தெனாலிராமன் கதை , மரியாதை ராமன் கதை போன்ற பற்பல நகைச்சுவை நறுக்குகள் நானிலத்திலும் உள்ளன . அவற்றைத் தேடி எடுத்துக் கொடுப்பதில் ஒரு சிலரே ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் ’ என்று நாள்தோறும் உலக மொழிகளிலே விழிவைத்துப் பார்க்கின்றனர் . அவர்களுள் ஒருவரே நம் புலவர் த. கோவேந்தன் அவர்கள் தொகுப்பு சீனா , ஜப்பான் நாட்டு நகைச் சுவை நறுக்குகள் , துணுக்குகள் இங்கே உங்கள் கையில் அமர்ந்து சிரிக்கின்றன ; சிந்திக்க வைக்கின்றன .
பெற்றோர்களும் , ஆசிரியர்களும் தாம் கற்பது மட்டுமின்றி தம் பிள்ளைகட்கும் தம் மாணவர்கட்கும் இந்நூலைத் தந்து சிரித்து மகிழ்ந்து வாழட்டும் .

மக்களாகிய நமக்கே சிரிக்கத் தெரியும் . நண்பர்கள் , உற்றார் உறவினர்கள் எல்லோருடனும் கலகலப்பாகச் சிரித்துப் பேசி மகிழ்வது போன்ற ஓர் இன்பம் வேறு இல்லவே இல்லை .

எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவர்கள் தப்பேதும் இல்லாத மனம் உடையவர்கள் . மனம் இறுக்கம் இருந்தால் , மனக்கவலை தோன்றும் . மனக்கவலைக்கு மருந்து நகைச்சுவையாகும் . அந்த நகைச்சுவை அன்பில் முகிழ்விப்பது . அது நம்மைச் சூழ்ந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் உள்ளது . நம் நடிப்புகளே சொற்களே செயல்களே நம்மையும் நானிலத்தையும் சிரிக்க வைக்கும் பாங்குடையன . உள்ளம் உரை செயல்களில் ஓங்கிய நகைச்சுவை நறுக்குகளே இந்நூல் தொகுப்பு . படித்து நகையுங்கள் . எல்லாப் பகையையும் வெல்லுங்கள் . வாழ்க்கைத் திருவிழாவில் தொகை தொகையாய் இன்பம் பெருகும் . துன்பம் அருகும் .
உலக நாடக மேடையில் நாம் விலைவாணராகவும் கொலைவாணராகவும் நடிப்பதை விடக் கலைவாணராக வாழ்வோம் .

81 . மதுக்கோப்பையை அறுத்தல் :
அழைப்பிற்கிணங்கி விருந்தொன்றிற்குச் சென்றார் ஒருவர் . விருந்துக்கழைத்த நண்பரோ ஒவ்வொரு முறையும் மதுக் கிண்ணத்தில் அரைக் கிண்ணம் அளவே மது ஊற்றிக் கொடுத்தார் . விருந்தினரோ அவர் செயல் கண்டு வெறுப்புற்றார் . அளவுக்கு மிஞ்சிய வெறுப்பில் அவர் கேட்டார் . “ உங்களிடம் வாள்( ரம்பம் ) இருக்கின்றதா ? இருந்தால் கொஞ்ச நேரம் இரவல் கொடுங்களேன் ” என்று கேட்டார் .
ஏன் ? எதற்கு ? என்றார் விருந்து கொடுத்த நண்பர் . விருந்தினர் சொன்னார் “ நீங்கள் மதுக் கிண்ணத்தில் பாதியளவே மதுவினை ஊற்றுகிறீர்கள் . கிண்ணத்தில் எஞ்சிய பாதி பயனற்று வீணாய் தானே உள்ளது . அந்தப் பயனற்ற கிண்ணத்தில் மேல் பாதியை வெட்டித் தள்ளிவிடலாம் அல்லவா ? ” என்று .
82 . வேதனை ஒன்று :
விருந்தொன்றில் வந்த விருந்தினர்களில் ஒருவர் அகன்ற பெரிய தட்டில் பரிமாறப்பட்ட வாதுமைப் பருப்பில் பாதியை ஒரே கவளத்தில் அள்ளி விழுங்கினார் விரைவாக . இதனைக் கண்ட விருந்தளித்தவன் ‘ ஏன் இப்படி விரைவாகச் சாப்பிடுகிறீர்கள் ? ’ என்று கேட்ட போது அவர் சொன்னார் ‘ வாதுமைப் பருப்பு ’ நெஞ்சங்குலைக்கு நல்லது என்று . இதனைக் கேட்ட விருந்து கொடுத்தவன் “ உணவை நன்றாக உண்டு ஐயமின்றி நீங்கள் உங்கள் நெஞ்சத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றீர்கள் . ஆனால் என் நெஞ்சம் வேதனைப்படுகிறதே ” என்று எதிர்வான எழுப்பினார் விருந்தளித்தவர் .
83 . கூன் விழுந்த முதுகு :
“ கூனினை நிமிரச் செய்து அற்புத நலமளிக்கும் வியப்புறு சிகிச்சை ; கூனர்கள் நடக்கவும் ; குணம் பெறவும் ” என்ற மருத்துவர் ஒருவரின் விளம்பரத்தை நம்பி , தன் கூனை நிமிரச் செய்ய அந்த மருத்துவரை நாடினார் ஒருவர் . மருத்துவரும் அவரை அன்போடு வரவேற்றுச் சிகிச்சையைத் தொடங்கினார் . நீண்ட பலகை ஒன்றினில் நோயாளியைப் படுக்கச் செய்தார் . வேறொரு நீண்ட பலகையை அவர் மீது வைத்தார் . மேலொன்றும் கீழொன்றுமாக இரண்டு பலகைகளுக்கிடையே இப்போது நோயாளி படுத்திருந்தார் . இரண்டு பலகைகளின் விளிம்புகளைக் கயிற்றால் கட்டி மெல்ல மெல்ல கட்டுகளை இறுக்கினார் . பலகைகள் ஒன்றை நோக்கி மற்றொன்று நகர்ந்து இடையில் கிடந்த மனிதனை நெருங்கின . பின்னர் நசுக்கின . வேதனை தாங்காது நோயாளி கட்டுகளை இறுக்குவதை நிறுத்தச் சொல்லிக் கதறினார் . மருத்துவரோ அவர் கதறுதலைத் தம் காதில் போட்டுக் கொள்ளாமல் தம் வைத்தியத்தை தொடர்ந்தார் . சற்று நேரத்தில் கதறல் நின்றது . தற்போது பல கைகளின் கட்டுகளை அவிழ்த்துப் பலகையை நீக்கினார் . கூன் நேராக நிமிர்ந்திருந்தது . நோயாளியும் கூன் மட்டும் நிமிரவில்லை கை கால்கள் அனைத்துமே நீட்டி நிமிர்ந்த வண்ணம் மடக்க முடியாமல் இருந்தன . கூன் குணமானது . ஆனால் நோயாளி இறந்து போனான் .
உறவினர் கொதித்தனர் . மருத்துவரை உதைத்தனர் . உதைகளுக்கிடையே மருத்துவர் “ நான் கூனை நிமித்துவதாகத்தான் சொன்னேன் அப்போது யாரும் என்னிடம் அவருடைய உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று சொல்ல வில்லையே ” என்றார் .
84 . அம்பினை அகற்றச் சென்றவன் வம்பினில் அகப்பட்டான் :
வீரன் ஒருவனின் உடம்பில் அம்பொன்று தைத்தது . ஆழமாகத் தைத்த அம்பினை அகற்ற மருத்துவரிடம் கொண்டு அந்த அறுவைச் சிகிச்சை வல்லுனரோ “ நான் உடம்பின் வெளியே உள்ள பகுதிகளை அறுப்பதிலும் அகற்றுவதிலும் தான் வல்லுனன் . அதனை நான் செம்மையாகச் செய்து விட்டேன் . இப்போது நீங்கள் உடம்பின் உட்பகுதிகளை அறுவைச் சிகிச்சை செய்யும் வல்லுனரை நாடுங்கள் ” என்று ஆய்வுரை வழங்கினார் .
85 . குருதிக் கொடை :
பிறவுயிர்களுக்குத் தன் அரத்தத்தை ( குருதி ) அளித்து அவற்றை வாழவைக்க நினைத்தார் பெளத்தத் துறவியொருவர் . நினைத்த வண்ணமே கொசுக்களைத் தன் குருதியை உறிஞ்சி உயிர் வாழ அனுமதித்தார் . சில நாள்கள் கொசுக்கள் பல்கிப் பெருகின . அவரால் கொசுக்கடியைத் தாங்க முடியவில்லை . கடிதாங்காத துறவி தன்கைகளால் கொசு கடிக்கும் இடங்களில் பட்டு , பட்டு என்று அடித்துக் கொண்டார் . இப்படித் தம் உடம்பை தாமே அடித்துக் கொண்டிருக்கும் நிலைகண்டு திகைப்புற்ற வழிப்போக்கன் ஒருவன் துறவியிடம் “ கொசுக்களுக்கு இரத்தக் கொடை செய்வதாக உறுதியெடுத்துக் கொண்ட நீங்கள் இப்படி அவைகளை அடித்து விரட்டலாமா ? ” என்று கேட்டார் . “ ஏனெனில் சில கொசுக்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன ” என்றார் துறவி .
86 . தெருப் பாடகன் :
தெருவிலே ஒருவன் தன் தடாரியைத் தட்டத் தொடங்கினான் . பலரும் அவன் மண்முழா தான் வாசிக்கப் போகிறான் என்று எண்ணிக் கொண்டு அவன் இசையைச் சுவைக்க அவனைச் சுற்றிக் குழுமினர் . ஆனால் இசைக் கலைஞன் தன் தடாரியைத் தட்டத் தொடங்கியதும் இசையில் இனிமையில்லாததால் குழுமிய கூட்டம் கலைந்தது . ஒரே ஒருவர் மட்டும் அங்கு இறுதிவரை நின்று கொண்டிருந்தார் . இறுதிவரை தன் அருகில் நின்று கொண்டிருந்த அந்த மனிதரைக் கண்டு ‘ நம் இசையை சுவைக்க இவர் ஒருவர் இருக்கிறாரே . எனவே என் இசை அறிவு வீண்போகவில்லை ’ என்று மகிழ்ந்து கூறினார் இசைக் கலைஞர் . அதனைக் கேட்டு , அந்த மனிதன் “ என் நிலைப்பலகையை மட்டும் நான் உங்களுக்கு மேடையாக தராவிட்டால் நானும் இங்கிருந்து எப்போதோ போயிருப்பேன் ” என்று சொன்னார் .
87 . திருடனின் மேலாடை திருடப்பட்டது :
மணத்துணைவர் ( தம்பதிகள் ) தூங்கிக் கொண்டிருந்த அறையினுள் புகுந்தான் திருடன் . அவர்கள் வீட்டில் திருடுவதற்கு வேறெதுவும் இல்லாமல் , ஒரே ஒரு பானையில் அரிசி நிரப்பப்பட்டு அவர்கள் படுக்கை அறையில் அது வைக்கப்பட்டிருந்ததால் அதனைத் திருட அங்குப் புகுந்தான் அந்தத் திருடன் . பானையிலிருந்த அரிசியைத் திருடி , வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைத்துண்ண நினைத்தான் திருடன் .
ஆனால் அரிசியைக் கட்டி எடுத்துச் செல்ல அங்கு வேறெதுவும் இல்லாததால் , தன் மேலாடையில் முழு அரிசியைக் கொட்டிக் கட்டி எடுத்துச் செல்ல நினைத்து , தன் மேலாடையைக் கழற்றித் தரையில் விரித்தான் . பின் பானையின் பக்கம் திரும்பி அதனைத் தூக்க முனைந்த போது , விழிந்துக் கொண்ட கணவன் தன்கையை நீட்டி திருடனின் மேலாடையை மெதுவாய் எடுத்துத் தன் படுக்கையின் அடியில் மறைத்து வைத்துக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தான் . பானையைத் தூக்கி அதிலிருந்த அரிசியை மேலாடையில் கொட்ட வந்த திருடன் தான் ஆடையை விரித்திருந்த இடத்தில் காணமல் திடுக்கிட்டுத் திகைத்தான் . அந்த நேரம் பார்த்து மனைவி விழித்துக் கொண்டாள் . கணவனை எழுப்பி ஏதோ ஓர் உருவம் அறையினுள் நடமாடுவதை அவனுக்கு உணர்த்தினாள் . கணவன் “ நான் நீண்ட நேரமாக விழித்துக் கொண்டு தான் இருக்கிறேன் இங்குத் திருடன் யாரும் இங்கு இல்லை ” என்றான் . ‘ என்ன ? ’ திருடன் கூவினான் . ‘ என் மேலாடை இங்கு திருடு போய்விட்டது . திருடன் யாரும் இங்கு இல்லை என்று நீ எப்படிச் சொல்லலாம் ? என்றான் அந்த உண்மைத் திருடன் .
88 . உப்பிட்ட முட்டைகள் :
ஒரு நாள் உப்பிட்ட முட்டைகளை இருவர் தின்று கொண்டிருந்தனர் . அப்போது ஒருவன் “ பொதுவாக முட்டைக்குச் சிறப்பான மணமோ , சுவையோ இல்லை என்று தான் நான் இந்நாள் வரை நினைத்திருந்தேன் . ஆனால் , இந்த முட்டைகள் சுவையாகவும் உப்பாகவும் இருக்கின்றனவே ” என்றான் . “ நல்லவேளை இந்த உண்மையை நீ கண்டுபிடிக்கும் போது என்னோடு இருக்கிறாய் . நான் உனக்கு முழு உண்மையையும் விளக்குகிறேன் . ஏனெனில் எனக்கு அவற்றைப் பற்றி நன்றாகத் தெரியும் . இந்த முட்டைகள் உப்புக் கோழிகளிடமிருந்து கிடைக்கிறது , எனவே தான் உப்பாயிருக்கிறது ” என்று விளக்கம் தந்தான் முன்னவனுக்குப் பின்னவன் .
89 . தவறான மருத்துவம் :
நோயாளியை ஆய்வு செய்த மருத்துவர் ஒருவர் வீட்டிற்கு அழைக்கப்பட்டார் . ஆய்வு செய்த பின் மருத்துவர் சொன்னார் “ பயப்படும்படி எதுவுமில்லை , எனினும் முழு ஓய்வு தேவை . சில நாள்கள் படுக்கையில் ஓய்வெடுப்பது நல்லது ” என்று . ஆனால் சில நாள்களுக்குள்ளாகவே அந்த நோயாளி இறந்துவிட்டார் . சினமுற்ற நோயாளியின் குடும்பத்தினர் தங்கள் வேலைக்காரனை அனுப்பி மருத்துவரை வசைபாடி விட்டு வரும்படி அனுப்பினர் .
வேலைக்காரனோ சிறிது நேரத்திலேயே திரும்பி வந்தான் . “ என்ன , அவரை நன்றாக வசைபாடினாயா ? ” என்று கேட்டனர் . “ இல்லை " என்றான் அவன் . “ ஏன் ? ” என்றனர் அவர்கள் . அவன் சொன்னான் “ மருத்துவரைச் சூழ்ந்து பெரும் கூட்டம் நின்று பல்வேறு வகைகளில் அவரை அனைவரும் வசைபாடிக் கொண்டிருந்தனர் . அக்கூட்டத்தை விலக்கி அருகில் சென்று அவரை வாயார வசைபாட முடியாமல் திரும்பி விட்டேன் ” என்றான் வேலைக்காரன் .
90 . குளிர் நீர் ஊற்று :
“ என் உள்ளம் குளிர்ந்தது ” என்று தன் மனைவியிடம் கூறினான் ஒரு மனிதன் . " நீங்கள் சொல்லுவதின் பொருள் என்ன ? ” என்று புரியாது வினவினாள் மனைவி . இப்போது தான் நான் குளிர்நீர் ஊற்றில் என் உள்ளத்தைக் கழுவினேன் . எனவே என் உள்ளம் குளிராவிட்டால் அந்த நீர் ஊற்றுக்கு அதன் பெயர் பொருந்தாது போய்விடுமே ” என்று தன் மனைவிக்குப் பொருள் புரியும்படி அருள்புரிந்தான் அந்தக் கணவன் .
91 . கனவில் கண்ட காரிகை :
இளைஞன் ஒருவன் இரவில் கனவொன்று கண்டான் . காலையில் எழுந்ததும் பணிப் பெண்ணை அழைத்தான் . “ நேற்றிரவு என்னை நீ கனவில் கண்டாயா ? ” ‘ இல்லை ’ என்றாள் . வேறெதுவும் அவள் சொல்லவில்லை .
சீற்றமுற்றான் இளைஞன் . “ நான் என் கனவில் உன்னைக் கண்டேன் என்பது முற்றிலும் உண்மை ? அப்படியாயின் நீ மட்டும் என்னைக் காணவில்லை என்று எப்படிப் பொய் சொல்லலாம் ’ என்று சொல்லிய வண்ணம் அம்மாவின் அறைக்குச் சென்று அம்மாவிடம் “ அம்மா , உன்றன் பணிப்பெண் தண்டனைக்குரியவள் . நேற்றிரவு அவளை நான் கனவில் கண்டு காதல் கொண்டேன் . ஆனால் அவளே என்னை காணவில்லையென்று பொய் சொல்லுகிறாள் ” என்று முறையிட்டான் .
92 . மறதி :
ஒரு மாநிலத்தின் தலைமை நீதிபதியாக ஒருவர் நியமிக்கப்பட்டார் . பதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் , நகரவாயிலில் முடிதிருத்தகம் வைத்திருந்த ஒரு முடிதிருத்துபவனை அழைத்துவர ஆணை பிறப்பித்தார் . அவ்வாறே அவனும் அழைத்து வரப்பட்டான் . பின்னர் எவ்வித உசாவல் ஏதுமின்றி , மூங்கில் தடியால் 40 அடிகள் கொடுக்க கட்டளை பிறப்பித்தார் . தண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போது நீதிபதி “ நான் முன்பு ஒருநாள் உன் நிலையத்திற்கு வந்த போது நீ என்னை தக்க மரியாதையுடன் நடத்தவில்லை ” என்றார் . இதனைக் கேட்ட முடிதிருத்தும் கலைஞன் ஐயா , தாங்கள் என் எளிய நிலையத்திற்கு என்றுமே வந்ததில்லையே ” என்றான் .
உடனே நீதிபதி “ ஆமாம் அப்படித்தான் , நான் உன் நிலையத்திற்கு வருகை தந்ததே இல்லை ” என ஒப்புக் கொண்டு , அவன் அதுவரை பெற்ற தண்டனைக்கு ஈடாக ஆயிரம் பணம் கொடுத்தனுப்பும்படி மறு ஆணை வழங்கினார் .
ஆனால் நீதிபதி குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி அவனது நிலையத்தில் நடந்தது உண்மைதான் . ஆனால் அப்போது அவனது நிலையம் வேறொரு மாநிலத்தில் இருந்தது .
93 . கையெழுத்து :
தெளிவாகக் கையெழுத்து எழுதத் தெரியாத ஒருவன் கையெழுத்து எழுதுவதில் மிகவும் ஆர்வமுள்ளவனாக இருந்தான் . வருவோர் போவோரிடம் அவர்களின் உடமைகளில் அவர்களின் பெயர் மற்றும் அழகிய தொடர்களை எழுதிக் கொடுக்க முனைவதுண்டு . இது அவ்வூரில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று . ஒருநாள் இந்தக் கையெழுத்து மேதை , எதிரே ஒரு மனிதன் விசிறியால் விசிறிக் கொண்டு தன்னைக் கடந்து செல்வதைக் கண்டு , தன் எழுதும் ஆசையை அடக்க முடியாதவனாக , அவரை அழைத்து அந்த விசிறியில் அவர் பெயரினை எழுதித் தருவதாகச் சொன்னான் . உடனே அந்த மனிதன் கையெழுத்துக் கலைஞன் முன் மண்டியிட்டு வணங்கினான் . இதனைக் கண்டு திகைப்புற்ற கையெழுத்துக் கலைஞன் , இவ்வளவு மரியாதையும் பணிவும் எனக்குச் செலுத்த வேண்டாம் . “ நான் சில எழுத்துகளை மட்டும் தான் உங்கள் விசிறியில் எழுதப் போகிறேன் ” என்றான் . அதற்கு அந்த மனிதன் மறுமொழியாக “ நான் அதை நன்கு அறிவேன் . நான் உங்களை வேண்டிக் கொள்வதெல்லாம் தயவு செய்து அந்தப் பணியை நீங்கள் செய்ய வேண்டாம் ” என்றான் மிகப் பணிவோடு . அத்தனை அச்சம் அந்த மனிதனுக்கு அவனின் எழுத்தின் மீது .
94 . குடிக்கத் துடிக்கும் மனம் :
மது வெறி கொண்ட ஆசிரியர் ஒருவர் மற்றொரு மது விரும்பும் வெறியன் ஒருவனை வேலைக்கமர்த்தினான் . அந்த மதுவெறியன் வைத்திருந்த மதுவினில் பெரும் பகுதியை வேலைக்காரனே குடித்துத் தீர்த்தான் . எனவே அந்த ஆசிரியர் வேலைக்காரனையே அதன்பின் அமர்த்தவில்லை . அப்படியே ஒருவேளை வேலைக்கு அமர்த்தினாலும் , மதுவைப் பற்றி சிறிதும் அறியாத சிறுவனையே அமர்த்த வேண்டும் என்று மனத்தில் தீர்மானித்துக் கொண்டார் .
ஒரு நாள் ஆசிரியரின் நண்பர் ஒருவர் ஒரு சிறுவனை அழைத்து வந்து அவனை வேலைக்காரனாக அமர்த்திக் கொள்ளும்படி பரிந்துரை செய்தார் . ஆசிரியர் அந்த சிறுவனிடம் மஞ்சள் நிறமான அரிசி மதுப்பாட்டிலைக் காட்டி , இது என்ன ? என்று கேட்டார் . சிறுவன் அந்த மதுவின் பெயரைச் சரியாய் சொன்னான் . மதுவின் பெயர்களை அறிந்து வைத்திருக்கும் இந்த சிறுவன் அவற்றின் சுவைகளையும் அறிந்திருப்பான் என்று எண்ணி அவனை வேலைக்கு அமர்த்திக் கொள்ள மறுத்தார் . பின்னர் வேறு ஒரு சிறுவனை வேறு ஒரு நண்பர் வேலைக்குப் பரிந்துரைத்தார் . அவனிடம் மிக உயர்ந்த வகை மதுவினைக் காட்டி அதன் பெயர் கேட்டார் . அந்த சிறுவனோ அதன் பெயரைத் தப்பாது செப்பினான் . உறுதி , இவன் பெருங்குடிக்காரனாய் இருக்க வேண்டும் என நினைத்து அவனையும் புறக்கணித்தார் .
எதிர்பாராத வகையில் மூன்றாவது ஒரு சிறுவன் பரிந்துரைக்கப்பட்டான் . இம்முறை இந்த சிறுவன் வெள்ளை நிற மதுவிற்கும் மஞ்சள் நிற மதுவிற்கும் வேறுபாடு தெரியாமல் திகைத்தான் . அவன் மதுவினைப் பற்றி ஒன்றும் அறியாதவன் எனக் கணித்து அவனை வேலைக்கு அமர்த்திக் கொண்டார் .
ஒருநாள் ஆசிரியர் வீட்டை வேலைக்காரனிடம் ஒப்படைத்து விட்டு வெளியில் சென்றார் . அப்படி அவர் செல்லும் போது வேலைக்காரனிடம் , “ சமையல் அறையின் சுவரில் ஒரு பன்றியின் தொடை தொங்கிக் கொண்டிருக்கிறது . முற்றத்தில் கோழி மேய்ந்து கொண்டிருக்கிறது . எனக்காக அவற்றைப் பாதுகாத்துக் கொள் . உள் அறையில் வெள்ளை மது நிரம்பிய குடுவை ஒன்றும் , சிவப்பு மது நிறைந்த ஒரு குடுவையும் வைத்துள்ளேன் . அவற்றைத் தொட்டுக் கூட பார்க்காதே . யாராவது அதனை அருந்தினால் அவர்களின் வயிறும் குடலும் ஒரு மணி நேரத்தில் வெடித்துச் சிதறிவிடும் ” என்று மூன்று முறை வற்புறுத்திச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்று சென்றார் .
அவர் சென்றதும் முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை அறுத்து சமைத்துச் சாப்பிட்டான் . பின் பன்றியின் தொடையையும் தின்று தீர்த்தான் . பின்னர் இரண்டு குடுவைகளிலும் இருந்த மதுவில் மூழ்கியெழுந்தான் . போதை தலைக்கேறியது .
திரும்பி வந்த ஆசிரியர் சிறுவன் மரக்கட்டை போல் தரையில் கிடந்து உறங்குவதைக் கவனித்தார் . அங்கு நிரம்பி வழிந்த மணத்திலிருந்து நிலமையை நன்கு புரிந்து கொண்ட ஆசிரியர் அவனைக் காலால் எட்டி உதைத்து எழுப்பினார் சினத்தில் .
கண்ணீரில் குழந்தை கதறியது , “ நீங்கள் சென்றதும் நான் வீட்டிலுள்ள அனைத்து உடமைகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டேன் . எல்லாவற்றையும் நான் என் ஆதிக்கத்தில் அடக்கி ஒடுக்கிக் கட்டுப்படுத்தி வைத்திருந்தேன் . திடீரென்று பூனை ஒன்று பதுங்கி வந்து பன்றித் தொடையைக் கவ்விச் சென்றது . அடுத்து நாய் ஒன்று ஓடி வந்து முற்றத்தில் நின்று மேய்ந்து கொண்டிருந்தக் கோழியைப் பக்கத்து வீட்டு முற்றத்திற்குத் துரத்தி விட்டது . இந்த முறைகேடுகளைக் கண்டு அதிர்ந்து போன நான் , என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன் . குடுவைகளிலிருந்த மதுவைப் பற்றி நீங்கள் கூறிய எச்சரிக்கை மொழிகள் என் நினைவுக்கு வந்தன . எனவே சிவப்புக் குடுவைலிருந்த மதுவைக் காலி செய்தேன் . ஆனால் நான் அதனைக் குடித்த பின்னும் உயிரோடிருப்பதை உணர்ந்தேன் . எனவே நான் மஞ்சள் குடுவை மதுவையும் குடித்தேன் . பின்னர் நீங்கள் தற்போது கண்ட வண்ணம் வாழ்வுக்கும் சாவுக்குமிடையேயான இந்த பரிதாப நிலைக்குள்ளானேன் ” என்றான் . கேட்டுக் கிறுகிறுத்தார் ஆசிரியப் பெருமகனார் .
95 . ஒரு பறவை :
புதுவையின் வட பகுதியில் ஒரு மனிதர் பறவை ஒன்றை வளர்த்து வந்தார் . அந்தப் பறவை ஒரு நூறு வகைப் பறவைகளைப் போல் பாடும் திறமை கொண்ட சிறப்புப் பறவை என்று பெருமை பாராட்டி வந்தார் . அதனைப் போற்றிப் பாதுகாக்க ஒரு சிறுவனை வேலைக்கு அமர்த்தினார் . அடிக்கடி அதனை வீதிக்கு எடுத்து வந்து மக்கள் பார்வைக்கு வைப்பார் .
ஒரு கோடை நாளில் அதனைக் குளிப்பாட்ட வேண்டியதாயிற்று . பறவையின் ஆண்டை வேலைக்காரச் சிறுவனிடம் , “ கவனமாக அதனை நீராட்டு ; நீராட்டும் போது ஒரு தூவல் உதிர்ந்தாலும் அதற்கு ஈடாக நீ உன் கால்களை ஒன்றைத் தர வேண்டும் . கவனம் ; கவனம் ” என்று எச்சரித்தா ர். அவ்வாறே பறவையைக் கவனத்தோடு நீராட்டிக் கொண்டிருந்தான் சிறுவன் . அந்த வேளையில் வீட்டுக்கார அம்மா வேறொரு பணியைத் தனக்காகச் செய்ய ஆணையிட்டாள் . சிறுவனோ “ என்னால் பறவையை விட்டு ஒரு கணம் கூட விலக முடியாது , ஒரு தூவல் உதிர்ந்தாலும் நான் என் காலை இழந்து விடுவேன் ” என்று மறுமொழி பகர்ந்தான் .
இந்த மொழிகளைக் கேட்டு வீட்டுக்காரி சினத்தில் கொதித்தாள் . சீறிப் பாய்ந்தாள் . பறவையின் தூவல்கள் அனைத்தையும் பிய்த்து எறிந்தாள் .
சற்று நேரத்தில் ஆண்டை வந்தான் . பறவையின் அலங்கோலத்தைக் கண்டு ஆத்திரம் மேலிட “ என் இனிய பறவையின் இறகுகளைப் பிய்த்தெறிந்தது யார் ? ” என்று ஆவேசத்தோடு கேட்டான்  .
சிறுவன் அஞ்சி வாயடைத்து நின்றான் . வீட்டுக்காரி உறுமினாள் “ நான் தான் ” என்றாள் . ஆண்டை மெல்லிய குரலில் “ பிடுங்குதல் சற்றுக் கடினமான வேலைதான் . தூவலில்லாதது பறவைக்குக் குளிர்ச்சியாக இருக்கும் நல்லது , நல்லது . நீராட்டுவதினும் இது சிறந்தது தான் ” என்று பக்க வாத்தியம் இசைத்தான் ஆண்டை .
96 . மனித உடையில் குரங்கு :
அரசு அதிகாரி ஒருவர் தமது சட்ட உதவியாளரை அனுப்பி ‘ மனித உருவில் இருக்கும் மனிதனல்லாத ’ ஒருவனை அழைத்து வரும்படி ஆணையிட்டார் . இந்த வண்ணனை உதவியாளருக்குப் புரியாத புதிராக இருந்தது . குழம்பினான் . தன் மனைவியிடம் அது பற்றிக் கலந்தெண்ணினான் . அவனின் மனைவியோ மிகவும் புறக்கணிப்பாக “ இந்த ஆணையை நிறைவேற்றுவது கடினமானது அல்ல ; மிகவும் எளிது ” என்றாள் . “ ஒரு குரங்கிற்கு மனிதனின் தொப்பியையும் , உடையையும் அணிவித்துப் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லுங்கள் . உங்கள் பணி முடிந்துவிடும் ” என்றாள் .
மனைவியின் ஆய்வுரைப்படி செய்தான் ஊழியன் . அதிகாரி மகிழ்ந்தான் . குரங்கிற்குப் பழங்கள் தந்தான் .
அதனை அன்போடு நடத்தினான் . பின்னர் தன்னோடு குடிப்பு அருந்த அந்தக் குரங்கினை அழைத்து வரும்படி அருகிலிருந்தவர்களிடம் ஆணையிட்டான் . பின் ஒருமுறை மது அருந்தியதும் குரங்கு தன் கவிப்பினையும் உடையினையும் அகற்றி எறிந்துவிட்டுக் , கத்திக் கொண்டு அங்குமிங்கும் குதித்துத் தாவி விருந்து மண்டபத்தில் பேரிரைச்சலையும் பரபரப்பையும் உண்டு பண்ணியது .
அதிகாரி சொன்னான் “ ஓ விலங்கே , உனக்கு இங்கிதம் தெரியவில்லை . மதுஅருந்தும் முன் நீ மனிதனாக இருந்தாய் . குடித்த பின் நீ மனித இயல்பை மட்டுமில்லை தோற்றத்தையே இழந்தாய் ” என்று .
97 . கீழ்மை உணர்வுள்ள அரசு அதிகாரி :
கஞ்சத்தனமிக்க அரசு அதிகாரி ஒருவர் பணியின் பொருட்டு ஒரு குறிப்பிட்ட அமைச்சகத்திற்குத் தலைநகரிலிருந்து அனுப்பப்பட்டான் . அந்த அமைச்சகத்திற்குள் நுழையும் முன் தன்னைப் போலவே பசியோடிருந்த தன் ஏவலன் முன்னிலையில் ஒரு கோப்பை கம்பங் கூழ் அருந்தினான் . பின் அந்த ஏவலன் தானும் ஒரு குடுவைக் கூழ் சாப்பிட எண்ணி , மற்றவர்கள் முன்னிலையில் அதற்காகப் தன் ஆண்டையிடம் பணம் கேட்டால் மறுக்கமாட்டான் என எண்ணிப் பணம் கேட்டான் . அதிகாரியும் அவ்வாறே வேண்ட வெறுப்பாகப் பணம் கொடுத்தான் .
பின் அமைச்சகத்தில் தன் பணியினை முடித்துக் கொண்டு , வீடு திரும்ப வண்டியேறினான் . ஏவலன் வண்டியின் முன்னிருந்து குதிரையை ஓட்டினான் . வண்டி புறப்பட்டதும் அந்த அதிகாரி ஏவலனிடம் “ மரியாதை தெரியாத மடையனே , நீ என்ன என்னிலும் மூப்பா ? முன்னிருந்து குதிரையோட்டுகிறாய் ? ” என்று கேட்டான் . உடனே ஏவலன் அதிகாரியின் பக்கவாட்டில் அமர்ந்து குதிரையை ஓட்டினான் . மீண்டும் அந்த அதிகாரி “ நீ என்ன எனக்குச் சமநிலையில் உள்ளவனா ? அருகில் அமர்ந்து குதிரையை ஓட்டுகிறாய் ? ” என்றான் . பின் அந்த ஏவலன் , வண்டியின் பின்புறம் அமர்ந்தவாறு குதிரையினை ஓட்டினான் . மீண்டும் சினமுற்ற அந்த அதிகாரி “ குதிரை ஓடும் போது எழும் தூசுகளெல்லாம் நேரிடையாக என் மீது வந்து படுகின்றனவே என்றான் . வேறு வகையறியாத அந்த ஏவலன் வண்டியை விட்டுக் கீழிறங்கி “ ஐயா , எப்படி நான் வண்டியினை ஓட்டுதல் வேண்டும் என்று கட்டளையிட்டால் , அவ்வண்ணமே செய்கிறேன் ” என்று பணிவுடன் கூறினான் .
அதனைக் கேட்ட அதிகாரி “ நீ எங்கிருந்து ஓட்டினாலும் எனக்கு அக்கறையில்லை . நீ குடித்த கம்பங்கூழிற்கு நான் கொடுத்த பணத்தை இப்போதே திரும்பத் தந்து விட்டால் , நீ எப்படி எங்கிருந்து குதிரையை ஓட்டினாலும் எனக்கு ஏற்புடையதே ” என்றார் .
98 . யாரும் முட்டாள் இல்லை :
பொறுமைமிக்க மனிதன் ஒருவன் ஒருநாள் ஓர் இணை காலணிகளை வாங்கினான் . எதிரில் அவ்வழியாய் வந்த முன்கோபி ஒருவன் “ எவ்வளவு பணம் இதனை வாங்கத் தந்தாய் ? ” என்று கேட்டான் . எதிலும் எளிதாகவும் அமைதியாகவும் செயல்படும் முதல் மனிதன் மெதுவாக ஒரு காலணியினை உயர்த்திக் காண்பித்து ‘ 25 பணம் ஆனது ’ என்றான் . அவன் சொல்லி முடிக்கும் முன் ஆத்திரக்காரன் “ முட்டாளே காலணிகளுக்கா 25 பணமா தந்தாய்? ” என்று கோபித்துக் கொண்டான் .
முதல் மனிதன் பொறுமையிழக்காமல் “ நீங்கள் மறுப்பீர்களானால் , அவர்களையே போய் கேட்கலாம் ; வாருங்கள் , ஆனால் ஆத்திரப்படாமல் சற்று அமைதிகாத்துக் கொள்ளுங்கள் . இப்போது சினந்து கொண்டது போல் சினந்துக் கொள்ளாதீர்கள் ” என்றான் . அவன் மேலும் மற்றொரு காலணியைத் தற்போது உயர்த்திக் காண்பித்து “ இந்தக் காலணியும் அந்த விலையில் அடக்கம் தான் ” என்றான் .
99 . ஆவி கேட்டப் பணம் :
நடை பயணி ஒருவர் தம் உடைமைகளையெல்லாம் கட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் . சாத்தூர் வழியாக வந்த போது , அங்கு வறுமை தாண்டவமாடியதும் பசி பட்டினியால் மடிந்தனர் . தொடர்ந்து ஏற்பட்ட அழிவுகளினால் சத்திரங்கள் பல மூடப்பட்டிருந்தன . வழிப்போக்கர்கள் கோயில்களில் தங்கி வந்தனர் . அப்படி ஒரு கோயிலில் தங்கும் போது பல கல்லறைகள் அச்சத்திரததின் கீழ்ப் பகுதியிலும் , ஒரே ஒரு கல்லறை மட்டும் மேற்குப் பகுதியிலும் இருப்பதைக் அந்த வழிப்போக்கன் கவனித்தான் . நன்றாக இருண்டிருந்த மூன்றாம் சாமத்தில் ஒவ்வொரு கல்லறையிலிருந்தும் மெலிந்த கைகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன . மேற்குப் பகுதியிலிருந்த கல்லறையிலிருந்தும் ஒரு கை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது . ஆனால் , அந்தக் கை மட்டும் சதைப்பிடிப்புள்ள கையாகத் தோன்றியது . நிலமையைப் புரிந்து கொண்ட வழிப் போக்கன் துணிவை வரவழைத்துக் கொண்டு , புன்னகை பூத்த வண்ணம் அவற்றைப் “ பசிமிக்கவர்களே , உங்கள் மெலிந்த கைகளிலிருந்து நீங்கள் எப்படிபட்ட ஏமாற்றத்தையும் வேதனையையும் இங்கு நுகர்ந்தீர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன் . அந்த உலகிலும் உங்கள் வேதனைகளைக் குறைக்க பணம் வேண்டுகின்றீர்களா ? ” என்று கேட்டு வரவேற்றான் . பின்னர் ஒவ்வொரு கைகளிலும் ஒரு நாணயத்தை வைத்தான் . கீழ்ப் பகுதியிலுள்ள கல்லறையில் காணப்பட்ட கைகள் மீண்டும் கல்லறைக்குள் இழுத்துக் கொள்ளப்பட்டன . ஆனால் மேற்குப்பகுதியில் தனித்திருந்த அந்தக் கல்லறையில் நீட்டிக் கொண்டிருந்த கை மட்டும் வெளியிலேயே நீட்டிக் கொண்டிருப்பதைக் கவனித்தான் அந்த வழிப்போக்கன் . பின்னர் அவன் “ இந்த ஒரு நாணயம் உனக்குப் போதாதென்றால் மேலும் தருகிறேன் என்று சொல்லி அந்தக் கையில் நூறு நாணயங்களுக்கு மேலாகக் கொட்டினான் . இருப்பினும் அது மறையவில்லை . கோபமுற்ற வழிப்போக்கன் “ நீ அதிகம் கேட்கிறாய் ; மிக அதிகம் கேட்கிறாய் ” என்றவாறு தான் வைத்திருந்த நாணயங்கள் அனைத்தையும் வைத்தான் . உடனே கை உள்ளே இழுத்துக் கொள்ளப்பட்டது .
வழிப்போக்கன் வியப்புற்றான் . வியப்பு மேலிட விளக்கொன்றை ஏந்திய வண்ணம் ஒவ்வொரு கல்லறையிலும் எழுதப்பட்டிருந்த வாசகங்களை படித்துப் பார்த்தான் . கீழ்ப் பகுதியில் காணப்பட்ட கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்கள் அனைவரும் வறுமையால் மடிந்தவர்கள் என்று அறிந்தான் . மேற்குப் பகுதி கல்லறையில் “ மதிப்பிற்குரிய திரு.... அவர்கள் , மாவட்ட காவல்துறை அதிகாரி. ........ மாநிலம் ” என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டு , வியப்பு நீங்கவும் , விளக்கம் பெற்றான் அந்த வழிப்போக்கன் .
100 . குடிகாரன் சூளுரை :
ஓயாத குடியன் ஒருவன் இருந்தான் . “ உன் உடல் நலத்தைக் காக்கவாவது நீ குடிக்காமல் இருக்க வேண்டும் ” என்று அவன் நண்பர்கள் அவனைக் கேட்டுக் கொள்கின்ற பரிதாப நிலை ஏற்படும் வரை நீ குடித்துக் கொண்டேயிருந்தான் . குடிகாரன் தன் நண்பர்களிடம் “ நானும் குடியை முழுமையாக விட்டு விடத்தான் நினைக்கிறேன் . ஆனால் என் மகனின் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது . அவனது பிரிவாற்றாமையை மறக்கத்தான் குடிக்கிறேன் . அவன் மட்டும் என்னிடம் திரும்பி வந்துவிட்டால் குடியை நிறுத்திவிடுவேன் ” என்றான் .
இதனைக் கேட்ட அவனது நண்பர்கள் “ அப்படியானால் இப்போது நீ சொல்லியபடி வாக்குத் தவறாது நடந்து கொள்ள வேண்டும் என்றான் . அவனது நண்பர்களும் ஒரு சிறுவனை தத்து எடுத்து வந்து அவனிடம் அந்தச் சிறுவனை பார்த்துக் கொள்ளும்படியும் , இத்துடன் நீ குடியை நிறுத்தி விட வேண்டும் என்று கூறியும் விட்டுச் சென்றனர் .  ஆனால் அவனோ , சரி என்று சொல்லிவிட்டு மீண்டும் குடிக்கத் தொடங்கினான் . “ குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு “ என்பது இதில் நிரூபிக்கப்பட்டது .
101 . நீதியின் கண்களில் நியாயமே :
வழக்கொன்றில் வாக்கு மூலங்களைக் கேட்பதற்காக , வழக்காளியையும் , எதிர் வழக்காளியையும் மன்றத்திற்கு அழைத்து வருமாறு தன் ஏவலனுக்கு ஆணையிட்டார் . கையூட்டு வாங்குவதில் கொஞ்சமும் அஞ்சாத அரசு அதிகாரியொருவர் , மனுதாரர் 500 பணத்தை அதிகாரிக்கு அளித்தார் . மாற்றுக் கட்சிக்காரரும் இதனைக் கேள்விப்பட்டு அதைப்போல் இருமடங்கு பணத்தை அதே அதிகாரிக்குத் தந்தார் .
ஆய்வுரைத் தீர்ப்பின் போது அதிகாரி வழக்குத் தொடுத்தவருக்குச் சவுக்கடி தண்டனை வழங்கினார் . இரக்கத்துக்குரிய வழக்குத் தொடுத்தவரோ தான் 500 பணம் தந்ததைக் கைசெய்கையால் சுட்டிக்காட்டி , “ என் வழக்கில் நேர்மையிருக்கிறது நடுவரே ” என்றான் . அதிகாரியோ பதிலுக்கு எதிராளி இருமடங்கு கையூட்டுத் தந்ததைச் ( சமிக்ஞை ) கைசெய்கை மூலம் சுட்டிக்காட்டி , “ எதிரொளியின் கூற்றிலும் இரு மடங்கு நேர்மை உள்ளதே ” என்றார் .
102 . பணம் பெறுதல் :
இரண்டு தங்கக் கட்டிகள் அனுப்பும்படி நகைக்கடை ஒன்றுக்குக் குறிப்பாணை ஒன்றினை அனுப்பினார் அரசு அதிகாரி ஒருவர் . குறிப்பாணை பெற்றதும் தங்கக் கட்டிகளை அதிகாரியிடம் கொடுத்து விலைதனைப் பெற்று வர நகை வணிகர் புறப்பட்டார் . அதிகாரியைக் கண்டு தங்கக் கட்டிகளை அவரிடம் கொடுத்தார் . இரண்டு கட்டிகளையும் பெற்றுக் கொண்ட அதிகாரி தங்கக் கட்டிகளின் விலையினைக் கேட்டார் . விலையினைக் கூறிய பின் , “ நகைவணிகர் தங்களுக்காக 50 % தள்ளுபடி செய்து தருகிறோம் ” என்றார் . உடனே அதிகாரி இரண்டில் ஒரு கட்டியினை அவனிடம் கொடுத்துவிட்டு , மற்றொன்றை எடுத்துக் கொண்டார் . பணத்தைப் பெற நகை வணிகர் நின்றார் . “ ஏன் ? நிற்கிறாய் . நான் எடுத்துக் கொண்ட ஒரு தங்கக் கட்டிக்குத்தான் அப்போதே பணம் தந்து விட்டேனே ” என்றார் அதிகாரி . “ என்ன ? ” அதிர்ந்தான் நகை வணிகர் . சினம் கொண்டார் அதிகாரி “ நீ தானே சொன்னாய் உங்களுக்காக விலையில் 50 % விழக்காடு தள்ளுபடி செய்து தருகிறோம் என்று . நான் எடுத்துக் கொண்ட ஒரு தங்கக்கட்டிக்கு விலையாக மற்றொரு கட்டியைத்தான் திரும்பத் தந்து விட்டேனே . இன்னும் இங்கு ஏன் நிற்கிறாய் . தாமதியாதே ஓடு ஓடு ” என்று விரட்டினார் அதிகாரி , நகை வணிகரை .
103 . ஓர் உண்மையான ஆசை :
மனிதர்களின் உருவப்படங்களை வரையும் ஓவியர் ஒருவருக்கு அவர் தொழில் மிகவும் மந்த நிலையில் இருந்தது . தொழிலை முன்னேற்ற திருமண இணைகளின் படம் ஒன்றை வரைந்து அதைக் கடையில் மக்கள் பார்வைக்கு வைத்தால் , புதிதாகத் திருமணமான இணையர்களைக் கவரலாம் என்று ஒருவர் ஆய்வுரை சொன்னார் . அவர் ஆய்வுரையின் படி ஓவியர் தம் திருமணப்படத்தையே மிகவும் பெரிதாக வரைந்து தமது நிலையத்தில் மக்கள் பார்வைக்கு வைத்தார் .
ஒரு நாள் ஓவியரின் நிலையத்திற்கு அவருடைய மாமனார் வந்தார் . பலகணியில் வைக்கப்பட்டிருந்த மணஇணையரின் உருவப்படத்தை நீண்ட நேரம் உற்று உற்றுப் பார்த்தார் . படத்தில் இருப்பது யாரென்று தெரியாமல் போகவே , ‘ யார் ? இந்தப் பெண் ? ’ என்று மருமகனிடம் கேட்டார் . மருமகன் “ உங்கள் மகள் தான் ’ என்றார் . மேலும் சற்று நேரம் பார்த்தப்பின் , “ அது என் மகளானால் நீங்கள் ஏன் வேறு ஒருவரை மணம் செய்து கொண்டிருப்பது போல் வரைந்துள்ளீர்கள் ? ” என்று வியந்து கேட்டார் .
104 . உருவப்படத்தில் அடையாளம் காணுதல் :
ஓர் உருவப்படம் வரைந்து முடியும் தருவாயில் , படத்தை வேறு ஒருவரிடம் காட்டி அந்த உருவத்தின் சாயலைத் தீர்மானிக்கச் சொன்னார் ஓவியர் . தலை கவிப்பினை வைத்து அது நீங்கள் தான் என்று அடையாளம் காண்கிறேன் என்று ஓர் ஆள் தெரிவித்தார் . இரண்டாவது ஆள் உங்கள் மேலாடையை வைத்து உங்களை அடையாளம் கண்டு கொள்கிறேன் என்றார் . மூன்றாவது ஆளை ஒவியர் முன்னதாகவே அணுகி ஏற்கனவே என் கவிப்பின் மூலமாகவும் , மேலாடையின் மூலமாகவும் வேறு இருவர் என் சாயலை அடையாளம் கண்டதாகச் சொல்லி விட்டனர் . நீங்கள் என்முகச் சாயலை வைத்து நான் தான் அது என்று கண்டு கொண்டேன் என்று சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டார் . சற்று நேரம் உருவப்படத்தை உற்றுப் பார்த்தப் பின் மூன்றாவது ஆள் “ உங்கள் தாடியின் மூலம் அது நீங்கள் தான் என்று அடையாளம் காண்கிறேன் " என்றார் .
105 . மென்மையான மண்டை :
முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் பயிற்சியாளன் கத்தியினை முறையாகப் பயன்படுத்தத் தெரியாமல் முடிவெட்ட வந்தவனின் மண்டையில் பல வெட்டுக் காயங்களை ஏற்படுத்தினான் . இதனால் சலிப்படைந்த அந்த முடிவெட்டும் பயிற்சியாளன் தன் முதலாளியிடம் " இவருடைய மண்டை மிகவும் மென்மையாக இருக்கிறது . இவருடைய மண்டை முற்றிலும் வளர்ச்சி அடையும் வரை காத்திருந்துதான் முடி வெட்ட முடியும் " என்று சென்னான் .
106 . மயிரை மழித்த பின் :
தாடி நரைத்த போது அதிலுள்ள வெள்ளை முடிகளை பிடுங்குமாறு தன் வைப்பாட்டியிடம் சொன்னான் ஒரு முதியவன் . வெள்ளை முடியே அதிக அளவில் இருந்ததால் அவள் தாடியிலுள்ள ஒரு சில கறுப்பு மயிர்களைப் பிடிங்கினாள் வயோதிகன் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த போது கொதித்தான் . தன் ஆசைக் கிழத்தியை வசை மாறிப் பொழிந்தான் . அவளோ " நீங்கள் பெரும்பான்மையைப் புறக்கணித்துச் சிறுபான்மையை வைத்துக் கொள்வீர்கள் என்று நான் எப்படி அறிவேன் ? " என்றாள் .
107 . காக்கி நிறத் தாடி :
செந்நிறத் தாடி வைத்திருந்த ஒரு மனிதன் தன் மனைவியிடம் , " இப்படிபட்ட வெளிறிய வண்ணத்தில் தாடி வைத்திருப்பவர்கள் மிகவும் அரிது . அதுமட்டுமல்லாது மெல்லிய வண்ணத் தாடியுடையவர்கள் எப்படிப்பட்ட முரடர்களையும் சண்டையில் வெற்றியடைய முடியும் " என்று பெருமைபட்டுக் கொண்டான் .
ஒருநாள் வெளியில் சென்ற அவன் சற்று நேரத்தில் வீங்கிப்போன முகத்துடன் வீடு திரும்பினான் . அவனது மனைவி அவன் முன்பு வீரம் பேசியதை சுட்டிக்காட்டிக் கேலி செய்தாள் . அதற்கு அவன் “ நான் ஒரு சிவப்புத் தாடியுள்ள மனிதனை எதிர்த்து சண்டையிடுவேன் என்று முன்பே எனக்கு எப்படித் தெரியு ம். இன்று அப்படிபட்ட சிகப்புத் தாடியுள்ள மனிதனோடு சண்டையிட வேண்டியதாயிற்று " என்றான் .
குறிப்பு : சீன நாட்டில் கருப்பு நிறத்தாடி உடையவர்களே அதிகம் . ஒரு சிலரே வெளிர் நிறத்திலும் , சிகப்பு நிறத்திலும் தாடி வைத்திருந்தனர் .
108 . தரையில் சிக்கிய குள்ளன் :
குள்ளன் ஒருவன் படகில் பயணம் செய்து கொண்டிருந்தான் . திடீரென்று படகு ஆழம் குறைவான இடத்தில் தரையில் தட்டி சிக்கிக் கொண்டது . குள்ளன் தரையில் சிக்கிய ( புதைந்த ) படகை மீட்கப் பெரும்பாடுபட்டு விட்டான் . படகு அவன் தலையின் மீது புறண்டு விழுந்தது . அதிர்ந்து போன குள்ளன் , " ஆழம் குறைவாக இருந்ததால் படகு தரையில் சிக்கிக் கொண்டது . ஆழம் அதிகமானதால் நான் சிக்கிக் கொண்டேன் " என்று கத்தினான் .
109 . சோயாவிலிருந்து இறைச்சி :
சோயாபிண்ணாக்கிலிருந்து இறைச்சி ( கறி ) செய்து உண்மை இறைச்சியென விற்று வந்தான் ஒருவன் . அவன் இந்த கமுக்கத்தை யாரிடமும் கூறிவிடாதே என்று தன் வாணிப நுட்பத்தை மகனிடம் சொல்லி எச்சரித்து வந்தான் . சில நாள்களுக்குப் பின் வாடிக்கையாளர் ஒருவர் இறைச்சி வாங்க வந்தார் . “ இது சோயாவில் உண்டாக்கியதன்று ” என்று தானாகவே வாடிக்கையாளரிடம் கூறினான் மகன் . இதைக் கேட்டதும் வாடிக்கையாளருக்குச் ஐயமேற்பட்டது . இறைச்சி வாங்காமலே அவர் அவ்விடம் விட்டு அகன்றார் . இதை அறிந்த புலால் கடைக்காரன் தன் மகனை உதைத்தான் . “ நான் ஏற்கனவே இது பற்றி எதுவும் சொல்லக் கூடாது ” என்று உனக்குச் சொல்லியிருக்கிறேன் ” பின் ஏன் இவ்வாறு சொன்னாய் என்று மீண்டும் அடித்தார் . சற்று நேரத்துக்குப் பின் வேறு ஒரு வாடிக்கைக்காரர் வந்து இறைச்சியை எடுத்து ஆய்ந்து பார்த்தார் . பின்னர் அவர் கேட்டார் “ தோல் மிகவும் தடிப்பாக உள்ளதே . இது சோயாவிலிருந்து உண்டாக்கப்பட்டது தானே ” என்றார் . கடைக்காரரின் மகன் உடனே , “ நான் ஒன்றும் அது பற்றிச் சொல்லமாட்டேன் . ஏன் அது பற்றி என்னிடம் கேட்கிறீர்கள் ? ' ஊகூம் , நான் சொல்ல மாட்டேன் ” என்றான் .
110 . குறைப் பிறப்பு :
பெண்ணொருத்திக்கு ஏழு மாதத்தில் குழந்தையொன்று பிறந்தது . குறைப் பிறப்பானதால் எங்கே குழந்தை இறந்து விடுமோ என்ற அச்சத்தில் பலரிடம் அது பற்றி உரையாடினான் அந்த பெண்ணின் கணவன் . ஒரு நாள் நண்பர் ஒருவரிடம் இது பற்றிக் கூறினான் . “ என் தாத்தா கூட உன் மகனைப் போல ஏழு மாதத்தில் பிறந்தவர்தான் , எனவே அஞ்சத் தேவையில்லை “ என்றார் அந்த நண்பர் . உடனே இந்த மனிதன் ” உன் தாத்தா வாலிபப் பருவம் வரை வாழ்ந்தாரா அல்லது ... என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன் " என்றார் .
111 . கிளைகளைத் தேடி ஒருவன் :
‘ப’ வடிவத்தில் வளருகின்ற மரக்கிளைகளை வெட்டி முக்காலிக்குக் கால்களாகப் பயன்படுத்தி வந்தனர் சிற்றுள் வாசிகள் . அப்படி ஒருவர் வீட்டின் முக்காலியின் கால் உடைந்த போது , பொருத்தமான கிளை ஒன்றை வெட்டி வரும்படி வேலைக்காரனை மலைக்கு அனுப்பினார் ஒருவர் . நாள் முழுவதும் சுற்றித் திரிந்து விட்டு வெறுங்கையோடு வீடு திரும்பினான் வேலைக்காரன் . “ ஏன் ” என்று வீட்டுக்காரன் கேட்ட போது அவன் , “ ப ” வடிவ கிளைகள் ஏராளமாய் உள்ளன . ஆனால் அவை மேல்நோக்கி வளராமல் , கீழ் நோக்கி ' ப ' வளர்ந்துள்ளன " என்றான் .
112 . வாத்து இருந்த இடத்தில் :
' வாத்து ’ இருந்த இடத்தில் ‘ தாராக்கோழி ’ ஒன்றினை விற்கச் சந்தைக்கு எடுத்துச் சென்றான் ஒருவன் . சந்தையை அடைந்ததும் சிறுநீர் கழிக்க வாத்தினை வெளியே வைத்து விட்டுப் பொதுக்கழிப்பிடம் ஒன்றினுள் நுழைந்தான் . கழிப்பிடத்தில் அவன் இருக்கும் போது வாத்தைத் திருடிக் கொண்டு அந்த இடத்தில் ஒரு தாராக் கோழியை விட்டுச் சென்றான் வேறொருவன் .
கழிப்பிடத்தை விட்டு வெளியே வந்த வாத்துக்கு உரிமைக்காரன் அந்த இடத்திலிருந்த தராக் கோழியைக் கையில் மீண்டும் எடுத்துக் கொண்டு " என்ன வியப்பு , நான் உள்ளே சென்று சிறுநீர் கழித்துவிட்டு வருமுன் வாத்தின் கனம் எடை குறைந்துவிட்டதே . பசியால் தான் கணம் குறைந்துவிட்டதோ ! " என்று சொல்லிக் கொண்டே சென்றான் .
113 . மூதாட்டி ஒருத்தி :
வயதான பேரிளம் பெண்ணொருத்தியை மண முடித்துக் கொண்டார் ஒரு முதியவர் . முதலிரவில்தான் , தன் மனைவியின் முகத்தில் ஏராளமான சுருக்கங்கள் இருப்பதைக் கண்டார் . சுருக்கங்களைக் கண்டு கவலைப்பட்ட அவர் " உன் உண்மையான வயதுதான் என்ன ? " என்று மனைவியிடம் கேட்டார் . " நாற்பது " இருக்கும் என்றாள் . " ஆனால் திருமணச் சான்றிதழில் குறிப்பிடும் போது முப்பத்தெட்டு என்று சொன்னாயே " சினந்து கொண்டான் கணவன் . " என் கணக்குப்படி உனக்கு 45 வயது இருக்கும் . ஏன் பொய் சொன்னாய் " என்றான் கணவன் . “ தொடர்ந்து உண்மையைச் சொல்வதானால் , எனக்கு 54 வயது ஆகிறது " என்று சொல்லி மேலும் அதிர வைத்தாள் அந்த ஆரணங்கு . மேலும் மேலும் உன் உண்மையான வயதைச் சொல் என்று கேட்ட போது அவள் 54 , என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லி வந்தாள் .
பின்னர் அவர்கள் படுக்கையில் படுத்ததும் அவள் உண்மை வயதைத் தெரிந்து கொள்ள வகைதேடி சிந்தித்த வண்ணமிருந்தான் கணவன் . திடீரென்று படுக்கையை விட்டு எழுந்து “ கொஞ்சம் பொறு . உப்புப் பானையை மூடி வைத்தேனா ? இல்லையா ? என்று பார்த்து வருகிறேன் , திறந்திருந்தால் எலி தின்றுவிடும் ” என்றான் அவன் . பட்டென்று அவள் சொன்னாள் " என்னுடைய 68 ஆண்டுகால வாழ்வில் , ஒருபோது கூட எலி உப்பைத் தின்னும் என்று சொல்லக் கேள்விப்பட்டதில்லை ” என்று .
114 . தேநீர் கேட்டு ஒருவன் :
வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்தார் . கணவன் மனைவியிடம் தேநீர் படைத்துக் கொண்டு வரச் சொன்னான் . " இதுவரை நீங்கள் தேயிலையே வாங்கித் தந்ததில்லை எப்படி தேநீர் உண்டாக்க முடியும் ” என்றாள் மனைவி . “ சரி கொஞ்சம் தண்ணிரைக் கொதிக்க வைத்தாவது கொடு ” என்றான் கணவன் . “ விறகு வாங்கிப் போட்டதே இல்லை . தண்ணீரை எப்படிக் கொதிக்க வைக்க முடியும் ? “ எதிர் கேள்வி கேட்டாள் மனைவி . சினத்தில் கொதித்தான் . கொச்சைச் சொற்களைக் கொப்பளித்தான் மனைவி மீது . ” தலையணைகளில் வைக்கோல் துரும்பு கூடவா இல்லை ” மனைவியிடம் சீறினான் . அதுவரை பொறுத்த அவளும் பொங்கினாள் . பொன்மொழிகளை அவன் மீது உதிர்த்தாள் . பின்னர் சொன்னாள் செங்கற்களை தலையணையாகப் பயன்படுத்தும் நமது வீட்டில் வைக்கோற் துரும்பேது ? " என்றாள் அந்தத் தக்க விடை தந்த தகைசால் பத்தினி .
115 . நாளை சற்று முன்னதாகவே வா :
கடன் கொடுத்த அனைவரும் கடன் வாங்கியவன் வீட்டில் ஒட்டு மொத்தமாய்க் குழுமி அங்கிருந்த முக்காலிகளில் அமர்ந்தனர் . ஒருவன் வீட்டினுள் உட்கார இடமின்றி முற்றத்து மொட்டை மாடியில் ஏறி நின்றான் . முற்றத்து மொட்டை மாடியில் உட்கார இடமன்றி நின்று கொண்டிருந்தவனிடம் கடன்பட்டவன் சொன்னான் “ நாளைக்குச் சற்று முன்னதாகவே வந்து விடு என்று சைகை செய்து காட்டினான் . முற்றத்து மொட்டைமாடியில் நின்றவன் , மற்றவர்களிடமிருந்து தன்னைப் பிரித்து நாளை நம் கடனைத் திரும்ப தருவதற்குத் தான் முன்னதாகவே வரச் சொல்லுகிறான் என்று எண்ணி மகிழ்ந்தான் . வெளியேறிய அவன் தன்னைப் போல் கடன் கொடுத்த மற்றவர்களிடம் “ இன்று இரவு மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் " என்று சொல்லி விட்டுச் சென்றான் . எல்லோரும் கலைந்து சென்றனர் . மறுநாள் காலை அவன் மட்டும் கடன் வாங்கியவன் வீட்டிற்கு முன்னதாகவே வந்து , தன் கடன் திரும்பக் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது , கடன் வாங்கியவன் சொன்னான் : " நீங்கள் நேற்று வீட்டினுள் உட்கார இடமில்லாமல் முற்றத்து மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்ததைக் குறித்து மிகவும் வேதனைப்பட்டேன் , அதனால்தான் இன்று முன்கூட்டியே வந்து இடம் பிடித்துக் கொள்ளவே உங்களை முன்னதாக வரும்படி அழைத்தேன் என்றான் . அதிர்ந்தான் அதைக் கேட்டவன் .
116 . கனவும் நினைவும் :
கடன் வாங்கிய ஒருவன் கடன் கொடுத்தவனிடம் , " நான் இந்த உலகில் நீண்ட நாள் வாழமாட்டேன் என்று எண்ணுகிறேன் . ஏனெனில் நேற்று இரவு நான் இறந்து போவது போல் கனவு கண்டேன் ” என்றான் . இதனைக் கேட்டுக் கடன் கொடுத்தவன் , “ அப்படியெல்லாம் நடக்காது . கனவுலகில் காண்பதற்கு நேர்மாறாகத் தான் நினைவுலகில் நடக்கும் ” என்று மறுமொழி பகர்ந்தான் .
மீண்டும் ஒருநாள் இருவரும் சந்தித்த போது கடன் கொடுத்தவனிடம் கடன் வாங்கியவன் சொன்னான் . " நேற்றிரவு கண்ட கனவில் உங்கள் கடனையெல்லாம் நான் திரும்பத் தந்து விட்டேன் ” என்றான் . கடன் கொடுத்தவனுக்குப் பதில் சொல்ல நாவெழவில்லை .
117 . குரங்கின் அளவு :
மாமதுரை நடுவர் ஒருவர் தன் மேலதிகாரியைக் காண நேர்ந்தது . தங்கள் அலுவலகப் பணிகள் பற்றிப் பேசிய பின் பிற காரியங்கள் குறித்து உரையாடினர் . அந்த நேரத்தில் மேலதிகாரி , “ உங்கள் பகுதியில் குரங்குகள் ஏராளம் உள்ளதாகக் கேள்விப்படுகிறேன் . அந்தக் குரங்குகளின் அளவு பற்றி சற்றுச் சொல்லுங்களேன் ” என்றார் . நடுவர் " மிகப் பெரிய குரங்கு ஒரு பெரிய மனிதனின் அளவில் இருக்கும் " என்றார் . பின் தான் வாய்குழறி உளறியதை உணர்ந்த அந்த நடுவர் , தவற்றைத் திருத்திக் கொள்ளும் வகையில் " மிகச் சிறிய குரங்கு எனது அலுவலகத்தில் உள்ள கடைநிலை ஊழியனுக்கு இணையாக இருக்கும் என்றார் .
118 . வானின் உயரம் :
வானின் உயரம் பற்றி , மரத்தடி நிழலில் அமர்ந்து சிலர் வாதாடிக் கொண்டிருந்தனர் . பல்வேறு விதமான கருத்துகள் சிலர் வாதாடிக் கொண்டிருந்தனர் . பல்வேறு விதமான கருத்துகள் அங்கே முடிவின்றி தருக்கிக்கப்பட்டன . முடிவில் அவ்வழியே சென்ற சிற்றூர்வாசி ஒருவர் குறுக்கிட்டு " வானிற்கும் நிலத்துக்குமிடையே முந்நூறு முதல் நானூறு கல்களுக்குள் இருக்கும் . மெதுவாக ஏறினால் நான்கு நாள்கள் ஆகும் . சற்று விரைந்து சென்றால் மூன்று நாள்கள் ஆகும் . இங்கிருந்து சென்று மீண்டும் திரும்பிவரக் கூடுதல் ஆறு அல்லது ஏழு நாள்கள் ஆகும் . இதைப்பற்றியேன் இவ்வளவு மும்முரமாக தருக்கித்துக் கொண்டிருக்கிறீர்கள் " என்றார் .
சிற்றூர்வாசியின் முடிவான விடை கேட்டுக் குழுமி இருந்தோர் வாயடைத்துப் போயினர் . எப்படி இந்த முடிவுக்கு வந்தீர்கள் என்றனர் . சிற்றுர்வாசி விளக்கினார் , " வருண தெய்வத்திற்குத் தை மாதம் 14ம் நாள் வழியனுப்பு விழா கொண்டாடுவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அத்தெய்வம் விண்ணகம் சென்று , மண்ணகக் கணக்கை இறைவனுக்கு தந்துவிட்டு , மண்ணகம் திரும்புகிறார் . மீண்டும் நிலவுலகில் அவரை வரவேற்க புத்தாண்டின் தொடக்கத்தில் விழா கொண்டாடுகிறோம் . இவ்வாறு மண்ணகத்திலிருந்து விண்ணகம் சென்று மீண்டும் மண்ணகம் திரும்ப அதாவது 400 கல்கள் சென்று வர ஓர் ஆண்டு காலம் ஆகிறது ” என்று .
இந்த விளக்கம் கேட்டு அனைவரும் நகைத்தனர் . “ உங்கள் விளக்கம் அற்புதம் ; உங்களிடம் சிறந்த சொல்லாற்றல் உள்ளது " என்று அச்சிற்றூர் வாசியைப் பாராட்டினர் .
119 . சோம்பேறி :
சோம்பேறிப் பெண்ணொருத்தி அனைத்திற்கும் தன் கணவனையே சார்ந்திருந்தான் . உண்ணும் போது வாயை திறக்கின்ற வேலையையும் , உடுத்தும் போது கையை தூக்கி நிற்கின்ற வேலையை மட்டுமே செய்து வந்தாள் . ஒரு சமயம் கணவன் பட்டணம் சென்று ஐந்து நாள்கள் தங்க நேர்ந்தது . அவளுக்கு உணவூட்டுவதற்காகக் கணவன் மிகப் பெரிய ' மாவடை ’ ஒன்றினைப் படைத்து அவற்றின் நடுவில் ஒரு பெரிய துளையிட்டு , அவள் கழுத்தில் மாட்டிவிட்டான் . ஐந்து நாள்களுக்கு அந்த மாவடை போது மென்று அவன் கணித்தான் . இவற்றைச் செய்த பின் , அவன் பட்டணம் சென்றான் . திரும்பி வந்த போது அவன் மனைவி இறந்து மூன்று நாள் ஆகியிருந்ததை அறிந்தான் . மாவடையில் அவள் வாய்க்கு எதிராக இருந்த பகுதி மட்டுமே சாப்பிடப்பட்டிருந்தது . எஞ்சிய பகுதிகள் அனைத்தும் தொடப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்தன .
120 . கஞ்சனின் ஆவி :
கஞ்சத்தனமான வாழ்கை வாழ்ந்தான் ஒரு மனிதன் . உண்பது அரிது . அவனை எல்லோரும் கஞ்சனின் ஆவி என்று அழைத்தனர் . ஒருநாள் படகுக் கூலி கொடுக்க மனமில்லாமல் ஆற்றின் குறுக்கே நடந்து செல்ல முயன்றான் . நட்டாற்றில் வந்த போது வெள்ளம் அவனை அடித்துச் செல்ல முனைந்தது . உதவிகோரிக் கதறினான் . 200 பணம் முன்பணமாக தந்தால் காப்பாற்றுவதாகப் படகோட்டி ஒருவன் சொன்னான் ‘ நூறு பணம் போதாதா ? ” என்று கேட்டான் கஞ்சன் . இப்போது தண்ணி அவன் மார்பளவை எட்டியது . " பின் 150 பணம் தந்தால் போதுமா ? " என்றான் கஞ்சன் . படகோட்டி மறுத்த போது கஞ்சன் தண்ணீரில் மூழ்கினான் .
‘ கஞ்சனின் ஆவி ’ என்று அழைக்கப்பட்ட அக்கஞ்சன் தற்போது உண்மையிலேயே ஆவி ஆகி மேலுலகம் சென்றான் . நரக தேவன் அவனைப் பார்த்து முழங்கினன் . " கஞ்சனே பணம் தான் உன் வாழ்க்கை என்று நினைத்தாய் ; ஒரு காசு கூட செலவு செய்ய மறுத்தாய் ; இப்போது நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில் ஏறியப்படவிருக்கிறாய் ” என்றான் நரக தேவன் . அப்போது எண்ணெய் கொதிக்கும் ஓசை கேட்டது . தீயினை அவன் கண்களால் கண்டான் கஞ்சன் . அந்த நிலையிலும் அவன் பேரம் பேசினான் . “ எவ்வளவு எண்ணெய் ! ஏன் இப்படி வீணக்குகிறீர்கள் ? அந்த எண்ணெய்க்குரிய பணத்தை என்னிடம் தந்தால் ; எண்ணெய் இல்லாமலேயே என்னை வறுக்க நான் ஒப்புக்கொள்கிறேன் " என்றான் கஞ்சன் .
பின்னர் நரக தேவனின் ஏவலர்கள் அவனை இரும்பு முள்கரண்டியால் குத்திக் கொதிக்கும் எண்ணெயிலிட்டுக் கருக்கி வெளியே எடுத்து மீண்டும் நரக தேவனின் பார்வைக்குப் படைத்தனர் . நரக தேவன் அதனைப் ஒரு முறை பார்த்து விட்டுச் சொன்னான் , இந்த மனிதன் ஒதுக்கப்பட வேண்டியவன் . எனவே இவன் நாயாகவோ , பன்றியாகவோ மறுபிறவி எடுப்பானாக என்று சபித்தார் . 

Please join our telegram group for more such stories and updates.telegram channel