால் முன் தடவைகளில் வந்தியத்தேவன் பார்த்தபோது அவள் சர்வாலங்கார பூஷிதையான மோகினியாக விளங்கினாள். இப்போது தலைவிரி கோலமான உக்கிரதுர்க்கா தேவியாகக் காட்சி தந்தாள். அவளை இந்தத் தோற்றத்தில் பார்த்த வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஒரு திகில் தோன்றியது; அவன் உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது. 
நந்தினி பல்லக்கிலிருந்து இறங்கியதும் சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவனைப் பார்த்தாள். அவனையே பார்த்த வண்ணம் நடந்து வந்தாள். சிறுவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
சிறுவனைப் பாழும் மண்டபத்துக்குத் தேடி ஓடி வந்த ஸ்திரீ - அவனால் "அம்மா" என்று அழைக்கப் பட்டவள், சிம்மாசனத்துக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தாள். நந்தினி சிறுவன் அருகில் வந்ததும் தன் இருகரங்களையும் நீட்டினாள். சிறுவன் அவளையும் தனக்குப் பின்னால் நின்ற ஸ்திரீயையும் மாறி மாறிப் பார்த்தான். 
"நீ தானே என் அம்மா? இவள் இல்லையே" என்று கேட்டான். 
"ஆம், கண்மணி!" 
"இவள் ஏன் என்னுடைய அம்மா என்று சொல்லிக் கொள்கிறாள்?" 
"அவள் உன்னை வளர்த்த தாய்!" 
"நீ ஏன் என்னை வளர்க்கவில்லை? ஏன் உன்னுடன் என்னை வைத்துக் கொள்ளவில்லை? இவள் எதற்காக என்னை எங்கேயோ மலைக் குகையில் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்?" 
"கண்மணி! உன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகத்தான். உன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிக்குப் பழி வாங்குவதற்காகத்தான்!" 
"ஆமாம்; அது எனக்குத் தெரியும்!" என்று சிறுவன் எழுந்து நந்தினியை அணுகினான். 
நந்தினி அவனைத் தன் இரு கரங்களாலும் அணைத்துக் கொண்டாள், உச்சி முகந்தாள். சிறுவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கட்டிக் கொண்டான். மறுபடியும் அவள் தன்னைவிட்டுப் போகாமலிருக்கும் பொருட்டு அவன் அப்படிப் பிடித்துக் கொண்டான் போலும்! 
ஆயினும் இந்தக் காட்சி நீடித்திருக்கவில்லை. அவனுடைய பிஞ்சுக்கரங்களை நந்தினி பலவந்தமாக எடுத்துத் தன்னை விடுவித்துக் கொண்டாள். சிறுவனைச் சிம்மாசனத்தில் உட்கார வைத்தாள். மீண்டும் பல்லக்கின் அருகில் சென்றாள். அதனுள்ளிருந்து நாம் முன்பார்த்திருக்கும் வாளை எடுத்துக் கொண்டாள். பல்லக்குத் தூக்கி வந்தவர்களைப் பார்த்து ஏதோ சமிக்ஞை செய்தாள். அவர்கள் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு சற்றுத் தூரத்தில் போய் மறைவாக உட்கார்ந்து கொண்டார்கள். 
நந்தினி மீண்டும் சிம்மாசனத்தின் அருகில் வந்தாள். கத்தியை அச்சிம்மாசனத்தின் மீது குறுக்காக வைத்தாள். சிறுவன் அதை அடங்கா ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே, "நான் இதைக் கையில் எடுக்கலாமா?" என்று கேட்டான். 
"சற்றுப் பொறு, என் கண்மணி!" என்றாள் நந்தினி. பிறகு, ரவிதாஸன் முதலியவர்களையும் வரிசைக் கிரமமாக உற்றுப் பார்த்தாள். "சபதம் எடுத்துக் கொண்டவர்களைத் தவிர இங்கு வேறு யாரும் இல்லையே?" என்று கேட்டாள். 
"இல்லை, தேவி!" என்றான் சோமன் சாம்பவன். 
ரவிதாஸனைப் பார்த்து நந்தினி "சேநாதிபதி!..." என்று ஆரம்பித்தாள். ரவிதாஸன் சிரித்தான். 
"இன்றைக்கு உமக்குச் சிரிப்பாயிருக்கிறது. அடுத்தமாதம் இந்த நாளில் எப்படியிருக்குமோ, யார் கண்டது!" 
"தேவி! அந்த நல்ல நாள் எப்போது வரப்போகிறது என்று எத்தனையோ காலமாக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்." 
"ஐயா! நாமோ ஒரு சிலர். நம் சக்கரவர்த்தி சின்னஞ்சிறு குழந்தை. சோழ ராஜ்யம் மகத்தானது, சோழர்களின் சேனாபலம் அளவற்றது. நாம் அவசரப் பட்டிருந்தோமானால் அடியோடு காரியம் கெட்டுப் போயிருக்கும். பொறுமையாக இருந்ததினால் இப்போது காரிய சித்தி அடையும் வேளை நெருங்கியிருக்கிறது. ரவிதாஸரே! நீர் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா; இங்குள்ள வேறு யாரேனும் ஏதாவது சொல்ல வேண்டியிருக்கிறதா!" 
ரவிதாஸன் அங்கே இருந்தவர்களின் முகங்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வந்தான். அனைவரும் மௌனவிரதம் கொண்டவர்களாய்க் காணப்பட்டார்கள். 
"தேவி! நாங்கள் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை. தாங்கள்தான் சொல்ல வேண்டும். சபதம் நிறைவேறும் வேளை நெருங்கி விட்டது என்றீர்கள். எங்கே, எப்படி, யார் மூலமாக நிறைவேறப் போகிறது என்று சொல்லி அருள வேண்டும்" என்றான். 
"ஆகட்டும்; அதைச் சொல்வதற்காகவே இங்கு வந்தேன். அதற்காகவே உங்கள் எல்லாரையும் இங்கே தவறாமல் வரச் சொன்னேன். நம்முடைய சக்கரவர்த்தியையும் அழைத்து வரச் செய்தேன்" என்றாள் நந்தினி. 
சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிறுவன் உள்பட அனைவரும் நந்தினியின் முகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவள் மேலும் கூறினாள்: 
"உங்களில் சிலர் அவசரப்பட்டீர்கள். நாம் எடுத்துக் கொண்ட சபதத்தை மறந்துவிட்டேனோ என்றும் சிலர் சந்தேகப் பட்டீர்கள். அந்தச் சந்தேகம் அடாதது. மறவாமல் நினைவு வைத்துக் கொள்ள, உங்கள் எல்லோரைக் காட்டிலும் எனக்குத் தான் காரணம் அதிகம் உண்டு. இல்லை; நான் மறக்கவில்லை. சென்ற மூன்று ஆண்டுகளாக அல்லும் பகலும் அனவரதமும் நான் வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததில்லை. நாம் எடுத்துக்கொண்ட சபதத்தின்படி பழி வாங்குவதற்குச் சமய சந்தர்ப்பங்களையும், தந்திர உபாயங்களையும் தவிர வேறு எதையும் பற்றி நான் எண்ணியதில்லை. எங்கே சென்றாலும், என்ன காரியம் செய்தாலும், யாரிடம் பேசினாலும் நமது நோக்கம் நிறைவேறுவதற்கு அதனால் உபயோகம் உண்டா என்பதைத் தவிர வேறு நினைவு எனக்கில்லை. சமய சந்தர்ப்பங்கள் இப்போது கூடியிருக்கின்றன. சோழ நாட்டுச் சிற்றரசர்களும் பெருந்தர அதிகாரிகளும் இரு பிரிவாகப் பிரிந்திருக்கிறார்கள். பழுவேட்டரையர், சம்புவரையர் முதலானோர் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட முடிவு செய்து விட்டார்கள். கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரியும், திருக்கோவலூர் மலையமானும் அதற்கு விரோதமாயிருக்கிறார்கள். பூதி விக்கிரமகேசரி தென் திசைச் சைன்யத்துடன் தஞ்சை நோக்கி வருவதாகக் கேள்விப்படுகிறேன். திருக்கோவலூர் மலையமான் படை திரட்டி வருவதாகவும் அறிகிறேன். இருதரப்பாருக்கும் எந்த நிமிஷமும் யுத்தம் மூளலாம். 
"தேவி! அப்படி யுத்தம் மூளாதிருப்பதற்குத் தாங்கள் பெரு முயற்சி செய்து வருவதாகக் கேள்வியுறுகிறோம். கடம்பூர் சம்புவரையன் மாளிகையில் சமரசப் பேச்சு நடக்கப் போவதாக அறிகிறோம்." 
"ஆமாம்; அந்த ஏற்பாடு செய்திருப்பது நானேதான். ஆனால் என்ன காரணத்திற்காக வென்று உங்களால் ஊகிக்க முடியவில்லையா?" 
"முடியவில்லை. ராணி! ஒரு பெண் உள்ளத்தின் ஆழத்தைக் கண்டுபிடிக்க சர்வேசுவரனால் கூட முடியாது என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். எங்களால் எப்படி முடியும்?" 
"அது உங்களால் முடியாத காரியந்தான். நான் சொல்கிறேன், தெரிந்து கொள்ளுங்கள். நம்முடைய சபதம் நிறைவேறுவதற்கு முன்னால் சோழ ராஜ்யத்தில் இந்த உள்நாட்டுச் சண்டை மூண்டால், அதன் விளைவு என்ன ஆகும் என்று சொல்ல முடியாது சுந்தர சோழன் இன்னும் உயிரோடிருக்கிறான்; அன்பில் பிரம்மராயன் ஒருவனும் இருக்கிறான்; இவர்கள் தலையிட்டு இருகட்சிக்காரர்களையும் அடக்கி விடுவார்கள். அல்லது ஒரு கட்சி தோற்று, இன்னொரு கட்சி வலுத்துவிட்டாலும் நமது நோக்கம் நிறைவேறுவது அசாத்தியமாகிவிடும். அதற்காகவே இந்தச் சமாதானப் பேச்சை இப்போது தொடங்கியிருக்கிறேன். சண்டை உண்மையாக மூளுவதற்குள்ளே நம் நோக்கத்தை நிறைவேற்றிவிட வேண்டும். அப்படி நிறைவேற்றிய பிறகு சோழ ராஜ்யத்துச் சிற்றரசர்களுக்குள் மூளும் சண்டைக்கு முடிவேயிராது. ஒரு கட்சியாரும் சர்வநாசம் அடையும் வரையில் சண்டை நடந்து கொண்டேயிருக்கும். இப்போது தெரிகிறதா...சமாதானப் பேச்சு தொடங்கியதன் காரணம்?" 
இதைக் கேட்டதும் அங்கே சூழ்ந்து நின்றவர்கள் எல்லாருடைய முகங்களிலும் வியப்புக்கும், உற்சாகத்துக்கும் அறிகுறிகள் காணப்பட்டன. பழுவூர் இளைய ராணியின் மதிநுட்பத்தை வியந்து அவர்கள் ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக் கொண்டார்கள். ரவிதாஸனுக்கும் ஆச்சரியப்படாமலிருக்க முடியவில்லை. 
"தேவி! தங்களுடைய அபூர்வமான முன் யோசனைத் திறனை வியக்கிறோம். சமாதானப் பேச்சின் கருத்தை அறிந்து கொண்டோ ம். ஆனால் சபதம் நிறைவேறும் நாள் நெருங்கி விட்டது என்கிறீர்கள். அதை நடத்துவது யார்? எப்படி? எப்போது?" என்றான். 
"அதற்கும் சேர்த்துத்தான் இந்த யுக்தி செய்திருக்கிறேன். சமாதானப் பேச்சு என்ற வியாஜத்தின் பேரில் நமது முதற் பகைவனைக் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வரும்படி அழைப்பு அனுப்பியிருக்கிறது; அவன் அங்கே கட்டாயம் வந்து சேருவான். நம்முடைய சபதத்தை அங்கேதான் நிறைவேற்றியாக வேண்டும். வீரபாண்டிய சக்கரவர்த்தியின் ஆபத்துதவிகளே! உங்களுடைய பழி தீரும் வேளை நெருங்கி விட்டது. இன்றைக்கு சனிக்கிழமையல்லவா? அடுத்த சனிக் கிழமைக்குள் நம்முடைய சபதம் நிறைவேறிவிடும்!..." 
அங்கே இருந்த இருபது பேர்களும் ஏக காலத்தில் 'ஆஹா' காரம் செய்தார்கள். சிலர் துள்ளிக் குதித்தார்கள். உடுக்கு வைத்திருந்தவன் உற்சாக மிகுதியினால் அதை இரண்டு தடவை தட்டினான். மரக்கிளைகளில் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தைகள் விழித்து உறுமிக்கொண்டு வேறு கிளைகளுக்குத் தாவின. வௌவால்கள் சடசடவென்று சிறகுகளை அடித்துக் கொண்டு ஓடின. வந்தியத்தேவனுடைய குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது. 
வந்தியத்தேவனும் நிமிர்ந்து பார்த்தான். நந்தினி தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ பரபரப்புத் தரும் விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாள் என்பது மட்டுந்தான் தெரிந்தது. அவளுடைய பேச்சு ஒன்றும் அவன் காதில் விழவில்லை. ரவிதாஸன் மற்றவர்களுடைய உற்சாகத்தைக் கையமர்த்தி அடக்கினான். 
"தேவி! தங்களுடைய கடைசி வார்த்தை எங்களுக்கு அளவிலாத குதூகலத்தை அளித்திருக்கிறது. நமது முதற்பகைவனைக் கொன்று பழி முடிக்கும் காலம் இவ்வளவு அண்மையில் வந்திருப்பதை எண்ணிக் களிக்கிறோம்! ஆனால், பழிமுடிக்கும் பாக்கியம் யாருக்கு?" என்று கேட்டான். 
"அதற்கு நமக்குள் போட்டி ஏற்படுவது இயற்கைதான். அதை யாருக்கும் மனத்தாங்கல் இல்லாத முறையில் முடிவு செய்வதற்காகவே வீரபாண்டியரின் திருக்குமாரச் சக்கரவர்த்தியை இங்கு அழைத்து வரச் செய்தேன். வீரபாண்டியரின் கத்தியும் இதோ இருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறு குழந்தை தந்தையின் கத்தியைத் தொட்டு நம்மில் எவர் கையில் கொடுக்கிறதோ, அவர் பழி முடிக்க வேண்டும். மற்றவர்கள் அக்கம் பக்கத்தில் உதவிக்குச் சித்தமாக நிற்க வேண்டும். ஏற்றுக்கொண்டவர் தவறிவிட்டால் மற்றவர்கள் முன் வந்து முடிக்கவேண்டும். கடம்பூர் மாளிகைக்குள்ளேயே நான் இருப்பேன். இடும்பன்காரி கோட்டைக் காவலர்களில் ஒருவனாக இருப்பான். பழிமுடிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர் மாளிகைக்குள் பிரவேசிப்பதற்கு நாங்கள் உதவி செய்வோம். இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் சம்மதந்தானே?" 
ஆபத்துதவிகள் ஒருவரையொருவர் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டார்கள். எல்லோருக்கும் அந்த ஏற்பாடு சம்மதமாகவே தோன்றியது. 
ரவிதாஸன் கூறினான்:"தாங்கள் சொன்னது சரியான ஏற்பாடுதான். அதற்கு நாங்கள் எல்லோரும் சம்மதிக்கிறோம். ஆனால் இன்னும் ஒரு விஷயம். பழிமுடிக்கும் பொறுப்பு யாருக்குக் கிடைக்கிறதோ, அவர் சொல்கிறபடி மற்றவர்கள் கண்டிப்பாகக் கேட்கிறதென்று வைத்துக் கொள்ள வேண்டும். சக்கரவர்த்திக்குப் பிராயம் வருகிறவரையில் பழி முடித்தவன் இட்டதே சட்டமென்று மற்ற அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்." 
இதைக் கேட்ட நந்தினியின் முகத்தில் புன்னகை அரும்பியது. 
"என்னையும் உட்படுத்திதானே சொல்கிறீர்?" என்று கேட்டாள். 
"ஆம் தேவி! விதிவிலக்குச் செய்யமுடியாது!" என்றான் ரவிதாஸன். 
"சந்தோஷம், இப்போது ரவிதாஸன் கூறியதும் உங்கள் எல்லோருக்கும் சம்மதந்தானே!" என்று நந்தினி மற்றவர்களை நோக்கி வினவினாள். 
எல்லாரும் ஒருவரையொருவர் பார்த்தார்கள்; மறுமொழி சொல்வதற்குத் தயங்கினார்கள். சிலருக்கு அந்த ஏற்பாடு சம்மதமில்லையென்று தோன்றியது. 
சோமன் சாம்பவன், "அது எப்படி நியாயமாகும்? நமக்கு எல்லா உதவியும் அளித்துவரும் தேவியை எப்படிப் பொது விதிக்கு உட்படுத்த முடியும்?" என்று கேட்டான். 
"என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். நான் உயிர் வாழ்ந்திருப்பதே வீரபாண்டிய சக்கரவர்த்தியின் கொடூரக் கொலைக்குப் பழி வாங்குவதற்காகத்தான். அந்தப் பழியை முடித்துக் கொடுக்கிறவர் யாராயிருந்தாலும், அவருக்கு நான் என்றென்றும் அடிமையாக இருக்கச் சித்தம்!" என்றாள் நந்தினி. 
பின்னர், இந்தப் பேச்சுக்களையெல்லாம் புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த சிறுவனை நந்தினி தேவி பார்த்து "என் கண்மணி! இந்த வீரவாள் உன் தந்தையினுடையது. இதை உன் பிஞ்சுக் கையினால் எடுத்து இங்கே உள்ளவர்களில் உனக்கு யாரை அதிகமாய்ப் பிடித்திருக்கிறதோ, அவர்களிடம் கொடு!" என்றாள். 
ரவிதாஸன் சற்று அருகில் வந்து "சக்கரவர்த்தி, எங்களையெல்லாம் நன்றாய்ப் பாருங்கள்! எங்களில் யார் வீரன் என்றும் தைரியசாலி என்றும் தங்களுக்குத் தோன்றுகிறதோ, அவனிடம் இந்தப் பாண்டிய குலத்து வீரவாளைத் தொட்டுக் கொடுங்கள்!" என்றான். 
சிம்மாசனத்தில் வீற்றிருந்த சிசு சக்கரவர்த்தி சுற்று முற்றும் பார்த்தார். எல்லாரும் அடங்காத ஆவலுடனும் பரபரப்புடனும் சக்கரவர்த்தியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவருடைய கண்களும் "என்னிடம் கொடுங்கள்! என்னிடம் கொடுங்கள்!" என்று கெஞ்சும் பாவத்தைக் காட்டின. 
ரவிதாஸனுடைய முகமும் கண்களும் மட்டும் "என்னிடம் கொடுங்கள்!" என்று அதிகாரபூர்வமாகப் பயமுறுத்திக் கட்டளையிட்டன.
சிறுவன் இரண்டு மூன்று தடவை எல்லாரையும் திருப்பித் திருப்பிப் பார்த்த பின்னர், கத்தியைக் கையில் எடுத்தான். அதைத் தூக்க முடியாமல் தூக்கினான். 
அனைவருடைய பரபரப்பும் சிகரத்தை அடைந்தது. சிறுவன் பளிச்சென்றும் நந்தினி நின்ற பக்கம் திரும்பினான். "அம்மா! எனக்கு உன்னைத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிகமாகப் பிடித்திருக்கிறது. நான் பெரியவனாகும் வரையில் நீதான் எனக்காக இராஜ்யத்தை ஆளவேண்டும்" என்று சொல்லிக் கொண்டே வாளை அவளிடம் கொடுத்தான்.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel