←அத்தியாயம் 55: "பைத்தியக்காரன்"

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: "சமய சஞ்சீவி"

அத்தியாயம் 57: விடுதலை→

 

 

 

 

 


578பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: "சமய சஞ்சீவி"கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

தியாக சிகரம் - அத்தியாயம் 56[தொகு]
"சமய சஞ்சீவி"


அன்றிரவு கடைசிக் காவலன் வந்துவிட்டுப் போனதும் வந்தியத்தேவன் அடுத்த அறையிலிருந்த பைத்தியக்காரன் என்ன சொல்லப் போகிறான் என்று அறிய ஆவலுடன் காத்திருந்தான். அந்த அறையின் ஒரு பக்கத்துச் சுவரில் எலி பிறாண்டுவது போல் ஏதோ சத்தம் கேட்டது. வந்தியத்தேவனுக்குப் புலி, சிங்கத்தினிடம் பயமில்லை. ஆனால் பூனைகளுக்கும், எலிகளுக்கும் பயம். இரவெல்லாம் அந்த இருளடர்ந்த அறையில் எலிகளுடன் காலங்கழிக்க வேண்டுமோ என்று கவலைப்பட்டவனாக, "பைத்தியக்காரா! தூங்கிப் போய்விட்டாயா?" என்று கேட்டான். 
அதற்கு பதில் ஒன்றும் வரவில்லை. எலி பிறாண்டும் சத்தம் மட்டும் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. 
சற்று நேரத்துக்கெல்லாம் சுவரிலிருந்து சில கற்கள் பெயர்ந்து விழுந்து துவாரம் ஒன்று உண்டாயிற்று. அதன் வழியாகப் பைத்தியக்காரன் குரல், "அப்பனே தூங்கிவிட்டாயா?" என்று கேட்டது. 
"இல்லை; தூங்கவில்லை உனக்காகத்தான் காத்திருக்கிறேன் இது என்ன வேலை?" என்றான் வந்தியத்தேவன். 
"இது ஆறு மாதத்து வேலை. அதற்கு முன்னால் என் கைச் சங்கிலியைத் தறித்துக்கொள்வதற்கு ஆறு மாதம் பிடித்தது என்றான் பைத்தியக்காரன். சற்று நேரத்துக்கெல்லாம் துவாரத்தை இன்னும் பெரிதாகச் செய்து கொண்டு வந்தியத்தேவனுடைய அறைக்குள்ளே அவன் புகுந்தான்.
வந்தியத்தேவன் அவனுடைய கரங்களைப் பிடித்து இறக்கிவிட்ட பிறகு, "இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தச் சுவரில் துவாரம் செய்தாயே? இதில் என்ன பயன்? வெளிச் சுவரில் துவாரம் போட்டாலும் பயன் உண்டு!" என்றான். 
"இங்கிருந்து வெளிச் சுவர் என்பதே கிடையாது. புலிக் கூண்டு அறையின் வழியாகத்தான் வெளியேற முடியும். இந்த அறை சில சமயம் காலியாக இருப்பதுண்டு அப்போது பூட்டப்படாமலுமிருக்கும். ஆகையால் என் அறையிலிருந்து தப்பிச் செல்வதைவிட இங்கிருந்து தப்புவது சுலபம்." 
"இன்றைக்கு வந்த என்னை நம்பி இதை வெளிப்படுத்தி விட்டாயே? நான் உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டால் என்ன செய்வாய்?" 
"ஒருவனை நம்பலாம், நம்பக்கூடாது என்பதைக் குரலிலிருந்தே கண்டுபிடிக்கலாம். சேந்தன் அமுதனை நம்புவேன். ஆனால் பினாகபாணியை நம்பமாட்டேன். உன் குரலிலிருந்து உன்னை நம்பலாம் என்றும் முடிவு செய்தேன். மேலும் தப்பிச் செல்லும் காரியம் இப்போது நடந்தால்தான் நடந்தது. சரியான சந்தர்ப்பம் இதுதான்!" 
"அது ஏன்?" 
"காவற்காரர்கள் மாறியிருக்கிறார்கள் என்று சொன்னேன் அல்லவா? அவர்களில் இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். புலிக் கூண்டைத் திறந்து விடுவதைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். 'புலிக் கூண்டைத் திறக்கும்போது நம் மேலேயே புலி பாய்ந்து விட்டால் என்ன செய்கிறது?' என்று ஒருவன் கேட்டான். அதற்கு மற்றவன் 'சாகவேண்டியதுதான்!' என்றான். இதிலிருந்து அவர்கள் புலிக் கூண்டைத் திறக்கமாட்டார்கள் என்பது நிச்சயம். புதிய காவற்காரர்களாதலால் திடீரென்று பாய்ந்து சென்று தப்பித்துக் கொள்ளலாம் என்று என் எண்ணம். எப்படியிருந்தாலும், இங்கேயே கிடந்து சாவதைக் காட்டிலும் விடுதலைக்கு ஒரு முயற்சி செய்து பார்ப்பது நல்லதல்லவா?" 
"உண்மைதான்!" 
"ஒருவனாக முயற்சி செய்வதைக் காட்டிலும், இரண்டு பேராக முயற்சி செய்வது எளிது. நீ என்னைப் போல் இல்லை; புதிதாக வந்தவன், நல்ல திடகாத்திரனாயிருக்கிறாய். இரண்டு காவலர்களை நாம் இருவரும் கட்டிப் போட்டுவிட்டு அவர்களிடமிருந்து சாவிகளைப் பிடுங்கிக் கொண்டு வெளியேறலாம் அல்லவா?" 
"நல்ல யோசனைதான், எப்பொழுது புறப்படலாம்?" 
"கொஞ்சம் பொறு; சரியான சமயம் பார்த்துச் சொல்கிறேன்". 
"நானும் ரொம்பக் களைத்துப் போயிருக்கிறேன், ஒருநாள்...இரண்டு நாள் போனாலும் நல்லதுதான்." 
பிறகு அந்தப் பைத்தியக்காரன் அவன் சிறையிலிருந்த காலத்தில் வெளி உலகில் நடந்த முக்கிய சம்பவங்களையெல்லாம் வந்தியத்தேவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஆதித்த கரிகாலர் இறந்தார் என்று கேட்டதும், "ஆகா, அப்படியானால் நாம் இப்போது வெளியேறுவது மிக முக்கியம்!" என்றான். 
"ஏன் அப்படிச் சொல்கிறாய்?" 
"அடுத்தபடி இராஜ்யத்துக்கு யாரையாவது இளவரசுப் பட்டம் கட்ட வேண்டும் அல்லவா?" 
"இளவரசு பட்டம் என்ன? சக்கரவர்த்தி உடல் நோயினாலும் மனச் சோர்வினாலும் பீடிக்கப்பட்டிருக்கிறார். இராஜ்யபாரத்தை அடியோடு விட்டு நீங்க விரும்புகிறார்!" 
"யாருக்கு மகுடம் சூட்டுவதாகப் பேச்சு நடக்கிறது?" 
"சிற்றரசர்கள் சிலர் மதுராந்தகருக்குப் பட்டம் கட்ட விரும்புகிறார்கள்! மற்றும் சிலர் பொன்னியின் செல்வருக்கு மகுடம் சூட்ட விரும்புகிறார்கள்!" 
"சக்கரவர்த்தியின் கருத்து என்ன?" 
"இராஜ்யத்தில் வீண் சண்டை ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு மதுராந்தகர் சிங்காதனம் ஏறுவதையே சக்கரவர்த்தி விரும்புகிறாராம்." 
"அப்படியானால், நாம் சீக்கிரத்தில் வெளியேற வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியமாகிறது!" என்றான் அந்தப் பைத்தியக்காரன். 
பிறகு, ஈழ நாட்டில் பாண்டியர் மகுடமும், இரத்தின ஹாரமும் இருக்குமிடம் பற்றித் தான் தெரிந்து கொண்ட விதத்தை விவரமாகக் கூறினான். சோழ குலத்து இரகசியத்தைப் பற்றி மறுபடியும் வந்தியத்தேவன் கேட்டதற்கு, "அதை இப்போது சொல்ல மாட்டேன். இருவரும் தப்பிப் பிழைத்து வெளியேறினோமானால் சொல்லுவேன். இல்லாவிடில் அந்த இரகசியம் என்னோடு மடிய வேண்டியதுதான்!" என்றான். 
வந்தியத்தேவனுடைய உள்ளம் தீவிரமாகச் சிந்தனையில் ஆழ்ந்தது. அந்தப் பைத்தியக்காரன் சொல்லக் கூடிய அத்தகைய இரகசியம் என்னவாயிருக்கும் என்று ஊகிக்கப் பார்த்தான். பற்பல நிழல் போன்ற நினைவுகள் அவனுடைய மனத்திரையில் தோன்றி மறைந்தன. 
திடீரென்று வைத்தியர் மகனைப் பார்த்ததும் வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. தானும், அடுத்த அறையில் உள்ளவனும் சேர்ந்து செய்திருக்கும் யோசனைக்கு அவன் தடை போட்டுவிடுவானோ என்று கவலைப்பட்டான். பினாகபாணியின் நயவஞ்சகப் பேச்சை அவன் நம்பவில்லை. அவனும் பைத்தியக்காரனும் இவ்விஷயத்தில் ஒரு மனமுடையவர்களாயிருந்தார்கள். ஏதோ துர் எண்ணத்துடனேதான் பினாகபாணி வந்திருக்கிறான் என்று முடிவு செய்து கொண்டார்கள். ஒருவரைச் சிறையில் விட்டு விட்டு இன்னொருவர் வெளியேறிப் போவதில்லையென்று சபதம் எடுத்துக் கொண்டார்கள். மறுபடியும் பினாகபாணி வந்தால் என்ன செய்கிறது என்றும் தீர்மானித்துக் கொண்டார்கள். 
எனவே, இரண்டாவது தடவை பினாகபாணி வந்தபோது இருவரும் முன் ஜாக்கிரதையாக இருந்தார்கள். பைத்தியக்காரனிடம் முத்திரை மோதிரத்தைக் காட்டி அவனுடைய இரகசியத்தைச் சொல்லும்படி வைத்தியர் மகன் கேட்டுக் கொண்டிருந்த போது, வந்தியத்தேவன் இரண்டு அறைகளுக்கும் நடுவில் சுவரில் ஏற்கெனவே செய்திருந்த துவாரத்தின் வழியாக ஓசைப்படாமல் புகுந்து அந்த அறைக்குள்ளே வந்தான். பினாகபாணி திரும்பி அவனைத் தாக்கவே, இருவரும் துவந்த யுத்தம் செய்தார்கள். வேறு சமயமாயிருந்தால் வந்தியத்தேவன் வைத்தியர் மகனை ஒரு நொடியில் வென்று வீழ்த்தியிருப்பான். மேலே நெருப்புச் சுட்ட புண்கள் இன்னும் நன்றாக ஆறாதபடியாலும், காளாமுக ராட்சதன் அவனுடைய தொண்டையைப் பிடித்து அமுக்கிய இடத்தில் இன்னும் வலித்துக் கொண்டிருந்தபடியாலும் துவந்த யுத்தம் நீடித்தது. அச்சமயத்தில் பைத்தியக்காரன் கையில் சங்கிலியுடன் வந்து பினாகபாணியின் கழுத்தில் போட்டு இறுக்கினான். பினாகபாணி கீழே விழுந்தான். 
பிறகு, இருவருமாக அவனை அந்த அறையின் சுவர்களில் இருந்த இரும்பு வளையங்களுடன் சேர்த்துக் கட்டினார்கள். அப்படிக் கட்டும் போதே வந்தியத்தேவன், "பினாகபாணி! நாம் இருவரும் சக்கரவர்த்தியைக் குணப்படுத்துவதற்காகச் சஞ்சீவி மூலிகையைத் தேடி ஈழ நாட்டுக்குப் போனோமே, நினைவு இருக்கிறதா? அப்போது நாம் சஞ்சீவி கொண்டு வருவதில் வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது எங்களுக்குச் 'சமய சஞ்சீவி'யாக வந்து சேர்ந்தாய்! இந்த உதவிக்காக மிக்க வந்தனம். வைத்தியர் மகனாகிய நீ இனிமேல் வைத்தியத்துடன் நிற்பது நல்லது. ஒற்றன் வேலையில் தலையிட்டு ஏன் வீணாகக் கஷ்டத்தை விலைக்கு வாங்கிக்கொள்கிறாய்?" என்று சொன்னான். 
பினாகபாணி அதற்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை. திடீரென்று நேர்ந்த இந்த விபத்தினால் அவன் பேச்சிழந்து நின்றான். ஆனால் அவனுடைய கண்கள் மட்டும் கோபக் கனலைக் கக்கின என்பது அவன் கொண்டு வந்து கீழே போட்டிருந்த தீவர்த்தி வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது. பின்னர் இருவரும் வைத்தியர் மகன் கொண்டு வந்திருந்த அதிகார முத்திரையைக் கைப்பற்றிக் கொண்டார்கள். பினாகபாணி தலையில் சுற்றியிருந்த துணியை எடுத்து வந்தியத்தேவன் தன் தலையில் சுற்றிக் கொண்டான். 
அந்த அறையிலிருந்து வெளிவந்து கதவைப் பூட்டினார்கள். பிறகு மெள்ள நடந்து பாதாளச் சிறையின் படிக்கட்டில் ஏறினார்கள். வழி சரியாகத் தெரியாதவர்களாதலால், நிதானமாக அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். புலிகளின் உறுமல் சத்தம் கேட்டதும் இருவருக்கும் மேலே போகச் சிறிது தயக்கமாகவே இருந்தது. ஒருவேளை தாங்கள் தப்புவதை எப்படியோ அறிந்து புலியைக் கூண்டிலிருந்து அவிழ்த்து விட்டிருப்பார்களோ! 
வந்தியத்தேவனும் பைத்தியக்காரனும் புலிக் கூண்டு அறைக்குள்ளே மெதுவாக எட்டிப் பார்த்தார்கள். அந்த அறையில் அச்சமயம் ஒரே ஒரு காவலன் தான் இருந்தான். உறுமிய புலிகள் இருந்த கூண்டை அவன் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். ஒருவேளை புலிக் கூண்டைத் திறந்து புலிகளைத் தங்கள் மீது ஏவிவிட அவன் யோசிக்கிறானா, என்ன? அச்சமயம் வைத்தியர் மகன் கூச்சல் போட ஆரம்பித்திருந்தான். அந்தக் கூச்சல் இக்காவலனுடைய சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருக்கலாம் அல்லவா? பினாகபாணியின் வாயில் துணியை அடைத்துவிட்டு வராதது எவ்வளவு தவறாகப் போயிற்று?

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel