←பிற்காலப் பாண்டியர்

தமிழ்நாடும் மொழியும்  ஆசிரியர் பேரா. அ. திருமலைமுத்துசாமிபிறநாட்டார் ஆட்சிக் காலம்

மக்களாட்சிக் காலம்→

 

 

 

 

 


437171தமிழ்நாடும் மொழியும் — பிறநாட்டார் ஆட்சிக் காலம்பேரா. அ. திருமலைமுத்துசாமி

 

8. பிறநாட்டார் ஆட்சிக் காலம் 

முன்னர்க் கூறியபடி பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்னர் வடக்கிருந்து முகமதியரும், அவரை எதிர்த்த விசய நகர மன்னரும், மராட்டியரும் தமிழ் நாட்டில் நுழைந்து அதனைப் போர்க்களமாக்கி, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்து சென்றனர். நம் நாட்டில் நுழைந்த முகமதியர் கோவிலையும், குளத்தையும் கெடுத்து, நாட்டையும், நகரையும் பாழாக்கி, கிடைத்தவற்றை வாரிக்கொண்டு சென்றனர். அக்காலத்திலே விசய நகர வேந்தர் முகமதியர்களை முறியடிப்பதற்கு வீறுகொண்டு எழுந்தனர். மராட்டியரும் மார்தட்டி எழுந்தனர். அவர்கள் வீரமுடன் போரிட்டு ஓரளவு வெற்றியும் பெற்றனர். இதன்காரணமாய் விசயநகரத்தாரும், மராட்டியரும் தமிழ்நாட்டை ஆளுதற்குரிய வாய்ப்பைப்பெற்றனர். வடக்கே முகமதியருடைய வலிமை நாளுக்கு - நாள் வளர்ந்த காரணத்தால் தெற்கு நோக்கி வந்த மராட்டியர் செஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் முதலிய இடங்களைக் கைப்பற்றி ஆட்சிபுரியலாயினர். இதே நேரத்தில் விசயநகர மன்னரும் கன்னியாகுமரி வரையில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தினர். இதன் காரணமாய் மகமதியருடைய படையெடுப்புக்கள் குறையலாயின.


விசயநகர மன்னர்


முகமதிய மன்னன் முகமதுபீன் துக்ளக் தமிழ் நாட்டின் தென்பகுதியை வென்று, அதனை ஆள சலாலுதீன் அசன் என்பவனை நியமித்தான். இவன் கி. பி. 1335-இல் மதுரையில் தன் தனியரசையே நிறுவினான். இவனுக்குப் பின்னர் ஆண்ட கியாசுதீன் என்பவன் கொடுஞ் செயல்கள் பல  புரிந்ததால், முகமதிய ஆதிக்கத்தினை அழிக்க கி. பி. 1336-இல் எழுந்த விசய நகரப் பேரரசை நிறுவிய அரிகரன், புக்கன் என்ற இரு சகோதரரில், புக்கராயனின் மகனான கம்பணன் காஞ்சியையும், மதுரையையும் கைப்பற்றி, முகமதிய மன்ன னைக் கொன்று வீழ்த்தி, தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தன் தந்தையின் குடைக்கீழ் கொண்டுவந்தான். இவ் வெற்றியினைக் கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய “மதுரா விசயம்” என்னும் நூல் நன்கு எடுத்தியம்புகின்றது. இதே போன்று கி. பி. 1280-இல் விசய நகர மன்னனாய் விளங்கிய இரண்டாம் அரிகரன் தன் மகன் விருப்பாக்சனை தமிழ் நாட்டிற்கு அனுப்பினான். இவன் தொண்டை மண்டலத்திலும், சோழ பாண்டிய மண்டலங்களிலும், கொங்குநாட்டிலும், ஈழ நாட்டிலும் வெற்றிகள் பல அடைந்தான். இதன் பின்னர் இரண்டாம் தேவராயன் காலத்தில் விசய நகரப் பேரரசின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் உச்ச நிலையிலிருந்தது, ஆனால் இவனுக்குப் பிறகு கிருட்டிணதேவராயன் அரசனாகும் வரை விசய நகர மன்னர் செல்வாக்குத் தமிழ்நாட்டில் குறைந்தது. விசய நகரப் பேரரசனாகிய கிருட்டிணதேவ ராயன்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. நேரடியாக அவன் தமிழ்நாட்டை ஆளாவிடினும், நாயக்கர், தனது அதிகாரிகள் இவர்களது உதவியினால் நல்ல முறையில் தமிழ் நாட்டை ஆண்டான்.
மதுரை நாயக்கர்கள்
தமிழக வரலாற்றிலே தமக்கெனத் தனியிடம் கொண்டவர்கள் நாயக்கர்கள். அவர்கள் ஆட்சியிலே தமிழகம் பற்பல சிற்பக் கலை பொதிந்த கோவில்களைக் கண்டது. நல்லதொரு ஆட்சி தமிழகத்திலே நடைபெற்றது. தமிழகம் அவர்கள் ஆட்சியினால் அடைந்த நன்மைகள் பலவாகும்.


 மாமன்னன் கிருட்டிணதேவராயன் ஆட்சிக் காலத்தில் விசுவநாத நாயக்கன் தலைமையில் நாயக்க வமிசம் மதுரையை ஆளத் தொடங்கியது. விசுவநாதனது ஆட்சிக் காலம் கி. பி. 1529-64 வரை ஆகும். எனினும் இதற்கு முன்னரே விசய நகரப் பேரரசின் ஒரு பாகமாகத் திகழ்ந்த மதுரையை ஆள நாகம நாயக்கன் முதலில் அனுப்பப்பட்டான். ஆனால் அவன் தனது பேரரசின் ஆணைப்படி ஆட்சி புரிய மறுத்ததால், விசய நகர மன்னன் அவனைப் பதவியினின்று நீக்கிவிட்டு விசுவநாதனுக்கு அப்பதவியை அளித்தான். திருச்சியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலும், மேற்கே கொங்கு நாடு வரையிலும் இவன் ஆட்சி செலுத்தினான். இவனது தலைமை அமைச்சராக விளங்கியவர் புகழ் வாய்ந்த அரிய நாத முதலியார் ஆவார். விசுவநாதன் காலத்தில்தான் தமிழ் நாட்டில் பாளையப்பட்டுகள் தோன்றின. தமிழ்நாடு 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இவைகள் ஒன்பது பெரும் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. பாளையப்பட்டுகளின் தலைவர்களாக விளங்கியவர்கள் பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் மதுரை நாயக்கர் வேண்டியபோது படைகள் அனுப்ப வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்குத் தங்கள் பாளையப்பட்டுகளில் வரி வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாய் நாட்டில் ஒழுங்கும்,அமைதியும் நிலவின. ஆந்திரருக்கும் தமிழ் மக்களுக்குமிடையே ஒற்றுமை நிலவியது.
விசுவநாதனுக்குப் பிறகு அவன் மகன் கிருஷ்ணப்ப நாயக்கன், மூன்றாம் கிருஷ்ணப்பன், இரண்டாம் வீரப்பன், திருமலை நாயக்கன், முதலாம் சொக்கநாதன், நான்காம் வீரப்பன் என்போர் முறையே தமிழ் நாட்டை ஆண்டனர். மூன்றாம் கிருஷ்ணப்பன் காலத்தில் தான், அதாவது கி. பி. 1601-1609-இல் சேதுபதி மன்னர்கள் இராமநாதபுரத்தில் தங்கள் ஆட்சியை நிறுவினார்கள். இரண்டாம் வீரப்பன் காலத்தில் திருச்சி தலை நகராக விளங்கியது.
மதுரையை ஆண்ட நாயக்கர்களில் பெரு வீரனாக விளங்கியவன் திருமலை நாயக்கன் ஆவான். இவன் கி. பி. 1623-இல் பட்டமேறினான். திருவனந்தபுரமும், இராமநாதபுரமும் இவன் அரசுக்கு உட்பட்டிருந்தன. கொங்கு நாடும் அடிபணிந்தது. காந்திரவன் என்ற மைசூர் மன்னனும், விசய நகர மன்னன் மூன்றாம் சீரங்கனும் இப்பெருவீரனால் தோற்கடிக்கப்பட்டனர்.
திருமலை பெரு வீரனாக விளங்கியதோடமையாது, சிறந்த கலைஞனாகவும் விளங்கினான். இவன் செய்த கலைத் தொண்டை எவரும் மறந்திட முடியாது. போரில் புலியாக விளங்கிப் புகழ்பெற்றது போலவே, கலைத்துறையிலும் மாபெரும் வெற்றி பெற்றான். இதன் காரணமாய் மதுரை மா மதுரையாயிற்று; பழம் பெரும் மதுரை புதியதொரு கலைக்கூடமாக மாறியது. அவன் கட்டிய விண்ணை முட்டும் கோபுரங்களுடன் கூடிய கோவில்கள், மக்கள் மனங்கவர் மண்டபங்கள், பெரிய பெரிய தூண்கள் போன்றவை இன்று அவனது கலைப் பெருமைக்குக் கட்டியங் கூறுகின்றன. அவனால் கட்டப்பட்ட புது மண்டபமும், அழகிய மகாலும் இன்றும் அழியாச் சின்னங்களாய் விளங்குகின்றன. இவற்றுள் புது மண்டபம் கட்டி முடிக்க இருப்பது இலட்சம் ரூபாய் செலவாகியது; இருபத்திரண்டு ஆண்டுகள் அல்லும் பகலும் சிற்பியர் பலர் உழைத்தனர். இக்கலைக் கூடத்தின் இரு பக்கத் தூண்களிலும் நாயக்க மன்னர்களின் சிலைகள் நம் நாட் டத்தையெல்லாம் ஈர்க்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளன. மகாலைக் கட்டுவதற்கு நிறையச் செங்கற்கள் தேவைப்பட்ட காரணத்தால் தோண்டப்பட்ட பள்ளமே பின்னர் அழகிய தெப்பக்குளமாக்கப்பட்டது. இதனை இன்று மக்கள்  மாரியம்மன் தெப்பக்குளம் என்றும், வண்டியூர்த் தெப்பக்குளம் என்றும் வழங்குகின்றனர்.
திருமலைக்குப் பின்னர் அவனது பேரன் முதலாம் சொக்க நாதன் பட்டமேறினான். இவன் காலத்தில் திருச்சி தலைநகராய் விளங்கியது. தஞ்சாவூர் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஆனால் கொங்கு நாட்டில் சேலம், கோயம்புத்தூர் பகுதிகள் மைசூருக்குச் சொந்தமாயின. இவனுக்குப் பின்னர் நான்காம் வீரப்பன் பட்டம் பெற்றான். இவனது மகனே இரண்டாம் சொக்க நாதன். சொக்க நாதன் அரசனான பொழுது வயதிற் சிறுவனாக விளங்கியதால், இவனது பாட்டி மங்கம்மாள் திறம்பட நாட்டை ஆண்டாள். இவளது ஆட்சிக் காலம் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த காலமாகும். தஞ்சையும், திருவாங்கூரும் மங்கம்மாள் ஆட்சியின் கீழ் விளங்கின. ஆனால் கி. பி. 1702-இல் சேதுபதி மன்னன் மங்கம்மாளைப் போரில் வென்று, தனது நாட்டை நாயக்கர் ஆட்சியினின்றும் விடுவித்தான். மேலும் புதுக்கோட்டைப் பகுதியையும் சேதுபதி வென்று தனது மைத்துனன் இரங்கநாதனுக்குச் சொந்தமாக்கினான்.
கி. பி. 15ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழகத்தை ஓர் பேரிருள் விழுங்கக் காத்திருந்தது. அந்தப் பேரிருளினின்றும் தமிழகத்தைக் காத்தவர் நாயக்கரே. அஃதாவது அவர் காலத்திலே ஐரோப்பியரும் முகமதியரும் போட்டி போட்டுக்கொண்டு தமிழகத்தைத் தமதாக்கிக் கொள்ள விரைந்தனர். அக்காலை தமிழகத்தை அவரினின்றும் காத்தவர் நாயக்கரே. அரசியர் மங்கம்மா, மீனாட்சி, ஆகிய இருவர் காலத்திலும், முகமதியர் நமக்குக் கொடுத்த தொல்லைகள் எல்லையற்றன. அக்காலை மங்கம்மாள் தளவாய் நரசப்பையன் உதவியுடன் அம்முகமதியரை முறியடித்தாள். ஆனால் பிற்காலை, முறியடிக்கப்பட்ட அதே முகமதியராலேயே மீனாட்சி வஞ்சிக்கப்பட்டாள். நாயக்க வமிசம் நசிந்தது.
சங்க காலத்திலே தமிழகத்தை மூவர் ஆண்டனர். ஆனால் நாயக்கரோ பிற்காலத்தில் தமிழ் நாட்டை ஒருசேர ஆண்டனர். அவர்தம் ஆட்சியின் கீழ் நெல்லை, இராமநாதபுரம், மதுரை, திருச்சி, தஞ்சை, தென்னார்க்காடு, செங்கல்பட்டு ஆகிய அத்தனை மாவட்டங்களும் இருந்தன. இது மட்டுமா? மைசூரும், கொங்கு நாடும் கூட அவரிடம் இருந்தன. சத்தியமங்கலம், தாராபுரம், ஈரோடு முதலிய இடங்களிலும் கூட நாயக்கரின் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
நாயக்கர் ஆட்சியில் ஆட்சி முறைகள் நன்கு வகுக்கப்பட்டிருந்தன. எனவே ஆட்சியும் நன்கு நடைபெற்றது. தளவாய், ராயசம், பிரதானி என்போர் இக்கால அமைச்சர் போல் அக்காலத்தில் ஆட்சி புரிந்தனர். தளவாய் அரிய நாதர், நரசப்பர் போன்றோர் இத்தகைய அமைச்சராவர். பதினேழாம் நூற்றாண்டின் இடையில் நாயக்க அரசின் ஆண்டு வருமானம் 1¼ கோடி ரூபாயாகும். நாயக்கர்கள் அரசுக்கட்டிலில் ஏறிய காலத்தில் தமிழகம் குழப்பத்திலும், கொள்ளையிலும், கொலையிலும் மிதந்துகொண்டு இருந்தது. அக்காலத்தில் தம் ஆட்சித் திறத்தாலும், அறிவின் உரத்தாலும் தமிழகத்தை அக்கொள்ளை முதலியவற்றினின்றும் காத்து நல்லாட்சியை ஏற்படுத்தினர்.

நாயக்கரினால் தமிழகம் அடைந்த பயன்களுள் தலையானது கோவிலே. அவர்கள் காலத்திலேதான் அழகொழுகும் சிற்பங்கள், ஓவியங்கள் பொதிந்த பற்பல கோவில்கள் தமிழகத்தில் எழுந்தன. இன்றுள்ள மதுரை மீனாட்சி கோவிலும், ஆயிரக்கால் மண்டபமும், மாலும், ராய கோபுர 

 

  

 

  மும் நாயக்கர் கட்டியவையாகும். மதுரையில் மட்டுமல்ல; நெல்லை, இராமநாதபுரம், கோவை, சேலம், திருச்சி முதலிய ஏனைய மாவட்டங்களிலும் நாயக்கரால் நிறுவப்பட்ட கோவில்கள் நிறைந்துள்ளன. சீரங்கக் கோயில், பேரூர்க் கோயில் எல்லாம் நாயக்கர் காலத்தில்தான் எழுந்தன. அவினாசியில் உள்ள கோவிலும் இவர்கள் காலத்தில் தோன்றியதே.
சமயப் பற்றும், கடவுள் பக்தியும், மிகுதியாக உடையவர்களாக நாயக்கர்கள் திகழ்ந்தனர். ஆனால் அவர்கள் சமய வெறி கொண்டு பிற சமயங்களைத் துன்புறுத்தவில்லை. எம்மதமும் சம்மதமே எனக் கொண்டுதான் வாழ்ந்தனர். பிறமதக் கோவில்களுக்கு மானியமும், நன்கொடைகளும் இவர்களால் தாராளமாக வழங்கப்பட்டன. அரசி மங்கம்மாளால் அமைக்கப்பட்ட பெருவழிகளும், வெட்டப்பட்ட குளங்களும், கால்வாய்களும், கட்டப்பட்ட சத்திரம் சாவடிகளும், இன்றும் நாயக்கர்தம் ஆட்சிச் சிறப்பை நன்கு அறிவிக்கின்றன. 
செஞ்சி, வேலூர், தஞ்சை நாயக்கர்கள்

மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி நடத்தியது போலவே செஞ்சி, தஞ்சை, வேலூர் இவ்விடங்களிலும் நாயக்கர்கள் தங்கள் ஆட்சியை நிறுவி பெயர்பெற்றவர்களாயிருந்தார்கள். செஞ்சியை ஆண்ட நாயக்கர்களில் ஒருவனான கோப்பண்ணா என்பவன் தில்லையில் கோவிந்தராசர் சிலையை நிறுவினான். கி. பி. 14-ஆம் நூற்றாண்டிலிருந்தே செஞ்சியை ஆண்டுவந்த நாயக்கர்களை கி. பி. 1648-ஆம் ஆண்டு பீசப்பூர் சுல்தான் தோற்கடித்து செஞ்சியைக் கைப்பற்றினான். செஞ்சியை ஆண்டவர்களில் கிருஷ்ணப்ப நாயக்கனும் ஒருவன் ஆவான். இவன் காலத்தில் செஞ்சிக்கு வந்த போர்ச்சுக்கீசியப் பாதிரியார் பிமென்டா என்பவர் செஞ்சியானது லிச்பனைப் போன்று பெரியதொரு பட்டணமாய் விளங்கியதாக எழுதி உள்ளார். மேலும் கிருஷ்ணப்பன் காலத்தில் டச்சுக்காரர் கடலூரில் தங்கள் அலுவலகம் ஒன்றினை அமைத்தனர். வேலூரை ஆண்ட நாயக்கர்களில் முற்பட்டவன் வீரப்ப நாயக்கன் ஆவான். இவன் மகன் சின்ன பொம்மன் (கி. பி. 1549-1582) சிறந்த வீரனாவான். எனினும் இவன் செஞ்சி நாயக்கனுக்குக் கீழ்ப்பட்டிருந்தான். இவனுக்குப் பின் பட்டமேறிய லிங்கம நாயக்கன் செஞ்சிப் பிடியிலிருந்து வேலூரை மீட்கத் திட்ட மிட்டான். ஆனால் செஞ்சிப் படைத் தலைவன் சென்ன நாயக்கன் கி. பி. 1604-இல் லிங்கமனை வென்றான். இப் பெரு வீரன் பெயரால்தான் சென்னைப் பட்டினம் அவனது மகனால் நிறுவப்பட்டது. விசய நகர மன்னன் அச்சுத நாயக்கன் காலத்தில் தஞ்சையில் நாயக்க அரசு ஏற்படுத்தப்பட்டது. தஞ்சையை முதலில் ஆண்டவன் அச்சுதனின் சகலனான செவ்வப்பன் ஆவான். தஞ்சை நாயக்கர்களில் சிறந்த வீரனாகவும், அரசனாகவும், எழுத்தாளனாகவும் விளங்கியவன் இரகுநாத நாயக்கன் ஆவான். தெலுங்கு, வட மொழி இவ்விரு மொழிகளிலும் இவன் பல நூல்களை எழுதி ஏற்றம் பெற்றான். கி. பி. 17-ம் நூற்றாண்டின் இறுதியில் பீசப்பூர் சுல்தானின் தூண்டுதலின் காரணமாய் மராட்டிய மன்னனான வெங்காசி (சிவாசியின் சகோதரன்) நாயக்கர் அரசை ஒழித்து, மராட்டிய அரசாட்சியைத் தஞ்சையில் ஏற்படுத்தினான். இவன் கி. பி. 1675-1712 வரை ஆண்டான். இவனால் நிறுவப்பட்ட மராட்டிய அரசு தஞ்சையில் கி. பி. 1855 வரை நீடித்திருந்தது. இவர்களின் கலையார்வத்தால் தஞ்சை அக்காலத்தில் ஒரு கலைக்கூடமாக விளங்கியது.
 தமிழரும் தெலுங்கரும்
தமிழ்நாட்டிலே தெலுங்கரும், அவர்தம் பழக்க வழக்கங்களும் வெகுவாகப் பரவிய காலம் விசய நகரப் பேரரசின் காலமேயாகும். விசய நகரப் பேரரசின் ஆட்சிக்குத் தமிழகம் அடங்கிய காரணத்தால், விசயநகரப் பேரரசின் சார்பாளர் களாகவும், ஆளுநர்களாகவும் பல தெலுங்கர்கள் (ஆந்திரர்) தமிழகத்திற்கு வந்து குடியேறினர். நாளடைவில் அவர்கள் பரம்பரை பெருகிற்று. அதோடு தெலுங்கர்கள் பலர் போர் வீரராகவும், வணிகராகவும், தொழிலாளராகவும் வந்து குடியேறினர். தமிழகத்திற் புகுந்த இவர்கள் தெலுங்கு நாட்டுப் பழக்க வழக்கங்கள் பலவற்றைத் தமிழ் மக்களிடையே பரப்பிவிட்டனர்.
தமிழகத்திற் புகுந்த தெலுங்கர்கள் பல கோவில்களையும், கல்விக் கழகங்களையும் கட்டினதாகத் தெரிகிறது. மதுரைக்கே பெருமை தந்துகொண்டிருக்கின்ற மீனாட்சியம்மன் கோவிலும், மகாலும் நாயக்கர் கட்டியவையே. தாடிக்கொம்பு, தாரமங்கலம், திருவரங்கம், பேரூர் முதலிய பலவிடங்களிலே தெலுங்கரால் கட்டப்பட்ட கோவில்கள் இன்றும் கவினுடன் காட்சியளிக்கின்றன.
விசய நகரப் பேரரசின் காலத்தில் நிலவிய கல்லூரிகளைப் பற்றிய குறிப்புகள் அக்காலத்திய பாதிரிகளின் குறிப்புகளில் காணப்படுகின்றன. அருணகிரி, தாயுமானார், அதிவீரராமபாண்டியன் ஆகியோர் விசய நகரப் பேரரசின் காலத்திலே வாழ்ந்த தமிழ்ப் புலவர்களாவர். மேலும் தெலுங்கர்கள் மிகுதியாகக் குடியேறிய சிற்றூர்கள் இன்று தென்பாண்டி நாட்டில் ஏராளமாக உள. நாயக்க மன்னரால் வெட்டப்பட்ட குளங்களும் தமிழகத்தில் உள.
தமிழ் நாட்டில் கிறித்தவமும், இசுலாம் மதமும் நன்கு பரவியது விசய நகரப் பேரரசின் காலத்தேதான். கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகம் போந்த நோபிலிப் பாதிரிக்கு ஆதரவு காட்டிய தெலுங்கு மன்னர்கள் மூன்றாம் கிருட்டினப்ப நாயக்கன், இராமச்சந்திர நாயக்கன், செலபதி நாயக்கன் முதலியோராவர்.


மைசூர் மன்னர்கள்


மைசூர் மன்னர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏறத் தாழ 180 ஆண்டுகளில் மெல்ல மெல்லப் பரவிற்று. திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர் என்பவர்கள் ஆட்கிக் காலத்தில் மைசூர் மன்னன் காந்திர அரசனது படை கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் பல இடங்களை வென்று, திண்டுக்கல்வரை வந்து வாகை சூடிச் சென்றது. இவனுக்குப்பின் பட்டமேறிய தொட்டதேவன் காலத்தில் சேலம், தாராபுரம் முதலிய இடங்கள் மைசூருக்குச் சொந்தமாயின. சிக்கதேவன் என்பவன் அடுத்து அரசனாயினான். கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, பழனி, ஆனைமலை, குமாரபாளையம், தவளகிரி, பொள்ளாச்சி முதலிய இடங்கள் இவனுக்குச் சொந்தமாயின, மேலும் சங்கரய்யா. என்பவன் கொங்கு நாட்டில் ஆட்சி நடத்த மன்னனால் அனுப்பப்பட்டான். இது நடந்த காலம் 18-ஆம் நூற்றாண்டின் இடைக்காலமாகும். இவன் அவினாசி, பவானி இவ்விடங்களிலுள்ள கோவில்களைப் புதுப்பித்தான்; பேரூரில் குளமொன்று வெட்டினான். இவன் காலத்திலேயே மைசூர் மன்னர்களின் செல்வாக்குத் தமிழ் நாட்டில் குறையலாயிற்று. ஆனால் கி. பி. 1765-இல் மைசூர் மன்னனாக முடிபுனைந்து கொண்ட ஐதர் அலி, அவன் மகன் திப்பு இவர்கள் காலத்தில் தமிழ் நாட்டின் பெரும்பகுதி. அவர்களது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
 மைசூர் மன்னர்கள் ஆட்சிக்குத் தமிழகம் உட்பட்டிருந்த காலத்தில், கன்னட மக்கள் பலர் தமிழ் நாட்டிற்கு வந்து குடியேறினர். கொங்கு நாட்டுக் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டன; பல புதிய கோவில்களும் கட்டப்பட்டன. குளங்கள் பல வெட்டப்பட்டன. கோயம்புத்தூரிலுள்ள சிக்கதேவராயன் குளம் சிக்கதேவனால் வெட்டப்பட்டதாகும். சத்திய மங்கலத்தில் உள்ள குமாரசாமிக் கோவிலைக் கட்டியவனும் இவனே. நிலங்கள் அளக்கப்பட்டன. புகையிலை வரி, ஆட்டு வரி, புல் வரி முதலிய வரிகள் விதிக்கப்பட்டன. ஐதர், திப்பு இவர்கள் காலத்தில் இன்னும் பல வரிகள் வாங்கப்பட்டதால் உழவும், வணிகமும் வளம் குன்றத் தொடங்கின. மக்கள் பெரிதும் அல்லலுற்றனர். பொருளாதார நிலை குன்றத் தொடங்கியது. இக்காலத்தில்தான் முகமதிய சமயமும், கிறித்தவ சமயமும் தமிழ்நாட்டில் வளரத் தொடங்கின. திப்புவின் காலத்தில் பல இந்துக்கள் முகமதியராயினர். அபேடுபுஆ (Abbe Dubos) என்ற பாதிரியார் தமிழ்நாட்டிற்கு வந்து கிறித்தவ சமயத்தை மக்களிடையே பரப்பினார். இதற்குப் பின்னர் பல பாதிரிமார்கள் தமிழகம் வந்தனர்; சுவார்டச் (Schwartz), சீகன்பால்க் (Ziegenbalg) போன்ற சமயப் போதகர்களும் வந்தனர்.
திப்புவின் காலத்தில் ஆட்சி முறையில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. நாடு, 1000 சிற்றூர்களைக் கொண்ட பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. மாவட்டங்கள் 40 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அசாவ் (Asaf), பாச்தார் (Faujdar) என்பவர்கள் மாகாணத் தலைமை அதிகாரிகள்; அமில்தார் (Amildar), தரப்தார் (Tarafdar) என்பவர்கள் மாவட்ட அதிகாரிகளாவர். இவர்களுக்கு உதவியாகச் செரிச்த்ததார் (Sheristadar) என்ற அதிகாரியும் இருந்தார். கிராம ஆட்சி கிராமப் பஞ்சாயத்தினரால் திறம்பட நடத்தப்பட்டது. சிக்கதேவன் காலத்தில்  தொடங்கப்பட்ட, தபால், காவற்படைத் (Police) துறைகள் திப்புவினால் ஒழுங்குபடுத்தப்பட்டு நல்லமுறையில் பணியாற்றத் தலைப்பட்டன. மேலும் திப்புவின் காலத்தில் நாணயங்கள் வெளியிடப்பட்டன.


ஐரோப்பியர் வருகை

 
முன்னுரை
கி. பி. 17-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மேலை நாட்டு வாணிப மக்களாகிய போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என்போர் தத்தம் செல்வாக்கை நம் நாட்டில் பரப்ப முயன்றனர். இந்தியக் கடலாதிக்கத்தை முதலில் கைக்கொண்டவர்கள் போர்த்துக்கீசியராவர். இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பியன் வாச்கோடகாமா ஆவான். இப் போர்த்துக்கீசிய மாலுமி கி. பி. 1498-இல் கள்ளிக்கோட்டைக்கு வந்து சென்றான். இவனது வருகை நம் நாட்டு வரலாற்றையே மாற்றியமைத்துவிட்டது என்று கூறவேண்டும். போர்த்துக்கீசியரது நாகரிகமும், பழக்க வழக்கங்களும் நம் நாட்டில் பரவின. வாணிபம் வளம் பெற்றது. விசய நகர வேந்தர்களுக்குப் பாரசீகத்திலிருந்து புரவிகளை இவர்கள் வரவழைத்துக் கொடுத்துப் பொன்னும் மணியும் பெற்றனர். கோவாவிலும், வேறு சில இடங்களிலும் கத்தோலிக்க சமயம் வேரூன்றியது. முதல்முதல் அச்சகம் நம் நாட்டில் நிறுவப்பெற்றது. சென்னையின் ஒரு பகுதியாகிய சென்தோம் போர்த்துக்கீசியருக்குச் சொந்தமாயிற்று.
போர்த்துக்கீசியருக்குப் பின் டச்சுக்காரர் நம் தாயகத்திற்கு வந்தனர். பழவேர்க்காடு, (கி. பி. 1160) தரங்கம்பாடி (1620), தூத்துக்குடி (1658) நாகை முதலிய இடங்களில் வாணிக நிலையங்கள் நிறுவப்புட்டன. கி. பி. 1603-இல் டச்சுக்காரரால் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கிந்தியக் கம்பெனியின் உரிமையாளராக நாளடைவில் ஆங்கிலேயர் ஆயினர். எனவே டச்சுக்காரருக்கும் ஆங்கி லேயருக்கும் அடிக்கடி போர் நடந்தது. இக்காலத்தில் பிரெஞ்சு நாட்டாரும் நம் நாட்டிற்கு வந்தனர். ஆனால் இறுதியில் ஆங்கிலேயரே வெற்றிபெற்று கி. பி. 1784-இல் நம் நாட்டின் முழு உரிமையும் பெற்றனர். 
ஆங்கிலேய ஆட்சியின் வளர்ச்சி
பிரான்சிசுடே என்பவன் கி. பி. 1639-இல் இப்பொழுது சார்ச் கோட்டையாக விளங்கும் இடத்தை வெங்கடப்ப நாயக்கனிடமிருந்து வாங்கினான். வாணிக அலுவலகமொன்று இங்கு நிறுவப்பட்டது. 1688-இல் இக்கோட்டையில் கோவிலொன்று கட்டப்பட்டது. இது ஆங்கிலேயரால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கிறித்தவக் கோவிலாகும். வாக்ச் க்ராவ்ட் (Foxeraft), வில்லியம் லேங் ஆர்ன், ச்டேரச னாம் மாச்ட்டர் என்பவர்கள் முறையே சென்னை கவர்னர்களாக வந்து, ஆங்கிலேய ஆட்சி முறைகளையும் நாகரிகத் தையும் பரப்பினர். இதே நேரத்தில் நம் தாயகம் வந்த பிரெஞ்சுக்காரர்கள், சென்தோமிலும், புதுச்சேரியிலும் அலுவலகங்களை நிறுவினர். புதுச்சேரியின் கவர்னர்களாக லெனு ஆர் (Lenior), டூமாசு (Dumas), டூப்ளே (Duple), என்பவர்கள் முறையே பணியாற்றினர். டூமாசு தஞ்சை மன்னன் தன் அரசைப் பெறுவதற்கு உதவிய காரணத்தால், காரைக்கால் நன்கொடையாகப் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கிடைத்தது. டூப்ளே பிரெஞ்சு ஆட்சியை நம் நாட்டில் நிலை நாட்ட முயன்றதால், ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயரே வெற்றிபெற்றனர். ஆனால் கி. பி. 1756-இல் பிரெஞ்சு இந்தியக் கவர்னரான லாலி என்பவன் சிறந்த வீரன் ஆவான். பல போர்கள் நடத்தி வெற்றியும் பெற்றான். எனினும் கி. பி. 1760-இல் வந்தவாசியில் நடந்த இறுதிப் போரில் மாவீரன் சர். அயர்கூட் என்ற ஆங்கிலத் தளபதி யால் பிரெஞ்சுக்காரர் அடியோடு முறியடிக்கப்பட்டனர். எனவே ஆங்கிலேயர் கை உயர்ந்தது. ஆனால் அவர்கள் தம் ஆட்சியை நம் நாட்டில் நிலை நிறுத்துவதற்குத் தடையாக ஐதர் அலியும், திப்புவும் விளங்கினார்கள். 
கி. பி. 1772-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே ஆங்கிலேய ஆட்சி தொடங்கப்பெற்றது. இதன் காரணமாய் நம் தாயகமாகிய தமிழ் நாட்டின் வரலாறு இந்திய வரலாற்றோடு இணைந்தது. இக்காலத்தில் தான் முதல் கவர்னர் செனரலாக வாரன் ஏச்டிங்சு பதவியேற்றான். ஆங்கிலேயருக்குச் சொந்தமான நிலப்பகுதி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. மாவட்டத் தலைமை அலுவலராகக் கலெக்டர் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர்களது பணியை மேற்பார்வையிட ரெவின்யூ போர்டு என்ற குழு கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டது. மேலும் இங்கு வரிப் பணத்தைப் பெற்றுப் பாதுகாப்பதற்குக் கால்சா என்ற ஒரு கசானா நிறுவப்பட்டது. இதற்குத் தலைவராக ஒரு தலைமைக் கணக்கர் (Accountant General) பணியாற்றினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் சிவில், கிரிமினல் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. இந்துச் சட்டங்கள் தொகுக்கப்பட்டன; மொழிபெயர்க்கப்பட்டன. கல்கத்தாவில் பாங்கி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. திருடர்கள் ஒழிக்கப்பட்டனர். இதன் காரணமாய் வாணிபம் வளர லாயிற்று; வளமும் தருவதாயிற்று.
கி. பி. 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் பெரும் பகுதி ஆங்கிலேயருக்குச் சொந்தமாயிற்று. திப்புவின் தோல்வியின் காரணமாய் சேலம், கோயம்புத்தூர், தாராபுரம், பாலக்காடு, தஞ்சை முதலிய இடங்கள் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மதுரை, இராம நாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கைப் பகுதிகள் ஆங்கிலேயருக்குச் சொந்தமாயின. இதற்குக் காரணமாக இருந்தவன் பாளையப்பட்டுகளின் தலைவர்களில் தலைமையாய் இருந்த ஆர்க்காடு நவாப்பாவான். ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற கடனுக்காக அவன் தன் கப்பப் பணம் முழுவதையும் வசூலிப்பதற்கு உரிய அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினான். ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டபொம்மன், புலித்தேவன் என்ற இரு பாளையக்காரர்களும், சிவகங்கை வீரர்களான மருதிருவரும் 'வரிகொடோம்' என்று கூறி வீரமுழக்கம் செய்தனர். ஆனால் எட்டையபுரப் பாளையக்காரரும், புதுக் கோட்டைத் தொண்டைமானும் பதவி ஆசையின் காரணமாய் ஆங்கிலேயரது கைப்பொம்மைகளாக மாறியதால் இவ் வீரர்கள் கொல்லப்பட்டனர். எனவே நாம் அனைவரும் ஆங்கிலேயரது அடிமைகளானோம். 


ஆங்கிலேயர் ஆட்சியினால் விளைந்த நன்மைகள்


சாதிப் பிரிவினைகளும், சமயப் பிணக்கும் நீதிப்பிழையும் நியமப்பிழையும் மலிந்து, அடிமை மோகமும் ஆள்வினையின்மையும் கொண்டு, அறியாமை இருளிலே மூழ்கி நிலை தாழ்ந்து தலைகவிழ்ந்து ஒடுங்கிக்கிடந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு அறிவொளி காட்டியது ஆங்கிலேய ஆட்சியே என்று கூறி னால் அது முழுக்க முழுக்க அப்பழுக்கற்ற உண்மையாகும். 
சமுதாயச் சீர்திருத்தம்
ஆங்கிலக் கல்வி நாட்டிலே பரவுமுன்னர்த் தமிழ்ச் சமுதாயம் அறியாமை இருளில் மூழ்கியிருந்தது. சாதிப்பேய் தமிழ் மக்களைப் பிரித்து அரித்து வந்தது. இந்த நாட்டுக்கே உரிய தமிழ்மக்கள் அயலவரால் நாயினும் கேடாக  நடத்தப்பட்டனர். தமிழ்ச் சமுதாயம் உள் வலிவு இன்றிக் கிடந்தது. அத்தகைய சமுதாயத்துக்கு மேலை நாட்டு அறிவியற் கல்வியை அளித்து அறியாமை இருளை அகற்றி அறிவொளி பெறச்செய்து, சாதிப் பிரிவினை களைந்து, தலை நிமிரச்செய்தது ஆங்கிலேய ஆட்சியே. சமுதாயத்திலே எல்லோரும் சமம்; எல்லோருக்கும் கல்வி என்ற எண்ணம் அரும்பியதற்குக் காரணம் ஆங்கிலேய ஆட்சியே.
அரசியல் சீர்திருத்தம்

ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளாக, துருக்கர்கள், ஓய்சாலர்கள் முதலிய அயலவர் படையெடுப்பாலும், அவர்கள் செய்த போர்களாலும் அலைத்துக் குலைத்துக் குழப்பத்திலே மிதந்து வந்த தமிழகத்திலே ஓர் ஒழுங்கான ஆட்சியை நிறுவி அமைதியை ஏற்படுத்தியது ஆங்கிலேய ஆட்சிதான். மேலை நாட்டு முறைப்படி, அழகும் ஒழுங்குமிக்க நல்ல காவற்படையினை நிறுவியும், அதிலே தமிழரைப் பயிற்சி பெறுவித்தும், அப் பயிற்சிக்கான கல்லூரிகளை நிறுவியும், தமிழனைப் படைத்துறையில் சிறந்தோங்கச் செய்த பெருமை ஆங்கிலேய ஆட்சிக்குரியதாகும். நாட்டை மாநிலமாகவும், மண்டலமாகவும், மாவட்டமாகவும், வட்டமாகவும், வட்டாரமாகவும் பிரித்து, நல்லதோர் ஒழுங்கான ஆட்சியை நடத்தியது ஆங்கிலேய அரசே. ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகம், மாவட்டக் கழகம் முதலிய ஆட்சி மன்றங்களை ஏற்படுத்திப் பெருஞ்சாலைகளும், சிறு சாலைகளும், இருப்புப் பாதைகளும் அமைத்து, ஊர்களை இணைத்து, கார், புகைவண்டி முதலிய ஊர்திகளையும், வான ஊர்தியையும் ஓடவிட்டது ஆங்கிலேய அரசே. அறியாமை இருளில் கிடந்த தமிழனுக்கு ஆங்கிலக் கல்வி அளித்து, ஆளும் திறனையும் பயிற்சியையும் அளித்தவர் ஆங்கிலேயரே.
 கல்வியும் மொழி வளர்ச்சியும்
கல்வி வாடையே அடிக்கப் பெறாத தமிழ் மக்களும் தமிழ்ப் பெண்டிரும் கல்வியளிக்கப் பெற்றனர். இன்று மாநிலத் தலைவர்களாகின்ற அளவுக்குப் பெண்டிர் உயர்ந்தமைக்குக் காரணம் ஆங்கிலேயர் அளித்த கல்வியே. ஆங்கிலேயர் ஆட்சியிலே தமிழ்மொழி பெற்ற ஆக்கம் ஒன்றல்ல; பல; பலப்பல. அச்சுப்பொறி மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழ் நூல்களை அச்சிட்டு எல்லோரும் படிக்க வாய்ப்பளித்தவர் ஆங்கிலேயரே. மேலும் தமிழிலே சிறு கதை, நெடுங்கதை, கட்டுரைகள் முதலிய பல புதிய துறை நூல்களும், செய்தித்தாள்களும், வார, மாத வெளியீடுகளும் தோன்றின. தமிழ் நூல்களை ஆங்கில மொழியிலே பெயர்த்தெழுதி உலகமெலாம் அறியச்செய்தது ஆங்கிலேய ஆட்சியே. கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் ஆங்கிலத்தோடு தமிழும் கற்பிக்க வழிவகை செய்தவர் ஆங்கிலேயரே. தமிழ் தனித்தியங்கும் ஆற்றலுடையது என்று நிறுவியவர் ஆங்கிலேயரே. 
பிற நலன்கள்

தமிழ் நாட்டிலே, நூல் நூற்றல், நெய்தல் போன்ற தொழில்களுக்குரிய இயந்திரங்களைக் கொண்டு வந்து நாட்டின் பல்வேறு இடங்களிலே பெரும் பெரும் தொழிற் சாலைகளை ஏற்படுத்தியமைக்குக் காரணமாக இருந்தவர்கள் ஆங்கிலேயரே. பெரும் அணைக்கட்டுகளைக் கட்டி, நாட்டிலே நீர்ப்பாசனம் நன்கு நடைபெறுமாறும், மின்சாரம் கிடைக்கு மாறும் செய்து நாடு நலமுறச் செய்தவர்கள் ஆங்கிலேயர்களே.
 

 

 


 

Please join our telegram group for more such stories and updates.telegram channel