←அத்தியாயம் 38: நடித்தது நாடகமா?

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: காரிருள் சூழ்ந்தது!

அத்தியாயம் 40: "நான் கொன்றேன்!"→

 

 

 

 

 


538பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: காரிருள் சூழ்ந்தது!கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

தியாக சிகரம் - அத்தியாயம் 39[தொகு]
காரிருள் சூழ்ந்தது!


ஆதித்த கரிகாலனுடைய பயங்கரமான வெறிகொண்ட சிரிப்பு, யாழ்க்களஞ்சியத்தில் ஒளிந்திருந்த வந்தியதேவனுடைய காதில் விழுந்தது, அவனுக்கு ரோமாஞ்சனத்தை உண்டாக்கியது. விரைவில் ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்று அவனுடைய உள்ளுணர்ச்சி கூறியது. நிழல் வடிவங்கொண்ட யம தர்மராஜன், கையில் பாசக்கயிறுடன் அந்த அறையில் பிரசன்னமாகியிருந்தான். பாசக்கயிற்றை வீசுவதற்குச் சமயம் நோக்கிக் கொண்டிருந்தான். ஆனால் யார்மீது எறியப் போகிறான்? யாருடைய உயிரைக் கொண்டு போகப் போகிறான்? கரிகாலன் உயிரையா? அல்லது நந்தினி தேவியின் உயிரையா? ஒருவேளை அவர்கள் இருவரையுமே மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறதா? சகோதரன் சகோதரியைக் கொல்லப் போகிறானா சகோதரி சகோதரனைக் கொல்லப் போகிறாளா? அல்லது இருவரும் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாகப் போகிறார்களா? இம்மாதிரி ஏதும் நடவாதபடி தடுப்பதற்காகத்தான் இளையபிராட்டி தன்னை விரைந்து போகும்படி அனுப்பி வைத்தாள். தன்னால் இயன்றதைச் செய்தாகி விட்டது. இருவரிடமும் அவர்களுக்குள்ள உறவைப் பற்றிச் சொல்லியாகிவிட்டது. இருவருடைய உள்ளமும் இளகும்படியும் செய்தாகிவிட்டது. ஆனாலும், பலன் ஏற்படுமா? வெறிகொண்ட கரிகாலரையோ, பிரமை பிடித்த நந்தினியையோ, கொடூரச் செயல் எதுவும் செய்யாமல் தடுக்க முடியுமா? இந்தச் சமயத்தில் தான் நடுவில் குறுக்கிடுவதால் ஏதேனும் நன்மை விளையுமா? ஒருவேளை இருவருக்கும் மத்தியில் தன்னுடைய உயிரைப் பலி கொடுப்பதினால், அவர்களுடைய குரோதம் தணியுமா? இவ்வாறெல்லாம் எண்ணி வந்தியத்தேவனுடைய உள்ளக் கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது பொறுத்துப் பார்க்கலாம், - தான் அவசரப்பட்டுக் குறுக்கிடுவதினால் காரியம் கெட்டுப் போக வேண்டாம் என்று பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். 
கரிகாலருடைய வெறி கொண்ட சிரிப்பு அடங்கிய பிறகு, அவர்களுடைய சம்பாஷணை மேலும் தொடர்ந்தது. 
"ஐயா! என் வாழ்நாளில் தங்களுக்கு மகிழ்ச்சி தரும்படியான காரியம் எதுவும் நான் செய்ததில்லை. சாகும் சமயத்திலாவது தாங்கள் சிரித்து மகிழுவதற்குக் காரணமானது பற்றிச் சந்தோஷம்" என்றாள் நந்தினி. 
"ஆம், நந்தினி! இன்றைக்கு எனக்கு மிகச் சந்தோஷமான தினந்தான். இத்தனை வருஷமாக நீ என்னைப் படுத்திவைத்த பாட்டுக்கெல்லாம் இன்றைக்கு முடிவு ஏற்படப் போகிறது. இந்தத் தடவை நான் காஞ்சியிலிருந்து புறப்பட்டபோது ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டுதான் வந்தேன். உன்னை நேரில் பார்த்த பிறகு ஒருவேளை என் மனம் சலித்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். அதற்கிடமில்லாமல், நீயே வாளை என் கையில் கொடுத்து விட்டாய்!" என்று கூறிக் கரிகாலன் மீண்டும் சிரித்தான். 
"கோமகனே! எனக்கும் இன்று சுதினந்தான். தங்கள் கையினால் வெட்டுண்டு இறப்பதைப் போன்ற இனிமையான மரணம் எனக்குக் கிட்டப் போவதில்லை. ஒரு காலத்தில் தாங்கள் என் கழுத்தில் பூமாலை சூட்டப் போகிறீர்கள் என்று ஆசைக் கனவு கண்டுகொண்டிருந்தேன். அது நிறைவேற முடியாமற் போயிற்று. தங்கள் கையிலுள்ள வாளை என் கழுத்தில் சூட்டிக் கொள்ளும் பேறாவது எனக்குக் கிடைக்கட்டும். ஐயா! நேரம் ஆகிறது, ஏன் தாமதிக்கிறீர்கள்?" என்றாள் நந்தினி. 
"பல வருஷம் தாமதித்தாகிவிட்டது. இன்னும் சில நிமிஷம் தாமதிப்பதினால் நஷ்டம் ஒன்றுமில்லை. நந்தினி! சற்று என்னைப் பார்! கடைசி முறையாக என்னைப் பார்த்து என் கேள்விக்கு மறுமொழி சொல்! பூமாலை சூட்ட வேண்டிய கையினால், நான் ஏன் உனக்கு வாள் மாலை சூட்ட வேண்டும்? நீ ஒரு காலத்தில் ஆசைக் கனவு கண்டது உண்மையாக இருந்தால், இப்போது ஏன் அதை நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது? அதற்குக் தடையாக நிற்பவர்கள் யார் என்று சொல்லு! உன்னைக் கொல்லுவதற்குப் பதிலாக அவர்களைக் கொன்று விட்டு மறுகாரியம் பார்க்கிறேன்!" என்றான் கரிகாலன். 
"வேண்டாம், ஐயா! வேண்டாம்! உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. என் காரணமாக, இனி வேறு யாரும் சாக வேண்டாம்!" 
"அந்தத் தடையை ஒரு நொடியில் நான் தவிடு பொடி செய்து விடுகிறேன். தலைவிதியின் பேரில் பாரத்தைப் போடாதே! பிரம்மா எழுதிய எழுத்தை நான் மாற்றி எழுதுகிறேன், பார்!..." 
நந்தினி குறுக்கிட்டு, "பிரம்மா எழுதிய எழுத்தை மாற்றி எழுதலாம். ஆனால் ஒருவருடைய பிறப்பை மாற்றி அமைக்க முடியுமா?" என்று கேட்டாள். 
"எதைப்பற்றிக் கேட்கிறாய், நந்தினி! நமது சிறு பிராயத்தில் உன்னைப் பட்டர் குலத்துப் பெண் என்றும், அதனால் உன்னுடன் சிநேகம் செய்யக்கூடாதென்றும் என் குடும்பத்தினர் சொன்னார்களே, அதைப்பற்றியா? இல்லை! நீ பட்டர் குலத்தில் வளர்ந்தவளேயன்றி அந்தக் குலத்தில் பிறந்தவள் அல்ல என்பதை நீயும், நானும் முன்பே அறிந்திருந்தோம்." 
"அதைப்பற்றி இப்போது சொல்லவில்லை, ஐயா! தங்கள் அருமை நண்பர் - வாணர் குலத்து வீரர் - கொண்டு வந்த செய்தியைப் பற்றியே சொல்லுகிறேன். பழையாறை இளைய பிராட்டி அவசரமாகச் சொல்லியனுப்பிய செய்தியைப் பற்றியே கூறுகிறேன். நான் தங்கள் சகோதரி என்பதை இதற்குள்ளாகவே மறந்து விட்டீர்களா?" 
"நந்தினி! அன்றைக்கு நான் உன்னிடம் அதைப்பற்றிச் சொன்னபோது, நீ அதை நம்பவில்லை. உன்னையும் என்னையும் பிரித்து வைப்பதற்குச் செய்யும் இன்னொரு சூழ்ச்சி என்றாய். பிறகு நானும் யோசித்து அதே முடிவுக்கு வந்தேன். அதை நிச்சயம் செய்து கொள்ள வேண்டுமானால்..." 
"வேண்டாம்! வேண்டாம்! எனக்கு அதைப்பற்றிச் சந்தேகமே இல்லை. கோமகனே! தங்களுக்கும் எனக்கும் இரத்த சம்பந்தம் ஏதுமில்லை..." 
"பின், என்ன தடை நந்தினி?" 
"நான் தங்களுக்குப் பாட்டனார் முறையிலுள்ள பழுவேட்டரையரை மணந்தவள். தங்களுக்கு பாட்டி முறையில் உள்ளவள் இது போதாதா?" 
"நந்தினி! அந்தக் கதையைச் சொல்லி மறுபடியும் என்னை ஏமாற்றப் பார்க்க வேண்டாம். உலகத்தின் முன்னிலையில் நீ பழுவேட்டரையரின் இளைய ராணியாக இருக்கலாம். ஆனால் உண்மையில் நீ அவரை மணந்து கொள்ளவில்லை. ஏதோ காரணார்த்தமாகவே அவருடைய அரண்மனையில் வந்திருக்கிறாய். முன்னொரு தடவை, தஞ்சையில் நான் கேட்ட போது, இவ்வாறுதான் கூறினாய். அப்போது நான் நமது ஆசைக் கனவை உனக்கு நினைவூட்டினேன். அதை நிறைவேற்றுவதற்கு நீ பயங்கரமான நிபந்தனைகளை விதித்தாய்! பழுவேட்டரையரைக் கொன்று, என் தந்தையையும், சகோதரியையும் சிறையிலடைத்துவிட்டு, உன்னைச் சோழ சிங்காதனத்தில் ஏற்றி வைக்க வேண்டும் என்றாய். வெறி கொண்ட ராட்சஸி நீ என்று தீர்மானித்துக் கொண்டு, நான் காஞ்சிக்குப் போனேன். அப்புறம் நீ என்னை விட்டுவிட்டாயா? இல்லை! ஓயாமல் ஒழியாமல் கனவிலும் நினைவிலும் வந்து என்னை வதைத்துக் கொண்டிருந்தாய். சில சமயம் அழுது புலம்பி என்னைத் துன்புறுத்தினாய். சில சமயம் மோகனப் புன்சிரிப்புச் சிரித்து என் உயிரை வதைத்தாய்! சில சமயம் பிச்சியைப்போல் சிரித்து என்னையும் பித்தனாக்கினாய்!...." 
"கோமகனே! தங்களுடைய மனப்பிரமைக்கு என் பேரில் ஏன் குற்றம் சுமத்துக்கிறீர்கள்? தாங்கள் எனக்குச் செய்த அநீதிக்கும் கொடுமைக்கும் பலனை அநுபவித்தீர்கள். அதற்கு நான் என்ன செய்வேன்? நான் மட்டும் கஷ்டப்படவில்லையென்று எண்ணுகிறீர்களா? பழுவேட்டரையரின் மாளிகையின் சுக போகங்களில் ஆழ்ந்து குதூகலமாயிருந்தேன் என்று நம்புகிறீர்களா?" என நந்தினி கேட்ட குரலில் மீண்டும் பழையபடி ஆத்திரமும், கொடூரமும் பொங்கித் ததும்பின. 
இதைக் கேட்டு வந்தியத்தேவன் பீதி கொண்டான். அவனுடைய உடம்பு படபடத்தது. 
ஆதித்த கரிகாலரின் ஸ்வரமும் ஏறத் தொடங்கியது. "நீயும் கஷ்டப்பட்டதாகவா சொல்கிறாய்? அப்படியானால், இப்போது ஏன் நாம் ஏதேதோ பேசிக்கொண்டு வீண்பொழுது போக்க வேண்டும்? என்னுடன் புறப்பட்டு வருவதற்கு உன்னுடைய சம்மதத்தைத் தெரியப்படுத்து, உடனே புறப்பட்டு செல்வோம். உனக்காக நான் இந்தப் பெரிய சோழ இராஜ்யத்தைத் தியாகம் செய்துவிட்டு வரச் சித்தமாயிருக்கிறேன். பிறந்த நாட்டையும் தாய் தந்தையரையும் உற்றார் உறவினரையும் துறந்துவிட்டு வருகிறேன். கப்பல் ஏறிக் கடல் கடந்து செல்வோம். கடல்களுக்கு அப்பால் எத்தனை எத்தனையோ அற்புதமான தீவ தீவாந்தரங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை அடைவோம். உன்னைக் காட்டிலும் இந்த இராஜ்யம் எனக்குப் பெரியதன்று." 
"கோமகனே! தாங்கள் இராஜ்யத்தைத் துறந்தாலும் துறப்பீர்கள்! ஆனால் இந்தக் கீழ்க்குல மகள், புராதனமான சோழ சிங்காதனத்தில் ஏறுவதற்குச் சம்மதிக்க மாட்டீர்கள், இல்லையா?" என்று கூறிவிட்டு நந்தினி நகைத்த நகைப்பில் தீப்பொறி பறந்தது. 
"பெண்ணே! இதை வேறு விதமாகப் பார்! உனக்கு என்னைக் காட்டிலும் சோழ சிங்காதனம் உயர்வானதா? என்னிடம் நீ அந்த நாளிலிருந்து காட்டிய பிரியம் எல்லாம் சிங்காதனம் ஏறி மணிமகுடம் சூடும் ஆசையினால் நடித்த நடிப்புத்தானா?" என்றான் கரிகாலன். 
"ஆகா! அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு அரண்மனை வாழ்வும், அரசபோகமும் அரியாசனமும்தான் வேண்டும். இவற்றுக்காகவே, பழுவேட்டரையரை நான் மணந்தேன். இவற்றுக்காகவே, வீரபாண்டியரைக் காப்பாற்றுவதற்கு முயன்றேன்.." 
"அடி! பாதகி! அவன் பெயரை எதற்காக இப்போது சொல்லுகிறாய்?" என்று கர்ஜனை செய்தான் கரிகாலன். 
நந்தினி மறுமொழி கூறுவதற்கு முன்னால் அவன் தொடர்ந்து மேலும் கூறினான்:- "ஆகா எனக்குத் தெரிகிறது. உன்னுடைய சூழ்ச்சியெல்லாம் எனக்கு இப்போது நன்றாகத் தெரிகிறது. வீரபாண்டியனுடைய பெயரைச் சொன்னால் எனக்கு ஆத்திரம் வரும். நான் உன்னை உண்மையாகவே கொல்ல வருவேன். உடனே இங்கு நீ காலால் இட்டதைத் தலையால் செய்யக் காத்திருக்கும் வாலிப சிங்கங்களில் ஒருவன் வந்து என்னைக் கொன்றுவிடுவான் என்பது உன் அந்தரங்க நோக்கம். அடி சண்டாளி! அந்த வந்தியத்தேவன் எங்கே இருக்கிறான்? எங்கே அவனை மறைத்து வைத்திருக்கிறாய், சொல்! இங்கேதான் அவன் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும். நீ என்னோடு வர மறுப்பதற்குக் காரணமும் இப்போது நன்றாய்த் தெரிகிறது. ஆமாம்; அவன்தான் காரணம்! அவனோடு நீ ஓடிப்போக எண்ணியிருப்பது தான் காரணம்! பழுவேட்டரையரை நீ இவ்விடம் விட்டு அனுப்பியதற்கும் அவன்தான் காரணம். நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து பேசிக்கொண்டுதான் இப்படியெல்லாம் சூழ்ச்சி செய்திருக்கிறீர்கள்... ஆகா! எப்படி நான் ஏமாந்து போனேன்? எங்கே அந்த பாதகன் வந்தியத்தேவன்? எங்கே உன்னுடைய புதிய காதலன்...?"
இவ்வாறு ஆதித்த கரிகாலர் வெறிக் கூச்சல் போட்டுக் கொண்டே கத்தியைச் சுழற்றிகொண்டு அங்குமிங்கும் அந்த அறையில் ஓடத் தொடங்கினார். ஒரு சமயம் யாழ்க்களஞ்சியத்தை நெருங்கி வந்தார். 
அப்போது நந்தினி ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று அவர் காலடியில் விழுந்து "கோமகனே! இதைக் கேளுங்கள்! உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. நான் சொல்லுவதைக் கேட்டுவிட்டுப் பிறகு எது வேணுமானாலும் செய்யுங்கள். வாணர்குல வீரரைப் பற்றித் தாங்கள் கூறுவது அபாண்டம். பூமாதேவி பொறுக்க மாட்டாள். அவருக்கு ஏதேனும் தாங்கள் தீங்கு செய்தால், என் அருமைத் தோழி மணிமேகலை உயிரையே விட்டுவிடுவாள்! தங்களுக்கு மகத்தான பாவம் சம்பவிக்கும். வேண்டாம்! இதோ என் நெஞ்சைப் பிளந்து பாருங்கள் வீர பாண்டியருடைய வாளினாலேயே என் நெஞ்சைக் கீறிப் பாருங்கள். அதற்குள்ளே தங்களுடைய திருவுருவத்தைத் தவிர வேறு எதுவும் இராது. இது சத்தியம்! சத்தியம்! சத்தியம்!" என்று கூறிவிட்டு நந்தினி விம்மினாள். 
ஆதித்த கரிகாலனின் வெறி மீண்டும் சிறிது தணிந்தது போல் காணப்பட்டது. "அப்படியானால், என்னுடன் வருவதற்கு நீ ஏன் மறுக்கிறாய்? அதையாவது சொல்லிவிடு! ஏன் என் கையினால் உன்னை வெட்டிக் கொல்லும்படி தூண்டுகிறாய்? உண்மையைச் சொல்லிவிடு!" என்று அலறினான் கரிகாலன். 
"ஆகட்டும் இதோ சொல்லுகிறேன், என்னுடைய நெஞ்சில் தங்களைத் தவிர வேறு யாருக்கும் இடம் கிடையாது. இது சத்தியமான போதிலும், நான் தங்களுடன் வர முடியாது. தங்களை மணந்து கொள்ளவும் இயலாது. அதற்குத் தடையாயுள்ள ஒரு பெரிய காரணம் இருக்கிறது. ஆம் கோமகனே! உண்மையில் அதை சொல்லுவதற்காகவே நான் இங்கே வந்தேன். தங்களையும் வரச் செய்தேன். அதைச் சொல்லி விட்டு என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்வதற்காக வந்தேன். இந்தத் துர்பாக்கியசாலியை மறந்து விட்டுத் தங்கள் குலத்துக்கும், பதவிக்கும் உகந்த பெண்ணை மணந்து வாழும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்வதற்காக வந்தேன். ஆனாலும் அதைச் சொல்லத் தயங்கினேன். அதைச் சொல்லலாம் என்று நினைக்கும்போதே பயமாயிருக்கிறது. தங்களுடைய கோபத்தைக் கொழுந்து விட்டெரியச் செய்வோமோ, அதனால் இன்னும் என்ன தீங்கு நேரிடுமோ என்று அச்சமாயிருக்கிறது. தாங்கள் அமைதியுடனிருப்பதாக வாக்குக் கொடுத்தால்...." 
"சொல், நந்தினி சொல்! எவ்வளவு கசப்பான விஷயமாயிருந்தாலும் கேட்டுப் பொறுத்துக் கொள்வேன். சற்றுமுன், உன்னை மறந்துவிட்டு வேறு பெண்ணை மணந்து சந்தோஷமாயிருக்கும்படி புத்திமதி கூறினாய்! அதற்கே நான் கோபித்துக் கொள்ளவில்லையே? வேறு என்ன கூறினால்தான் கோபித்துக் கொள்ள போகிறேன்? ஆனால் மறுபடியும் ஏதாவது கற்பனை செய்யாதே!..." 
"கோமகனே! என் வாழ்க்கையே ஒரு கற்பனை. என் பிறப்பே ஒரு புனைகதை. என் வாழ்க்கையைச் சிறிது காலம் நீடிப்பதற்காகவும், நான் கொண்ட கருமத்தை முடிப்பதற்காகவும் நான் பலமுறை கற்பனைக் கதை புனைய வேண்டியதாயிருந்தது. இனி அதற்கு அவசியம் ஒன்றும் இல்லை. இன்றுடன் என் பொய் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போகிறேன். தங்களுடைய மனத் துன்பத்தை அதிகமாக்கக் கூடாது என்பதற்காகவே சில உண்மைகளை நான் அறிந்த பிறகும், தங்களுக்குச் சொல்லவில்லை. தாங்கள் என்னை வெறுத்துவிடவேண்டும் என்பதற்காகவே பல கற்பனைகளைப் புனைந்தேன். பல பயங்கரமான காரியங்களைப் புனைந்தேன். பல பயங்கரமான காரியங்களைச் செய்யும்படி கூறினேன். என் உள்ளத்தில் ஓயாத போராட்டம் நடந்து கொண்டிருந்தது. என் கடமையும், நான் எடுத்துக் கொண்ட சபதமும், தங்கள் பேரில் கொண்ட காதலும் ஓயாமல் போராடிக் கொண்டிருந்தன. இவற்றினால் நான் அடைந்த துயரத்தைச் சொல்லி முடியாது. கடைசியாக, இன்று அந்தப் போராட்டமெல்லாம் முடியும் தருணம் நெருங்கியிருக்கிறது. என்னைப் பற்றிய உண்மையைச் சொல்லி விடுகிறேன். அதைக்கேட்ட பிறகு என்னைத் தங்கள் கையினாலேயே கொன்றுவிடுங்கள்! ஆனால் வேறு யாருக்கும் தாங்கள் தீங்கு செய்ய வேண்டாம்! வீண் பாவத்துக்கும் பழிக்கும் ஆளாக வேண்டாம்!..." 
"பாவம்! பழி! இனிப் புதிதாக நான் அடையக் கூடிய பாவம் - பழி என்ன இருக்கிறது? ஆயினும் சொல், நந்தினி! என்னுடன் வருவதற்கு, - நம் இளம் பிராயத்து ஆசைக் கனவு நிறைவேறுவதற்கு - தடையாயிருக்கும் உண்மையான காரணம் என்னவென்று சொல்! அது எவ்வளவு பயங்கரமான உண்மையாக இருந்தாலும் சொல்! அதோ அந்தத் திரைச் சீலைக்குப் பின்னால் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் என்று நான் எண்ணிக் கொண்டிருந்த வரையில், ஒளிந்திருப்பது யார் என்று தெரியாதிருந்த வரையில், என் மனம் அமைதி இழந்திருந்தது. உன்னுடன் பேசிக்கொண்டிருந்தபோது, என் உள்ளம் அதைப் பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. ஒளிந்திருந்தவள் மணிமேகலை என்று தெரிந்த பிறகு என் குழப்பமும் நீங்கியது. உண்மை தெரியாதிருக்கும் வரையிலேதான் பயம், கோபம், குழப்பம் எல்லாம்! எவ்வளவு கசப்பாயிருந்தாலும் உண்மை தெரிந்து போய்விட்டால் மனம் அமைதி அடைந்துவிடும் அல்லவா?" 
"கோமகனே! நான் சொல்லப்போகும் செய்தியினால் தங்கள் மனம் உண்மையிலேயே அமைதி அடையட்டும். அதுதான் என் பிரார்த்தனை. ஆனால் அந்தச் செய்தி நான் தங்களுடன் வருவதோ, தங்களை மணப்பதோ முடியாத காரியம் என்பதையும் நிரூபிக்கும். என் வாழ்க்கையின் முடிவு, என் துன்பங்களுக்கு விமோசனம், - மரணம் ஒன்றுதான் என்பதையும் தெரியப்படுத்தும். வாணர்குலத்து வீரர் என்னுடைய அன்னையைப் பற்றிய செய்தி கொண்டு வந்தார். அது உண்மை என்று நான் அறிவேன். ஈழநாட்டில் வெறி கொண்டு அலைந்து திரிந்துகொண்டிருந்த மாதரசியைப் பற்றி நான் அறிவேன். அவள் என் அன்னை என்று அறிவேன். இது மற்றும் பலருக்கும் தெரிந்திருந்தது. ஏனெனில் அந்தப் பெண்ணரசிக்கும் எனக்கும் உருவத்தோற்றத்தில் அமைந்திருந்த ஒற்றுமையைப் பலரும் காணக்கூடியதாயிருந்தது. என்னை, என் தாயார் என்று சிலர் சந்தேகிக்கும்படியிருந்தது. ஆனால் என் அன்னையை அத்தகைய வெறியாளாக்கிய காரணம் இன்னதென்பதையும் சில காலத்துக்கு முன்பு நான் அறிந்துகொண்டேன். அது என்னைத் தவிர வேறு யாருக்காவது தெரியுமா என்பதை நான் அறியேன். யாரிடமும் இதுவரையில் நான் சொன்னதில்லை. இப்போதுதான் தங்களிடம் முதன் முதலாகச் சொல்லப் போகிறேன். ஐயா! தந்தை யார் என்பதைத் தங்களுக்குச் சொல்லப் போகிறேன். கருணை கூர்ந்து எனக்குச் சற்று முன் கொடுத்த வாக்குறுதியை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். ஆத்திரத்துக்கும், குரோதத்துக்கும் இடங்கொடாதீர்கள்". 
இவ்விதம் பலமான பூர்வ பீடிகை போட்டுக்கொண்டு நந்தினி ஆதித்த கரிகாலரை மிக நெருங்கி அவர் காதண்டை மிக மெல்லிய நடுங்கிய குரலில் "என்னைப் பெற்ற தந்தை... தான்!" என்று கூறினாள். கூறிவிட்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள். 
ஆதித்த கரிகாலன் ஆயிரம் தேள் கொட்டியவனைப் போல் ஒரு கணம் துடிதுடித்துத் துள்ளினான். 
"இல்லை, இல்லை, இல்லை! ஒரு நாளும் இல்லை! நீ சொல்லுவது பொய், பொய் பெரும் பொய்!" என்று உரக்கக் கத்தினான். 
மறுகணமே அவனுடைய ஆவேசம் அடங்கியது. வேதனை மிகுந்த குரலில், "ஆம் நந்தினி, ஆம். நீ கூறியது உண்மையாகவே இருக்க வேண்டும். இப்போது எல்லாம் எனக்குத் தெரிகிறது. உன் மனத்திலே நிகழ்ந்திருக்கக் கூடிய போராட்டத்தைப் பற்றிய உண்மையும் தெரிகிறது. நீ எவ்வளவு துன்பப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. உன் குழப்பத்துக்கும், தயக்கத்துக்கும் உன் பயங்கரமான வேண்டுகோளுக்கும் காரணம் தெரிகிறது. அன்றைக்கு நீ என்னுடைய காலில் விழுந்து மன்றாடியபோது, நான் உன் வேண்டுகோளை மறுத்தது எவ்வளவு பெரிய கொடுமை என்று தெரிகிறது! நந்தினி! உலகில் வேறு எத்தனையோ தீங்குகளுக்குப் பிராயச்சித்தம் உண்டு. ஆனால் நான் செய்ததற்குப் பிராயச்சித்தம் கிடையாது. நம் இருவருக்கும் நடுவில் உள்ள தடை நீங்க வழியே கிடையாது. ஐயோ! இந்தப் பெரும் பாரத்தை இத்தனை நாள் எப்படி உன் மனத்தில் வைத்துத் தாங்கிக் கொண்டிருந்தாய்? எப்படி இந்தப் பாதகன் இப்பூமியில் உயிர் வாழ்வதைச் சகித்துக் கொண்டிருந்தாய்? நல்லது! நம் இருவருடைய வாழ்க்கைக்கும் பரிகாரம் ஒன்று தான்! விமோசனம் ஒன்றுதான். இதோ, நந்தினி! என் பிராயச்சித்தம்!"
யாழ்க் களஞ்சியத்திலேயிருந்து வந்தியத்தேவன் மேற்கூறிய சம்பாஷணைகளையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். இடையிடையே கரிகாலரின் வெறி மூர்த்தண்யமாகிக் கொண்டிருந்த போது அவன் அவர்களுக்கிடையே போக எண்ணினான். பிறகு அதனால் என்ன விபரீதம் நேரிடுமோ என்று தயங்கினான். அவர்களுடைய உணர்ச்சி மயமான பேச்சு அவனை ஒருபுறத்தில் செயலற்றவனாகச் செய்து கொண்டிருந்தது. நந்தினி தன்னுடைய தந்தை இன்னார் என்று கூறியது மட்டும் அவன் காதில் நன்றாக விழவில்லை. ஆனால் அவள் என்ன சொல்லியிருக்ககூடும் என்று அவன் மனதில் ஓர் ஊகம் உண்டாயிற்று. அது அவனைத் 'திடுக்கிடச் செய்தது' என்றாலும், வேறு எந்தவிதமாகக் கூறினாலும், அது வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும். அம்மாதிரி ஒரு பெரும் அதிர்ச்சியை அவனுடைய அதிர்ச்சிகள் நிறைந்த வாழ்க்கையில் அவன் அநுபவித்ததேயில்லை. 
கடைசியாக ஆதித்த கரிகாலர் அடங்கிய மெல்லிய தழதழத்த குரலில், நந்தினி கூறியதை ஒப்புக் கொள்ளும் முறையில் வார்த்தை சொல்லிக் கொண்டிருந்தபோது, அவனுடைய ஆர்வமும் கட்டுக் காவலைக் கடந்தது. அவர் உரக்கச் சத்தமிட்டுக் கொண்டிருந்த வரையில் அவன் அவ்வளவாகப் பயப்படவில்லை. இப்போதுதான் அதிகமாக அஞ்சினான். என்ன செய்யப் போகிறாரோ என்ற பெருங் கவலையினால், யாழ்க் களஞ்சியத்திலிருந்து சிறிது தலையை நீட்டிப் பார்த்தான். பார்வைக்கு இலக்கான இடத்தில் நந்தினியும் கரிகாலரும் இல்லை. ஆனால் வேறொரு காட்சியைக் கண்டான். சுவரில் பதிந்திருந்த நிலைக் கண்ணாடியில் அந்தக் காட்சி தெரிந்தது. வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவு துவாரத்தின் வழியாக ஒரு கோரமான முகம் தெரிந்தது. மந்திரவாதி ரவிதாஸனுடைய முகந்தான்! அடுத்த கணத்தில் வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவு மெதுவாகத் திறப்பதை வந்தியத்தேவன் கண்டான். திறந்த கதவின் வழியாக முதலில் ஒரு புலியின் தலையும், பிறகு அதன் உடலும் வெளி வருவதையும் பார்த்தான். உடனே, அவனுக்கு உடம்பில் உயிர் வந்தது. உள்ளத்தில் ஊக்கம் பிறந்தது. கால் கைகள் செயல் திறன் பெற்றன. யாழ்க் களஞ்சியத்தின் மறைவிலிருந்து தாவி வெளியில் பாய்ந்து செல்ல முயன்றான். 
அச்சமயம் பின்னாலிருந்து அவனுடைய கழுத்தில் வஜ்ராயுதத்தை யொத்த ஒரு கை சுற்றி வளைத்துக்கொண்டது. அண்ணாந்து நோக்கினான்; காளாமுகக் கோலங்கொண்ட ஓர் ஆஜானுபாகுவான உருவம் கண் முன்னே தெரிந்தது. ஆகா! இவன் யார்? இங்கு எப்படி வந்தான்! இது என்ன இரும்புப் பிடி? கழுத்து நெரிகிறதே! மூச்சுத்திணறுகிறதே; விழி பிதுங்குகிறதே! இன்னும் சில கண நேரம் போனால், உயிரே போய்விடுமே...! வந்தியத்தேவன் ஒரு பெரு முயற்சி செய்து அந்த இரும்புக் கையின் பிடியைத் திமிறித் தளர்த்திக்கொண்டு வெளியில் பாய்ந்தான். பாய்ந்த வேகத்தில் தரையில் விழுந்தான். தலையிலே ஒரு பெரிய பாறாங்கல்லைப் போட்டதுபோல் இருந்தது. ஒருகணம் அவன் கண்களின் முன் கோடி சூரியர்கள் கோடானுகோடி கிரணங்களைப் பரப்பிக் கொண்டு பிரகாசித்தார்கள். அடுத்த கணத்தில் அவ்வளவு சூரியர்களும் மறைந்தார்கள். நாலாபுறமும் இருண்டு வந்தது. வந்தியத்தேவன் அக்கணமே நினைவை இழந்தான். 
யாழ்க் களஞ்சியத்திலிருந்து, அதன் வாசலில் கிடந்த வந்தியத்தேவனுடைய உடலை மிதித்துத் தாண்டிக்கொண்டு, ஒரு கோர பயங்கரமான காளாமுக உருவம் வெளிப்பட்டது. யாழ்க் களஞ்சியத்தின் அருகில் தடால் என்ற சத்தத்தைக் கேட்டு நந்தினி திரும்பிப் பார்த்தாள். காளாமுக உருவம் கையில் கத்தியை உருவிக் கொண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டாள். விழிகள் பிதுங்கும்படியாக வியப்புடன் அந்த உருவத்தை நோக்கினாள். அவள் வயிற்றிலிருந்த குடல்கள் மேலே ஏறி மார்பையும், தொண்டையையும் அடைத்துக்கொண்டதாகத் தோன்றியது. கண்களைத் துடைத்துக் கொண்டு, எதிரே பார்த்தாள். கரிகாலன் கீழே விழுந்து கிடக்கக் கண்டாள். அவன் உடலில் வீர பாண்டியனுடைய வாள் பாய்ந்திருந்ததையும் கண்டாள். 
அப்போது அவளுடைய தொண்டையிலிருந்து விம்மலும், சிரிப்பும் கலந்த ஒரு பயங்கரமான தொனி எழுந்தது. அது அந்த அறையிலிருந்த கட்டில் முதலிய அசேதனப் பொருள்களைக் கூட நடுங்கும்படி செய்தது. 
"அடி பாதகி! சண்டாளி! உன் பழியை நிறைவேற்றி விட்டயா?" என்று கூறிக்கொண்டே காளாமுக உருவம் அவளை மேலும் நெருங்கி வந்தது. 
அதே சமயத்தில் வேட்டை மண்டபத்தின் இரகசியக் கதவின் வழியாக உள்ளே நுழைந்த புலி உருவத்தின் மறைவில் ரவிதாஸனும் பிரவேசித்தான், காளாமுகனைப் பார்த்தவுடனே புலியைத் தூக்கி வீசி எறிந்தான். அந்த அறைக்கு இலேசாக வெளிச்சம் தந்து கொண்டிருந்த விளக்கை அந்தச் செத்த புலியின் உடல் தாக்கியது. விளக்கு அறுந்து விழுந்தது. அது அணைவதற்கு முன்னால் ஒரு கண நேரம் மணிமேகலையின் பயப்பிராந்தி கொண்ட முகத்தைக் காட்டியது. 'கிறீச்' சென்று கூவிக் கொண்டே மணிமேகலை அங்கிருந்து ஓடினாள். 
அறையில் காரிருள் சூழ்ந்தது. அந்தக் காரிருளில் சோகந் ததும்பிய விம்மல் குரலும், வெறி கொண்ட சிரிப்பின் ஒலியும், மரணத் தறுவாயில் கேட்கும் முனகல் ஓசையும் மனிதர்கள் விரைந்து அங்குமிங்கும் ஓடும் காலடிச் சத்தமும் கலந்து கேட்டன.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel