←அத்தியாயம் 72: தியாகப் போட்டி

பொன்னியின் செல்வன்  ஆசிரியர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்திதியாக சிகரம்: வானதியின் திருட்டுத்தனம்

அத்தியாயம் 74: "நானே முடி சூடுவேன்!"→

 

 

 

 

 


595பொன்னியின் செல்வன் — தியாக சிகரம்: வானதியின் திருட்டுத்தனம்கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

 

தியாக சிகரம் - அத்தியாயம் 73[தொகு]
வானதியின் திருட்டுத்தனம்


அருள்மொழிவர்மரின் மனம் பெரிதும் கலக்கம் அடைந்திருந்தது. இராஜ்ய உரிமை சம்பந்தமாகச் சோழ நாட்டில் எழுந்த கொந்தளிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்ததே அதற்கு முக்கிய காரணமாகும். அவர் மக்களை அமைதிப்படுத்துவதற்காகப் போன இடங்களிலெல்லாம் மக்களின் ஆவேசந்தான் அதிகமாயிற்று. "பொன்னியின் செல்வரே எங்கள் மன்னர்!" "அருள்மொழிவர்மரே திருமுடி சூடவேண்டும்!" என்பவை போன்ற கோஷங்கள் எங்கெங்கும் எழுந்து நாலாபுறமும் முழங்கி எதிரொலி செய்தன. 
இவற்றுடன் போட்டியிட்டுக்கொண்டு, "பழங்குடி மக்களான பழுவேட்டரையர்கள் வாழ்க!" "கொடுங்கோலரான கொடும்பாளூர் வேளார் வீழ்க!" என்பவை போன்ற கோஷங்களும் சிற்சில இடங்களில் கேட்கும். அத்தகைய இடங்களில் அதிக பலம் தேடலாம் என்று இளவரசர் நெருங்கிச் சென்றால், உடனே அங்குள்ளவர்களும், "பொன்னியின் செல்வர் வாழ்க!" என்று முழங்கத் தொடங்கினார்கள். ஏன்? கோட்டைக் காவலுக்காக மாற்றி நியமிக்கப்பட்டிருந்த பழுவூர் வீரர்கள் கூடப் பொன்னியின் செல்வரைக் கண்டதும் தங்கள் பழைய கோஷங்களைக் கைவிட்டு, "அருள்மொழிவர்மரே திருமுடி புனையவேண்டும்!" "ஈழங்கொண்ட வீராதி வீரர், பொன்னியின் செல்வர் நீடூழி வாழ வேண்டும்!" என்று முழங்கலானார்கள். 
இவ்வாறு தம்முடைய முயற்சி பொது மக்களிடையிலும் போர் வீரர்களிடத்திலும் வெற்றி பெறாமல் போனது மட்டுமன்றி, தம் கருத்துக்கு மாறான சூழ்நிலை பலப்பட்டு வருவதைக் கண்டு பொன்னியின் செல்வர் சங்கடம் அடைந்தார். சில தினங்களாக மதுராந்தகத்தேவர் காணப்படாமல் இருந்தது வேறு அவருடைய கவலையை அதிகமாக்கிற்று. இதன் பொருட்டுச் சின்னப் பழுவேட்டரையர் கொடும்பாளூர் வேளார் மீது குற்றம் கூறிக் கொண்டிருந்தது அவருக்குத் தெரிந்திருந்தது. அதற்குக் காரணம் இல்லையென்று சொல்லமுடியாது. அருள்மொழிவர்மருக்கே அதைப் பற்றிச் சிறிது சந்தேகம் இல்லாமற் போகவில்லை. தமக்குப் பட்டம் சூட்டிவிடவேண்டும் என்று கொடும்பாளூர் வேளார், திருக்கோவலூர் மலையமான் ஆகியவர்கள் உறுதி கொண்டிருந்தார்கள். அவர்களுடன் முதன்மந்திரி அநிருத்தரும் கலந்து சதி செய்வது போலத் தோன்றியது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் மதுராந்தகத்தேவரை எங்கேனும் மறைத்து வைத்து விட்டார்களோ, என்னமோ? அல்லது ஒருவேளை மதுராந்தகத்தேவரின் உயிருக்கே அபாயம் விளைத்து விட்டார்களோ? 
அவருடைய அருமைத் தமையனாரான ஆதித்த கரிகாலரின் மரணத்துக்குப் பழுவேட்டரையர்களும், சம்புவரையர்களுமே பொறுப்பாளிகள் என்று வேளாரும், மலையமானும் கருதினார்கள். அதற்குப் பழிக்குப் பழி வாங்குவதாக எண்ணிக் கொண்டு மதுராந்தகருக்கு ஏதேனும் தீங்கு செய்துவிட்டார்களோ? ஆகா! இவர்களுக்கு என்ன? யோசனையின்றி ஏதோ செய்து விடுகிறார்கள். கடைசியாகப் பழி எல்லாம் தம் தலையில் அல்லவோ சார்ந்து விடும்? 
இன்றைக்கு சோழ நாட்டு மக்கள் இவர் பெயரைக் கூறி வாழ்த்துகிறார்கள்? இவரைச் சிங்காதனம் ஏற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். பொது ஜனங்களின் மனம் இப்படியே என்றுமிருக்குமா? மக்களின் உள்ளம் அடிக்கடி சலிக்கும் இயல்புடையதல்லவா? இதே ஜனங்கள் நாளைக்கு இவர் பேரிலேயே பழி கூறினாலும் கூறுவார்கள். சிங்காதனம் ஏறுவதற்காகச் சித்தப்பன் மதுராந்தகனைக் கொலை செய்வித்த பாதகன் என்று சொன்னாலும் சொல்வார்கள். ஏன்? கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலர் இறந்ததற்குக் கூடத் தம் பேரில் பழி சுமத்தினாலும் சுமத்துவார்கள். தெய்வமே! இத்தகைய பயங்கரமான பழிகளைச் சுமப்பதற்காகவா என்னைக் காவேரியில் முழுகிச் சாகாமல் மந்தாகினி தேவி காப்பாற்றினாள்? இன்று தெய்வமாகியிருக்கும் அந்தப் பெண்ணரசிதான் இந்த இக்கட்டான நிலையிலிருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும். வாழ்க்கையில் ஒருவன் அடையக்கூடிய அபகீர்த்திகளில் மிகக் கொடிய அபகீர்த்தி என்னைச் சாராமல் தடுத்து அருள் புரிய வேண்டும். 
ஈழநாட்டு இராஜ வம்சத்தில் நெருங்கிய உறவினர் ஒருவரையொருவர் கொன்று விட்டுச் சிங்காதனம் ஏறிய வரலாறுகள் அருள்மொழிவர்மனின் உள்ளத்தில் பதிந்திருந்தன. ஆகையால் அம்மாதிரியான இழிவைத் தரும் அபகீர்த்தி தன்னையும் அடையலாம் என்ற எண்ணமே அவருக்குச் சகிக்க முடியாத வேதனையை உண்டாக்கிற்று. யாரிடமாவது தம் அந்தரங்கத்தைச் சொல்லி யோசனை கேட்கலாம் என்றால், அதற்கும் தகுதியுள்ளவராக யாரும் தென்படவில்லை. அவரைச் சுற்றியுள்ளவர்கள் அனைவருமே அவருக்கு விரோதமாகச் சதி செய்கிறார்கள் என்று தோன்றியது. அவர்களில் சிலர் உண்மையாகவே அவரிடம் விரோத பாவம் கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர் அவருக்கு நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டு பயங்கரமான பழியை அவர் தலையில் சுமத்திவிடுவதற்குப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார்கள். 
இந்த நிலைமையில் யாரை நம்புவது, தம் அந்தரங்கத்தை யாரிடம் வெளியிட்டு ஆலோசனை கேட்பது என்று அவரால் நிர்ணயம் செய்யமுடியவில்லை. ஏன்? அவரிடம் இணையில்லா அன்பு கொண்டவரும் அவருடைய பக்திக்கு உரியவருமான தமக்கை குந்தவைப் பிராட்டியிடங்கூட அவருக்கு நம்பிக்கை குன்றிவிட்டது. அவரும் தனக்குத் தெரியாமல் ஏதோ காரியம் செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஏன்! அவருடைய உயிருக்கு உயிரான வானதிகூட அல்லவா அவருக்குத் தெரியாமல் எதையோ மறைத்து வைக்கப் பார்க்கிறாள்? திருட்டுத்தனமாக எங்கேயோ போய்விட்டு மர்மமான முகபாவத்துடன் திரும்பி வருகிறாள்?.... 
வேறு எதைப் பொறுத்தாலும் பொறுக்கலாம், வானதியின் மர்மமான நடத்தையை இனிப் பொறுக்க முடியாது என்று அருள்மொழிவர்மர் தீர்மானித்தார். வானதி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு எங்கேயோ தனியாகப் புறப்பட்டுப் போவதை அவர் கவனித்தார். உடனே அவளை அறியாமல் பின்தொடர்ந்து செல்லலானார். அரண்மனையின் மேல் மாடங்களின் தாழ்வாரங்களின் வழியாகச் சென்று, பின்னர்க் கீழ் மாடங்களில் இறங்கிச் சென்று, இருபுறமும் நெடிய சுவர்கள் அமைந்த இரகசியப் பாதை வழியாக வானதி மேலும் மேலும் சென்றாள். மதுராந்தகரை இரகசியமாகச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் இடத்துக்குத்தான் அவள் போகிறாள் என்று கருதி அருள்மொழிவர்மர் மிக்க ஆர்வத்துடனும், ஆத்திரத்துடனும் அவளைப் பின்தொடர்ந்து சென்றார். 
கடைசியாக, வானதி மற்றொரு பெரிய அரண்மனைப் பகுதியை அடைந்து அங்கு ஓர் அறைக்குள் பிரவேசித்துக் கதவைச் சாத்த முயன்றாள். அப்போது அருள்மொழிவர்மர் பாய்ந்து சென்று வானதியால் கதவைச் சாத்த முடியாமல் ஒரு காலை அறைக்குள்ளே வைத்தார். 
கதவைச் சாத்த முயன்ற அவளுடைய கரத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, "வானதி! உன் திருட்டுத்தனம் என்னிடம் பலிக்காது! இந்த அறையில் நீங்கள் ஒளித்து வைத்திருப்பது யார்?" என்று கோபமாக வினவினார். 
வானதியோ புன்னகை மலர்ந்த முகத்துடன், "ஐயா, உண்மையில் என் திருட்டுத்தனம் பலித்துவிட்டது! நான் அழைத்திருந்தால் தாங்கள் வந்திருக்க மாட்டீர்கள். உள்ளே வந்து இங்கு இருப்பது யார் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்!" என்றாள். 
மதுராந்தகத்தேவரை எதிர்பார்த்துச் சென்ற அருள்மொழிவர்மர், அங்கே வல்லவரையன் வந்தியத்தேவன் கட்டிலில் படுத்திருப்பது கண்டு வியப்பும், உவப்பும் அடைந்தார். 
அவரைப் பார்த்த வந்தியத்தேவன் படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து "ஐயா! வாருங்கள்! இரண்டு நாளாகத் தங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பெண்களின் சிறையிலிருந்து என்னை எப்படியாவது விடுதலை செய்யுங்கள்!" என்றான். 
பொன்னியின் செல்வர் விரைந்து சென்று வந்தியத்தேவன் அருகில் அமர்ந்து, "நண்பா! இது என்ன? இங்கு எப்படி வந்தாய்? பாதாளச் சிறையிலிருந்து தப்பியவன் இந்தப் பெண்களின் சிறையில் எப்படி அகப்பட்டுக் கொண்டாய்? இத்தனை நேரம் நீ ஈழத்தில் இருப்பாய் என்று அல்லவோ நினைத்தேன்? இன்னும் சில நாளைக்கெல்லாம் நானும் அங்கு வந்து உன்னுடனே சேர்ந்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன்?" என்றார். 
"ஆம் இளவரசே! இவ்வளவு நேரம் நான் ஈழ நாட்டில் இருக்கவேண்டியவன்தான்! அங்கே பாண்டிய வம்சத்தாரின் மணிமுடியையும், அவர்களுக்கு இந்திரன் தந்த இரத்தின ஹாரத்தையும் தேடிக் கொண்டிருக்க வேண்டியவன். சைவப் பைத்தியமான சேந்தன் அமுதனை வைத்தியர் மகன் கொல்லாமல் தடுக்க முயன்று இந்தத் துர்க்கதிக்கு உள்ளானேன். பினாகபாணியின் ஈட்டி என் மேல் பாய்ந்ததும் நினைவிழந்து விழுந்தேன். இந்தப் பெண்மணிகளின் சிறைக்கு எப்படி வந்து சேர்ந்தேன் என்பது தெரியாது. கருணைகூர்ந்து நான் இங்கிருந்து தப்பிச் செல்வதற்கு உதவ வேண்டும். இல்லாவிட்டால், தங்கள் அருமைச் சகோதரரும், என் அருமைத் தலைவருமான ஆதித்த கரிகாலரைக் கொன்றதாக என் பேரில் வீண் பழியைச் சுமத்திவிடுவார்கள்!" என்றான் வந்தியத்தேவன். 
வானதி குறுக்கிட்டு, "ஐயா! இவர் கூறுவது தவறு. இவர் தப்பி ஓடிப்போனால்தான் அத்தகைய பழி இவர் மீது ஏற்படும். உண்மை வெளியாகும் வரையில் இவர் இங்கேயே இரகசியமாக இருக்கவேண்டும் என்பது தங்கள் திருத்தமக்கையின் விருப்பம்" என்றாள். 
"இவள் கூறுவதிலும் உண்மை இருக்கிறது. நீ தப்பி ஓட முயன்றால்தான் அந்தப் பழி உனக்கு ஏற்படும். என்னையும் அது பிடிக்கலாம். அதைக் காட்டிலும் உண்மையில் நடந்ததை உலகம் அறிய நிரூபிப்பதுதான் நல்லது. முதலில், என்னிடம் சொல்லு! கடம்பூரில் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொல்லு!" என்றார் பொன்னியின் செல்வர். 
வந்தியத்தேவனும் தான் அறிந்தபடி நடந்ததையெல்லாம் கூறினான். எல்லாவற்றையும் கேட்ட பின்னரும், ஆதித்த கரிகாலரின் மரணம் நேர்ந்தது எப்படி என்பதை இளவரசரால் நிர்ணயிக்க முடியவில்லை.

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel