←அத்தியாயம் 9: நாய் குரைத்தது!
பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திமணிமகுடம்: மனித வேட்டை
அத்தியாயம் 11: தோழனா? துரோகியா?→
458பொன்னியின் செல்வன் — மணிமகுடம்: மனித வேட்டைகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
மணிமகுடம் - அத்தியாயம் 10[தொகு]
மனித வேட்டை
வந்தியத்தேவன் நாயின் வாயில் அகப்படாமல் தரையில் குதிக்கப் பார்ப்பதா, அல்லது மறுபடியும் மதிள் சுவரின் மேல் ஏறுவதா என்று தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். அதே சமயத்தில் பக்கத்திலிருந்த மரங்களின் மறைவில் யாராவது ஒளிந்திருக்கிறார்களா என்றும் கூர்மையாகக் கவனித்தான். ஒரு மரத்தின் மறைவில் வெள்ளைத் துணி தெரிவது போலிருந்தது. சற்று முன் நாயின் குரைப்புச் சத்தத்தோடு மனிதனின் சிரிப்புக் குரல் கலந்து கேட்டது நினைவுக்கு வந்தது. மனிதர் யாராவது உண்மையில் மறைந்திருந்தால்? ஒரு மனிதனோ? பல மனிதர்களோ? அதைத் தெரிந்து கொள்ளாமல் குதிப்பது பெருந்தவறாக முடியும். நாயின் வாயிலிருந்து தப்பினாலும் மனிதர்களின் கையில் அகப்படும்படி நேரிடலாம். அரண்மனையின் மேல் மாடத்திலிருந்து பார்க்கும் போது ஆழ்வார்க்கடியானுடைய முகம் மதிள் சுவர் மேல் தெரிவது போலத் தோன்றியது. அந்த வைஷ்ணவன்தான் ஐயனார் கோவிலில் காத்துக் காத்துப் பார்த்து அலுத்துப் போய் இங்கு வந்து நாயை ஏவிவிட்டு வேடிக்கை செய்கிறானா, என்ன? எல்லாவற்றுக்கும் கூப்பிட்டுப் பார்த்தால் போகிறது, "வைஷ்ணவரே! வைஷ்ணவரே! இது என்ன வேடிக்கை?" என்றான். மறுபடியும் ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது; அது ஆழ்வார்க்கடியான் குரல் அல்ல. ஆகையால் திரும்ப மதிள் மேல் ஏறி அரண்மனைக்குள் இறங்குவதுதான் சரி. பெரிய பழுவேட்டரையரின் வரவேற்பு தடபுடல்களில் எப்படியாவது தப்பித்துக் கொள்ளலாம் அல்லது சுரங்கவழி இருக்கவே இருக்கிறது. மணிமேகலையிடம் மீண்டும் கொஞ்சம் கெஞ்சு மணியம் செய்தாற் போகிறது. இல்லாவிடில் பழுவூர் இளைய ராணியின் தயவையே சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான். இதுவரை தன்னைக் காட்டிக் கொடுக்காதவள் இப்போது மட்டும் காட்டிக் கொடுத்து விடுவாளா?...
வந்தியத்தேவன் இறங்கிய வழியில் மறுபடி மேலே ஏறத் தொடங்கினான். நாய் இன்னும் உயரமாக எழும்பிக் குதித்துக் குரைத்தது. மீண்டும் சிரிப்புச் சத்தம் கேட்டது. மரத்தின் மறைவிலிருந்து ஒரு உருவம் வெளியே வந்தது அதன் கையில் ஒரு வேல் இருந்தது. அவன் தேவராளான் என்பதை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். தேவராளான் வந்தியத்தேவன் சுவரில் தொங்கிய இடத்திற்கு அருகில் வந்தான்.
"அப்பனே! உன் உயிர் வெகு கெட்டி!" என்றான்.
"அதுதான் தெரிந்திருக்கிறதே! ஏன் மறுபடியும் என்னிடம் வருகிறாய்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"இந்தத் தடவை நீ தப்ப முடியாது!" என்று கூறித் தேவராளன் தன் கையிலிருந்த வேலை வந்தியத்தேவனை நோக்கிக் குறி பார்த்தான்.
வந்தியத்தேவன் தன்னுடைய ஆபத்தான நிலையை உணர்ந்து கொண்டான். பாதிச் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பவன் கீழேயிருந்து வேலினால் குத்தப் பார்ப்பவனுடன் எப்படிச் சண்டையிட முடியும்? குதித்துத் தப்பப் பார்க்கலாம் என்றால், வேட்டை நாய் ஒன்று மேலே பாயக் காத்துக் கொண்டிருக்கிறது.
"தேவராளா, ஜாக்கிரதை! உங்கள் எஜமானி பழுவூர் ராணியின் கட்டளையை ஞாபகப்படுத்திக் கொள்! என்னை ஒன்றும் செய்யவேண்டாம் என்று உங்களுக்கு ராணி சொல்லி இருக்கவில்லையா!"
தேவராளன் ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்துவிட்டு, "பழுவூர் ராணி என் எஜமானி அல்ல! எந்த ஊர் ராணியும் என் எஜமானி அல்ல. பத்திரகாளி துர்க்கா பரமேசுவரிதான் என்னுடைய எஜமானி!" என்றான்.
"என் குலதெய்வமும் துர்க்காபரமேசுவரிதான்! அவளுடைய அருளினால்தான் நடுக்கடலில் எரிகிற கப்பலிலிருந்து தப்பித்து வந்தேன். என்னைத் தொட்டாயானால் துர்க்கை உன்னை அதம் செய்து விடுவாள்!" என்றான் வந்தியத்தேவன்.
"நீ துர்க்கையின் பக்தன் என்பது உண்மையானால், இப்பொழுது எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். அப்போதுதான் உன்னைக் கொல்லாமல் விடுவேன்!" என்றான் தேவராளன்.
"என்ன செய்ய வேண்டும்? முதலில் உன்னுடைய நாயை அப்பால் போகச் சொல்லு!"
"இந்தப் பக்கம் ஒரு வீர வைஷ்ணவன் வந்தான். அவனைத் தேடிப் பிடிப்பதற்கு நீ ஒத்தாசை செய்தால் உன்னைச் சும்மா விட்டு விடுகிறேன்."
"எதற்காக அவனைப் பிடிக்க வேண்டும்?" என்றான் வந்தியத்தேவன்.
"துர்க்காதேவிக்கு ஒரு வீர வைஷ்ணவனைப் பலி கொடுப்பதாக நான் சபதம் செய்திருக்கிறேன் அதற்காகத்தான்!" என்றான் தேவராளன்.
இந்தச் சமயத்தில் வந்தியத்தேவன் மதிள் சுவரில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த சிறிய செடி வேரோடு பெயர்ந்து வர ஆரம்பித்தது. வேலின் முனையில் சிக்காமல் எப்படி தேவராளன் கழுத்தின் மேல் குதிப்பது என்று வந்தியத்தேவன் யோசித்துக் கொண்டே "அந்த வீர வைஷ்ணவன் என் அருமைச் சிநேகிதன். அவனுக்கு ஒரு போதும் நான் துரோகம் செய்யமாட்டேன். அவனுக்குப் பதிலாக என்னையே பலி கொடுத்து விடு!" என்றான்.
"அப்படியானால் இந்த வேலுக்கு இப்போதே இரையாகி விடு!" என்று தேவராளன் வேலைத் தூக்கி வந்தியத்தேவன் மீது குறி பார்த்தான்.
வந்தியத்தேவன் செடியை விட்டு விட்டு வேலின் முனைக்கு அடியில் அதைத் தாவிப் பிடித்துக் கொண்டு கீழே குதித்தான். குதித்த வேகத்தில் தரையில் மல்லாந்து விழுந்தான். தேவராளன் அந்த அதிர்ச்சியைச் சமாளித்துக் கொண்டு வேலைத் தூக்கினான். அந்தச் சமயத்தில் பின்னாலிருந்து ஓர் உருவம் ஓடிவந்து தன் கையிலிருந்த தடியினால் தேவராளன் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டது. தேவராளன் வந்தியத்தேவன் பேரில் பொத்தென்று விழுந்தான்.
நாய் தன் எஜமானைத் தாக்கியவன் பேரில் பாய்ந்தது. ஆழ்வார்க்கடியான் அதற்கும் சித்தமாயிருந்தான். தன்னுடைய மேல் துணியை விரித்து நாயின் தலை மீது போட்டான். நாய் சில வினாடி நேரத்துக்குக் கண் தெரியாத குருடாயிருந்தது. அச்சமயம் சுருக்குப் போட்டுத் தயாராக வைத்திருந்த காட்டுக் கொடியை அதன் கழுத்தில் எறிந்து வைஷ்ணவன் நாயை ஒரு மரத்தோடு சேர்த்துப் பலமாகக் கட்டினான். இதற்குள் வந்தியத்தேவன் தேவராளனைத் தன் மேலிருந்து தூக்கித் தள்ளிவிட்டு எழுந்தான். தேவராளன் வைஷ்ணவனுடைய ஒரே அடியில் நினைவு இழந்து மூர்ச்சையாகிக் கிடந்தான். இருவரும் இன்னும் சில காட்டுக் கொடிகளைப் பிடுங்கி அவனுடைய கால்களையும் கைகளையும் கட்டிப் போட்டார்கள். பிறகு வந்தியத்தேவன் வேலையும், ஆழ்வார்க்கடியான் கைத் தடியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.
சம்புவரையர் மாளிகையின் வாசற் பக்கத்தைத் தவிர மற்ற மூன்று பக்கங்களிலும் நெடுந் தூரத்துக்குக் காடு மண்டிக் கிடந்தது. அதற்குள்ளே புகுந்து விட்டால் வெளியில் வருவது கஷ்டம். ஆகையால் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் மதிள் சுவர் ஓரமாகவே விரைந்து சென்றார்கள்.
விரைந்து நடக்கும்போதே ஆழ்வார்க்கடியான் "நீ புத்திசாலி என்று நினைத்தேன். நான் நினைத்தது தவறு என்று இப்போதே தெரிந்தது" என்றான்.
"அவசரப்பட்டுச் சுரங்க வழியில் புகுந்ததைச் சொல்கிறீரா? அதன் மூலமாக எவ்வளவு பயங்கரமான மர்மங்களைக் கண்டுபிடித்திருக்கிறேன் தெரியுமா?" என்றான் வந்தியத்தேவன்.
"அது ஒரு புறம் இருக்கட்டும் 'வைஷ்ணவனைக் கண்டுபிடிப்பதற்கு ஒத்தாசை செய்கிறாயா?' என்று தேவராளன் கேட்டதும் 'ஆகட்டும்' என்று சொல்லித் தொலைப்பதற்கு என்ன? வீணாக ஏன் அபாயத்துக்கு உள்ளாக வேண்டும்?" என்றான் வைஷ்ணவன்.
"எல்லாம் சகவாச தோஷந்தான்!" என்றான் வந்தியத்தேவன்.
"யாருடைய சகவாசத்தைச் சொல்கிறாய்? இத்தனை தவறு செய்யும்படி நான் உனக்கு ஒருநாளும் சொன்னதாக நினைக்கவில்லையே?"
"உம்மைச் சொல்லவில்லை ஐயா! பொன்னியின் செல்வரைச் சொல்லுகிறேன். அவரைப் பார்த்துப் பழகிய பிறகு, பொய் சொல்லுவதற்கு உள்ளம் இடம் கொடுக்கவில்லை..."
"உயிர் தப்புவதற்காகக் கூடவா? அவ்வளவு சத்திய சந்தனாகி விட்டாயா?"
"அது மட்டுமல்ல, நீ எங்கேயோ பக்கத்தில் மறைந்திருக்கிறீர் என்று எனக்குத் தெரியும். நான் உம்மைப் பிடித்துக் கொடுக்கிறேன் என்று தேவராளனிடம் சொல்வதை நீர் கேட்டுக் கொண்டிருந்தது உண்மை என்று நம்பி விட்டால்! இந்த ஆபத்துச் சமயத்தில் எனக்கு உதவி செய்ய வந்திருப்பீரா?"
"அப்பனே! உன் அறிவுக் கூர்மை அபாரம்! சந்தேகமில்லை. உண்மையில், தேவராளன் கேட்ட கேள்விக்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று கேட்க நான் மிகுந்த ஆவலாய்த் தான் இருந்தேன்!"
"பார்த்தீரா? நீர் ஒரு சந்தேகப் பிராணி என்று நான் கருதியது சரியாய்ப் போயிற்று. அதைத் தவிர, எப்பேர்ப்பட்ட நன்மை வருவதாயிருந்தாலும் வாய் வார்த்தைக்குக்கூடச் சிநேகத் துரோகமாக எதுவும் நான் சொல்லும் வழக்கமில்லை. ஆனால் நீர் 'அய்யனார் கோவிலில் காத்திருக்கிறேன்' என்று சொல்லிவிட்டு இங்கு வந்தது எப்படி? சுரங்க வழியில் நான் திரும்பி வந்திருந்தால் உம்மைக் காணாமல் திண்டாடியிருப்பேனே?" என்றான் வந்தியத்தேவன்.
"சுரங்க வழியில் நீ திரும்பி வந்திருந்தால் உயிரோடு வந்திருப்பது சந்தேகந்தான். நீ சுரங்க வழியில் புகுந்து சிறிது நேரத்துக்கெல்லாம் சதிகாரர்கள் அதில் புகுந்தார்கள். நீ புத்திசாலியாகையால் நிச்சயம் வேறு வழியாகத்தான் வருவாய், அநேகமாக இங்கே சுவர் ஏறிக் குதித்து வரக்கூடும் என்று எண்ணினேன்."
"அவ்வாறு எண்ணிக் கொண்டா இவ்விடத்துக்கு வந்தீர்?"
"அது மட்டுமல்ல சுரங்கப் பாதையில் புகுந்த சதிகாரர்கள் தேவராளனை மட்டும் வெளியில் காவலுக்கு வைத்து விட்டுச் சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும்போது அய்யனார் கோவிலில் யாரும் இல்லாமலிருக்க வேண்டாமா? அதற்காக ஏதோ சமிக்ஞை சொல்லிவிட்டுப் புகுந்தார்கள் போலிருக்கிறது. ஆனால் அது எனக்குத் தெரியாது; எல்லாரும் சுரங்கத்துக்குள் புகுந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். நீ உள்ளே போய் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாயே என்று வேறு கவலையாயிருந்தது. சுரங்கப் பாதையை வெளியிலிருந்து திறப்பதற்கு என்ன உபாயம் என்று தெரிந்து கொள்ளவும் விரும்பினேன். ஆகையால் பலி பீடத்தின் அருகில் சென்று அதைத் திருப்ப முயன்று கொண்டிருந்தேன். காலடிச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். தேவராளன் கையில் வேலுடன் வந்து கொண்டிருந்தான். என்னைக் கண்ட இடத்தில் கொன்று விடச் சதிகாரக் கூட்டத்தார் வெகு நாளைக்கு முன்பே தீர்மானித்திருந்தார்கள்; அது எனக்குத் தெரியும். என் கையிலோ ஆயுதம் இல்லை, ஆகையால் ஓட்டம் பிடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. தேவராளனும் தொடர்ந்து ஓடி வந்து கொண்டிருந்தான். அடர்ந்த காடாக இருந்தபடியால் அவனால் என்னைப் பிடிக்க முடியவில்லை. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு என்னை அவன் தொடர்ந்து வரவில்லை என்று தோன்றியது.
வேட்டையைக் கைவிட்டுவிட்டான் என்று எண்ணிக் காட்டிலிருந்து இனி ராஜபாட்டைக்குப் போய் விடலாம் என்று உத்தேசித்தேன். சற்றுத் தூரத்தில் ஒரு குடிசை தெரிந்தது. அதில் ஒரு சிறிய விளக்கு மினுக்கு மினுக்கு என்று பிரகாசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குடிசையில் இராஜபாட்டைக்கு வழி கேட்கலாம் என்று நினைத்து அதை அணுகினேன். சற்றுத் தூரத்திலிருந்து உற்றுப் பார்த்தேன்; நல்ல வேளையாய்ப் போயிற்று. குடிசை வாசலில் தேவராளன் நின்று கொண்டிருந்தான். ஒரு பெண் பிள்ளையும், ஒரு நாயும் அவன் அருகில் நின்றார்கள். தேவராளன் பெண் பிள்ளையிடம் ஏதோ சொல்லிவிட்டு நாயை அழைத்துக் கொண்டு மறுபடியும் புறப்பட்டான். நாய் நான் நின்ற திசையை நோக்கிக் குரைத்தது. ஆகவே அபாயம் இன்னும் அதிகமாயிற்று. இராஜபாட்டைக்குப் போகும் உத்தேசத்தைக் கைவிட்டு காட்டு வழியிலேயே புகுந்து ஓடி வந்தேன். நாய் அடிக்கடி குரைத்துக் கொண்டு வந்தபடியால் அவர்கள் எங்கே வருகிறார்கள் என்பதை நான் ஊகிக்க முடிந்தது. ஓடி வந்து கொண்டிருக்கும் போதே மூளையும் வேலை செய்து கொண்டிருந்தது. இரவு முழுவதும் காட்டில் சுற்றிக் கொண்டிருப்பது அசாத்தியம். எப்படியும் அவர்கள் வந்து பிடித்து விடுவார்கள். கையில் வேலுடன் கூடிய தேவராளனையும் வாயில் பல்லுடன் கூடிய வேட்டை நாயையும் ஏக காலத்தில் சமாளிப்பது சுலபம் அல்ல. அச்சமயத்தில் இப்பெரிய மாளிகையின் மதிள் சுவர் தெரிந்தது. மதிளில் ஏறி உள்ளே குதித்துவிட்டால் எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன், அப்படியே ஏறிவிட்டேன். அச்சமயம் நீ அரண்மனை மேல் மாடத்தில் ஓடி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன், நீ மதிள் ஏறி வெளியே குதிப்பதற்குத்தான் ஓடி வருகிறாய் என்று தெரிந்து கொண்டு மறுபடியும் கீழே குதித்தேன். நாம் இரண்டு பேருமாகச் சேர்ந்து தேவராளனையும் அவனுடைய நாயையும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இதற்குள் நாய் குரைக்கும் சத்தம் கேட்கவே பக்கத்திலிருந்த மரத்தின் மேலே ஏறிக் கொண்டேன். நாயும் தேவராளனும் நான் ஏறி இருந்த மரத்தை அணுகித்தான் வந்தார்கள். அதற்குள் நீ மதிள் சுவரிலிருந்து இறங்கியது தேவராளரின் கண்ணில் பட்டது போலும். நாயையும் அழைத்துக் கொண்டு நீ இறங்குமிடத்தை நெருங்கினான். பிறகு நடந்ததெல்லாம் உனக்குத் தெரியும்..."
"வைஷ்ணவரே! விதியின் வலிமையைப் பற்றி உமது அபிப்ராயம் என்ன?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"இது என்ன கேள்வி? திடீரென்று விதியின் பேரில் உன்னுடைய எண்ணம் போனது, ஏன்?"
"ஒவ்வொருவனும் பிறக்கும் போதே 'இன்னாருக்கு இன்னபடி' என்று பிரம்மதேவன் தலையில் எழுதி விடுவதாகச் சொல்கிறார்களே, அதை நீர் நம்புகிறீரா, இல்லையா?"
"இல்லை! எனக்கு விதியில் நம்பிக்கையில்லை. விதியை முழுதும் நம்புவதாயிருந்தால், பரந்தாமனிடம் பக்தி செய்து உய்யலாம் என்பதற்குப் பொருள் இல்லாமற் போய்விடும் அல்லவா? ஆழ்வார்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால்..."
"ஆழ்வார்கள் எதையாவது சொல்லியிருக்கட்டும். எனக்கு விதியில் பூரண நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. விதியின்படியே தான் எல்லாம் நடக்கும் என்று கருதுகிறேன். இல்லாமற் போனால் இன்றைக்கு நான் தப்பித்துக் கொண்டு வந்திருக்க முடியாது..."
"அப்பனே! விதியினால் நீ தப்பித்து வரவில்லை மதியின் உதவியினால் தப்பித்து வந்தாய்.."
"இல்லவே இல்லை; என் மதி என்னை ஆழம் தெரியாத அபாயத்தில் கொண்டு போய்ச் சேர்ந்தது; விதி என்னை அதிலிருந்து கரையேற்றியது!"
இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே காட்டைக் கடந்து வந்துவிட்டார்கள். கடம்பூர் அரண்மனையின் முன் வாசல் அங்கிருந்து தெரிந்தது. அங்கு ஒரே அல்லோலகல்லோலமாக இருந்ததும் தெரிந்தது. பழுவேட்டரையரின் யானை, குதிரை, பரிவாரங்கள் வெளியிலிருந்து வாசலை நெருங்கி வந்து கொண்டிருந்தன. அமோகமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அரண்மனை வாசலில் சம்புவரையரும் அவருடைய பரிவாரங்களும் வரவேற்பதற்குக் காத்திருந்தார்கள். நூற்றுக்கணக்கான தீவர்த்திகள் இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தன. பேரிகைகள், முரசுகள், கொம்புகள், தாரைகள், தப்பட்டைகள் ஒன்று சேர்ந்து முழங்கின.
ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனுடைய கையைப் பிடித்து இழுத்து, "வா! போகலாம்; யாராவது நம்மைப் பார்த்து விடப் போகிறார்கள்!" என்றான்.
"இந்தப் பக்கம் ஒருவரும் பார்க்கமாட்டார்கள்; பார்த்தாலும் என்னுடைய விதி என்னைக் காப்பாற்றும். பெரிய பழுவேட்டரையர் யானை மீது வந்து இறங்கும் காட்சியைப் பார்க்க வேண்டாமா?"
"அது மட்டுந்தானா?"
"பழுவூர் ராணி நந்தினி அவருடன் யானை மீதில் வந்து இறங்குகிறாளா, அல்லது மூடுபல்லக்கில் வருகிறாளா என்று பார்க்கவும் விரும்புகிறேன்..."
"தம்பி! விதி எப்போதும் உனக்கு அனுகூலமாக இருக்கும் என்று எண்ணாதே. ஒரு மாயமோகினியின் உருவத்தில் வந்து உன்னைக் குடை கவிழ்த்தாலும் கவிழ்த்துவிடும்."
"அப்படியெல்லாம் மயங்கி விடுகிறவன் நான் அல்ல வைஷ்ணவரே! அதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்!"
கம்பீரமான யானை வந்து அரண்மனை வாசலில் நின்றது. அதன் மேலிருந்து பெரிய பழுவேட்டரையர் இறங்கினார். அவரைத் தொடர்ந்து பழுவூர் இளையராணியும் இறங்கினாள். "ஓ! இந்தத் தடவை இளையராணி மூடுபல்லக்கில் வரவில்லை. பகிரங்கமாகவே அழைத்து வந்திருக்கிறார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"அதைத் தெரிந்து கொள்ளத் தான் விரும்பினேன் இனி போகலாம்" என்று வந்தியத்தேவன் பின்னால் சென்றான். ஆனால் இப்போது ஆழ்வார்க்கடியான் பின் செல்வதற்கு அவ்வளவு அவசரப்படவில்லை, மேலும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். பழுவூர் இளையராணி நந்தினியைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாகவோ, அல்லது அவனுடைய மனோ சக்தியினால் இழுக்கப்பட்டுத்தானோ என்னவோ நந்தினி அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்.
ஆழ்வார்க்கடியானுடைய முகம் இருண்ட மரங்களின் மத்தியிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கூர்ந்து கவனித்தாள். அவள் முகத்தில் உடனே பீதியின் சாயல் பரவிற்று. இளையராணியின் முக மாறுதலைப் பெரிய பழுவேட்டரையர் கவனித்தார். அவள் பார்த்த திசையை அவரும் ஒரு தடவை கூர்ந்து நோக்கினார். இரண்டு உருவங்கள் நெருங்கி வளர்ந்திருந்த மரங்களின் இருண்ட நிழலில் மறைந்து கொண்டிருந்தன. உடனே சம்புவரையரின் காதோடு ஏதோ சொன்னார். சம்புவரையர் தம்முடைய வீரர்களில் இருவருக்கு ஏதோ கட்டளையிட்டார்.
பழுவேட்டரையரும் இளையராணியும் அமோகமான வாத்திய கோஷங்களுக்கிடையில் அரண்மனை வாசல் வழியாக உள்ளே பிரவேசித்தார்கள்.
அதே சமயத்தில் இரண்டு குதிரை வீரர்கள் அரண்மனை மதிளைச் சுற்றியிருந்த காட்டிற்குள் பிரவேசித்தார்கள். குதிரைகளைக் காட்டுக்குள் அவர்கள் கஷ்டத்துடன் செலுத்திக் கொண்டு போனார்கள். வெகு தூரம் சென்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்டக் காட்டைக் கடந்து அப்புறத்தில் சமவெளியாக இருந்த திறந்த மைதானத்தண்டை வந்து விட்டார்கள்.
"அண்ணே! காட்டில் ஒருவரும் இல்லை. கிழவரின் மனப்பிராந்திதான்!" என்றான் அவர்களில் ஒருவன்.
அச்சமயம் நாய் ஒன்று அவர்களுக்கெதிரே ஊளையிட்டுக் கொண்டு வந்தது.
"தம்பி! நாய் எப்போது ஊளையிடும் தெரியுமா?" என்று மற்றவன் கேட்டான்.
"யாராவது செத்துப் போனால் உளையிடும்!" என்றான் முதலில் பேசியவன்.
"பேய் பிசாசு வேதாளம் முதலியவைகளைக் கண்டாலும் உளையிடும்!" என்றான் இன்னொருவன்.
"உன்னைப் பார்த்துத்தான் பிசாசு என்று நினைத்துக் கொண்டுவிட்டதோ, என்னமோ?"
"இல்லை, தம்பி! உன்னை வேதாளம் என்று எண்ணிக் கொண்டு விட்டது!"
இச்சமயத்தில் அவர்களுடைய தலைக்கு மேலே பயங்கரமான பேய்ச் சிரிப்பைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டு அண்ணாந்து பார்த்தார்கள். இரண்டு பேரின் தலைக்கு மேலேயும் இரண்டு மரக்கிளைகளில் இரண்டு வேதாளங்கள் உட்கார்ந்திருந்தன! இரண்டு வேதாளங்களும் அந்த இரண்டு வீரர்களின் கன்னத்திலும் பளீர் என்று அறைந்து, கழுத்தைப் பிடித்து நெட்டிக் கீழே தள்ளின! பிறகு, அந்தப் பொல்லாத வேதாளங்கள் குதிரைகளின் மீது ஏறிக் கொண்டு காட்டைக் கடந்து மைதானத்தில் விரைந்து சென்றன!