←← 7. நரகத்திலே சொர்க்கம் தேடினார்!
ரமண மகரிஷி ஆசிரியர் என். வி. கலைமணி8. பாலயோகி
9. இரமணரின் தொண்டர்கள் →→
439969ரமண மகரிஷி — 8. பாலயோகிஎன். வி. கலைமணி
8. பாலயோகி
மதுரையை விட்டு மாணவனாகப் புறப்பட்ட வெங்கட்ராமன் எனும் பதினைந்து வயதுடைய சிறுவனின் திருவருள் தியான நிலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் பக்தர்கள் இடையே முதலில் பிராமண சுவாமி என்ற விதையாக விதைக்கப்பட்டது. பிறகு அது, சின்ன சாமியானது. இப்போது குன்றக்குடி மடத்தினால் குருமூர்த்திசாமி என்ற புகழைப் பெற்றது. அது நாளுக்கு நாள் மக்கள் இடையே வளர்பிறையாக வளர்ந்து பெரும் புகழை ஈட்டிக் கொண்டிருந்தது.
குன்றக்குடி மடத்தைச் சார்ந்தவர் அண்ணாமலைத் தம்பிரான் என்பவர். அவர்தான் அப்போதைய குன்றக்குடி மடாதிபதியாகத் திகழ்ந்து வந்தார். அவர் கீழாநத்தூர் பூந்தோட்டம் ஒன்றில் தங்கி தம்முடைய இறை வழிபாடுகளை நடத்தி வந்தார். இதற்கு என்ன காரணம் தெரியுமா?
குன்றக்குடி மடம் துவக்கக் காலத்தில் திருவண்ணாமலை அருணாசலத்தில் இருந்தது. பிறகு தான் அது குன்றக்குடி எனும் பேரூர் ஒன்றுக்கு மாற்றப்பட்டது. அதனால், அண்ணாமலைத் தம்பிரான் எனப்படும் குன்றக்குடி மடாதிபதி குன்றக்குடியை விட்டு அருணாசலத்திற்கு வருவார். வந்தால் அந்தப் பூந்தோட்ட மாளிகையில்தான் தங்குவது வழக்கமாகும்.
அதுபோலவே, இம்முறையும் குன்றக்குடி மடாதிபதி திருவண்ணாமலையில் தங்கி இருந்தார். எப்போதும் போல இப்போதும் அவர், அருணாசலத்திற்கு வருகை தந்து பூந்தோட்டம் என்ற எழில் ததும்பும் குடிலில் தங்கியிருந்தார். இதற்கும் ஒரு காரணம் உண்டு. என்ன அதுவெனில், குன்றக்குடி மடாதிபதிக் குழுலினரின் ஆதிகுரு எனப்படும் ஒரு சந்நிதானம் சமாதியானது அந்தப் பூந்தோட்டத்திலே தான். அந்த இடத்திற்கு குருமூர்த்தம் என்று இன்றும் பெயர். அதன் காரணமாகத்தான் குன்றக்குடி திருவண்ணாமலை வந்தாரென்றால் அங்கே உள்ள பூந்தோட்டக் குடிலிலே தங்குவது வழக்கமாகும்.
தம்பிரான் தம் குழுவினருடன் திருவண்ணாமலை நகரிலே உள்ள முக்கியமான தெருக்களுக்குச் சென்று பிச்சை எடுத்து வருவார். அவ்வாறு கிடைக்கும் பிச்சையினைத் தம்பிரானுடன் வருகைத் தந்தோர் அனைவரும் கட்டுப்பாடாகக் குரு பூஜை செய்து விட்டுத்தான் உண்பார்கள்.
அந்த அண்ணாமலைத் தம்பிரான், மரத்தடியில் தவம் இயற்றிக் கொண்டிருந்த பால்போகியைப் பார்த்து, இவ்வளவு சிறு வயதில் ஒரு பையன் துறவியாக மாறி தியானம் புரிகிறானே. இது பூர்வ ஜென்ம பலனோ என்றெண்ணி வியந்தார். அதனால், அந்த இளந்துறவியின் அருகே அமர்ந்து, சிறிது நேரமானவுடன் அவர் எழுந்து போய் விடுவார்.
இவ்வாறு அத் தம்பிரான் தினந்தோறும் வந்தமர்ந்து செல்வதை நிறுத்திவிட்டு, இந்த பால சந்நியாசியைத் தமது குருமூர்த்தத்துக்கே அழைத்துச் சென்று தங்க வைத்தால் என்ன என்று எண்ணி, அங்கே வந்துவிட்டால் அவருடைய தவநிலைக்கு எந்தவிதத் தடையும் ஏற்படாதே என்ற எண்ணத்தால், தனது கருத்தை இளம் துறவவிக்குத் தெரிவித்தார்.
பிராமண சாமியாரான அந்த வெங்கட்ராமன் தம்பிரான் கருத்தை ஏற்றுக் கொண்டார். அவர் குன்றக்குடி மடமான குருமூர்த்தத்துக்கே வந்து விட்டதால், அன்று முதல் அந்த சின்னசாமி குருமூர்த்தசாமி என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
குருமூர்த்த சாமி புதிய இடம் மாறி வந்து தங்கி தவத்தில் மூழ்கினார்! தியானத்தின் ஐம்புலனாற்றல் ஒளி ஊடுருவ ஊடுருவ சந்நியாசி தனது உடலையே மறந்தார். அவருக்கு தலைமயிர் சடைத்தது. கை, கால் விரல் நகங்கள் எல்லாம் நீண்டு வளர்ந்தன.
பாதாள அறையிலேயும், ஆயிரங்கால் மண்டப மேடையிலேயும் கல்லையும், மண்ணையும் வாரி எறிந்து கொண்டிருந்த குறும்பர்களின் தொல்லைகள் இல்லை என்றாலும், அவர்களை விட மோசமாக, நினைத்த நேரங்களிலே எல்லாம் கடித்துக் கொண்டே இருக்கும் எறும்புத் தொல்லை மிக மோசமாக இருந்தது. இருந்தாலும், பாலயோகி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
இளம் சந்நியாசி எறும்புக் கடிகளுக்கு ஆளாகி அவதிப்படுவதைக் கண்ட ஒரு ஆன்மிக அன்பர், அவரை ஒரு பெஞ்ச் மீது உட்கார வைத்தார். அதன் நான்கு பக்கக் கால்களிலும் தண்ணீர்ப் பாத்திரங்களை வைத்தார். இதனால் பாலயோகி அமர்ந்துள்ள பெஞ்ச் மீது எறும்பகள் ஏறுவது தடுக்கப்பட்டது. ஆனால் அந்தத் துறவி பெஞ்சின் பின்பக்கம் சுவரில் சாய்ந்து கொள்வார். அதன்மீது எறும்புகள் ஏறி அவருக்குத் தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். இளம் சந்நியாசி அந்தச் கவர்மீது சாய்ந்து கொண்டிருந்த உடல் அடையாளத்தை அங்கே இன்றும் கூட காணலாம்.
ஒரு சிறு வயதுப் பையன் அன்ன ஆகாரம் மறந்து, தன்னை மறந்து, ஐம்புலன் ஆற்றலை வென்று தவம் செய்கிறான் என்று ஒருவர் மற்றொருவரிடம் பிரசாரம் செய்தால் போதாதா? உடனே அவை காட்டுத் தீ போலப் பரவி விடுமல்லவா?
அதைப் போல ஒரு பாலயோகி குகையில் தவம் செய்கிறார் என்ற செய்தி அக்கம் பக்கம் கிராமங்கள் எல்லாம் சூடாகவும், சுவையாகவும் பரவியது. மக்கள் கூட்டம் நாளா பக்கங்களில் இருத்தும் திரளலானார்கள்.
மொட்டையடித்த தலையில் முடிகள் வளர்ந்து, கனத்து, சடைத்திருப்பதையம் கால், கை நகங்கள் கரடி போல வளர்ந்துள்ளதையும் கண்டு மக்கள் அவரை ஒரு பாலயோகி சாமியார் என்றே எண்ணவில்லை. யாரோ ஒரு பழுத்த கிழவர் சந்நியாசி வேடமணிந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றே நம்பினார்கள்.
அந்த இளம் துறவியின் பார்வை பெற்றவர்கள் எல்லாம் நன்மை அடைந்தே வருவதாகக் கருதினார்கள். அவர்கள் எண்ணம் போல, அவரவர்கள் நினைத்து வந்த செயல்கள் நிறைவேறின. அதனால், மக்கள் இடையே அந்த பாலயோகி மீது ஒரு தெய்வ நம்பிக்கை பிறந்து, வளர்ந்து பரவியது. மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் கூடியது; எங்கெங்கு இருந்தோ அவரைத் தேடி வந்து தெய்வத்திடம் தரிசனம் பெறுவதைப் போலத் தரிசித்து விட்டுச் சென்றார்கள்.
குழந்தையில்லாத தம்பதிகள், வாழ்க்கையில் தோல்வி கண்டவர்கள், வறுமையாளர்கள், பணக் கஷ்டத்தால் அல்லல் படுவோர்கள், வியாதிகளால் அவதியுறுவோர், திருமணம் நடைபெற எண்ணுவோர், போகும் காரியம் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்போர், இத்தகைய குறைபாடுகள் உடைய மக்கள் தினந்தோறும் திரண்டு அணியணியாக வந்தார்கள்.
இரவும், பகலும் பால சந்நியாசிக்கு வேலைப் பளுக்கள் அதிகரித்தன. மக்களை ஓய்வே இல்லாமல் விசாரிக்கும் நிலை வலுத்தது. இவ்வாறான ஒரு நம்பிக்கைச் சூழல் பால யோகியிடம் மக்களுக்கு இருந்ததால், வெங்கட்ராமனை பெயரைச் சுருக்கமாக வெங்கட்ராமசாமியார், வெங்கட்ராம துறவி, பால சந்நியாசி, பாலயோகி, இளம் துறவி, குருமூர்த்த சாமி என்றெல்லாம் அவரவர் நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு அன்போடும் பக்தியோடும் அழைத்தார்கள்.
மற்றும் சில மக்கள் வெங்கட் என்ற பெயரை நீக்கி விட்டார்கள். இறுதியாக ரிஷி என்றே அழைத்தார்கள். அவரைப் பார்க்க வந்த பத்திரிக்கையாளர்கள் வெங்கட்ராமர் என்ற பெயரோடு சுவாமி என்ற சந்நியாசிக் கோலத்தைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்து, வெங்கட் ராம சுவாமி என்று எழுதினார்கள்.
இந்த நேரத்தில் குன்றக்குடி மடாதிபதியான அண்ணாமலைத் தம்பிரான் சின்னசாமியை ஓர் அருளாளராகவே பாவித்து அவரது பெருமையை மக்கள் இடையே குருமூர்த்த சாமி என்றழைத்து நிலைநிறுத்தினார்.
அண்ணாமலைத் தம்பிரான் குருமூர்த்த சாமியை ஆண்டவன் தூதுவராக மதித்து வந்ததால், ஒருமுறை அவருக்குப் பால் அபிஷேகம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பாலயோகி சாமிக்கு முன்பாக, அவரைக் கடவுள் சிலையாகக்கருதி தூப தீபங்கள் காட்டி துதிப் பாடல்களும் பாடலானார்.
நாளடைவில் பால சந்நியாசியைப் பார்க்க வரும் படித்த கல்விமான்கள் அவர்மீது சில அற்புதங்களை எழுதினார்கள். வேறு சில கவிதை மனம் கொண்டவர்கள் சுவாமி மீது பாடல்கள் பாடினர். அவை சிறு சிறு புத்தகங்களாகவும் வெளி வந்து கொண்டிருந்தன. செல்வந்தர்கள் அவருக்குரிய நிதியை உருவாக்கினார்கள்.
இவ்வாறு கல்விமான்களும், கவிஞர்களும், செல்வந்தர்களும் செய்யும் அருட்பணிகள் அவரவர்கள் மனதுக்கு ஒரு முழு நிறைவை அளிக்கும் பணிகளாக அமைந்து விட்டன. அவரவர்கள் செயல்களின் பெருமைக்குரிய நிகழ்ச்சிகளைக் கண்ட பக்தகோடி மக்கள் அவரை வெங்கட்ராம ரிஷி என்றே அழைத்து மன நிறைவைப் பெற்று வந்தார்கள் எனலாம்.
பால துறவியான வெங்கட்ராமனைப்பற்றிக் கவிஞர்கள் எழுதும் போற்றிப் பாடல்களும், கல்விமான்கள் கற்பிக்கும் அருட்சம்பவங்களும், அண்ணாமலைத் தம்பிரான் செய்யும் பாலாபிஷேக, தூப தீபங்களும் ரமணருக்கு மன அதிருப்தியை உண்டாக்கியது. இவையெல்லாம் அவருக்குப் பிடிக்கவில்லை. அதுவும் குறிப்பாக, தம்பிரான் செயல்களை அவர் அறவே வெறுத்தார். என்ன செய்வது எல்லாவற்றையும் அவர் பொறுத்துக் கொண்டாரேயன்றி, ஏற்றுக் கொண்டவரல்லர்.
ஒரு நாள் குன்றக்குடி மடாதிபதியான அண்ணாமலைத் தம்பிரான் வீதி வீதியாகப் பிச்சை எடுத்துக் கொண்டு குருமூர்த்தத்துக்குத் திரும்பினார். அப்போது வெங்கட்ராமர் அவரைப் பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?
“இந்த உடலுக்கு உணவுதான் வேண்டும். இது மிகச் சிறிய விஷயம் தான் என்றாலும், அதற்குப் பிறகு, தம்பிரானும் மனம் மாறினார். பிச்சை எடுத்து வந்து உண்ணும் பழக்கத்தை அவர் அன்று முதல் கைவிட்டார்.
நாளுக்கு நாள் வெங்கட்ராம ரிஷியைப் பார்க்க வரும் கிராம மக்கள், நகரவாசிகள் கூட்டம் அதிகரித்தவாறே இருந்தது. அதை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டுமே என்று எண்ணியவர்கள். அவர் தங்கியிருந்த இடத்தைச் சுற்றி நான்கு புறமும் தடுப்பு வேலி போட்டார்கள். அதனால் கூட்டம் தரும் தொல்லைகளும் ஓரளவு குறைந்தன.
பெருகி வந்த மக்கட் கூட்டம் பாலயோகி வெங்கட்ராமருக்கு சில அன்பளிப்புப் பொருட்களை வழங்கி வந்தன. அந்தப் பால், பழங்கள், பணம் முதலியவற்றை என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார்கள், குருமூர்த்தப் பாதுகாப்புக் குழுவினர். ஏனென்றால், வெங்கட்ராமர் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் ஒரு சேர் பால் அருந்தினார். நாளுக்கு ஒரு முறை அவர் பருகிய பால் போக, பழங்கள் போக, மீதி அனைத்தையும் அவரைக் காணவரும் மக்களுக்கே பசியாற, வழங்கி வந்தார். அதுவும் அவர் திருக்கையாலேயே அவற்றைக் கொடுத்தார். மக்களும் யோகி தரும் அருட் பிரசாதமாக அவற்றை வாங்கி உண்டு வந்தார்கள்.
பாலயோகி ஒரு நாளைக்கு ஒரு முறை பால் குடித்துவிட்டு, பல நூறு மக்களிடையே உள்ள குறைபாடுகளை விசாரணை செய்து. அவரவர்க்குரிய குறை தீர்க்க நிவாரணங்களைக் கூறிக் கொண்டிருக்க முடியுமா? எனவே, உழைப்பு அதிகமானது; உடற்குரிய போதுமான சக்தி குறைந்தது. இதனால் நாளுக்கு நாள் அவரது உடல் பலவீனமாகிக் கொண்டே வந்ததால், ஒரு நாள் அவரையும் அறியாமல் மயங்கிக் கீழே விழுந்து விட்டார். அதனால் நடக்க முடியாத நிலையேற்பட்டு விட்டது.
இயற்கையாகவே வெங்கட்ராமர் சிறுவயதில் திடகாத்திர உ.டலோடு தான் இருந்தார். என்றைக்குத் தனது வீட்டைவிட்டு வெளியேறினாரோ, அன்று முதல் சரியான உணவும் இல்லை. பசி, பட்டினி தொல்லை. இதனால் அவரது உடல் பலவீனமாயிருந்தது. இப்போது ஒருவேளை பால், சில பழங்கள் அவரின் உழைப்புக்கு ஈடுகொடுக்கும் உரமாக இல்லாமல் போகவே, பாலயோகியுடைய உடலை அவ்வப்போது மயக்கம் தாக்கியபடியே இருந்தது. உடம்பு வெறும் எலும்புக் கூடுபோலப் காட்சி தந்தது.
எவ்வளவுதான் அவர் எச்சரிக்கையாக இருந்தாலும் மயக்கமும் - பலவீனமும் அடிக்கடி வர தடுமாறுவார். தள்ளாடுவார்; விழுவாக்ர். சில நேரங்களில் அவருடன் அருகிலிருப்பார் அப்படியே கைத்தாங்கலாகத் தாங்கிக் கொள்வார்கள்.