←அத்தியாயம் 65: "ஐயோ, பிசாசு!"

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: மதுராந்தகன் மறைவு

அத்தியாயம் 67: "மண்ணரசு நான் வேண்டேன்"→

 

 

 

 

 


588பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: மதுராந்தகன் மறைவுகல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

தியாக சிகரம் - அத்தியாயம் 66[தொகு]
மதுராந்தகன் மறைவு


குதிரையும் தானுமாகத் திடீரென்று உருண்டு விழுந்ததும் சிறிதும் மனம் கலங்காத கந்தமாறன், எழுந்திருக்கும்போதே கையில் வேலை எடுத்துக்கொண்டு எழுந்தான். அவனுடைய நோக்கம் ஏற்கெனவே மறு கரையை அணுகிக் கொண்டிருந்த குதிரையின் பேரில் சென்றுவிட்டது. அக்குதிரை மேல் ஏறிக் கொண்டிருந்தவன் சந்தேகமின்றி வந்தியத்தேவன்தான் என்று அவன் நிச்சயித்துக் கொண்டான். 
வந்தியத்தேவன் பேரில் கந்தமாறன் கொண்டிருந்த பழைய சிநேகம் இப்போது கடும் பகையாக மாறியிருந்தது. பலவிதத்திலும் வந்தியத்தேவன் சிநேகத் துரோகம் செய்து விட்டதாக அவன் எண்ணினான். தனக்கும் தன் குடும்பத்துக்கும் நேர்ந்த அபகீர்த்திக்கெல்லாம் காரணம் வந்தியத்தேவன்தான்! தன் வீட்டில் வந்து தங்கியிருந்தபோது தெரிந்து கொண்ட இரகசியத்தைப் பலரிடத்திலும் சொல்லியிருக்கிறான். இராஜ குடும்பத்தாரிடமும் கூறியிருக்கிறான். எதற்காக? சோழ குலத்தினிடம் கொண்ட பக்தி விசுவாசம் காரணமாகவா? இல்லவே இல்லை! இந்த இரகசியத்தைச் சொல்லி அவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதித்துக் கொண்டு பிறகு அவர்களுக்கும் துரோகம் செய்வதற்காகத்தான்! பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுக்கு அவன் உதவி செய்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை. இந்த இரட்டைத் துரோகத்தை நந்தினியின் தூண்டுதலினால், அவன் செய்தானா, வேறு தன் சொந்த லாபங்கருதியே செய்தானா என்பது தெரியவில்லை. நந்தினியின் மாய வலையில் தானும் சில காலம் சிக்கியிருந்தது உண்மையேதான்! ஆனாலும் இம்மாதிரி பயங்கரத் துரோகச் செயல்களைக் கனவிலேனும் தான் செய்ய எண்ணியிருக்க முடியுமா? 
இவற்றையெல்லாம் விடத் தனது அருமைச் சகோதரி மணிமேகலையின் மனத்தைக் கெடுத்துவிட்டதன் பொருட்டுக் கந்தமாறனுக்கு வந்தியத்தேவன் மீது அளவில்லாத கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. மணிமேகலையைச் சாம்ராஜ்ய சிங்காசனத்தில் மணிமகுடம் தரித்துச் சக்கரவர்த்தினியாக வீற்றிருக்கச் செய்ய வேண்டுமென்று கந்தமாறன் ஆசை கொண்டிருக்க, அந்தக் கள்ளங்கபடமற்ற பெண்ணைக் 'கரிகாலரை நான்தான் கொன்றேன்' என்று பலரறியப் பிதற்றும்படி செய்த கொடிய வஞ்சகன் அல்லவா அவன்! அவ்வளவு பெரிய பாதகங்களைச் செய்தவன் உயிர் தப்பி ஓடும்படி விட்டுவிடுவதா? அதைத்தான் பார்த்துக் கொண்டிருப்பதா? ஒரு நாளும் இல்லை! வந்தியத்தேவனை உயிரோடு பிடித்துக்கொண்டு போக முடியுமானால் நல்லதுதான்! முடியாத வரையில், அவனைக் கொன்று தொலைத்துவிட்டோ ம் என்ற ஆறுதலுடனாவது இங்கிருந்து திரும்பிப் போக வேண்டும். இந்தத் தீர்மானத்துடனேதான் கந்தமாறன் அந்த மனித வேட்டைக்குப் புறப்பட்டான். 
இப்போது அவனுடைய குதிரை எதிர்பாராத விதமாகத் தடுக்கி விழுந்து விட்டது. அது இனி பிழைப்பதே துர்லபம். வைத்தியர் மகன் பினாகபாணியின் குதிரைக்கும் அதே கதிதான்! 
வந்தியத்தேவனோ நதியின் அக்கரையை நெருங்கி விட்டான்! பின்னால் வந்த வீரர்கள் அங்கு வந்து சேர சிறிது நேரம் பிடிக்கும். அவர்கள் வந்து விட்டாலும் வெள்ளத்தைக் கடந்து அக்கரை சென்று வந்தியத்தேவனைப் பிடிப்பது இயலாத காரியம். ஆகையால் அவனைக் கொன்று விடுவது ஒன்றே செய்யத் தக்கது... 
இவ்வளவு எண்ணங்களும் கந்தமாறனுடைய உள்ளத்தில் சில கண நேரத்தில் தோன்றி மறைந்தன. எனவே, தரையிலிருந்து எழுந்து நின்றதும், கால்களை நன்றாக ஊன்றிக் கொண்டு, கையிலிருந்த வேலை உயர்த்திக் குறிபார்த்துப் பலங்கொண்ட மட்டும் வீசி எறிந்தான். 
வேல் 'வீர்' என்ற சத்தத்துடன் சென்று கண்மூடித்திறக்கும் நேரத்தில் மதுராந்தகன் பேரில் பாய்ந்தது. 'வீல்' என்று சத்தமிட்டுவிட்டு, மதுராந்தகன் தண்ணீரில் விழுந்தான். குதிரை மட்டும் தட்டுத்தடுமாறி கரைமேல் ஏற முயன்றது. 
மிகச் சொற்ப நேரத்துக்குள் நடந்துவிட்ட மேற்கூறிய நிகழ்ச்சிகளையெல்லாம் மரக் கிளையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த கருத்திருமன், உள்ளம் பதறி, உடலும் நடுங்கினான். 
இப்படியெல்லாம் நடக்ககூடும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. வேகமாக வந்து திடீரென்று தடுக்கி விழுந்த குதிரைகளுக்கு அடியில் அகப்பட்டுக் கொண்டவர்கள் உயிரோடு தப்பி எழுந்தாலும் கைகால் ஒடிந்தவர்களாக எழுந்திருப்பார்கள் என்று அவன் எண்ணியிருந்தான். 
அவன் சற்றும் எதிர்பாராதபடி எல்லாம் நடந்து விட்டது. கீழே விழுந்தவர்களில் ஒருவன் எழுந்து நின்று வேல் எறிய, அதுவும் மதுராந்தகன் பேரில் குறி தவறாமல் சென்று பாய்ந்து அவனை வெள்ளத்தில் வீழ்த்திவிட்டது. இதனால் ஏற்பட்ட முதல் அதிர்ச்சியைச் சமாளித்துக் கொண்டு பயங்கரமான கூக்குரலுடன் கீழே பாய்ந்தான். 
ஆத்திர வெறியினால் ஏற்பட்ட ராட்சத பலத்துடன் கந்தமாறனைத் தாக்கிக் கீழே தள்ளிவிட்டு அப்பால் சென்றபோது, அப்போதுதான் தட்டுத் தடுமாறி எழுந்து கொண்டிருந்த வைத்தியர் மகன் அவனைத் தடுக்கப் பார்த்தான். பினாகபாணிக்கு இதற்குள் பிசாசு பயம் நீங்கி, மரத்தின் மேலிருந்தவன் கருத்திருமன் என்பது தெரிந்து போயிருந்தது. 
கருத்திருமன் தன் உள்ளத்தில் பொங்கிய கோபத்தையெல்லாம் செலுத்திக் கையிலிருந்த சிறிய கத்தியால் பினாகபாணியைக் குத்திக் கீழே தள்ளிவிட்டுப் பாலத்தை நோக்கி ஓடினான். மூங்கில் மரப் பாலத்தின் மீது ஒரு மனிதன் ஓடுவதைக் கந்தமாறனுக்கும் பினாகபாணிக்கும் பின்னால் குதிரைகள் மீது வந்த வீரர்கள் பார்த்தார்கள். தாங்கள் வருவதற்கு முன் நிகழ்ந்தவற்றை ஒருவாறு அவர்கள் ஊகித்துத் தெரிந்து கொண்டு குதிரைகளை அங்கே நிறுத்தினார்கள். 
கந்தமாறன் "பிடியுங்கள்! பிடியுங்கள்! பாலத்தின் மேல் ஓடுகிறவனைப் பிடியுங்கள்!" என்று கூவினான். 
நாலு பேரும் குதிரை மேலிருந்து தடதடவென்று குதித்துப் பாலத்தின் மீது முன்னால் சென்ற கருத்திருமனைத் தொடர்ந்து ஓடினார்கள். 
திடீரென்று இரண்டாவது முறையும் தள்ளப்பட்டுத் தலை குப்புற விழுந்த அதிர்ச்சியினால் சிறிது நேரம் செயலற்றுக் கிடந்த கந்தமாறன் விரைவிலேயே மறுபடியும் சமாளித்துக் கொண்டு எழுந்து அந்த நாலு வீரர்களுக்குப் பின்னால் தானும் ஓடினான். 
கத்தியினால், குத்தப்பட்டுப் படுகாயமுற்றிருந்த வைத்தியர் மகனும், ஆவேசங்கொண்டு எழுந்து அவர்களைப் பின் தொடர்ந்து பாலத்தின் மீது சென்றான். 
ஆனால் ஐந்தாறு அடி எடுத்து வைப்பதற்குள் அவனுடைய ஜீவசக்தி குன்றிவிட்டது. கண்கள் இருண்டு வந்தன. தலை சுற்றியது. காலை ஊன்றி நிற்கப் பார்த்தும் முடியாமல் தள்ளாடி நதி வெள்ளத்தில் விழுந்தான். அவன் அவ்வாறு விழுந்ததை முன்னால் சென்றவர்கள் யாரும் கவனிக்கவில்லை. 
பாவம், எத்தனை எத்தனையோ மனோராஜ்யங்கள் செய்து கொண்டிருந்த வைத்தியர் மகன் பினாகபாணி தன்னுடைய துராசைகளில் எதுவும் நிறைவேறப் பெறாதவனாக உயிர் நீத்தான்! அவன் கட்டிய ஆகாசக் கோட்டைகள் எல்லாம் வடவாற்று வெள்ளத்தில் மூழ்கி மறைந்தன! அவனுடைய உடலுக்கும் அந்த நதியில் ஓடிய பெரும் பிரவாகமே சமாதிக் குழி ஆயிற்று. 
கந்தமாறனைத் தாக்கித் தள்ளிவிட்டு வைத்தியர் மகனைக் கத்தியால் குத்திவிட்டு மூங்கில் பாலத்தின் மீது விரைந்து ஓடிய கருத்திருமன், அந்தப் பாலத்தில் முக்கால் பங்கு தூரம் கடந்ததும் ஒரு கணம் நின்று திரும்பிப் பார்த்தான். அப்போதுதான் குதிரைகள் மீது வந்த ஆட்கள் கீழே குதித்துப் பாலத்தின் முனையை அடைந்திருப்பதைக் கவனித்தான். உடனே அவன் ஒரு விந்தையான காரியம் செய்தான். அவன் நின்ற இடத்தில் மூங்கில் கழிகளை ஒன்றோடொன்று சேர்த்துக் கட்டியிருந்ததுடன், கீழேயும் முட்டுக் கொடுத்து நிறுத்தி இருந்தது. 
பினாகபாணியைக் குத்திய அதே கத்தியினால் அந்தக் கட்டுக்களைச் சடசட என்று அறுத்துவிட்டான். கீழே முட்டுக் கொடுத்திருந்த கழிகளையும் காலினால் உதைத்துத் தள்ளி விட்டு மேலே விரைந்து ஓடினான். 
அக்கரையை அடைந்ததும், அங்கேயும் மூங்கில் கழிகளை மரத்து வேருடன் சேர்த்துக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்தான். உடனே பாலத்தின் முனையை அப்படியே கைகொடுத்து நெம்பித் தூக்கி அப்புறப்படுத்தி நதியின் வெள்ளத்தோடு விட்டான். 
மறுகணம் அந்த மூங்கில் கழிப் பாலத்தில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி தனியாகப் பிய்த்துக் கொண்டு புறப்பட்டு ஆற்று வெள்ளத்தோடு மிதந்து செல்லத் தொடங்கியது. 
பாலத்தின் மேலே ஓடி வந்தவர்கள், அவ்விதம் அங்கே பாலம் பிய்த்துக்கொண்டு போனதைக் கவனியாமல் மேலே மேலே ஓடி வந்து ஒவ்வொருவராக வெள்ளத்தில் விழுந்தார்கள்! அவர்கள் எல்லாருக்கும் கடைசியாக வந்த கந்தமாறன் மட்டுமே அவ்வாறு ஆற்றில் விழாமல் தப்பினான்.
எதிர்பாராமல் வெள்ளத்தில் விழுந்தவர்கள் தண்ணீரைக் குடித்துத் திணறித் திண்டாடிய பிறகு, வெளியில் தலையை நீட்டினார்கள். 
கந்தமாறன் அவர்களைப் பார்த்து அக்கரைக்கு நீந்திச் சென்று கரையேறும்படி சத்தம்போட்டுக் கட்டளை இட்டான். அவர்களில் இரண்டு பேர் அதைத் தெரிந்து கொண்டு அக்கரையை நோக்கி நீந்திச் சென்றார்கள். மற்ற இருவர் மிகமிகப் பிரயாசைப்பட்டு எதிர் நீச்சல் நீந்தி வந்து எஞ்சி நின்ற பாலத்தைப் பிடித்துக் கொண்டு அதன் மேல் ஏறினார்கள். 
அவர்களை முதலில் கந்தமாறன் நன்றாகத் திட்டினான். ஆனால் அவர்களை மறுபடியும் நீந்திப்போகச் சொல்வதில் பயனில்லை என்று உணர்ந்தான். எனவே, பாலத்திலிருந்து இன்னும் சில மூங்கில் கழிகளைப் பிடுங்கித் தெப்பத்தைப் போல் கட்டும்படி செய்தான். அதை வெள்ளத்தில் மிதக்கவிட்டுக் கந்தமாறனும் மற்ற இருவரும் அதைப் பிடித்துக் கொண்டு மிதந்து அக்கரையை அடைந்தார்கள். 
அதற்குச் சற்று முன்னால் தட்டுத் தடுமாறி அக்கரை சேர்ந்திருந்த மற்ற இரு வீரர்களையும் சந்தித்தார்கள். அவர்கள் தாங்கள் கரையேறுவதற்குச் சற்று முன்பே அக்கரை சேர்ந்த மனிதன் இருளில் மறைந்து விட்டதாகவும், இரண்டு குதிரைகள் போகும் காலடிச் சத்தம் கேட்டதாகவும் சொன்னார்கள். குதிரைகளைத் தொடர்ந்து கால் நடையாகப் போவதில் பயனில்லை என்று தாங்கள் நின்று விட்டதாகவும் அவர்கள் கூறினார்கள். 
ஆனால் கந்தமாறன் அவ்விதம் நின்று விடுவதற்கு விருப்பமில்லை. வைத்தியர் மகன் கூறிய, சிறையிலிருந்த பைத்தியக்காரன்தான் மரத்திலிருந்து குதித்துத் தன்னைத் தள்ளிவிட்டுப் பாலத்தின் மேல் ஓடியவனாக இருக்க வேண்டும். வந்தியத்தேவனைத் தப்புவிப்பதற்காகவே அவன் அவ்விதம் சாலைக்குக் குறுக்கே கயிற்றைக் கட்டிவிட்டு மரத்தின் மேல் ஏறிக் காத்திருக்க வேண்டும். தன்னுடைய வேலுக்கு இரையானவன் வந்தியத்தேவன்தான் என்பதில் ஐயமில்லை. அவன் குதிரை மேலிருந்து வெள்ளத்தில் தலை குப்புற விழுந்ததை அவன் கண்களாலேயே பார்த்தாகி விட்டது. ஆயினும் உயிர் பிரிந்த அவனுடைய உடலைக் கண்டுபிடித்துப் பார்த்துவிட்டால், அவன் உள்ளம் மேலும் திருப்தி அடையும். ஒருவேளை தஞ்சாவூருக்கே வந்தியத்தேவன் உடலை எடுத்துக்கொண்டு போனாலும் போகலாம். சோழ குலத்துக்கு மாபெரும் துரோகம் செய்த ஒருவனைக் கொன்று கொண்டு வந்த பெருமையை அடையலாம் அல்லவா? அதன் மூலம் சம்புவரையர் குலத்துக்கு நேர்ந்த அபகீர்த்தியையும் ஓரளவு போக்கிக் கொள்ளலாம். வந்தியத்தேவன் தப்பி ஓடிப் போக முயன்றது ஒன்றே அவன் குற்றத்தை நிரூபிக்கப் போதுமான காரணம் ஆகும். ஆதித்த கரிகாலரைக் கொன்றவன் வந்தியத்தேவன் என்பது நிச்சயமாகி விட்டால், அந்தப் பயங்கரமான பழியைச் சம்புவரையர் குலம் சுமக்க வேண்டியிராதல்லவா? 
இவ்வாறு யோசனை செய்து கொண்டு கந்தமாறன் வடவாற்றங்கரையோடு கீழ் நோக்கிச் சென்றான். வீரர் நால்வரும் அவனைப் பின்பற்றிச் சென்றார்கள். வந்தியத்தேவனுடைய உடல் எங்கேயாவது கரையில் ஒதுங்கிக் கிடக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சென்றார்கள். இருளடர்ந்த இரவு நேரத்தில் இந்தக் காரியம் அவ்வளவு சுலபமாக இல்லைதான். ஆயினும் கந்தமாறன் நம்பிக்கையைக் கைவிடாமல் மேலே மேலே போனான். இவ்வாறு வெகுதூரம் போன பிறகு பெரியதோர் அருவி மலையிலிருந்து விழுவது போன்ற ஓசை கேட்கலாயிற்று. அந்த ஓசை எழுந்த இடத்தை நெருங்கிச் சென்று பார்த்த போது, அங்கே நதியின் குறுக்கே ஒரு கலங்கல் கட்டியிருந்தது தெரிய வந்தது. அவ்விடத்தில் தண்ணீர் தேங்கி நின்று, அடுத்தாற்போல் பள்ளத்தில் அதிவேகமாக விழுந்து சுற்றிச் சுழன்று அலை மோதிக் கொண்டு சென்றது. 
வந்தியத்தேவனுடைய உடல் அதுவரையில் வந்திருக்குமானால் அந்தப் பெரும் பள்ளத்தில் விழுந்து அமிழ்ந்து போயிருக்கும். மறுபடியும் வெளியில் வருவதற்குப் பல நாட்கள் ஆகும். ஒரு வேளை வெளிப்படாமலே மறைந்து போனாலும் போய்விடலாம். ஆகையால் இனிமேலும் தேடிக் கொண்டு போவதில் பயனில்லை.... 
இவ்வாறு கந்தமாறன் எண்ணிக்கொண்டிருந்தபோதே, நதிக் கலங்கலைத் தாண்டிக்கொண்டு வெண்ணிற நுரை மயமாகப் பொழிந்து கொண்டிருந்த நீரோட்டத்தோடு ஏதோ ஒரு கரிய பொருள் விழுவது தெரிந்தது. ஆகா! அதுதான் வந்தியத்தேவனுடைய உடலாக இருக்கவேண்டும்! இந்த மண்ணுலகை விட்டு ஒரு பெரிய துரோகி ஒழிந்து போனான்! அவனுடைய பாவங்களை ஆண்டவன் மன்னிப்பாராக! - ஆனால் அது இயலுகிற காரியமா? அவனுடைய பாவங்களை ஆண்டவனால் கூட மன்னிக்க முடியுமா? முடியாது! முடியாது! அவற்றின் பலன்களை அவன் மறுபிறவியில் அனுபவித்தேயாக வேண்டும் அல்லவா? 
எப்படியாவது போகட்டும்; இவ்வுலகத்தில் வந்தியத்தேவனுடைய வாழ்க்கை முடிந்துவிட்டது. இனி, அவனைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தஞ்சைக்குத் திரும்பிப் போய் மற்றக் காரியங்களைக் கவனிக்கலாம். 
இவ்வாறு கந்தமாறன் முடிவு செய்து கொண்டு வந்த வழியே திரும்பினான்... ஆகா! தஞ்சையிலேதான் அவனுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் காத்திருந்தது? தான் வேல் எறிந்து கொன்று நதி வெள்ளத்தில் விழச் செய்தவன் வந்தியத்தேவன் அல்ல, இளவரசன் மதுராந்தகன் என்று அறியும்போது கந்தமாறன் எப்படித் திடுக்கிடுவான்? அவன் காலின் கீழ் பூமி பிளந்து விட்டதாகவே தோன்றினாலும் சிறிதும் வியப்படைவதற்கில்லை அல்லவா?

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel