←← 4. பரம்பரை சாபம்
ரமண மகரிஷி ஆசிரியர் என். வி. கலைமணி5. அமைதியைத் தேடி
6. பிச்சை எடுத்த அன்னதானப் பிரபு →→
439966ரமண மகரிஷி — 5. அமைதியைத் தேடிஎன். வி. கலைமணி
5. அமைதியைத் தேடி
மாணவன் வெங்கட்ராமன் இங்கிலீஷ் இலக்கணத்தை, புத்தகத்திலே இருந்து பார்த்து பார்த்து எழுதிக் கொண்டிருந்தான். வகுப்பில் சில மாணவர்கள் ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தைக் கவனிப்பதில்லை! அதனால் அவர்கள் மறுநாள் அதை வீட்டிலே புத்தகம் பார்த்து எழுதுவார்கள். அவர்களுள் ஒருவனாக அன்று வெங்கட்ராமன் இருந்ததால், ஆசிரியருக்கு அஞ்சி இலக்கணத்தை எழுதிக் கொண்டிருந்தான்!.
இந்த நிலை வெங்கட்ராமனுக்கு ஏற்பட என்ன காரணம்? வகுப்பில் ஆசிரியர் பாடம் போதிக்கும்போது, அவன் ஏதோ சிந்தனையில் தன்னையுமறியாமல் மூழ்கி விடுவதுண்டு! இந்தப் பழக்கம் அவனுக்கு வழக்கமாகி விட்டதால், ஆசிரியர் அவனை அடிக்கடி பார்த்துக் கண்டிப்பார். இந்த வழக்கத்தில் அன்று அதிக நேரமாக ஆழ்ந்து கிடப்பதைக் கண்ட ஆசிரியர், ‘வெங்கட்ராமா, எழுந்திரு! பாடம் சொல்லும் போது தூங்குகிறாயா? அல்லது மயக்கமா? என்ன காரணம்?’ என்று கோபமாகக் கேட்டார்.
அவனால் வாய் திறந்து ஏதும் பதில் கூற முடியவில்லை! மௌனமாக நின்றிருந்தான். உடனே ஆசிரியர் சினத்தால் அவனைப் பார்த்து, நாளை வரும்போது இலக்கணப் பாடத்தை மூன்று முறை எழுதிவா என்று ஆணையிட்டு விட்டார். அதை எழுதாமல் போக முடியுமா வகுப்புக்கு? அதனால் தான் அன்று அவன் புத்தகத்தைப் பார்த்து வேக வேகமாக எழுதிக் கொண்டிருந்தான். பாவம்!
ஒரு முறைக்கு இருமுறை அந்தப் பாடத்தை எழுதினான்! அவனுக்கே ஒரு சலிப்பு! எத்தனை முறை இவ்வாறு, எழுதுவது என்ற சோம்பல்! அதனால் உடனே எழுந்து சற்று அங்குமிங்கும் நடமாடி மீண்டும் அமர்ந்து மூன்றாம் முறையாகப் பாடத்தை எழுதத் துவங்கியபோது மறுபடியும் ஏதோ ஒரு சிந்தனையிலே ஆழ்ந்து போனான்.
கண்களை மூடிக் கொண்டு, வாய் எதையோ முணு முணுத்துக் கொண்டிருக்கும் தனது தம்பியின் காட்சியைக் கண்ட அவரது அண்ணன் நாகசாமி, அப்போது அந்த நிலையைக் கண்டு, என்ன செய்கிறான்? என்ன முணுமுணுப்பு இவனுக்கு? என்று சிறிது நேரம் தம்பி எதிரிலேயே நின்று கொண்டிருந்தார்! மூடிய கண்களையும், வாய் முணுமுணுப்பையும் நிறுத்தாத தனது தம்பியைக் கண்டு கோபம் கொண்டார் அவர்.
வெங்கட்ராமா! என்னடா செய்கிறாய்? என்று கூச்சலிட்டார். அண்ணனது கோபக் குரலைக் கேட்ட தம்பி, ஏதும் பதில் கூற முடியாமல் ஊமையாகவே உட்கார்ந்து கொண்டிருந்தான்.
தம்பி, படிப்பான்! தந்தைப்போல வழக்கறிஞராவான்; குடும்பம் முன்னேறும் என்றெல்லாம் திட்டமிட்ட நாகசாமிக்கு, தம்பி புத்தகத்தைப் பிரித்து வைத்து விட்டு என்னமோ முணுமுணுக்கிறானே என்று ஆத்திரம் அடைந்து கல்வியில் கவனமில்லாத உனக்கு என்ன வேலை வீட்டில்? உதவாக்கரை, உதவாக்கரை என்று திட்டிவிட்டு மீண்டும், உதவாக்கரைகளுக்கு வீட்டில் வேலையில்லை என்ற கொந்தளித்தார்.
வீட்டில் என்ன வேலை? என்ற அண்ணனுடைய சொல் வெங்கட்ராமன் நெஞ்சிலே நெருப்பைக் கொட்டி விட்டது. அப்போது தந்தையற்ற நிலையையும் தமையனுடைய எரிமலைச் சொற்களையும் குறித்து அவன் நீண்ட நேரமாகச் சிந்தித்தபடியே அமர்ந்திருந்தான். அப்போது பதினைந்து வயதுடைய சிறுவனானதால் அவன் மீண்டும் மீண்டும் குழம்பிக் கொண்டே இருந்தான்.
அப்போது சுந்தரமய்யருடைய நண்பர் ஒருவர் சுப்பய்யர் வீட்டுக்கு வந்தார். அவரை வரவேற்ற வெங்கட்ராமன், எங்கிருந்து போகிறீர்கள்? என்று விசாரித்தான்.
வந்தவர் ‘அருணாசலத்தில்’ இருந்து என்றார்.
‘என்ன! ஒரு அருணாசலமா? எப்போதோ கேட்ட பேராக இருக்கிறதே அது!’ என்று அவன் தனக்குத்தானே ஒரு மகிழ்ச்சி கொண்டான். இந்தப் பெயர் ஒன்றும் அவனுக்குப் புதியது அல்ல. ஏனென்றால், சுந்தரமய்யர் அந்தப் பெயரைப் பலமுறை சொல்லக் கேட்டிருக்கிறான்! அவ்வளவு ஏன்? சிவநேசர்கள் பெரும்பாலும் அருணாசலத்தைப் பற்றிப் பாடக் கேட்டிருக்கிறான்!
எனவே, அந்த நினைவுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் அவன் எண்ணியெண்ணி யோசித்து, வீட்டுக்கு வந்த அந்தப் பதியவரைப் பார்த்து, ‘ஐயா, அருணாசலம் என்கிறீர்களே, எங்கே இருக்கிறது அந்த அருணாசலம்?’ என்று கேட்டான் வெங்கட்ராமன்!
வந்தவர் அந்தப் பதினைந்து வயது பையனைப் பார்த்து, ‘அது போகட்டும். சுப்பய்யர் இருக்கிறாரா?’ என்று கேட்டார்! உடனே அவன், ‘அவர் வெளியே சென்றுள்ளார். மாலைதான் வருவார்’ என்று அவசரமாகப் பதிலைச் சொல்லிவிட்டு, ‘ஐயா, எங்கே உள்ளது அருணாசலம்?’ என்று மீண்டும் கேட்டான்.
‘என்ன தம்பி, இது கூடவா உனக்குத் தெரியாது. திருவண்ணாமலை என்ற ஊரைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா? அங்கேதான் அருணாசலம் இருக்கிறது’ என்றார் வந்தவர்!
இதைக் கேள்விப் பட்ட வெங்கட்ராமனுக்கு, ஏதோ ஒரு புத்துணர்ச்சி புலப்பட்டது. திருவண்ணாமலை போக வேண்டும்! அருணாசலத்தைப் பார்க்க வேண்டும் என்பதையே அன்று முதல் நினைத்துக் கொண்டிருந்தான்.
அந்தச் சமயத்தில் வெங்கட்ராமன் தினந்தோறும் மதுரை மீனாட்சி - சுந்தரரேஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்வான்; வழிபாடு செய்வான்; அங்கே உள்ள சிவ மகிமை ஓவியங்களை உற்று நோக்கிப் படிப்பான்; சிந்தனை செய்து கொண்டே வீடு வருவான்.
ஒரு நாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சேக்கிழார் பெருமானுடைய ‘திருத்தொண்டர்கள் மாக்கதை’ வரலாறு நடந்து கொண்டிருந்தது. அதை அமர்ந்து கேட்டான். அவர்களது பக்தி உணர்வுகள் வெங்கட்ராமனின் நெஞ்சிலே பதிந்து விட்டது! அவனது வாய் பெரியபுராண அடியார்களைப் பற்றியே பேசியது! எப்போது பார்த்தாலும் சிவ வரலாறே அவனைச் சிந்தனையில் ஆழ்த்தியது.
இந்தச் சைவ சிந்தனை ஞானக் கிளர்ச்சி சில நாட்களுக்குப் பின் மறைந்துவிட்டது. அவனுக்குத் திருவண்ணாமலை நினைப்பும், அருணாசலம் சிந்தனையும்தான் நாளுக்கு நாள் மேலிட்டு வளர்ந்து விரிந்து மனம் முழுவதும் பரவியது.
“சாதகன் ஆர்வம் அதிகமானவனாக இருந்து, சத்குருவின் உபதேசம் கிடைத்து, சாதனை இடையூறு இல்லாமல் நடைபெற்று, வேளையும் அதற்கு வந்து விட்டால் சித்தி கிட்டும்” என்று பின்னாளில் பகவான் ரமண மகரிஷியாக மாறிய பின்பு அவர் யாக மாறிய பின்பு அவர் கூறிய அருள் வாக்குக்கு ஏற்றவாறு, வெங்கட்ராமன் என்ற பதினைந்து வயது பையனுக்கு இன்னும் வேளையே வரவில்லை.
1896-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆரம்பவாக்கில், திட உடலோடு இருந்த வெங்கட்ராமனுக்குள் திடீரென ஒரு பலவீனம் புகுந்தது; நெஞ்சுள் அச்சம் குடியேறியது. என்ன காரணம் அச்சத்துக்கு என்று அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், திடீர் திடீர் என்று அவனுக்குள் ஒரு திகில் உண்டாகும். உடல் சோர்ந்து விடுவான் வியர்த்துக் கொட்டும் மயங்கி விழுந்து விடுவான் வெங்கட்ராமன்! அதுஎன்ன?
அது என்ன என்ற விவரத்தை மகான் ரமண மகரிஷியே பிற்காலத்தில் கூறியுள்ளார்.
“நான் சாகப் போவதாய் எனக்குள் ஒரு பயம் உண்டாயிற்று. புலன்கள் ஓய்ந்து கொண்டிருக்கின்றன. திகிலை நான் நன்றாக உணருகிறேன். ஆனால், உடலில் எவ்வித மாறுதலும் புலப்படவில்லை. இவ்வாறு நான் ஏன் பயம் கொள்கிறேன் என்று சிந்தித்தேன். சிந்திக்கச் சிந்திக்க அந்த அச்சத்தின் காரணம் எனது அறிவுப் பிடியுள் அகப்படாமலேயே நழுவிக் கொண்டே இருந்தது. ஆனாலும், நான் ஏன் பயப்படுகிறேன்? அவ்வாறு அஞ்சுவது முறையாகுமா? என்ற கேள்விக்கும் எனக்குப் பதில் கிடைக்கவில்லை. மற்றவர்களையாவது கேட்கலாமா? என்ற ஆசையும் எனக்குள் உண்டாகவில்லை. இந்தப் பயத்தை நானே செய்வதென மனத்தில் முடிவு செய்து கொண்டேன். நான் அந்தச் சமாதானத்தைத் தேட முற்பட்டேன்.”
“அப்போது ஹிருதயத்தில் எண்ணங்களின் நடமாட்டம் மிகவும் கடுமையாகிறது. மரண பயமும், அதன் நுகர்ச்சியும் ஒரே நேரத்தில் நடந்தன. என் உடல் மரத்துப்போகும். மூச்சும் தடையுறும் உதடுகள் தாமாகவே இறுகும். வாயிலிருந்து சிறு சத்தங்கூட அப்போது வெளிவராது. என் உடம்பு பிணம்போல் அங்கே கிடந்தது.
“இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், என்னுடைய மனோ விருத்திகள் முன்னைப் போன்றே மாறாமல் இருந்தன. சாகும் விதம் இதுதான் என்று புரிந்து கொண்டேன். உடல் ஒரு கட்டை போல் கிடப்பதை அறிந்தேன். இதை மக்கள் சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போவார்கள். சற்று நேரத்தில் இது எரிந்து நீறாகிவிடும் இந்நிலையிலும், ‘நான்’ ‘எனது’ என்ற உணர்வு முன்போலவே இருந்தது. சரீரம் மரம் போல் தரையில் கிடக்க, நான் இருக்கிறேன் என்ற உணர்வு அழியாமல் இருப்பது ஆச்சரியம் அல்லவா? சாவும் ஒரு கனவு போலத்தான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.”
மரண அனுபவத்தை உயிரோடு இருக்கும்போதே அந்தச் சிறுவன் வெங்கட்ராமன் பெற்றான். ஒரு மனிதன் செத்த பிறகும் கூட ஏதோ சக்தி உள்ளது. அந்தச் சக்தியே ஆத்மா என்பதை வெங்கட்ராமன் உணர்ந்தான்.
இது அனுபவத்தால் அறிந்த உண்மை, அவன் அடிக்கடி இந்த உண்மையைச் சிந்திக்கிறான். அந்தச் சிந்தனையால் அவனது எண்ணங்கள் உறுதி பெற்றன. எண்ணியவற்றை எண்ணி எண்ணி அது திண்மை பெறுமாயின் அதைப் பெறக் கூடும் அல்லவா? அதற்காகவே வெங்கட்ராமன் மேலும் மேலும் சிந்தித்துக் கொண்டே இருந்தான்.
சிந்தனை செய்யும் போது மட்டுமன்று, வெங்கட்ராமன் எப்போதும், எங்கும் தனிமையிலேயே இருக்க ஆசைப்பட்டான். அவ்வாறே அவனும் ‘தனித்திரு’ என்ற வள்ளலார் சித்தாந்தத்தின் படியே வாழ்ந்து வந்தான். காணவந்த நண்பர்களிடமும் அவன் எதையும் பேசமாட்டான். அத்தகையவனை நண்பன் எவனாக இருந்தாலும் நாடுவானா? எனவே, நண்பர்களது பிரிவும் அவனுக்கு உருவானது.
அடுத்தபடியாக, அவன் எவ்வளவு பிரியமாக, நண்பர்களோடு விளையாடுவானோ, அந்த ஆட்டங்களை எல்லாம் அறவே அவன் மறந்து விட்டான். நாளுக்கு நாள் சிந்தனை பலமாயிற்று? குறும்பும் குத்தலும் கூத்தும், வம்பும், வாதுமாக தெம்பாகக் குதித்தவன், இப்போது அந்த எண்ணமே எழாதவன் போலாகிவிட்டான். அவ்வளவு தூரம் அவனது மனம் மாறி விட்டது. அதாவது, அவனிடம் முன்பிருந்த அகந்தை, ஆணவம், அத்தனையும் அழிந்தது.
சிறு சிறு பிரச்சினைகளுக்காக எல்லாரிடமும் சண்டை சச்சரவுகளை உருவாக்கும் மனோபாவம் கொண்டவன். இப்போது இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்ற எண்ணத்திற்கு எடுத்துக் காட்டாகி விட்டான். அவ்வளவு தூரம் அவன் பசுப்போல், சாதுவாகக் காட்சி தந்தான்; இப்போது அடுத்தவர்களிடம் பேசுவதே தேவையற்ற செயல் என்று நடந்து கொள்கிறான்.
இதற்கு முன்பெல்லாம், அவன் கோயிலுக்குப் போகவே வெறுப்படைவான்! அத்தகையவன் இன்று தினந்தோறும் திருவண்ணாமலை பஜனை பாடுகிறான்! அருணாசலம் நாமாவளி இசைக்கின்றான்! மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலே கதியெனக் கிடக்கின்றான். அங்குள்ள சிலைகளைத் தெய்வீகக் கலை வடிவங்கள் என்று புகழஞ்சலி செய்து போற்றுகின்றான். வெங்கட்ராமனுடைய இயல்பான குணங்களும், சுபாவங்களும், மறைந்து விட்டன.
என்று சேக்கிழார் பெருமானுடைய பெரிய புராண விரிவுரையை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் கோயிலில் கேட்டானோ, அன்று முதல் வெங்கட்ராமன் சிவபெருமான் சன்னதியிலே அமர்ந்து கொண்டு, தேவார திருவாசகங்களை ஓதும் போது, அவன் கண்களிலே நீர் வழி நீர்ந்து சிதறி சிந்தும் பக்தி உணர்ச்சி கண்டு பக்தர்கள் பிரமிப்படைவார்கள்.
வெங்கட்ராமன் என்ற சிறுவனுடைய அப்போதைய மனோபாவ நிலையை நாம் எழுதுவதைவிட, அதே சிறுவன்
பகவான் ரமண மகரிஷியான பின்பு எழுதுகிறார் அதை படியுங்கள்.
“நான் பௌத்தர்களைப் போல துக்கவாதி அல்ல. ஏனென்றால், அதுவரையில் நான் உலக துக்கங்களை நுகர்ந்ததே இல்லை. அப்படியானால் உலகம் துக்கமயமானது என்ற அறிவு எனக்கு எப்படி உண்டாயிற்று?”
“நான் மோட்சம் அடையவும் விரும்பவில்லை; ஏனென்றால், நான் தளைகளின் துன்பங்களை அறியாதவன். என் உள்ளத்தில் ஒருவிதமான விசித்திரமான வேதனை, கிளர்ச்சி முதலியவை எவ்வாறு ஏற்படுகின்றது என்பதையும் என்னால் அறிய முடியவில்லை. கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் மூழ்கியதும் எல்லா விதத் தாபங்களும் அடங்கிவிடும்.”
“தியானம் நீங்கி எழுந்ததும், அளவில்லாத தாபம் உண்டாகிவிடும். இந்தத் தாபத்தை என்னால் துக்கம் என்று கூற முடியவில்லை; சுகம் என்றும் சொல்ல முடியவில்லை. அதை எழுத்தாலும், எண்ணத்தாலும் வருணிக்க முடியாது.”
“மீனாட்சி - சுந்தரேஸ்வரரையும், நாயன்மார்களையும் நான் ஆலயத்தில் கண்டதும் என் உள்ளம் துள்ளிக் குதிக்கும்.”
மேற்கண்டவாறு வெங்கட்ராமனுடைய விழிப்பு நிலை இருந்தது. எப்போதும் சிறிது நேரம் தனிமை கிடைத்தால் கூட போதும். உடனே யோகாசனப் பயிற்சியாளரைப் போல ஆசனமிட்டு உட்கார்ந்து, எல்லாவற்றையும் மறந்து தியானத்தில் ஆழ்ந்து விடுவான். எந்த வருத்தமோ, துன்பமோ, கவலையோ அப்போது அவனைத் தீண்டாது.
“அதே நேரத்தில் வீட்டிலும், தமையன் நாகசாமி, உதாவக்கரைகளுக்கு வீட்டிலே வேலை இல்லை, என்று கூறிவிட்டார். அவர் அவ்வாறு சொல்லி விட்டாரே என்பதற்காக நான் அவர் மீது
கோபம் கொள்ள முடியுமா என்ன? அவர் கூறியது முழுக்க முழுக்க நியாயந்தானே!”
“கல்வியில் கவனம் செலுத்தாத உதவாக்கரைகளுக்கு எவராவது வீட்டில் இடம் கொடுப்பார்களா? சோற்றுக்கும் பாரமாய், வாழ்க்கைக்கும் பாரமாய் இருப்பதா ஒரு பிள்ளைக்கு அழகு? அவனால் வீட்டுக்கும் பலனில்லை; நாட்டுக்கும் பிரயோசனமில்லை. அப்படிப்பட்டவன் வீட்டில் இருக்கலாமா? இதைத்தானே அண்ணன் நாகசாமி கேட்டார்? அவர்மீது என்ன தவறு?”
என்று மனம் சலித்தவனாய், விரக்தியோடு, தமையன் திட்டியதிலே உள்ள நியாயத்தையும் உணர்ந்து, ஆண்டவனே என்னுடைய எதிர்காலம் இப்படியா அலைமோத வேண்டும்? உன்னைத் தவிர எனக்கு வழிகாட்டும் கருணையாளர் யார்? உன்னை விட்டால் எனக்கு வேறுகதி யார்? கடவுளே, இனிமேலும் மானமுள்ள ஓர் உதவாக்கரை வீட்டில் இருப்பானா? என்றவாறே வெங்கட்ராமன் தனது கண்களை மீண்டும் மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டான். அப்போது அருணாசலேஸ்வரர் அவனுக்கு ஏதோ அருள் பாவிப்பது போன்ற ஒரு நிழலாட்டம் காட்சி தந்தது.
தியானம் கலைந்து அவன் கண் விழித்த போது, மீண்டும் அன்ணன் நாகசாமியே எதிரிலே நின்று கொண்டிருந்தார். ‘ஏண்டா பள்ளிக்கூடம் போகவில்லையா?’ என்ற அதட்டும் குரலிலே அவர் தம்பியைக் கேட்டார்.
‘போக வேண்டும் அண்ணா! பன்னிரண்டு மணிக்கு இன்று வகுப்பு’ என்றான் வெங்கட்ராமன்!
உடனே, நாகசாமி அன்பான குரலில் ‘வெங்கட்ராமா! அப்பாவும் இல்லை, நமக்கு யார் கதி! உனக்கு நானும் எனக்கும் நீயும்தானே! கல்வியை நீ கவனமாகப் படித்தால்தானே, தாம் அப்பாவின் பெயரைக் காப்பாற்றிக் கௌரவமாக வாழமுடியும்? உனக்கு இது தெரிய வேண்டாமா? சரியாக நீ படிக்கவில்லையே என்ற கோபத்தால் அல்லவா உன்னைத் திட்டிவிட்டேன்!’
‘சரி சரி போகட்டும் எதையும் மனத்தில் வைத்து வருத்தப்படாதே! கீழே பெட்டி மேலே ஐந்து ரூபாய் வைத்திருக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு, எனது கல்லூரிக்குப் போ, எனக்கு என்ன சம்பளமோ அதைக் கட்டி விட்டு, பிறகு உனது பள்ளிக்கூடத்துக்குப் போ, தம்பி!’ என்று நாகசாமி தனது தம்பியை ஆறுதல் கூறி, தேற்றி கீழே அனுப்பி வைத்தார்!
‘சரி அண்ணா’ என்ற மகிழ்ச்சியோடு தம்பி வெங்கட்ராமன் அண்ணனிடமிருந்து விடைபெற்றுக் கீழே வந்தான். பெட்டிமேலே அண்ணன் சொன்ன ஐந்து ரூபாய் அப்படியே இருந்தது. அதில் மூன்று ரூபாயை எடுத்துக் கொண்டான். இரண்டு ரூபாயை அண்ணன் வைத்திருந்த இடத்திலேயே வைத்தான்.
தனக்குத் தேவையான மூன்று ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டான் வெங்கட்ராமன். ஒரு கடிதத்தில், ‘அண்ணா உங்களுடைய எண்ணப்படி உதவாக்கரையான நான் வீட்டை விட்டுப் போகிறேன். இனிமேல் என்னைத் தேடி அலைய வேண்டாம். தங்கள் பணம் இரண்டு ரூபாயை இந்தக் கடிதத்தின் மேலே வைத்திருக்கிறேன். எடுத்துக் கொள்ளவும்.’ என்று எழுதி வைத்து விட்டு, அமைதித்தேடி 1896-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 26- ஆம் நாள் வீட்டை விட்டு அவன் வெளியேறி நடந்து கொண்டே இருந்தான்.