இதில் சிறுவர்களால் அதிகம் விரும்பி கொண்டாடப்படும் “ தீபாவளி பண்டிகை ’’ பற்றிப் பார்போம் .
ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் அது கொண்டாடப்படுவதற்கு ஒவ்வொரு காரணங்கள் இருக்கும் . இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராண கதைகளும் வரலாற்று கதைகளும் இருக்கின்றன .

“ யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்ற மனித நேய ஒருமைப்பாட்டை எமது வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழ வைப்பவை பண்டிகைகள் .
தனி மனித சமூகத்தின் நல்வாழ்வைக் கருதி நம் முன்னோர்களால் மிகுந்த சிந்தனையுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளன .
பல்வேறு பகுதிகளிலும் வாழும் மக்களால் பல்வேறு விதமான பண்டிகைகள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது . இந்து சமயம் தன் பண்பாட்டை ஒழுங்குபடுத்த பல்வேறு முறையியல் தன்மைகளை கொண்டுள்ளது .
அவற்றுள் பண்டிகைகள் முக்கியத்துவம் பெறுகின்றது . அவ்வகையில் தீபாவளி பண்டிகையும் சிறப்புப் பெறுகின்றது .
தீபாவளி என்பதன் பொருள் :
    தீபம் என்றால் “ விளக்கு ” “ ஆவளி ” என்றால் “ வரிசை ” அதாவது தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமான இறைவனை வழிபடும் புண்ணிய தினமே தீபாவளி .
ஒரே விளக்கு ஏனைய விளக்குகளை ஒளி வசீச் செய்யும் அந்த முதல் ஒளியே பரமாத்மா அதனால் ஒளி பெறும் மற்ற விளக்குகள் ஜீவாத்மாக்கள் , ஜீவராசிகள் எல்லாவற்றிற்கும் பரம்பொருளே ஆதார ஒளியாகும் .
இந்த உண்மையை உணர்த்தும் வகையில் தான் ஒளிவிளக்கு திருநாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது .
தோற்றம் :
தீபாவளி பண்டிகையின் தோற்றம் பற்றி இந்துக்கள் மத்தியில் பல்வேறு ஐதீகங்கள் காணப்படுகின்றன . அவையாவன
நரகாசுரன் எனும் பழமரபுக் கதையின் அடிப்படையில் தோன்றியது .
பிதிர்க்கடன் அடிப்படையில் தோன்றியது .
யமனைப் போற்றும் அடிப்படையில் தோன்றியது .
பலிச்சக்கரவர்த்தியை போற்றும் வகையில் தோன்றியது .
ராமன் அயோத்தி நகருக்குத் திரும்பியமையைப் போற்றும் வகையில் தோன்றியது .
இதில் முன்னர் குறிப்பிட்ட நரகாசுரன் எனும் பழமரபுக் கதையின் அடிப்படையில் தோன்றியமையினையே ஏற்றுக் கொள்ளப்படுகின்றது .
இதில் மஹாவிஷ்ணு தனது அவதாரங்களில் ஒன்றான வராக அவதாரம் எடுத்த போது பூமி தேவியை மணந்து பெற்ற பிள்ளையே நரகாசுரன் என்பவனாவான் .
தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை கடவுளின் அவதாரம் அளித்ததால் உருவானது என்கின்றன இந்துப் புராணங்கள் . நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும் நராகாசுரன் கதை . நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன் . திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது , அவரின் ஸ்பரிசத்தால் பூமா தேவிக்குப் பிறந்தவன் நரகாசுரன் . அசுரவதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுரசுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்துவிட்டது . நரன் என்றால் மனிதன் . மனிதனாக இருந்தாலும் , துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரக அசுரன் எனப்பட்டான் . அப்பெயரே நரகாசுரன் என்றானது . 
அவன் கடும் தவத்தினால் பல ஆற்றல்களை பெற்றமையினால் அவன் தானே கடவுளிலும் மேலானவன் என்ற மமதை ஏற்பட்டது . இதனால் தேவர்களையும் , ரிஷிகளையும் வருத்தினான் நரகாசுரன் .
இவனின் கொடுமை தாங்க முடியாத தேவர்களும் , ரிஷிகளும் தம்மை காத்தருளும்படி மகா விஷ்ணுவிடம் வேண்டி நின்றார்கள் . தேவர்களின் வேண்டுதலுக்கமைய மஹாவிஷ்ணு கண்ணன் அவதாரம் எடுத்தார் .
இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார் . ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன் . அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான் மற்றும் நரகாசுரன் தன் கடும் தவத்தால் இரவிலோ , பகலிலோ தன்னைக் கொல்ல முடியாத இறவாவரமும் வேண்டியிருந்தான் .

எனவே , மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார் . அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான் . இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார் . இதை பார்த்த சத்திய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார் . சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு நரகாசுரன் போர் செய்தான் . அன்னையின் அம்புக்கு பலியாகி சரிந்தான் . அப்போது தான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது . 
அவரிடம் அம்மா , நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும் . என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி , ஒளிமயமாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான் . மகா விஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள் .மேலும் இதை பல மாயை விளையாட்டுக்களின் தலைவனான கண்ணன் இரவும் பகலுமற்ற அந்திசாயும் நேரத்தில் சத்தியபாமாவின் உதவியுடன் அவனை சங்காரம் செய்தார் .
இவ் நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளே இருள் நீங்கி ஒளி பெற்ற நாளாக எண்ணி தீபாவளியாக கொண்டாடப்படுகின்றது .
வால்மீகி இராமாயணத்தில் இராமன் கொடியவனான இராவணனை அழித்துவிட்டு தனது வனவாசத்தை முடித்து கொண்டு மனைவி சீதையுடன் சகோதரன் லட்சுமணன் உடன் அயோத்திக்கு திரும்பிய நாளை மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர் . அதன் தொடர்ச்சியாக தீபாவளி பிறந்தது என்று சொல்லப்படுகிறது .
இன்னொரு கதையும் உண்டு . ஸ்கந்த புராணத்தின் படி , சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிந்து இந்த தினத்தில்தான் . விரதம் முடிவடைந்த பின்னர் சிவன் , சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று ' அர்த்தநாரீஸ்வரர் ' உருவமெடுத்தார் . இறைவன் ஜோதி வடிவாக நம்முள் இருக்கிறான் . இந்த ஜோதி வடிவான இறைவனை வழிபடுவதற்கான சிறப்பு நாளே தீபாவளியாகும் . தீப வழிபாடு தீபாவளி என நாம் கூறிக் கொள்ளலாம் . மேலும் ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன்நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைந்ததாகக் கூறுகிறது ஸ்கந்தபுராணம் . 
புராணங்கள் இப்படிச் சொல்ல , தீபாவளிப் பண்டிகை எப்போதிருந்து கடைப்பிடிக்கப்பட்டது ? ஏன் கொண்டாடப்படுகிறது என்பது பற்றி வேறு சில விளக்கங்களும் சொல்லப்படுகின்றன . 
கி.பி. ஆயிரத்து நூறாம் ஆண்டிலேயே தீபாவளி கொண்டாடும் பழக்கம் இந்தியாவில் இருந்திருப்பதாக சில வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன . கி.பி. 1117ல் வாழ்ந்த சாளுக்கிய திரும்புவன மன்னன் ஆண்டு தோறும் சாத்யாயர் எனும் அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது . கி.பி.1250ல் எழுதப்பட்ட லீலாவதி எனும் மராத்தி நூலில் எண்ணெய் தேய்த்து நீராடுவதை பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன .
பொதுவாக ஐப்பசி மாதம் பனி நிறைந்த மாதம் . இல்லம் தோறும் குளிர் அதிகமாக அண்டும் காலம் . இருள் கூடும் காலம் என்றும் இதைக் கூறலாம் . அந்தக் காலகட்டத்தில் ஒளியை பெருக்கி உஷ்ணத்தை வீடுகளில் உருவாக்க இந்தப் பண்டிகையை மக்கள் கடைப்பிடிக்க தொடங்கி இருக்கலாம் என்பது கரிசல் இலக்கிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன் கருத்து .

காலம் :
    ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுகின்றது . இந்துக்கள் மட்டுமன்றி சீக்கியர்களும் , சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர் .
ஐப்பசி மாத அமாவாசை முன் வரும் திரயோதசி , சதுர்த்தசி , அமாவாசை அதனடுத்த கார்த்திகை சுக்கில பிரதமை இந்த நான்கு நாட்களும் தீபாவளியுடன் சம்பந்தப்பட்ட நாட்களாகும் .

எல்லோரும் கொண்டாடிய தீபாவளி :

     தீபாவளிப் பண்டிகையை இந்தியர்கள் மற்றும் இந்துக்களைத் தவிர பிற நாட்டவரும் பிற மதத்தவரும் கூடக் கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது . 
பழங்கால இந்திய மன்னர்கள் இந்துக்களாக இருந்தாலும் முகலாயர்களாக இருந்தாலும் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் மக்களுக்கு பல சலுகைகளையும் பரிசுப் பொருட்களையும் அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர் . அரசனின் தர்பாருக்குள் மக்கள் அனுமதிக்கப்பட்டு அடிப்படை தேவைகளுக்கு அடித்தளம் போட்டு தரும் நாளாக பண்டிகைகள் திகழ்ந்துள்ளன . முகாலய மன்னர்களில் சிலர் தீபாவளி போன்ற இந்துக்களின் பண்டிகைகளை ஆதரித்தாகவும் , பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன .
தமிழ் மன்னர்கள் பண்டைய காலத்தில் ரோம் , எகிப்து , பாபிலோன் , கிரேக்கம் , பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்புகள் இருந்துள்ளன . இந்தியாவிலிருந்து வாசனை திரவியங்கள் , மூலிகைகள் , யானை தந்தங்கள் எடுத்து சென்றதாக வரலாற்று கூறுகிறது . அந்த வணிக தொடர்பின் போது இந்தியாவிலிருந்து சென்ற பல வணிகர்கள் இடம் பெயர்ந்த நாட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி உள்ளனர் . ஆகவே , பல தேசங்களுக்கும் பரவி உள்ளது தீபாவளி .  சீக்கியர்களும் , சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர் .
1577ம் ஆண்டு பொற்கோவில் கட்டுமானப் பணிகள் துவங்கிய தினம் என சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடகின்றனர் . சமணர்கள் , மகாவீரர் முக்தி அடைந்த நாள் என தீபாவளியைக் கொண்டாடுகின்றனர் .
இப்போது கூட இந்தியா மட்டுமின்றி , இலங்கை , நேபாளம் , மியான்மர் , சிங்கப்பூர் , மலேசியா , பிஜி , வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் பண்டிகையை மக்கள் கொண்டாடுகிறார்கள் . 

சிறப்பு :
    தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்லப்படுகின்றது . அன்றைய தினம் அதிகாலையில் எல்லா இடங்களிலும் தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் , அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , சந்தனத்தில் பூமாதேவியும் , புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுகின்றது .
அன்றைய தினம் எல்லா நதிகள் , ஏரிகள் , குளங்கள் , கிணறுகளிலும் , நீர் நிலைகளிலும் “ கங்கா தேவி ” வியாபித்து நிற்பதாக ஐதீகம் இந்நாளில் எண்ணெய் தேய்த்து நீராடுவோர் கங்கையில் நீராடிய புண்ணியத்தையும் திருமகளின் அருளையும் பெறுவர் .
தீபாவளித் திருநாளில் பிரிந்து வாழும் பல குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன. பகை உணர்வுகளை மறந்து ஒற்றுமையே மேலோங்குகின்றது . வீட்டிலே இரவு ஏற்றும் தீப விளக்குகள் இரவு முழுவதும் அணையாது எரிய விடுவர் .
இதை மாணிக்க தீபம் என அழைப்பர் . இவ்வாறு செய்வதன் மூலம் ஸ்ரீ லஷ்மியின் அனுக்கிரகம் கிடைக்கும் என நம்புவதும் இந்து சமய மக்களின் வழக்கமாகும் . சமுதாயத்தில் அர்த்தமும் உயிரோட்டமும் உள்ள வாழ்க்கைப் படிமம் என்று கூறலாம் .
இப்பண்டிகை தத்துவம் நிறைந்ததாகவும் ஒழுக்கவியல் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்பவையாகவும் உள்ளது . இந்நாளில் பகைவர்களும் தம் கோபங்களை மறந்து சகோதரதத்துவத்துடன் வாழ முனைகின்றனர் .
அவ்வகையில் இது வெறும் பண்டிகையாக மட்டுமல்லாது வாழ்வைச் செம்மைப்படுத்தும் ஓர் நிகழ்வாக அமைகின்றது .

Please join our telegram group for more such stories and updates.telegram channel