←← 15. அமெரிக்க ஐரோப்பியருடன் மகரிஷி
ரமண மகரிஷி ஆசிரியர் என். வி. கலைமணி16. ரமணர் காலமானார்!
17. படங்கள் →→
439977ரமண மகரிஷி — 16. ரமணர் காலமானார்!என். வி. கலைமணி
16. ரமணர் காலமானார்!
ஞானி என்பவனுக்கு மரணமே கிடையாது என்று கூறியவர் மகரிஷி ரமணர்!
இரமணாசிரம் மாணவர்கள், மகரிஷி ரமணருடன் ஞான உரையாடல்களில் ஒரு முறை கலந்து கொண்ட போது, ஒரு மாணவன் மகரிஷியை நோக்கிக் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் இது.
“ஒரு பக்தன் எப்போதும் இறப்பதில்லை; ஏனென்றால், அவன் எப்போதோ இறந்துவிட்டான். மனிதன் வாழ்நாள் முழுவதும் எந்த எண்ணத்தை நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அதையேதான் அவன் இறக்கும் போதும் நினைக்கிறான்” என்றார்.
“எடுத்துக் காட்டாக அவர் சொல்லும் போது, இல்லறத்தில் இருப்பவன் தன் குடும்பத்தைப் பற்றி நினைக்கிறான்; முற்றும் துறந்த துறவி கடவுளைப் பற்றி எண்ணுவான்; ஞானிக்கு வேறு நினைவு எதுவும் கிடையாதல்லவா?”
“அதனால் அவனுடைய நினைவு, சிந்தனைகள் எல்லாமே பல காலத்திற்கு முன்பே இறந்து விட்டதால், அவன் உடலும் அத்துடன் இறந்து விடுகிறது ஆகையால், அவனுக்கு மரணம், என்ற ஒன்று கிடையாது.” என்றார்.
மகரிஷி ரமணர் உலகப் பொருள்கள் எதன் மீதும் பற்று வைக்காத துறவியாக வாழ்ந்து காட்டினார். மதுரையை விட்டு அவர் அருணாசலம் தேடி திருவண்ணாமலை வந்துபோது, தன்னிடமிருந்த மிகுதிப் பணத்தை அங்கே இருந்த அய்யங்குளத்திலே வீசி எறிந்தார். சட்டையைக் கழற்றினார்; தான் கட்டியிருந்த வேட்டியைத் துண்டு துண்டாகக் கிழித்து கோவணங்களாக்கி, அதை மாற்றி மாற்றிக் கட்டிக் கொண்ட கோவணாண்டியாகக் காட்சித் தந்தார்! மிகுதியிருந்த சட்டையுடன், கோவணங்களாகக் கிழித்தத் துண்டைத் தவிர, பிற அனைத்தையும் அய்யங்குளத்துக்கே ஆடைகளாக்கினார்!
ரமண மகரிஷி வெங்கட்ராமன் என்ற பெயரோடு இருந்தபோது பெற்றோர் அவருக்குப் பூணூல் அணிவித்தார்கள். அந்தப் பூணூல் கூட, மக்கள் இடையே சாதி வித்தியாசங்களை உருவாக்கிவிடும் அளவு கோலாக இருப்பதை அவர் நெஞ்சம் உணர்ந்ததால், அந்த உயர்சாதி அடையாளமாக இருந்த பூணூலை அறுத்து அய்யங்குளத்திலே தூக்கி எறிந்தார்! ‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்ற தத்துவத்தின் ஞானியானார்!
உலகப் புகழ் பெற்று பொருளாதாரத்தில் வசதி வாய்ப்புகளில் வளர்ந்திருந்த போதும், அவர் அதே கோவணான்டிக் கோலத்தோடு வாழ்ந்தாரே தவிர, பட்டு பீதாம்பரத் திருமகனாக வாழ்ந்தவரல்லர்! அளவான உணவு உண்டு, அளவான வாழ்க்கைக்கு அளவு கோலாக வாழ்ந்தார் ரமண மகரிஷி!
அருணாசலமே கதியென நம்பி, தவம் தியானங்களைத் தவறாமல் செய்து, அருணாசலலேசுவரரின் அடிமையாக வாழ்ந்த அந்த மகானைக்கூட காலம் என்ற மரண நோய் விடாமல் பற்றிக் கொண்டு வாட்டி வதைத்து வேதனைப் படுத்தியது.
கட்டி ஒன்று தோன்றி, அவருடைய இடது கைச் சதையைச் சிறிது சிறிதாக தின்று கொண்டே வந்தது. மகரிஷி ரமணரின் ரத்தத்தை விஷமாக்கியது.
இடது கையில் முதலில் சிறு கட்டியாகத் தோன்றியது. அது ஒரு மாதம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்தில் ஒரு மாதம் கழித்து பெரிய கட்டியாகத் தோன்றியது. மறுபடியும் இரண்டாவது முறையாக கட்டியை அறுவைச் சிகிச்சை செய்தார்கள் வித்தக டாக்டர்கள்!
இரமணன் அருளாசியைப் பெற்று வரும் பக்த கோடிகள், செல்வர்கள், கல்விமான்கள் பத்திரிக்கையாளர்கள், அவரைப் பலவழிகளிலும் பின்பற்றி வந்த மனித நேயர்கள். இறையபிமானிகள், எல்லாருமே அவரது நோய்நிலை கேட்டு அளவிலா துன்பத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.
அதற்குப் பிறகு அடுத்த மாதமே மீண்டும் அந்தக் கட்டி வந்து விட்டது. அப்போது ரமண மகரிஷி மீது அல்லும் பகலும் அக்கறை கொண்ட அவரது சீடர்கள், நீங்கள் மற்றவர்களை எல்லா வகையிலும் குணப்படுத்துகிறீர்களே, உங்களை நீங்கள் எங்களுக்காகவாவது சுகப்படுத்திக் கொள்ளக் கூடாதா? என்று மனம் நொந்து கண்ணீர் சிந்தி மகரிஷியைக் கேட்டார்கள்.
அதற்கு “இந்த உடம்பிடம் உங்களுக்கு ஏன் இந்தப் பற்று? அதைப் போக விடுங்கள்” என்று பகவான் ரமணர் திருவாய் மலர்ந்தருளினார்.
இதற்குப் பிறகு மகரிஷியின் கட்டிக்கு ரேடியம் சிகிச்சை அளிக்கப்பட்டது மருத்துவம் அவரது உடலை எவ்வளவு வருத்தினாலும் அதற்காக அவர் மனம் கங்காமல், வரும் பக்தர்களுக்கு அப்போதும் புன்னகை பூத்தே அருளாசி வழங்கினார்.
கட்டியை ஊடுகதிர் படம் எடுத்து டாக்டர்கள் பார்த்தார்கள். மகரிஷி ரமணருடைய கையைத் துண்டிப்பதைத் தவிர வேறோர் வழியேதுமில்லை என்று மருத்துவ திறனாளர்கள் முடிவு கட்டினார்கள்.
இந்த முடிவை பகவான் ரமணரிடம் டாக்டர்கள் தெரிவித்தபோது, “உங்கள் உடலை நீங்களே கவனித்துக் கொள்ள நான் விடுவது போல, நீங்களும் என்னைச் சும்மா விட்டுவிடுங்கள்” என்றார் மகான் ரமணரிஷி!
மகரிஷிக்கு வந்தது என்ன நோய் என்று மருத்துவத்துறை ஆய்வு செய்தபோது, ரமணருக்கு வந்தது புற்று நோய் அல்ல; நியூரோ-சார்கோமா என்ற ஒரு வகை நோயென்று உணரப்பட்டது.
புற்றுநோய் என்றால் ஓரிடத்தில் மறைந்தால், அது மற்றோர் இடத்தில் தோன்றும். ரமண மகரிஷிக்கு வந்தது அதுபோன்ற புற்று நோயல்ல என்று கண்டு பிடிக்கப்பட்டது. அப்படியானால் இந்த நோய் வந்த இடத்திலேயே திரும்பத் திரும்பக் கட்டி உருவில் பெரியதும் சிறியதுமாக மாறிமாறிவரும். கையை எடுத்து விட்டால் கட்டி திரும்ப வராது என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், ரமண மகரிஷி ஒரு முறை கூறிவிட்டால் அதை யாரும் மாற்ற முடியாது. அவ்வளவு பிடிவாதக்காரர் அவர். எனவே, டாக்டர்களுக்கும் பக்த கோடிகளுக்கும் பேசாமலிருப்பதைத் தவிர வேறு வழியேதும் இல்லை.
ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளால் ஒருவேளை ரமணர் நோய் சுகமானாலும் ஆகலாம் என்று சிலர் எண்ணினார்கள் அதற்கேற்ப பச்சிலைகளை வைத்துக் கட்டிப் பார்த்தார்கள். அந்த ராட்சச நோய் வருவதும், மறைவதும், திரும்பவும் வருவதுமாக கண்ணாமூச்சியாட்டம் ஆடிக் கொண்டே இருந்தது.
குருவின் இந்த நிலைமை கண்டு வேதனைப்பட்ட ஆன்மீக மாணவர்களுள் ஒருவர், மனோ சக்தியால் நோய்களைத் தீர்த்து வைக்கும் நீங்கள், எங்களுக்காக ஏன் அவ்வாறு செய்யக் கூடாது. என்று கேட்டார்!
ஆனால், நோய் குணமடைய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், அதை அப்படியே விட்டு விடுவது என்ற முடிவிற்கு அவர் வந்து விட்டார் என்று தெரிந்து விட்டது.
மாறிமாறி வந்த கட்டியின் கொடுமை ரமணமகரிஷியின் உடலைத் தின்று தின்று பலவீனப்படுத்தி விட்டது. இந்த நோய் சுகமாக, எந்தெந்த வகையான மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தும், பல முறை அறுவைச் சிகிச்சைகளைச் செய்து பார்த்தும் குணமாகும் நிலையிலில்லை.
1960-ஆம் ஆண்டு, ஏப்ரல் 14-ஆம் நாள் ரமணமகரிஷியின் நோய் மிக மோசமானது. அருளாளர் ரமணரிடம் அருளாசி பெற்றிட ஆசிரமத்துக்கு வெளியே இரண்டாயிரம் பக்தர்கள் கூடி நின்று, பகவான் உடல் நிலையைக் கேட்டு அருணாசல சிவா, அருணாசல சிவா எங்கள் மகரிஷியைக் காப்பாற்று என்று பஜனை பாடிக்கொண்டே கண்ணீர் சிந்தினார்கள்.
மாலை ஏழு மணி இருக்கும்! ரமணர் மூச்சுவிட வேதனைப் பட்டார்! அதனால் உடனிருந்த மருத்துவர்கள் அவருக்கு பிராணவாயு கொடுத்தார்கள். சிறிது நேரம் சென்ற பின்பு அந்த உயிர்க் காற்றும் நிறுத்தப்பட்டு விட்டது.
ஆசிரமத்துக்கு வெளியே அருளாளர் ரமணருடைய அருளாசிக்காகக் காத்துக் கிடந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திருவண்ணாமலை நகரத்து பக்தர் பெருமக்களோடு, கிராமப்புறத்துக் குடியானவர்களும், ஏழை மக்களும் புற்றீசல் போல நகரை மொய்த்துக் கொண்டு ‘அருணாசல சிவா, அருணாசல சிவா’ என்ற பஜனை ஒலிகளோடு பாடல்களை விடிய விடியப் பாடிய படியே இருந்தனர்.
பகவான் ரமண மகரிஷியின் சீடர்கள், ஆசிரமத் துறவிகள், பழநிசாமி சாமியார், திருவண்ணாமலை நகர் பிரபல செல்வர்கள், கல்விமான்கள், ஆன்மிகச் செல்வர்கள் அனைவரும் ரமணர் உடலைச் சூழ்ந்து வருத்தத்தெரிவித்து தங்களது கண்ணீர்த் துளிகளை சிதறிக் கொண்டிருந்தார்கள். மணி 8.47க்கு ரமண மகரிஷியின் ஆவி பிரிந்தது!
ஆன்மிக உலக மக்கள் ரமணர் மரணம் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். தியானம் திணறி அழுதது! தவம் தள்ளாடி தவித்தது! அவரது மௌனம், அவர் பிறந்த திருச்சுழியில் ஓடும் கௌடின்ய நதியின் கோடை மணல் ஊற்றுக் கண்போல வறண்டு வற்றியது.
தமிழ் நாட்டு ஆன்மீக உலகமும், திருவண்ணாமலை நகரின் ஆயிரக்கணக்கான மக்களும், ரமணருக்குத் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்திய பிறகு, யோகாசன நிலையில் அவரை
அமர வைத்து, கற்பூரம், விபூதி, உப்பு ஆகியவற்றையிட்டுப் புதைத்தார்கள்.
ரமண ரிஷியின் நினைவு என்றும் திருவண்ணாமலையிலே நிலைக்குமாறும், ஆன்மிக உலகம் அவரை என்றும் நினைவிலே நிறுத்திக் கொள்ளுமாறும், ஞானம் விளையும் அருணாசல மலையானது; எவ்வாறு பல யோகிகளை, சித்தர்களை, ஞானிகளை, அருளாளர்களை, பக்திப் பனுவல்களைப் பாடிய பாவலர்களையும் வளர்த்த ஞான வரலாற்றை ஆன்மீக உலகுக்கு வழங்கி, மக்களை உய்வித்துப் புகழ்பெற்று வருகின்றதோ, அந்த ஞான ஒளிவட்டத்தின் அருளாளர் புள்ளிகளுள் ஒரு புள்ளியாக ரமணமகரிஷியையும் அருணாசலம் ஏற்றுக் கொண்டது. வாழ்க அருணாசலம் புகழ்!